தமிழ்சினிமாவில் கதைகளைக் களவாடுவது புதிய விஷயமில்லை. கௌதம்மேனன் போன்ற பல இயக்குநர்கள் இதை தொழிலாகவே செய்து கொண்டு பணம் பார்ப்பதோடு, முன்னணி இயக்குநர்களாகவும் தமிழ்த்திரையுலகில் வெட்கமில்லாமல் வெற்றி உலா வந்து கொண்டிருக்கிறார்கள். விவரம் புரியாத ரசிகர்களும் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கதைத்திருட்டு பல வகை. ஆங்கில மற்றும் வெளிநாட்டுப்படங்களிலிருந்து கதையை திருடுவது ஒரு வகை! ஷக்திசிதம்பரம் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வியாபாரி’ என்ற படத்தின் கதை விuறீtவீஜீறீவீமீநீவீtஹ் என்ற ஆங்கிலப் படத்திலிருந்தும், கௌதம்மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் கதை ஞிமீஸிணீவீறீமீபீ என்ற ஆங்கிலப்படத்திலிருந்தும் திருடப்பட்டதுதான். தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளில் இருந்து கதையை சுடுவது இன்னொரு வகை. சண்டைக்கோழி போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
கதைத்திருட்டில் மற்றொரு வகையும் உண்டு. இதுதான் கொடுமையான விஷயம். இயக்குநராகும் முயற்சியில் கதைகளை தயார் செய்து கொண்டு வாய்ப்புக் கேட்டு வரும் உதவி இயக்குநர்களின் கதையைத் திருடுவதுதான் அது. இப்படி கதையைப் பறிகொடுத்த உதவி இயக்குநர்கள் பலர் உண்டு - திரையுலகில். பரிதாபத்துக்குரிய இவர்கள் தங்களின் கதையை வேறொருவர் திருடியது உறுதியாய் தெரிந்தும், பிரச்சனையைக் கிளப்பினால் எங்கே தனக்கு சண்டைக்காரன் என்ற கெட்டப் பெயர் ஏற்பட்டு, பட வாய்ப்பு தர மாட்டார்களோ என்ற பயத்தில் வாய்பேசாத ஊமைகளாகவே இருந்து விடுவார்கள். இந்த அச்ச உணர்வையும் மீறி பிரச்சனையைக் கிளப்பியவர்களும் இருக்கிறார்கள். விஷயத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க, கதையைத் திருடியவர் பணத்தை வீசி எறிந்து, அவர்களின் வாயை அடைத்த கதைகளும் ஏராளம். சில வருடங்களுக்கு முன்பு அர்ஜூனிடம் கால்ஷீட் கேட்டு அவரிடம் கதை சொன்னார் ஒரு உதவி இயக்குநர். கதை சரியில்லை என்று தட்டிக் கழித்த அர்ஜூன் அதே கதையை தான் எழுதிய கதை என்று சொல்லி தயாரிப்பாளரிடம் பணத்தைக் கறந்தார். அதுதான் வாத்தியார் படம். படத்தை பார்த்த அந்த உதவிஇயக்குநர் பொங்கியெழுந்து போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்குமளவுக்கு அர்ஜூனின் கதைத்திருட்டு விவகாரம் அப்போது சந்தி சிரித்தது.
அதையடுத்து, தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது என்று ஒரு உதவி இயக்குநர் கோர்ட் படியேறினார். தக்க பதில்கள் மூலம் அது தன்னுடைய கதைதான் என்று கமல்ஹாசன் நிருபித்தததும் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. விவகாரம் முடிந்தது என்று நினைத்த போது, தன் கைப்பட பத்திரிகைகளுக்கு ஒரு கடிதத்தை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார் கமல். கிசுகிசு பாணியில் கமல் எழுதிய அந்தக் கடிதம்தான் இது..!
யாகாவராயினும், சத்தியமேவ ஜெயதே எனும் கூற்றுக்கு குந்தகம் விளையும் நிலை வரும்போது சட்டம் ஏவ ஜெயதே எனும் புது மொழியை நம்ப வேண்டி வருகிறது. அவ்வாறே நம்பி உண்மை அடிபடாமலிருக்க சட்டத்திடம் உதவி கேட்டேன். சட்டம் என்னையும் தன்னையும் காத்து நின்றது. மனசாட்சிக்கு பணிந்து வாழும் கலைஞர்களை வாழ்த்த உள்ள கூட்டத்திற்கு மத்தியில் வீழ்த்தவும் நினைக்கும் ஒரு சிறுபான்மை கூட்டம் இருப்பது என் மனதை உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. அதுவும் திரை உலகத்தை சார்ந்த சில பழைய நண்பர்களே இந்த அவதூறு வழக்கிற்கு பின்னால் இருந்திருக்க கூடும் என்ற என் சந்தேகம் வலுத்தது. சந்தேகம் மெய்ப்படும் சில ஆதாரங்களும் கிடைத்துள்ளது. முக்கியமாக தசாவதாரம் தயாரிப்பாளரிடம் சில மாதங்களுக்கு முன் ஒரு திரை எழுத்தாளர் வந்து, ‘உங்களுக்கு எதிரா கேஸ் குடுத்தானே பையன், அவன் நம்ம ஆளுதான். கேஸை வாபஸ் வாங்க சொல்லி சமரசம் செஞ்சி வைக்கணும்னா நம்மகிட்ட சொல்லுங்க. நம்ம சாதிக்கார பையன்தான்’ என்று சொன்னதாக திரு.ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்னிடமும், திரு. கே.எஸ்.ரவிக்குமாரிடமும் சொன்னதும் நான் அதிர்ந்து போனேன். நல்லவேளையாக அத்தகைய கட்டப் பஞ்சாயத்தில் எல்லாம் சம்மந்தப்படாமல் சட்டப்படி எங்கள் தரப்பு உண்மையை, நாங்கள் காத்து கொள்ள முடிவெடுத்தது எங்கள் புத்திசாலித்தனம் மட்டுமல்ல, நேர்மையும் கூட. சட்டத்தின் உதவியுடன் உண்மை வென்றே தீரும் என்பதற்கு இன்னும் ஓர் உதாரணம் காட்டிய நீதிமன்றத்திற்கும், மாண்புமிகு நீதிபதிக்கும் எங்கள் வணக்கங்கள். சட்டம் தன் வேலையை செய்யும். நல்ல தீர்ப்பளிக்கும் என்ற மாறாத நம்பிக்கையுடன்அன்புடன் கமல்ஹாசன்
தன் தரப்பு நியாயத்தை பத்திரிகை மூலம் மக்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்த கமலின் செயல் நியாயமானதே. அதே நேரம் தன்னை வீழ்த்த நினைத்த அந்த பழைய நண்பர் யார் என்பதையும் பகிரங்கமாகச் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா? கமலின் அந்தப் பழைய நண்பர் நிச்சயமாக சாதாரண நபராக இருக்க வாய்ப்பில்லை. கமலுக்கு நண்பர் என்றால், அவர் பிரபல இயக்குநராகவோ, தயாரிப்பாளராகவோ அல்லது நட்சத்திர மாகவோதான் இருக்க முடியும். எனவே கமல் அந்த நபரைப்பற்றி வெளிப்படையாக சொன்னால்தான் கமல் சொல்லும் அவரது பழைய நண்பரைப் பற்றி மக்கள் அறிய முடியும். அதைவிட்டு கிசுகிசு பாணியில் மொட்டையாக பழைய நண்பர் என்று சொன்னால் என்ன அர்த்தம்? கமலின் பழைய நண்பர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் மண்டையை பியத்துக் கொள்ளட்டும் என்று கமல் நினைத் திருக்கலாம். அல்லது அந்தப்பழைய நண்பர் கடிதத்துக்காகப் புனையப்பட்ட கற்பனையாகவும் இருக்கலாம்.கிசுகிசு எழுதுவது வியாபார பத்திரிகைகள் தங்களின் வியாபாரத்தைப் பெருக்குவதற்காகக் கையாளும் மலிவான உத்திகளில் ஒன்று. அதை கமல் போன்ற பொறுப்பான கலைஞர் செய்வதுதான் வருத்தமாகவும், உறுத்தலாகவும் இருக்கிறது.