Monday, 3 May 2010

பாலா: பலமும்.. பலவீனமும்

ப்ளஸ் மைனஸ் பெரும்புள்ளி என்ற பகுதிக்கு இயக்குநர் பாலாவைப் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று கல்கியில் கேட்டார்கள். பாலா எனக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரைப் பற்றி நான் அறிந்த, அவரது பலம் மற்றும் பலவீனங்கள் குறித்த ஒரு கட்டுரையை கல்கிக்கு அனுப்பி வைத்தேன். அது அச்சில் வெளியானபோது வேறு வடிவம் மட்டுமல்ல, வேறு அர்த்தமும் கொண்டிருந்தது. பத்திரிகையின் பக்க வரையறைக்குள் அடங்க வேண்டும் என்பதற்காக, என் கட்டுரை சுருக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும், அதில் உள்ள நியாயமும் ஒரு பத்திரிகையாளனாக நான் அறியாதது அல்ல! எனினும் அதை வாசிப்பவர்களுக்கு பாலாவைப் பற்றி தவறானதொரு சித்திரத்தை என் எழுத்து உருவாக்கிவிடக்கூடிய ஆபத்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அது மட்டுமல்ல, பாலாவுக்கும், அவரது நண்பரான இயக்குநர் அமீருக்குமான நட்பையும் சேதாரப்படுத்துவதுபோன்றதொரு தொனியும் அதில் இருந்தது.இன்னொரு பக்கம், கல்கியில் வெளியான அந்த கட்டுரையை பாலாவே படிக்க நேர்ந்தால் அவர் வருத்தமடையவும் நிறையவே வாய்ப்பிருந்தது. என்றாலும், இது பற்றி பாலாவிடம் தன்னிலை விளக்கம் அளிக்க ஏனோ எனக்குத் தோன்றவில்லை. பாலாவுக்கும் எனக்குமான நட்பின் மீது எனக்கிருந்த நம்பிக்கை காரணமாக இருக்கலாம்.இந்த சூழலில் ஒருநாள் பாலாவிடமிருந்தே தொலைபேசி அழைப்பு! கல்கி கட்டுரை குறித்து வருத்தப்படவில்லை அவர். மாறாக, தன்னை திருத்திக் கொள்ள உதவும் என்றார் - வழக்கமான நட்புடன். கல்கி கட்டுரையை படித்த மற்றவர்களும் பாலாவைப்போலவே அதை சரியாகப்புரிந்து கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை என்பதற்காகவே, கல்கிக்கு நான் அனுப்பிய கட்டுரையை இங்கே உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.

பாலா: பலமும்.. பலவீனமும்


ஒவ்வொருவருமே பலமும் பலவீனமும் நிறைந்தவர்கள்தான். இதில் படைப்பாளிகள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? படைப்பாற்றல் என்கிற ஒரு விஷயத்தில் மட்டுமே சராசரியானவர்களிடமிருந்து மாறுபட்டு, தனித்துவம் பெற்றிருக்கும் இவர்களும் பலமும், பலவீனமும் உடைய சராசரிகளே! இயக்குநர் பாலாவும் இதில் அடக்கம்.

'சேது' திரைப்படம் தொடங்கி 'நான் கடவுள்' வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் தன் தனித்தன்மையையும், ஆளுமையையும் வெளிப்படுத்தி வரும் இயக்குநர் பாலாவை ஒரு இயக்குநராக மட்டுமின்றி, நெருக்கமான நண்பராகவும் அறிந்தவன் - நான். எனவே அவரது பலம், பலவீனங்களை மற்றவர்களைவிட சற்றே அதிகமாக உணர்ந்தவன் என்ற வகையில் அவற்றை வெளிப்படையாய் பகிர்ந்து கொள்வதால், பாலா உடனான நட்பில் விரிசலோ, மனக்கீறலோ ஏற்படாது என்றே நினைக்கிறேன் - எங்களுக்கிடையிலான நட்பின் மீதான நம்பிக்கையில்.

முதலில் பாலா என்கிற தனி மனிதன் பற்றி...அவரே அடிக்கடி சொல்வதுபோல் கடுங்கோபக்காரர்தான் பாலா. அவருடைய கோபம் தனிப்பட்ட வாழ்விலும், தொழில் வாழ்க்கையிலும் பாலாவுக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பாலாவும் உணர்ந்திருந்திருந்தாலும், தன் கோபத்தை அவர் கைவிடவில்லை. தூரப்பார்வைக்கு பாலாவின் பலவீனமாக இது தோன்றினாலும், ஒருவகையில் இந்தக் கோபமே பாலாவின் பலம்! நட்சத்திரங்களின் ஆதிக்கத்தில் இயக்குநர்கள் அடிமைகளாக நடத்தப்படும் தற்கால தமிழ்த்திரையுலகில், பாலாவின் இயக்கத்தில் நடிக்கும்போது முன்னணி நட்சத்திரங்களே பயந்து, பணிந்து அவரிடம் பவ்யமாக பணிபுரிவதை பார்த்திருக்கிறேன். இங்கே பாலாவுக்குக் கவசமாக இருப்பது அவரது கோபமும், கோபக்காரர் என்ற தோற்றமும்தான்.

ஆக, கோபம் - பாலாவுக்கு பலமா? பலவீனமா?

மிக நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.. பாலா ஒரு வளர்ந்த குழந்தை. அவர் மனம்விட்டு சிரிக்கும்போது ஒரு குழந்தையின் சிரிப்பை அவரது முகத்தில் காணமுடியும். ஆனால், இதை பாலாவின் பலம் என்று என்னால் சொல்ல முடியாது, அவரது மிகப்பெரிய பலவீனமே இது. குழந்தைக்கு நல்லது எது? கெட்டது எது? நல்லவன் யார்? கெட்டவன் யார்? என்று இனம் காண முடியாததைபோலவேதான் பாலாவும்! பல சந்தர்பங்களில் தப்பானவர்களை நம்பி, பிறகு வருத்தப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது அவருக்கு. தயாரிப்பாளர் தேர்விலேயேகூட இப்படியாக நம்பி, பிறகு பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறாரே!

மோசமான நபரை அருகில் வைத்திருக்கும் தருணங்களில் அதை நலம் விரும்பிகள் சுட்டிக்காட்ட விழையும்போது, சம்மந்தப்பட்ட நபரைப்பற்றி பாலா தரும் நற்சான்றிதழ் நலம்விரும்பிகளின் வாயை அடைத்துவிடும். பிறிதொரு சந்தர்பத்தில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவரைப் பற்றிய உண்மை தெரிய வந்து அவரே விலக்கி வைப்பதும் அவ்வப்போது நடப்பதுண்டு.

பாலாவின் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்குமான நீண்ட இடைவெளி, கதைத்தேடலுக்கான கால அவகாசம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, இடைவெளிக்கான காரணத்தை பாலாவே ஒருமுறை சொன்னார். சோம்பேறித்தனம்! இதை பாலாவின் பலவீனம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

பாலாவைப் பற்றி பலரும் குற்றச்சாட்டாக சொல்வது...சக இயக்குநர்கள் யாருடனும் ஒட்டாத அவரது குணம்.

இது பாலாவின் பலவீனமா?

சினிமாவை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நினைத்து 'கதை பண்ணுபவர்'களின் சினேகம், பாலாவையும் அப்படிப்பட்ட புதைகுழியில் தள்ளிவிடும் ஆபத்து இருப்பதால், அவர்களிடம் ஒட்டாமல் இருப்பதை அவரது பலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இயக்குநர்களின் குற்றச்சாட்டு இப்படி என்றால், உதவி இயக்குநர்களின் குற்றச்சாட்டு இன்னொரு வகை! தன்னிடம் உதவியாளராக இருப்பவர்கள், ஒரு இயக்குநருக்கான பயிற்சியை பெற வாய்ப்பு கொடுக்காமல் அவர்களை ஒரு எடுபிடியைப் போல் நடத்துகிறார் என்பதே அது.

அவரது படத்தின் கதை என்ன? அன்றைக்கு எடுக்கப்படவிருக்கும் காட்சி என்ன? அதை எப்படி எடுக்க நினைத்திருக்கிறார்? என எதையும் தன் உதவியாளர்களிடம் அவர் பகிர்ந்து கொள்வதில்லை. மாறாக, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் சேவகனாகவே தன் உதவியாளர்களை வைத்திருக்கிறார் என வசைபாடுபவர்களும் உண்டு.

அதற்கான காரணம் அவரிடம் உதவியாளராக இருந்து, இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் இயக்குநர் அமீருக்குத் தெரியும்.'நாம் எடுக்கும் படத்தின் காட்சிகளை இப்படி எடுக்க வேண்டும், வசனங்கள் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு இயக்குநராக நமக்குள்ளேயே நம் படத்தை ஓட்டிப்பார்ப்போம். கதையை மற்றவர்களிடம் சொல்லும்போது அவர்கள் வேறு மாதிரி ஓட்டிப் பார்ப்பார்கள். அப்படிப்பார்த்துவிட்டு அவர்கள் கருத்து சொல்லும்போது சில நேரங்களில் அது நம்மைக் குழப்பிவிடும்.' என்று சொல்லும் அமீர், 'தன்னைப்போலவே சிந்திப்பவர் என்று நம்புகிறவர்களிடம் கதையைப் பற்றிப் பேச பாலா தயங்கியதில்லை' என்றும் சொல்கிறார்.

மற்றவர்களின் பார்வையில் பாலாவின் பலவீனங்கள் இப்படியெல்லாம் இருந்தாலும், பாலாவிடம் நான் கண்ட குறை ஒன்று உண்டு. புத்தகங்கள் வாசிப்பதை மறந்ததுதான் அது. ஒருகாலத்தில் புத்தகம் வாசிப்பதை ஒரு தவமாக செய்தவர்தான் பாலா. இன்றைக்கு புகழின் உச்சிக்கு சென்ற பிறகு புத்தகங்களை மறந்தேவிட்டார். வாசிப்பனுபவம் மட்டுமே எந்தவொரு படைப்பாளியையும் புத்துணர்வோடு வைத்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் பாலா!

இவை போலவே வேறு சில தனிமனித பலவீனங்களும் பாலாவுக்கு இருந்தாலும் அவை பிறரை பாதிக்காதவை. ஒரு படைப்பாளியாய் பாலாவிடம் உள்ள பலம், பலவீனத்தை விவாதத்துக்குள்ளாக்குவதில் தவறில்லை. அது சரியானதும் கூட! ஏனெனில் நாம் சுட்டிக் காட்டுகிற, விமர்சிக்கிற விஷயங்கள் ஒருவேளை அவரது வளர்ச்சிக்கு உரமாகலாம். மேலும் அவர் உயரத்தை எட்ட உதவிகரமாகவும் அமையலாம்.

எனவே அது பற்றி பேசுவோம்....

நம் இயக்குநர்கள் பலர் வெளிநாட்டுப்படங்களின் டி.வி.டி.க்களிலிருந்து கதையை களவாடிக் கொண்டிருக்கும் சூழலில், தன்னை சுற்றி இயங்கும் மக்களிடமிருந்தே கதையைக் கண்டெடுக்கிறார் பாலா! கதையை மட்டுமல்ல, கதை மாந்தர்களையும் இவ்வாறு கண்டெடுப்பதுதான் பாலாவின் பலம். அப்படி கண்டெடுத்த கதாபாத்திரங்களை அரிதாரத்துக்குள் அமுக்கிவிடாமல், அவர்களின் அழுக்குகளையும் அப்படியே திரையில் வடிக்கிறார். இதுவே பாலாவின் படங்களுக்கு புதிய நிறத்தைக் கொடுக்கிறது.

அதே நேரம் கதாபாத்திரங்களில், குறிப்பாக கதாநாயகனின் பாத்திரத்தில் செலுத்தும் கவனத்தை, திரைக்கதையில் செலுத்தத் தவறுவதை அவரது பலவீனமாக சொல்லித்தான் ஆக வேண்டும். சேதுவைத் தவிர்த்து அவரது மற்ற எல்லாப் படங்களிலும் திரைக்கதையில் ஒரு தொய்வு இருப்பதை கூர்ந்து கவனித்தவர்களுக்கு இது புரியும். யாரும் தொடாத களத்தில் கதை சொல்ல வேண்டும் என்று எண்ணி, அதன்படியே படமெடுக்கிற பாலாவுக்கு கமர்ஷியல் என்ற பூச்சாண்டி மீது இனம்புரியாத பயம் இருப்பதையும் அவரது பலவீனப்பட்டியலில் சேர்த்தாக வேண்டும். பிதாமகன் படத்தில் ஒரு பாட்டுக்கு சிம்ரனை ஆட விட்டதும், நான் கடவுள் படத்தில் மாறுவேஷக் கலைஞர்களை வைத்து ரெக்கார்டு டான்ஸ் நடத்தியதும் பாலாவின் பயத்தினால் விளைந்த விபரீதங்கள்.

பாலாவின் பலங்களில் ஒன்று.. அவரது அசாத்தியமான ஆளுமை! படப்பிடிப்பின்போது பாலாவைப் பார்த்தவர்களுக்கு நிச்சயமாக வியப்பைத் தருகிற விஷயம் இது. பொதுவாக எல்லா இயக்குநர்களுமே ஹீரோக்களை ஸார் என்றோ, ஜி என்றோ, பாஸ் என்றோ, தலைவா என்றோ தாஜா பண்ணிப் பேசுவதுதான் கோடம்பாக்க இயல்பு. பாலாவினால் கற்பனையில் கூட இப்படி பேச முடியாது. அவர் எப்பேற்பட்ட முன்னணி ஹீரோவாக இருந்தாலும் படப்பிடிப்பின்போது பெயர் சொல்லித்தான், அதுவும் வா.. போ.. என ஒருமையில்தான் அழைப்பார். தன்னைவிட வயதில் குறைந்த நடிகர் என்றால் வாடா....போடா..! இதை திமிர் என்றோ, அகம்பாவம் என்றோ சொல்பவர்கள் பாலாவை மட்டுமல்ல, படைப்பாளியின் பலத்தையும் அறியாதவர்கள். திரையுலகமே நட்சத்திர நடிகர்களிடம் சரணாகதி அடைந்து கிடக்கும் இன்றைய சூழலில் எப்பேற்பட்ட விஷயம் இது?

இப்படியாக முன்னணி நட்சத்திரங்களிடம் கூட தன் சுயத்தை இழக்க விரும்பாத கர்வமிக்க படைப்பாளியான பாலா, தன் படத்தின் வியாபார வீச்சுக்காக அதே நட்சத்திரங்களை நம்புவதை நிச்சயமாக அவரது பலம் என்று சொல்ல முடியாது. சேது படத்தில் நடித்தபோது விக்ரமும், நந்தாவில் நடித்தபோது சூர்யாவும் வணிக மதிப்பில்லாத சாதாரண நடிகர்களே! அவர்களை வைத்து படம் எடுக்குமளவுக்கு அப்போது பாலாவுக்கிருந்த தைரியம் இன்றைக்கு எங்கே போனது? உச்சத்துக்குப்போய்விட்ட விக்ரமும், சூர்யாவும், ஆர்யாவும், விஷாலும் ஏன் தேவையாய் இருக்கிறார்கள் பாலாவுக்கு? சினிமாவின் வெளிச்சமே படாத புதுமுகங்களை தேடிப்பிடித்து அவர்களை தேர்ந்த நடிகர்களாக மாற்றக் கூடிய திறமையும், வலிமையும் தனக்கிருப்பதை அவரே மறந்துபோனதுதான் வருத்தம்!

பாலாவின் படத்தில் நடித்த பிறகு பாதி சிவாஜியாகிவிடுகிறார்கள் - அவரது ஹீரோக்கள். காரணம் அவர்களுக்குள் இருக்கும் அதிகபட்ச திறமையையும் அவர் வெளிக் கொணர்ந்துவிடுவதுதான். இதற்குப் பின்னால் இருப்பது பாலாவின் பலம் மட்டுமல்ல, பலவீனமும்தான்.

தான் படைத்த கதாபாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற மனச்சித்திரம் பாலாவுக்குள் இருந்தாலும், அதை அவரால் நடித்துக் காட்ட முடியாது. அதற்காக, தன் எதிர்பார்ப்புக்கு மாறான நடிப்பை ஏற்றுக் கொண்டுவிடவும் மாட்டார். ஒன்றுக்கு பல தடவை அந்த கலைஞர்களை நடிக்க வைத்து, அதிலிருந்து தான் விரும்பியதை எடுத்துக் கொள்வார். இதனால் காலவிரயம் ஏற்படும். பட்ஜெட்டும் எகிறுமே? பேசாமல் அவரே நடித்துக் காட்டி அதைப்போல் நடிக்கச் சொல்லலாமே? என்பது அவரது படத்தில் நடித்த ஒரு நடிகரே என்னிடம் ஒருமுறை பாலாவின் குறையாய் சொன்ன விஷயம். அதானே! என இதை ஆமோதிப்பதன் மூலம் நடித்துக் காட்டத் தெரியாததை பாலாவின் திறமைக்குறைவாக யார் வேண்டுமானாலும் எளிதில் எள்ளி நகையாடிவிட முடியும். நடித்துக்காட்டாமல் இருப்பதே பாலாவின் பலம்!

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தால், படம் முழுக்க பாலாவேதான் தெரிவார் - வெவ்வேறு உருவங்களில்.

மீசையை சற்று முறுக்கிவிடுவதையும், முகத்தில் மச்சம் வைத்துக் கொள்தையும் மாறுவேஷம் என்று மக்களை நம்ப வைத்து பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கும்போது, தன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை அவர்கள் ஏற்கும் கதாபாத்திரத்துக்காக வெயிலில் காய வைத்து, ஜடாமுடி வளர்க்க வைத்து அந்த பாத்திரமாகவே மாற்றிவிடுவதை பாலாவின் பலம் என்றே குறிப்பிட வேண்டும்.

இப்படி தன் படத்துக்காக, தன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வேறு படங்களில் நடிக்காமல் வருடக்கணக்கில் 'தலைவிரி கோலமாக அலையும்' அந்த நட்சத்திரங்களைப்பற்றியும், அவர்களிடம் அட்வான்ஸைக் கொடுத்துவிட்டு காத்திருக்கும் தயாரிப்பாளர்களைப் பற்றியும் எண்ணிப்பார்க்காமல், திட்டமிட்டபடி படத்தை முடிக்காமல் வருடக்கணக்கில் இழுப்பது பாலாவின் பலவீனம்.

இவர்களைவிடுங்கள், பாலாவை நம்பி பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளருக்கே தலைவலி அல்லவா? பாலாவுக்கும், பிதாமகன் படத்தின் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, அந்தத் தயாரிப்பாளரே வெளிப்படையாய், வேதனையாய் பாலாவைப் பற்றி புலம்பித்தள்ளிய விஷயம் இது.

பாலாவுக்கு வேண்டுமானால் படம் இயக்குவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்? குறிப்பிட்ட பட்ஜெட்டில், குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிக்க முடியாமல்போகும்போது, அதிக பாதிப்புக்குள்ளாவது அவரை நம்பி முதலீடு செய்தவர்களே! பிறரை பாதிக்கும் அவரது பலவீனமான இந்த ப(வ)ழக்கத்தை பாலா களைய வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

தனிப்பட்டமுறையில் பாலாவிடம் எனக்கொரு மன வருத்தம் உண்டு. ஒரு இயக்குநராக தன் படைப்புகளின் மூலம் உலகத்தையே திரும்பிப்பார்க்க வைக்கும் அபரிமிதமான ஆற்றல் கொண்ட பாலா, பணம் சம்பாதிக்கும் ஆசையில் படத்தயாரிப்பாளராக பாதை மாறுகிறாரே என்பதே அந்த வருத்தம்.

ஒரு இயக்குநராக அவர் கேட்கும் சம்பளத்தை கொட்டிக் கொடுக்க கோடம்பாக்கத்தில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே பாலாவின் காட்டில் பண மழை அடை மழையாக வாய்ப்பிருக்கும்போது, ஏன் தயாரிப்பாளராக தடம் மாற வேண்டும்?

கலைஞன் வியாபாரியாகும்போது கலைஞன் தோற்றுப்போவான் என்று சொல்லப்படுவது பாலா விஷயத்தில் நிரூபணமாகிவிடக் கூடாது என்ற அக்கறையிலேயே இதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியதாக இருக்கிறது.

இன்றைய இளம் இயக்குநர்கள் பலருக்கும், நாளைய இயக்குநர்களுக்கும் பிதாமகனாக இருக்கும் பாலா இதைப் புரிந்து கொண்டால், எதிர்காலத்தில் அவர் எட்டுகிற உயரமும், அடைகிற வெற்றியும் தமிழ்சினிமா வரலாற்றில் எவராலும் முறியடிக்க முடியாத சாதனைகளாக இருக்கும்.
-ஜெ.பிஸ்மி

Sunday, 28 March 2010

வசந்தபாலனுக்கு வந்தனம் சொல்ல வேண்டும்.

திரைப்படம் எடுக்கிற பெயரில் நிறைய பேர் கோடம்பாக்கத்தில் செலுலாய்டு குப்பைகளையே உற்பத்தி செய்கிறார்கள். மிகச் சிலர்தான் சமூகத்துக்கு அவசியமான, மக்களுக்கான திரைப்படங்களை எடுக்கிறார்கள். அவர்களில் இயக்குநர் வசந்தபாலன் முக்கியமானவர். வெற்றியடைந்தவர்களின் கதைகள் மட்டுமே திரைப்படத்துக்குத் தகுதியானவை என்ற அசட்டு நம்பிக்கையை அடித்து நொறுக்குவதுபோல், இவர் இயக்கிய 'வெயில்' வாழ்வில் தோற்ற ஒருவனின் கதை!
வெயில் படத்தின் மூலம் தமிழ்சினிமாவை எல்லைகள் கடந்து உலக அரங்குக்கு எடுத்துச் சென்ற வசந்தபாலன், அங்காடித்தெரு படத்தையும் அவ்விதமே உருவாக்கி இருக்கிறார். அதற்காக நல்ல சினிமாவை விரும்புகிற ஒவ்வொருவரும் வசந்தபாலனுக்கு வந்தனம் சொல்ல வேண்டும்.
திரைப்படங்களுக்கான கதைகளை வெளிநாட்டு திரைப்படங்களின் டி.வி.டி.யில் தேடுவதே கோடம்பாக்கத்தின் குல வழக்கம். அங்காடித்தெரு திரைப்படத்தின் கதையை வசந்தபாலன் வழக்கம்போல் வாழ்க்கையிலிருந்து பெயர்த்தெடுத்து, ரத்தமும் சதையுமாக செலுலாய்டில் வடித்திருக்கிறார்.
கான்க்ரீட் காடாகிவிட்ட சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ரங்கநாதன் தெருதான் - அங்காடித்தெரு. தலைப்பு மட்டுமல்ல, கதைக்களமும்..! அலங்கார ஜொலிப்புடன் கம்பீரமாய் நிற்கும் வணிக நிறுவனங்களில் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டு கொத்தடிமைகளாய் வாழும் பாவப்பட்டவர்களே படத்தின் கதை மாந்தர்கள். அந்த இருள்முகங்கள் மீது சினிமா வெளிச்சத்தை பாய்ச்சியிருப்பது மட்டுமல்ல, மனிதவளங்களை மக்கிப்போகச்செய்யும் வர்த்தக வர்க்கங்களின் குரூர முகத்தில் கோபாவேசமாய் குத்துவிட்டிருக்கிறார் வசந்தபாலன்.
வாழ்க்கை எல்லோருக்கும் வரமாகிவிடுவதில்லை. பலருக்கும் சாபமாகவே இருக்கிறது. அதிலும் வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்களுக்கு சாபமே சாசுவதம். அங்காடித்தெருவின் கதைநாயகன் ஜோதிலிங்கத்தின் வாழ்க்கையும் இவ்வாறே.
தெற்கத்திக்கிராமம் ஒன்றில் சந்தோஷமாக வளைய வரும் ஜோதிலிங்கத்தின் அப்பா விபத்தில் மாண்டுபோகிறார். பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியும், குடும்பத்துக்கு மூணுவேளை சோறுபோடுவதை லட்சியமாக்கிக் கொள்வதைத்தவிர ஜோதிலிங்கத்துக்கு வேறு வழியில்லை. கண்ணீரையும், கனவையும் ஒருசேரத்துடைத்துக் கொண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள பிரம்மாண்ட கடையொன்றுக்கு வேலைக்காரனாய் வருகிறான். கூடவே நண்பன் பாண்டியும்.
அங்கே விற்கப்படுவது துணிகள், பாத்திரங்கள் மட்டுமல்ல, கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கும் மனிதநேயமும்தான். கொத்தடிமைக்கூடத்தை நினைவூட்டும் உணவுக்கூடம், உறங்குமிடம் என எல்லாவற்றிலும் மனித உரிமை அங்கே காலடியில் போட்டு மிதிக்கப்படுகிறது. ஆனாலும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் குடும்பத்தை எண்ணி வேலையில் தொடரவே செய்கிறார்கள் ஜோதிலிங்கமும், பாண்டியும்.
அதே கடையில், அதே கொடுமைகளை சகித்துக் கொண்டு வேலை செய்யும் பெண் சேர்மக்கனி. ஜோதிலிங்கத்துக்கும், கனிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தம். சூப்பர்வைசர் கருங்காலியிடம் தன்னை மாட்டிவிட்ட கனியை பழிவாங்க, ஜோதிலிங்கமும் அவளை மாட்டிவிடுகிறான் - அதன் விபரீதம் புரியாமலே. கனியை அடித்து உதைக்கும் கருங்காலி, மறைவுக்கு அழைத்துப்போய் அவளின் மாரை கசக்கிய கொடுமையைக் கேட்டு உடைந்துபோகும் ஜோதிலிங்கத்துக்கு, கனி மீது கரிசணம் சுரக்கிறது. கரிசணம் நட்பாகி, ஒரு மொட்டு மலர்வதைப்போல் வெகு இயல்பாக அவர்களின் நட்பு காதலாய் பரிணமிக்கிறது. இதற்கிடையில், அங்கே வேலை பார்க்கும் சக ஊழியர்களான சௌந்தரபாண்டி - ராணி இருவரும் காதலித்து, அது கருங்காலிக்குத் தெரியவர, தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் மாடியிலிருந்து கீழே குதித்து சிதறிப்போகிறாள் ராணி. வேலையிலிருந்து துரத்தப்பட்ட சௌந்தரபாண்டியோ மனச்சிதைவுக்குள்ளாகிறாள். இவர்களுக்கு நேர்ந்ததைப் பார்த்த பிறகு கனியை விட்டு விலக நினைக்கும் ஜோதி, அவளை இழக்க மனமில்லாமல் மனசில் அவளை மேலும் இறுக்கிக் கொள்கிறான்.
இவர்களின் காதலும் ஒருநாள் கருங்காலிக்கும், கடைமுதலாளியான அண்ணாச்சிக்கும். தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பது அங்காடித்தெரு திரைப்படத்தின் மிச்ச கதை.
வணிக நிறுவனங்களில் தொழிலாளர்கள் நடத்தப்படும்விதம், அங்கே மீறப்படும் மனித உரிமைகள் என்ற விஷயம் உண்மையில் ஒரு ஆவணப்படத்துக்கான உள்ளடக்கம். அங்கே வேலை செய்யும் இருவருக்குமான காதல் என்ற இழையைக் கோர்த்து அதை வெகு மக்களுக்கான திரைப்படமாக்கும் உத்தியில் வெற்றியடைந்திருக்கிறார் வசந்தபாலன்.
கமர்ஷியல் சினிமா எனப்படுகிற வெகுஜன திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் கமர்ஷியல் என்பதற்கான அர்த்தங்கள் அருவறுப்பான ஒன்றாகவே இருக்கின்றன. அசிங்கமான நடன அசைவுகள் கொண்ட கதாநாயகனின் அறிமுகப்பாடல், விரச வீச்சமடிக்கும் நகைச்சுவைக்காட்சிகள், பாலியல் பாடங்களாக காதல் காட்சிகள், வன்முறையை மண்டைக்குள் திணிக்கும் சண்டைக்காட்சிகள், அரைகுறை ஆடையில் குமட்ட வைக்கும் குத்துப்பாட்டு - என தமிழ்த்திரைப்படங்கள் வன்முறை மற்றும் ஆபாசங்களின் தொகுப்பாகவே இருக்கின்றன. வசந்தபாலன் இவற்றை எல்லாம் துச்சமாய் எண்ணி தூக்கி எறிந்திருப்பது மட்டுமல்ல, திரைப்படத்துக்கான கதைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? ஒரு திரைப்படத்தை எவ்வாறு எடுக்க வேண்டும் என்றும் பிற இயக்குநர்களின் பிடறியில் தட்டியிருக்கிறார்.
ஒரு நேர்த்தியான திரைப்படத்தில், அதன் திரைக்கதையும், வசனமும், ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் எப்படி பங்காற்ற வேண்டும் என்பதற்கும் அங்காடித்தெரு உதாரண சினிமாவாக இருக்கிறது. மிக முக்கியமாக வசனம்.! ஜோதிலிங்கத்தின் மீதான கோபம் தணியாத ஒரு தருணத்தில் கனி சொல்லும் வசனம். "இவன் ஒருத்தன்கிட்டேயாவது மானம் ரோஷத்தோட இருக்கிறேனே" விபச்சாரத் தொழிலிருந்து விலகி, குட்டையான கணவனுக்கு மனைவியாகி, குடும்பப் பெண்ணாக மாறியவள், தனது கணவனைப் போலவே குழந்தையும் குட்டையாகப் பிறந்ததற்கு வருந்தாமல், மாறாக மகிழ்கிறாள். அவளது மகிர்ச்சிக்குக் காரணம்..: "இனி யாரும் இந்தப் பிள்ளையை எவனுக்குப் பெத்தாளோன்னு சொல்ல மாட்டாங்களே" இப்படி, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வுகளும் கச்சிதமான வார்த்தைகளாய்..!ரங்கநாதன் தெரு என்கிற ஜன சமுத்திரத்தில் நித்தம் நித்தம் நீந்திக்கொண்டிருக்கும் நடைபாதை வியாபாரிகளாய் சில பாத்திரங்களையும் மனசுக்கு நெருக்கமாக்கியிருக்கிறார் இயக்குநர். வேலையிலிருந்து விரட்டப்பட்டு ஜோதிலிங்கமும், கனியும் நிர்கதியாய் நிற்கும்போது புது வாழ்க்கைக்கான வெளிச்சத்தைக்காட்டும் வயதான நடைபாதை வியாபாரி சிறு உதாரணம்!
ரங்கநாதன் தெருவும், அங்குள்ள வணிகநிறுவனமும் கதைக்களமானதால் சம்பவங்கள் ஒரே இடத்தில் நிகழ்வது தவிர்க்கவே முடியாத சிக்கல்தான். இந்த இக்கட்டிலிருந்தும், மூச்சடைக்கும் நெருக்கடியிலிருந்தும் பார்வையாளனை விடுவித்து, சற்றே காற்றாட வெளியே கூட்டிச் செல்ல வேண்டிய கட்டாயமும் இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜோதிலிங்கமும், கனியும் தங்களின் கடந்த கால காதலை பகிர்ந்து கொள்வதன் மூலம், கதை கிராமத்துக்கு சென்று திரும்புவதும், ஆசாரமான பிராமண வீட்டில் வேலை பார்க்கும் கனியின் தங்கையை பின் தொடர்ந்து செல்லும் கிளைக்கதையும் கூட இதன்பொருட்டே விவரணை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஜோதிலிங்கமாகவே வாழ்ந்து பார்த்திருக்கும் மகேஷை ஒரு புதுமுகமாகவே எண்ண முடியவில்லை. அண்ணாச்சி கடை ஊழியர்களின் வலியும், வேதனையும் நமக்குள்ளும் இறங்கி, நாம் கனத்துப்போக இவரது நடிப்பும் காரணமாக இருக்கிறது. ஆதரவற்ற ஒரு குடும்பத்தின் மூத்தபெண்ணாய் ஒட்டுமொத்த துயரத்தையும் தனக்குள் புதைத்துக் கொண்டு வளைய வரும் சேர்மக்கனியை எத்தனை வருடங்களானாலும் மறக்கவே முடியாத அளவுக்கு அந்த பாத்திரமாகவே நம் மனசை ஆக்ரமித்திருக்கிறார் அஞ்சலி. கடை முதலாளிஅண்ணாச்சியாய் பழ. கருப்பையா, அவரது விசுவாசமான கைத்தடி கருங்காலியாய் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நண்பன் பாண்டி என ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் இயக்குநர் தேர்வு செய்த முகங்கள் அவர் எடுத்துக் கொண்ட கதைக்கு மேலும் நம்பகத்தன்மையை தந்திருக்கின்றன.
காதலியை தேவதையாகவும், உலக அழகியாகவும் ஒப்பீடு செய்யும் தமிழ்த்திரைப்படங்களின் பாடல்களிலிருந்து மாறுபட்ட, 'அவள் அப்படியொன்றும் அழகில்லை' என்கிற மிகைப்படுத்தப்படாத இயல்பான பாடல் வரிகளும் கூட அங்காடித்தெரு படத்தை தனித்துவப்படுத்தியிருக்கின்றன.
சரவணா ஸ்டோர்ஸ்களுக்கும், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்களுக்கும் செல்லும்போது இது நாள்வரை அங்குள்ள ஊழியர்களின் முகங்கள் மனதில் பதிந்ததில்லை. அவர்களுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளில்தான் நம் கவனம் இருந்திருக்கிறது. இனி துணி அடுக்குகள் மங்கலாகி, ஜோதிலிங்கங்களும், சேர்மக்கனிகளுமே நம் கவனத்துக்குரியவர்களாக இருப்பார்கள்.

திரையுலக ஜொள்ளர்கள்!

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் முதன்முறையாக இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடிக்க, உருவாகியிருக்கும் ரெட்டச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ஹிந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். விழாவில் பேசிய பலரும் ஐஸ்வர்யா ராயின் அழகை ரொம்பவே வர்ணித்து பேசினார்கள். நடிகர் பார்த்திபன், தனக்கே உரிய பாணியில் பல கவிதை(?) வரிகளை கொட்டினார். ''சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழிதான் ரெட்டைச்சுழி'' என்றெல்லாம் விவஸ்தை எல்லாம் வழிந்தார். அது மட்டுமல்ல, ''விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள். நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்... பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 50 கே.ஜி. தாஜ்மஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம்'' என்றும் ஏடாகூடமாகவும் பேசினார். பார்த்திபன் பாணியில் பலரும் ஐஸ்வர்யாராயைப் பார்த்து பகிரங்கமாகவே ஜொள்ளுவிட, முதியவரான கே.பாலசந்தரும், ''நான் இந்த விழாவுக்கு வரும்போது படத்தின் டிரைலரை பார்க்கும் சந்தோஷத்தில் வந்தேன். மேடையேறியதும் சந்தோஷம் இரட்டிப்பாகி விட்டது. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த சீட் எனக்கு. இந்த கிழவனுக்கு என்ன ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா... ஆராதிக்கிறதோட விட்டுறணும்.'' என்று தன் பங்குக்கு வழிந்தார். பாரதிராஜா பேசும்போது, ''எனக்கு சீட் கொஞ்சம் தூரமா போட்டுட்டாங்க'' என்று கண்ணீர்விடாத குறையாக வருத்தப்பட்டார். அந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை சினிமாக்காரர்களும் ஐஸ்வர்யாராயின் அழகை வர்ணித்து உளறிக் கொட்ட, இயக்குநர் ஷங்கர் மட்டும் ஐஸ்வர்யாராயை அறிவாளியாகவும், சிறந்த உழைப்பாளியாகவும் சிலாகித்தார். இறுதியாக பேச வந்த வைரமுத்து திரையுலக ஜொள்ளர்கள் அனைவரையும் கண்டிப்பதுபோல் அழகாக ஒரு விஷயத்தைச் சொன்னார். ''ஐஸ்வர்யாராய் வெறும் நடிகை அல்ல, அமிதாப்பின் மருமகள். அமிதாப் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளம். அப்பேற்பட்ட குடும்பத்தின் மருமகளை நாம் கண்ணியமாகப் பார்க்க வேண்டும்!'' சிற்றின்பத்தில் திளைக்கும் சில்மிஷப்பேர்வழிகளான சினிமாக்காரர்களை இதைவிட எப்படி தலையில் குட்ட முடியும்?