Friday, 22 May 2009

கல் உடைக்கும் சிற்பிகள்

கால மாற்றத்தில் எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்த்திரைப்படங்கள் மட்டும், அவற்றின் உள்ளடக்கத்தில் எவ்வித மாற்றத்தையும் அடையாமல், பல ஆண்டுகளாக எந்தநிலையில் இருந்தனவோ அதிலிருந்து சற்றும் நகராமல் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கின்றன. மாற்றம் என்பதுதான் மாறாதிருப்பது என்பது கூட தமிழ்த் திரைப்படங்கள் விஷயத்தில் மாறிப்போனதுதான் ஆச்சர்யத்தையும், வேதனையையும் ஒருசேர ஏற்படுத்து கின்றன. 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படங்களை பட்டியலிட்டு அவற்றை திறனாய்வு செய்கிறபோது இப்படித்தான் தெரிவிக்க முடிகிறது.2007 ஆம் ஆண்டைவிட 2008 ஆம் ஆண்டில் கூடுதலாகவே, அதாவது சுமார் 110 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
எண்ணிக்கை அதிகமானதை எண்ணி பெருமைப்படுவதைவிட தரத்தின் அடிப்படையில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்று பார்ப்பதே நம் பணியாக இருக்கிறது. அந்த வகையில் பூ, அபியும் நானும், சுப்பிரமணியபுரம் போன்ற மிகச்சில படங்களே பாராட்டத்தக்கப் படைப்புகளாக வெளியாகி இருக்கின்றன. 2008 ஆம் ஆண்டில் வெளியான நூற்றிப் பத்துத் திரைப்படங்களில் மூன்று படங்களை மட்டும் இப்படிச் சொல்வதை எண்ணி மகிழ்வடைய முடியவில்லை. மாறாக வருத்தமே மேலோங்கி நிற்கிறது. மசாலாமாயையில் மூழ்கிக்கிடக்கும் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள், இன்னமும் அந்த மாயையிலிருந்து விடுபடவில்லை என்பதற்கு முந்தைய ஆண்டுகளைப்போலவே 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களும் அவமானகரமான சான்றுகளாக இருக்கின்றன.
பழனி, காளை, பீமா, அஞ்சாதே, தோட்டா, வெள்ளித்திரை, வைத்தீஸ்வரன், சண்ட, சிங்ககுட்டி, நேபாளி, குருவி, அரசாங்கம், சிலம்பாட்டம், ஏகன், துரை, தனம், பந்தயம், தங்கம், பாண்டி, சத்யம், சேவல், தெனாவட்டு, சூர்யா, திருவண்ணாமலை, சக்ரவியூகம், காத்தவராயன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, நாயகன், சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், அலிபாபா, சாதுமிரண்டா, தூண்டில், வம்பு சண்டை, குசேலன், சில நேரங்களில், தசாவதாரம், வாரணம் ஆயிரம், ஆயுதம் செய்வோம் என சுமார் நாற்பது மசாலாப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இவற்றில் ஏகன், சிலம்பாட்டம், குருவி, காளை, காத்தவராயன் போன்ற படங்கள் மிக கேவலமான பட வகையில் சேர்க்க வேண்டிய படங்கள். அதற்கான காரணங்களை தனியே சொல்ல வேண்டியதில்லை. வெள்ளித்திரை, வாரணம் ஆயிரம், அஞ்சாதே, பாண்டி, ஆயுதம் செய்வோம் ஆகிய படங்கள் மசாலாப்படப்பட்டியலில் இருந்தாலும் இவற்றை சற்றே பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. காரணம்..இந்தப்படங்களின் கதை அம்சம்! பிரகாஷ்ராஜ் தயாரித்து நடித்த வெள்ளித்திரை திரைப்பட உலகத்தைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படம். குறுக்கு வழியில் கதாநாயகனாகும் ஒருவனைப்பற்றிய கதை அம்சத்தைக் கொண்டிருந்த இந்தப்படத்தில் ஜிகினா முகங்களின் முகத்திரை முற்றிலுமாக கிழிக்கப்பட்டிருந்தது. திரைக்குப்பின்னால் நட்சத்திரங்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற உண்மையை சொல்ல வேண்டிய ஊடகங்களே ஊமைகளாகிவிட்ட இன்றைய சூழலில் வெள்ளித்திரை திரைப்படம் அந்தப்பணியை செவ்வனே செய்திருந்தது. அந்த வகையில்தான் மசாலாப்படம் என்ற முத்திரையிலிருந்து வெள்ளித்திரை திரைப்படத்துக்கு விதிவிலக்குக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
‘கத பறயும் போல்’ என்ற மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்பாக தயாரிக்கப்பட்ட குசேலன் படம், வெள்ளித்திரை படத்துக்கு நேர்மாறான, அதாவது சினிமா நட்சத்திரங்களின் இமேஜை மேலும் ஊதிப்பெரிதாக்குவது போன்ற கதை அம்சத்தைக் கொண்டிருந்தது. ரஜினி என்கிற மெகா பிம்பத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இந்தப்படம் தோல்வியையேத் தழுவியது. குசேலன் படத்தின் தோல்வி அப்படம் சொன்ன செய்திக்கு ரசிகர்கள் காட்டிய எதிர்மறை வெளிப்பாடு என்று முழுமையாக சொல்ல முடியாது என்றாலும், நட்சத்திரங்கள் குறித்து அப்படம் ஏற்படுத்திய தோற்றத்துக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை என்பதே ஆறுதலான விஷயம்தான்.
‘கத்தாழக்கண்ணாலே குத்தாதே’ என்ற குத்துப்பாட்டு இருந்தாலும் அஞ்சாதே படத்தையும் வழக்கமான மசாலாப்படங்களில் இருந்து வேறுபடுத்தியே பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநர் என்ற நிலையை எட்டியிருக்கும் மிஷ்கின் இயக்கிய இப்படத்தின் கதை மற்றும் காட்சியமைப்புகளில் சமூகத்தின் மீதான மெல்லிய அக்கறை இருந்ததை புறக்கணித்துவிட முடியவில்லை. தவிர, கதை சொல்லும் உத்தியிலும் புதிய அணுகுமுறையைக் கையாண்டிருந்தார் மிஷ்கின்.
ஆயுதம் செய்வோம் என்ற தலைப்பைப் பார்த்ததுமே இது ஒரு அக்மார்க் வன்முறைப்படம்தான் என்ற எண்ணத்துக்கு எதிர்மறையாக, வன்முறைக்கு எதிரான படமாக இருந்தது. ஏரியாவையே கலக்கும் ரௌடி காந்தியக்கொள்கையினால் கவரப்பட்டு அஹிம்சை பாதைக்குத் திரும்புகிறான் என்பது யதார்த்தத்தில் ஏற்க தக்கதாக இல்லாவிட்டாலும், வன்முறை மலிந்துவிட்ட தற்காலச்சூழலில் இப்படியொரு கருத்தைத் தாங்கிய திரைப்படம் வெளிவருவதே ஆச்சர்யமான விஷயமல்லவா? அதன்பொருட்டே ஆயுதம் செய்வோம் படத்தை அடிக்கோடிட்டு சுட்டிக்காட்ட வேண்டியதாக இருக்கிறது.
லாரன்ஸ் நடித்த பாண்டி படத்தையும் இப்படி தனியே சுட்டிக்காட்ட காரணமிருக்கிறது. தறுதலையாகத்திரிந்த கதாநாயகன் குடும்பத்தைத் தாங்குகிறவனாக மாறுகிறான் என்ற கதை பழசுதான். என்றாலும் வெளிநாட்டில் கூலி வேலை செய்கிறவர்களின் வாழ்வியல் அவலத்தை நெகிழ்ச்சியுடன் சொன்ன வகையில் பாண்டி படம் குறிப்பிடத்தக்கப்படமாகிறது.
சூர்யா நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் ஆடல், பாடல், சண்டை சச்சரவு எல்லாம் உண்டு. எனில், இதுவும் மசாலாப்படம்தான். ஆனால், இப்படத்தின் அடிநாதமான விஷயம் அடிதடி அல்ல, அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு. கிருஷ்ணன் மேனனின் (மேனன் என்பதை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சொல்லாவிட்டாலும் புரிந்து கொள்ள முடியும்) வாழ்க்கைத் தொகுப்பாக விரியும் இப்படத்தில், அவரது மகன் சூர்யா மேனனின் வாழ்க்கையின் மேன்மைக்கு அவரது தந்தை ஆற்றிய கடமைகள் காட்சிகளாக்கப்பட்டிருந்தன. தந்தை மகன் உறவின் புரிதலும் சிறப்பாக சித்தரிக்கப்பட்ட வகையில் இந்தப்படத்தையும் மசாலாப்பட பட்டியலிலிருந்து பிரித்துப் பார்ப்பது அவசியமாகிறது.
ஜெயம்ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படமோ, வாரணம் ஆயிரம் படத்தின் கதையிலிருந்து நேர்மாறானது. தன் விருப்பத்தை மகன் மீது திணிக்கும் தந்தைக்கும், சுயவிருப்பத்தை அடைய தடையாக இருக்கும் தன் தந்தை மீது வெறுப்பை உமிழும் மகனுக்கும் இடையிலான உறவுச்சிக்கலைச் சொன்ன படம்.
கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் படமும் சந்தேகமில்லாமல் மசாலாப்படம்தான். ஒரு மசாலாப்படத்துக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்த தசாவதாரம் படத்தின் கதைக்கரு சர்ச்சைக்குரியது. மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலில் வீசப்பட்ட பெருமாள் வீறு கொண்டு எழுந்து, சுனாமியை உண்டாக்கி, அணுவீச்சிலிருந்து உலகத்தைக் காப்பாற்றினார் என்பது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம். எனினும் பத்து வேடங்களில் நடிக்க கமல்ஹாசன் எடுத்த சிரத்தை அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. தவிர கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பத்திலும் தசாவதாரம் திரைப்படம் சிறந்த படமாக விளங்குவதையும் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்.வழக்கம்போல்
2008 ஆம் ஆண்டிலும் மசாலாப்படங்களுக்கு அடுத்த இடம் காதல் படங்களுக்குத்தான். பிடிச்சிருக்கு, வாழ்த்துகள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, காதல் கடிதம், வள்ளுவன் வாசுகி, கண்ணும் கண்ணும், வேதா, யாரடி நீ மோகினி, மதுரை பொண்ணு சென்னை பையன், மகேஷ் சரண்யா மற்றும் பலர், சக்கரகட்டி, காதலில் விழுந்தேன், கொடைக்கானல் என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் காதல்தான் பிரதான விஷயம்.
காதல் என்கிற போதே அதில் புதிதாக சொல்ல ஏதுமில்லை என்பது எளிதில் புரியும். கண்டதும் காதல் கடைசியில் சேர்தல் என்ற சினிமா ஃபார்முலாவின்படியே பெரும்பாலான படங்களின் கதை அம்சம் இருந்தன. இவற்றில் காதலில் விழுந்தேன் படம் இறந்துபோன தன் காதலியின் சவத்துடன் வாழ்கிற காதலனின் கதை. தன் காதலி இறந்துவிட்டாள் என்பதைக்கூட மறக்க வைத்துவிட்ட அவனது காதல் பித்து, ரசிகர்களுக்கு பைத்தியக்காரத்தனமாகவே தோன்றியதாலோ என்னவோ அப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
மகேஷ் சரண்யா மற்றும் பலர் படத்தின் கதைநாயகனோ இறந்துபோன காதலியை நினைத்து தன் வாழ்க்கையையே வெறுமையாக்கிக் கொள்கிறான். சீமான் இயக்கிய வாழ்த்துகள் படமோ காதலுக்கு மரியாதை படத்தின் இன்னொரு வடிவம்.
2008 ஆம் ஆண்டு வெளியான காதல் படங்களில் யதார்த்த மாகவும், புதுமையாகவும் இருந்தது கண்ணும் கண்ணும் திரைப்படம்தான். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக தன் காதலிக்கே சகோதரனாகும் காதலனின் கதை இது.
குடும்பத்துடன் திரைப்படம் பார்ப்பதே கலாச்சார அதிர்ச்சியாகிவிட்ட இன்றைய சூழலில், குடும்பத்தோடு பார்க்கத்தக்கப் படங்கள் வெளிவருவதே ஆச்சர்யமான விஷயம்தான். அப்படியொரு ஆச்சர்யத்தையும் சில படங்கள் கொடுத்தன. பிரிவோம் சந்திப்போம், ஜெயம் கொண்டான், வல்லமை தாராயோ,ராமன் தேடிய சீதை ஆகிய படங்கள்தான் அவை. இவற்றில் கரு பழனியப்பன் இயக்கிய பிரிவோம் சந்திப்போம், கூட்டுக்குடும்பமாக வாழ நினைக்கும் மனைவி, தனிக்குடித்தனம் வாழ்வதில் விருப்பம் கொண்ட கணவன் என இரண்டு எதிர் மறையான எண்ணம் கொண்ட தம்பதியின் கதை. இப்படிப்பட்ட முரண்பாடுகளினால் மனைவிக்கு ஏற்படும் மனச்சிக்கலுக்கு உளவியல் தீர்வையும் சொன்ன படம் என்ற வகையில் ஆரோக்கியமான திரைப்படம். வல்லமை தாராயோ திரைப்படமும் ஒரு கணவன் மனைவியின் கதைதான். விருப்பத்துக்கு மாறாக நடந்த திருமணம் என்பதால் கணவன் மீது வெறுப்பை உமிழும் பெண் அதன் காரணமாக விவாகரத்தும் பெறுகிறாள். அதன் பிறகு இருவருக்கும் இடையில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பு இப்படம். மௌனராகத்தை மறுபடி பார்க்க மக்கள் தயாராக இல்லை என்பதால் இப்படம் வர்த்த ரீதியில் வெற்றி பெறவில்லை.
சேரன் நடிப்பில் அவரது சிஷ்யர் ஜெகன்னாத் இயக்கிய ராமன் தேடிய சீதை திரைப்படமும் சமூகத்துக்குக் கேடுவிளைவிக்காத திரைப்படம்தான். திருமணத்துக்கு பெண் தேடும் ஒருவன் எதிர்கொள்கிற பிரச்சனைகள்தான் இப்படத்தின் கதை. ஒரு நாயகன், பல நாயகி என்ற ஒற்றுமை ஆட்டோகிராஃப் படத்தின் பாகம் இரண்டு என்பதாக ஒரு எண்ணத்தைத் தோற்றுவித்தது.
இந்திரலோகத்தில் நா.அழகப்பன், அறை எண் 305-ல் கடவுள், திண்டுக்கல் சாரதி, பஞ்சாமிர்தம், பொய் சொல்ல போறோம், சரோஜா போன்ற காமெடிப்படங்களும் 2008 ஆம் ஆண்டில் வெளியாகின. இவற்றில் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த படம். இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் கதாநாயகனாக நடித்து, அப்படத்துக்குக் கிடைத்த வெற்றி தந்த நம்பிக்கையில் இரண்டாவது முறையாக கதாநாயகன் வேடமிட்டார் வடிவேலு. ஆனால் தோல்வியே பரிசாகக்கிடைத்தது. இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இயக்குநரான சிம்புதேவன் இயக்கிய அறை எண் 305-ல் கடவுள் என்ற நகைச்சுவைப்படத்துக்கும் இதே கதிதான். கருணாஸ் கதாநாயகனாக நடித்த திண்டுக்கல் சாரதி படம் யாருமே எதிர்பார்க்காத வகையில் வர்த்தகரீதியில் வெற்றியடைந்தது. கோஸ்லா கா கோஸ்லா என்ற ஹிந்திப்படத்தின் ரீமேக்கான பொய்சொல்லப்போறோம் வெறும் நகைச்சுவைப் படமாக மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் மோசடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாகவும் இருந்தது.
காமெடிப் படங்களில் சரோஜா வித்தியாசமான படம். ஒரு ஆக்ஷன் படத்துக்கான கதையைக் கொண்டிருந்த இப்படத்துக்கு நகைச்சுவையான காட்சிகளைக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததே ரசிகர்கள் இந்தப்படத்தை ரசித்து ஏற்றுக் கொள்ள முக்கியமான காரணம் என்று தோன்றுகிறது.
மு.கருணாநிதியின் கதை வசனத்தில் உளியின் ஓசை என்ற சரித்திரப்படமும் வெளியானது - 2008 ஆம் ஆண்டில். கண்ணம்மா படத்தை இந்தப்படம் வசூலில் மிஞ்சிவிட்டதாக திரையுலகில் பேசிக்கொண்டதே உளியின் ஓசைக்கு கிடைத்த வெற்றிதான். மெட்ரோமூவி என்ற விளம்பரத்துடன் முதல் முதல் முதல் வரை என்ற திரைப்படம் வெளியானது. திரைக்கதையில் புதுமை தென்பட்டாலும் படத்தில் அதுவே படத்தில் நம்மை ஒட்டமுடியாமலும் செய்துவிட்டது.
சினிமா என்ற ஹிந்திப்படத்தை பொம்மலாட்டம் என்ற பெயர் சூட்டி தமிழ்ப்பொட்டு வைத்து வெளியிட்டார் பாரதிராஜா. அவரது பித்தலாட்டம் மக்களிடம் எடுபடவில்லை.
2008 ஆம் ஆண்டில் வெளியான சுமார் 110 திரைப் படங்களையும் மனத்திரையில் ஓட விட்டுப்பார்க்கும்போது, உருவாக்கத்தில் தசாவதாரம் படத்தையே குறிப்பிடத்தக்கப் படமாக சொல்லத்தோன்றுகிறது. உள்ளடக்கத்திலும், ஒட்டுமொத்த அம்சங்களின் அடிப்படையிலும் சுப்ரமணியபுரம், பூ, அபியும் நானும் ஆகிய மூன்று படங்களை மட்டுமே 2008 ஆம் ஆண்டுக்கு பெருமை சேர்க்கிற படங்களாக சொல்லத் தோன்றுகிறது.
இவற்றில் சுப்பிரமணியபுரம் படம் எண்பதுகளில் நடக்கும் கதை. எதிர்காலம் குறித்த இலக்கில்லாமல் பொழுதைக்கழிக்கிற இளைஞர்கள் எப்படி திசைமாறிப்போகிறார்கள் என்பது பல திரைப்படங்களில் பார்த்த கதைதான். எனினும், துணிவுடனும், தீர்மானமாகவும் எழுதப்பட்ட திரைக்கதை இப்படத்தை வெற்றியின் சிகரத்தில் உட்கார வைத்தது.
தன் மாமனை மனசுக்குள் வரித்துக் கொண்ட ஒரு பெண்ணின் கதையான பூ திரைப்படம் தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையின் திரைவடிவம். சசியின் இயக்கத்தில் இலக்கியத் தரத்துடன் வாசனை வீசிய இந்த பூ கோடம்பாக்கத்தில் பூத்த குறிஞ்சிப்பூ.
பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அப்பெண்ணின் திருமணத்தின்போது ஏற்படும் பிரிவின் வலி. அந்த வலியை படம் பார்த்த அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்று சொல்லுமளவுக்கு அற்புதமான திரைப்படமாய் ஆண்டின் இறுதியில் வெளியானது - அபியும் நானும்! குத்துப்பாட்டு, ஆபாசம், வன்முறை, அடிதடி ஏதுமில்லாமல் அழகிய (சற்றே சோக) கவிதை இது.
அழகிய சிலைகளை வடிக்க வேண்டிய சிற்பிகள், அம்மிக்கொத்துவதைக் கூட காலத்தின் கோலம் என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால் சிற்பிகள் கல்குவாரியில் கல் உடைத்தால்? 2008 ஆம் ஆண்டு திரைப்படங்களை பார்வையிட்டபோது நம் இயக்குநர்களைப் பற்றி இப்படித்தான் ஏளனமாக எண்ணத் தோன்றுகிறது.