Monday, 3 May 2010

பாலா: பலமும்.. பலவீனமும்

ப்ளஸ் மைனஸ் பெரும்புள்ளி என்ற பகுதிக்கு இயக்குநர் பாலாவைப் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று கல்கியில் கேட்டார்கள். பாலா எனக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரைப் பற்றி நான் அறிந்த, அவரது பலம் மற்றும் பலவீனங்கள் குறித்த ஒரு கட்டுரையை கல்கிக்கு அனுப்பி வைத்தேன். அது அச்சில் வெளியானபோது வேறு வடிவம் மட்டுமல்ல, வேறு அர்த்தமும் கொண்டிருந்தது. பத்திரிகையின் பக்க வரையறைக்குள் அடங்க வேண்டும் என்பதற்காக, என் கட்டுரை சுருக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும், அதில் உள்ள நியாயமும் ஒரு பத்திரிகையாளனாக நான் அறியாதது அல்ல! எனினும் அதை வாசிப்பவர்களுக்கு பாலாவைப் பற்றி தவறானதொரு சித்திரத்தை என் எழுத்து உருவாக்கிவிடக்கூடிய ஆபத்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அது மட்டுமல்ல, பாலாவுக்கும், அவரது நண்பரான இயக்குநர் அமீருக்குமான நட்பையும் சேதாரப்படுத்துவதுபோன்றதொரு தொனியும் அதில் இருந்தது.இன்னொரு பக்கம், கல்கியில் வெளியான அந்த கட்டுரையை பாலாவே படிக்க நேர்ந்தால் அவர் வருத்தமடையவும் நிறையவே வாய்ப்பிருந்தது. என்றாலும், இது பற்றி பாலாவிடம் தன்னிலை விளக்கம் அளிக்க ஏனோ எனக்குத் தோன்றவில்லை. பாலாவுக்கும் எனக்குமான நட்பின் மீது எனக்கிருந்த நம்பிக்கை காரணமாக இருக்கலாம்.இந்த சூழலில் ஒருநாள் பாலாவிடமிருந்தே தொலைபேசி அழைப்பு! கல்கி கட்டுரை குறித்து வருத்தப்படவில்லை அவர். மாறாக, தன்னை திருத்திக் கொள்ள உதவும் என்றார் - வழக்கமான நட்புடன். கல்கி கட்டுரையை படித்த மற்றவர்களும் பாலாவைப்போலவே அதை சரியாகப்புரிந்து கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை என்பதற்காகவே, கல்கிக்கு நான் அனுப்பிய கட்டுரையை இங்கே உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.

பாலா: பலமும்.. பலவீனமும்


ஒவ்வொருவருமே பலமும் பலவீனமும் நிறைந்தவர்கள்தான். இதில் படைப்பாளிகள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? படைப்பாற்றல் என்கிற ஒரு விஷயத்தில் மட்டுமே சராசரியானவர்களிடமிருந்து மாறுபட்டு, தனித்துவம் பெற்றிருக்கும் இவர்களும் பலமும், பலவீனமும் உடைய சராசரிகளே! இயக்குநர் பாலாவும் இதில் அடக்கம்.

'சேது' திரைப்படம் தொடங்கி 'நான் கடவுள்' வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் தன் தனித்தன்மையையும், ஆளுமையையும் வெளிப்படுத்தி வரும் இயக்குநர் பாலாவை ஒரு இயக்குநராக மட்டுமின்றி, நெருக்கமான நண்பராகவும் அறிந்தவன் - நான். எனவே அவரது பலம், பலவீனங்களை மற்றவர்களைவிட சற்றே அதிகமாக உணர்ந்தவன் என்ற வகையில் அவற்றை வெளிப்படையாய் பகிர்ந்து கொள்வதால், பாலா உடனான நட்பில் விரிசலோ, மனக்கீறலோ ஏற்படாது என்றே நினைக்கிறேன் - எங்களுக்கிடையிலான நட்பின் மீதான நம்பிக்கையில்.

முதலில் பாலா என்கிற தனி மனிதன் பற்றி...அவரே அடிக்கடி சொல்வதுபோல் கடுங்கோபக்காரர்தான் பாலா. அவருடைய கோபம் தனிப்பட்ட வாழ்விலும், தொழில் வாழ்க்கையிலும் பாலாவுக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பாலாவும் உணர்ந்திருந்திருந்தாலும், தன் கோபத்தை அவர் கைவிடவில்லை. தூரப்பார்வைக்கு பாலாவின் பலவீனமாக இது தோன்றினாலும், ஒருவகையில் இந்தக் கோபமே பாலாவின் பலம்! நட்சத்திரங்களின் ஆதிக்கத்தில் இயக்குநர்கள் அடிமைகளாக நடத்தப்படும் தற்கால தமிழ்த்திரையுலகில், பாலாவின் இயக்கத்தில் நடிக்கும்போது முன்னணி நட்சத்திரங்களே பயந்து, பணிந்து அவரிடம் பவ்யமாக பணிபுரிவதை பார்த்திருக்கிறேன். இங்கே பாலாவுக்குக் கவசமாக இருப்பது அவரது கோபமும், கோபக்காரர் என்ற தோற்றமும்தான்.

ஆக, கோபம் - பாலாவுக்கு பலமா? பலவீனமா?

மிக நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.. பாலா ஒரு வளர்ந்த குழந்தை. அவர் மனம்விட்டு சிரிக்கும்போது ஒரு குழந்தையின் சிரிப்பை அவரது முகத்தில் காணமுடியும். ஆனால், இதை பாலாவின் பலம் என்று என்னால் சொல்ல முடியாது, அவரது மிகப்பெரிய பலவீனமே இது. குழந்தைக்கு நல்லது எது? கெட்டது எது? நல்லவன் யார்? கெட்டவன் யார்? என்று இனம் காண முடியாததைபோலவேதான் பாலாவும்! பல சந்தர்பங்களில் தப்பானவர்களை நம்பி, பிறகு வருத்தப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது அவருக்கு. தயாரிப்பாளர் தேர்விலேயேகூட இப்படியாக நம்பி, பிறகு பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறாரே!

மோசமான நபரை அருகில் வைத்திருக்கும் தருணங்களில் அதை நலம் விரும்பிகள் சுட்டிக்காட்ட விழையும்போது, சம்மந்தப்பட்ட நபரைப்பற்றி பாலா தரும் நற்சான்றிதழ் நலம்விரும்பிகளின் வாயை அடைத்துவிடும். பிறிதொரு சந்தர்பத்தில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவரைப் பற்றிய உண்மை தெரிய வந்து அவரே விலக்கி வைப்பதும் அவ்வப்போது நடப்பதுண்டு.

பாலாவின் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்குமான நீண்ட இடைவெளி, கதைத்தேடலுக்கான கால அவகாசம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, இடைவெளிக்கான காரணத்தை பாலாவே ஒருமுறை சொன்னார். சோம்பேறித்தனம்! இதை பாலாவின் பலவீனம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

பாலாவைப் பற்றி பலரும் குற்றச்சாட்டாக சொல்வது...சக இயக்குநர்கள் யாருடனும் ஒட்டாத அவரது குணம்.

இது பாலாவின் பலவீனமா?

சினிமாவை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நினைத்து 'கதை பண்ணுபவர்'களின் சினேகம், பாலாவையும் அப்படிப்பட்ட புதைகுழியில் தள்ளிவிடும் ஆபத்து இருப்பதால், அவர்களிடம் ஒட்டாமல் இருப்பதை அவரது பலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இயக்குநர்களின் குற்றச்சாட்டு இப்படி என்றால், உதவி இயக்குநர்களின் குற்றச்சாட்டு இன்னொரு வகை! தன்னிடம் உதவியாளராக இருப்பவர்கள், ஒரு இயக்குநருக்கான பயிற்சியை பெற வாய்ப்பு கொடுக்காமல் அவர்களை ஒரு எடுபிடியைப் போல் நடத்துகிறார் என்பதே அது.

அவரது படத்தின் கதை என்ன? அன்றைக்கு எடுக்கப்படவிருக்கும் காட்சி என்ன? அதை எப்படி எடுக்க நினைத்திருக்கிறார்? என எதையும் தன் உதவியாளர்களிடம் அவர் பகிர்ந்து கொள்வதில்லை. மாறாக, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் சேவகனாகவே தன் உதவியாளர்களை வைத்திருக்கிறார் என வசைபாடுபவர்களும் உண்டு.

அதற்கான காரணம் அவரிடம் உதவியாளராக இருந்து, இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் இயக்குநர் அமீருக்குத் தெரியும்.'நாம் எடுக்கும் படத்தின் காட்சிகளை இப்படி எடுக்க வேண்டும், வசனங்கள் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு இயக்குநராக நமக்குள்ளேயே நம் படத்தை ஓட்டிப்பார்ப்போம். கதையை மற்றவர்களிடம் சொல்லும்போது அவர்கள் வேறு மாதிரி ஓட்டிப் பார்ப்பார்கள். அப்படிப்பார்த்துவிட்டு அவர்கள் கருத்து சொல்லும்போது சில நேரங்களில் அது நம்மைக் குழப்பிவிடும்.' என்று சொல்லும் அமீர், 'தன்னைப்போலவே சிந்திப்பவர் என்று நம்புகிறவர்களிடம் கதையைப் பற்றிப் பேச பாலா தயங்கியதில்லை' என்றும் சொல்கிறார்.

மற்றவர்களின் பார்வையில் பாலாவின் பலவீனங்கள் இப்படியெல்லாம் இருந்தாலும், பாலாவிடம் நான் கண்ட குறை ஒன்று உண்டு. புத்தகங்கள் வாசிப்பதை மறந்ததுதான் அது. ஒருகாலத்தில் புத்தகம் வாசிப்பதை ஒரு தவமாக செய்தவர்தான் பாலா. இன்றைக்கு புகழின் உச்சிக்கு சென்ற பிறகு புத்தகங்களை மறந்தேவிட்டார். வாசிப்பனுபவம் மட்டுமே எந்தவொரு படைப்பாளியையும் புத்துணர்வோடு வைத்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் பாலா!

இவை போலவே வேறு சில தனிமனித பலவீனங்களும் பாலாவுக்கு இருந்தாலும் அவை பிறரை பாதிக்காதவை. ஒரு படைப்பாளியாய் பாலாவிடம் உள்ள பலம், பலவீனத்தை விவாதத்துக்குள்ளாக்குவதில் தவறில்லை. அது சரியானதும் கூட! ஏனெனில் நாம் சுட்டிக் காட்டுகிற, விமர்சிக்கிற விஷயங்கள் ஒருவேளை அவரது வளர்ச்சிக்கு உரமாகலாம். மேலும் அவர் உயரத்தை எட்ட உதவிகரமாகவும் அமையலாம்.

எனவே அது பற்றி பேசுவோம்....

நம் இயக்குநர்கள் பலர் வெளிநாட்டுப்படங்களின் டி.வி.டி.க்களிலிருந்து கதையை களவாடிக் கொண்டிருக்கும் சூழலில், தன்னை சுற்றி இயங்கும் மக்களிடமிருந்தே கதையைக் கண்டெடுக்கிறார் பாலா! கதையை மட்டுமல்ல, கதை மாந்தர்களையும் இவ்வாறு கண்டெடுப்பதுதான் பாலாவின் பலம். அப்படி கண்டெடுத்த கதாபாத்திரங்களை அரிதாரத்துக்குள் அமுக்கிவிடாமல், அவர்களின் அழுக்குகளையும் அப்படியே திரையில் வடிக்கிறார். இதுவே பாலாவின் படங்களுக்கு புதிய நிறத்தைக் கொடுக்கிறது.

அதே நேரம் கதாபாத்திரங்களில், குறிப்பாக கதாநாயகனின் பாத்திரத்தில் செலுத்தும் கவனத்தை, திரைக்கதையில் செலுத்தத் தவறுவதை அவரது பலவீனமாக சொல்லித்தான் ஆக வேண்டும். சேதுவைத் தவிர்த்து அவரது மற்ற எல்லாப் படங்களிலும் திரைக்கதையில் ஒரு தொய்வு இருப்பதை கூர்ந்து கவனித்தவர்களுக்கு இது புரியும். யாரும் தொடாத களத்தில் கதை சொல்ல வேண்டும் என்று எண்ணி, அதன்படியே படமெடுக்கிற பாலாவுக்கு கமர்ஷியல் என்ற பூச்சாண்டி மீது இனம்புரியாத பயம் இருப்பதையும் அவரது பலவீனப்பட்டியலில் சேர்த்தாக வேண்டும். பிதாமகன் படத்தில் ஒரு பாட்டுக்கு சிம்ரனை ஆட விட்டதும், நான் கடவுள் படத்தில் மாறுவேஷக் கலைஞர்களை வைத்து ரெக்கார்டு டான்ஸ் நடத்தியதும் பாலாவின் பயத்தினால் விளைந்த விபரீதங்கள்.

பாலாவின் பலங்களில் ஒன்று.. அவரது அசாத்தியமான ஆளுமை! படப்பிடிப்பின்போது பாலாவைப் பார்த்தவர்களுக்கு நிச்சயமாக வியப்பைத் தருகிற விஷயம் இது. பொதுவாக எல்லா இயக்குநர்களுமே ஹீரோக்களை ஸார் என்றோ, ஜி என்றோ, பாஸ் என்றோ, தலைவா என்றோ தாஜா பண்ணிப் பேசுவதுதான் கோடம்பாக்க இயல்பு. பாலாவினால் கற்பனையில் கூட இப்படி பேச முடியாது. அவர் எப்பேற்பட்ட முன்னணி ஹீரோவாக இருந்தாலும் படப்பிடிப்பின்போது பெயர் சொல்லித்தான், அதுவும் வா.. போ.. என ஒருமையில்தான் அழைப்பார். தன்னைவிட வயதில் குறைந்த நடிகர் என்றால் வாடா....போடா..! இதை திமிர் என்றோ, அகம்பாவம் என்றோ சொல்பவர்கள் பாலாவை மட்டுமல்ல, படைப்பாளியின் பலத்தையும் அறியாதவர்கள். திரையுலகமே நட்சத்திர நடிகர்களிடம் சரணாகதி அடைந்து கிடக்கும் இன்றைய சூழலில் எப்பேற்பட்ட விஷயம் இது?

இப்படியாக முன்னணி நட்சத்திரங்களிடம் கூட தன் சுயத்தை இழக்க விரும்பாத கர்வமிக்க படைப்பாளியான பாலா, தன் படத்தின் வியாபார வீச்சுக்காக அதே நட்சத்திரங்களை நம்புவதை நிச்சயமாக அவரது பலம் என்று சொல்ல முடியாது. சேது படத்தில் நடித்தபோது விக்ரமும், நந்தாவில் நடித்தபோது சூர்யாவும் வணிக மதிப்பில்லாத சாதாரண நடிகர்களே! அவர்களை வைத்து படம் எடுக்குமளவுக்கு அப்போது பாலாவுக்கிருந்த தைரியம் இன்றைக்கு எங்கே போனது? உச்சத்துக்குப்போய்விட்ட விக்ரமும், சூர்யாவும், ஆர்யாவும், விஷாலும் ஏன் தேவையாய் இருக்கிறார்கள் பாலாவுக்கு? சினிமாவின் வெளிச்சமே படாத புதுமுகங்களை தேடிப்பிடித்து அவர்களை தேர்ந்த நடிகர்களாக மாற்றக் கூடிய திறமையும், வலிமையும் தனக்கிருப்பதை அவரே மறந்துபோனதுதான் வருத்தம்!

பாலாவின் படத்தில் நடித்த பிறகு பாதி சிவாஜியாகிவிடுகிறார்கள் - அவரது ஹீரோக்கள். காரணம் அவர்களுக்குள் இருக்கும் அதிகபட்ச திறமையையும் அவர் வெளிக் கொணர்ந்துவிடுவதுதான். இதற்குப் பின்னால் இருப்பது பாலாவின் பலம் மட்டுமல்ல, பலவீனமும்தான்.

தான் படைத்த கதாபாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற மனச்சித்திரம் பாலாவுக்குள் இருந்தாலும், அதை அவரால் நடித்துக் காட்ட முடியாது. அதற்காக, தன் எதிர்பார்ப்புக்கு மாறான நடிப்பை ஏற்றுக் கொண்டுவிடவும் மாட்டார். ஒன்றுக்கு பல தடவை அந்த கலைஞர்களை நடிக்க வைத்து, அதிலிருந்து தான் விரும்பியதை எடுத்துக் கொள்வார். இதனால் காலவிரயம் ஏற்படும். பட்ஜெட்டும் எகிறுமே? பேசாமல் அவரே நடித்துக் காட்டி அதைப்போல் நடிக்கச் சொல்லலாமே? என்பது அவரது படத்தில் நடித்த ஒரு நடிகரே என்னிடம் ஒருமுறை பாலாவின் குறையாய் சொன்ன விஷயம். அதானே! என இதை ஆமோதிப்பதன் மூலம் நடித்துக் காட்டத் தெரியாததை பாலாவின் திறமைக்குறைவாக யார் வேண்டுமானாலும் எளிதில் எள்ளி நகையாடிவிட முடியும். நடித்துக்காட்டாமல் இருப்பதே பாலாவின் பலம்!

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தால், படம் முழுக்க பாலாவேதான் தெரிவார் - வெவ்வேறு உருவங்களில்.

மீசையை சற்று முறுக்கிவிடுவதையும், முகத்தில் மச்சம் வைத்துக் கொள்தையும் மாறுவேஷம் என்று மக்களை நம்ப வைத்து பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கும்போது, தன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை அவர்கள் ஏற்கும் கதாபாத்திரத்துக்காக வெயிலில் காய வைத்து, ஜடாமுடி வளர்க்க வைத்து அந்த பாத்திரமாகவே மாற்றிவிடுவதை பாலாவின் பலம் என்றே குறிப்பிட வேண்டும்.

இப்படி தன் படத்துக்காக, தன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வேறு படங்களில் நடிக்காமல் வருடக்கணக்கில் 'தலைவிரி கோலமாக அலையும்' அந்த நட்சத்திரங்களைப்பற்றியும், அவர்களிடம் அட்வான்ஸைக் கொடுத்துவிட்டு காத்திருக்கும் தயாரிப்பாளர்களைப் பற்றியும் எண்ணிப்பார்க்காமல், திட்டமிட்டபடி படத்தை முடிக்காமல் வருடக்கணக்கில் இழுப்பது பாலாவின் பலவீனம்.

இவர்களைவிடுங்கள், பாலாவை நம்பி பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளருக்கே தலைவலி அல்லவா? பாலாவுக்கும், பிதாமகன் படத்தின் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, அந்தத் தயாரிப்பாளரே வெளிப்படையாய், வேதனையாய் பாலாவைப் பற்றி புலம்பித்தள்ளிய விஷயம் இது.

பாலாவுக்கு வேண்டுமானால் படம் இயக்குவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்? குறிப்பிட்ட பட்ஜெட்டில், குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிக்க முடியாமல்போகும்போது, அதிக பாதிப்புக்குள்ளாவது அவரை நம்பி முதலீடு செய்தவர்களே! பிறரை பாதிக்கும் அவரது பலவீனமான இந்த ப(வ)ழக்கத்தை பாலா களைய வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

தனிப்பட்டமுறையில் பாலாவிடம் எனக்கொரு மன வருத்தம் உண்டு. ஒரு இயக்குநராக தன் படைப்புகளின் மூலம் உலகத்தையே திரும்பிப்பார்க்க வைக்கும் அபரிமிதமான ஆற்றல் கொண்ட பாலா, பணம் சம்பாதிக்கும் ஆசையில் படத்தயாரிப்பாளராக பாதை மாறுகிறாரே என்பதே அந்த வருத்தம்.

ஒரு இயக்குநராக அவர் கேட்கும் சம்பளத்தை கொட்டிக் கொடுக்க கோடம்பாக்கத்தில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே பாலாவின் காட்டில் பண மழை அடை மழையாக வாய்ப்பிருக்கும்போது, ஏன் தயாரிப்பாளராக தடம் மாற வேண்டும்?

கலைஞன் வியாபாரியாகும்போது கலைஞன் தோற்றுப்போவான் என்று சொல்லப்படுவது பாலா விஷயத்தில் நிரூபணமாகிவிடக் கூடாது என்ற அக்கறையிலேயே இதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியதாக இருக்கிறது.

இன்றைய இளம் இயக்குநர்கள் பலருக்கும், நாளைய இயக்குநர்களுக்கும் பிதாமகனாக இருக்கும் பாலா இதைப் புரிந்து கொண்டால், எதிர்காலத்தில் அவர் எட்டுகிற உயரமும், அடைகிற வெற்றியும் தமிழ்சினிமா வரலாற்றில் எவராலும் முறியடிக்க முடியாத சாதனைகளாக இருக்கும்.
-ஜெ.பிஸ்மி

No comments:

Post a Comment