உண்மையைப் போன்ற தோற்றத்தைத் தருகிற பிரம்மாண்டமான பொய்தான் சினிமா. அப்படியொரு பொய்யைப் புனைந்து பணம் சம்பாதிப்பதையே பிழைப்பாக வைத்திருப்பதாலோ என்னவோ மக்களை ஏமாற்றுவதே சினிமாக்காரர்களின் சிந்தனைகளில் முதன்மையானதாக இருக்கிறது. இன்னும் வெளிப்படையாகப் பேசுவதென்றால், மக்களை ஏமாற்றுவதில் சினிமாக்காரர்கள் அரசியல்வாதி களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை.
ஒரு திரைப்படம் தயாரிக்கத் தொடங்குவதிலிருந்து, அப்படம் திரைக்கு வந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் பொய்களையேச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒரு கோடியில் தயாரிக்கப்படும் படத்தை ஐந்து கோடியில் தயாரிப்பதாக சொல்வதாகட்டும், ஒரு லட்சத்தில் போடப்பட்ட அரங்கத்தை (செட்) ஐம்பது லட்சத்தில் போட்டதாகச் சொல்வதாகட்டும், திரைக்கு வந்து தோல்வியடைந்த படத்தை ‘வெற்றிநடை போடுகிறது’ என்ற ரீதியில் விளம்பரங்களை செய்து மக்களை நம்பவைப்பதிலாகட்டும், எல்லாவகையிலும் பொய்யைச் சொல்லியே மக்களின் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திரையுலகினர் செய்யும் மிகப்பெரிய ஏமாற்றுவேலை, பிற மொழிப்படங்களை மொழிமாற்றி, அதை நேரடி தமிழ்ப்படம் என்று மக்களை நம்பவைப்பது! மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழிகளில் வெற்றியடைந்த படங்களின் தமிழ் மொழிமாற்று உரிமையை வாங்குவதும், அப்படங்களை தமிழில் மொழிமாற்றி வெளியிடுவதும் புதிதல்ல. டப்பிங் படங்கள் என்று சொல்லப் படுகிற, இப்படிப்பட்ட மொழிமாற்றுப் படங்களைத்தான் பொய்யாய் விளம்பரங்களைச் செய்து, தாங்களே தயாரித்த நேரடித்தமிழ்ப்படம் போன்ற செயற்கையான தோற்றத்தை ஊடகங்களின் துணையுடன் உண்டாக்கி வெளியிடுகிறார்கள்.
இந்த வழியில் பல ஆண்டுகளாக மக்களை மட்டும் ஏமாற்றிக் கொண்டிருந்த இவர்கள், கடந்த சில ஆண்டுகளாக தணிக்கைக் குழுவையும், அரசையும் கூட ஏமாற்ற ஆரம்பித்துவிட்டனர். பிறமொழிப்படத்தின் தமிழாக்க உரிமையை வாங்கி, அது பிறமொழிப்படத்தின் டப்பிங் என்று தெரியாமலிருக்க, இங்குள்ள நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து சில காட்சிகளை எடுத்து, படத்தில் சேர்த்துவிடுகின்றனர். அதன் மூலம் இது நேரடித் தமிழ்ப்படம் என்று தணிக்கைக்குழுவினரை நம்ப வைத்து, சான்றிதழ் பெற்றுவிடுவதோடு, தமிழக அரசு வழங்கும் மானியம், வரிவிலக்கு போன்ற சலுகைகளையும் பெற்றுவருகின்றனர்.
திரைத்துறையினர் செய்து வரும் இந்த மோசடி, பாமர மக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. போஸ்டர்களில், நாளிதழ் விளம்பரங்களில் தெரியும் தமிழ்முகங்களைப் பார்த்து, இது தமிழ்ப்படம்தான் என்று நம்பி திரையரங்குக்கு வருகின்றனர். தமிழ்மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கும் இந்தப்போக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருப்பது மட்டுமல்ல, தங்களின் தவறை மறைக்க மற்றுமொரு பொய்யையும் கூற ஆரம்பித்திருக் கின்றனர். படத்தில் அன்னிய முகங்கள் அதிகமாக இருக்கிறதே என்று யாரும் கேள்விகேட்டுவிடக்கூடாது என்று முன்னெச்சரிகை யில், இது இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என்றும் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட இழிவான காரியத்தை மணிரத்னம் போன்ற மக்களின் நன்மதிப்பு பெற்ற இயக்குநர்களே செய்கிறார்கள். இவர் இயக்கிய உயிரே, குரு போன்ற படங்கள் எல்லாம் இப்படி மொழிமாற்றி வெளியிடப்பட்ட படங்கள்தான். பணம் சம்பாதிப்பதற்காக தமிழ்மக்களை மோசடி செய்யும் இப்படிப்பட்ட கேவலமான வியாபாரிகளில் ஒருவராக பாரதிராஜாவும் மாறிப்போனதைத்தான் எளிதில் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பதினாறு வயதினிலே படம் தொடங்கி பாரதிராஜா தமிழ்த்திரையுலகில் பதித்த தடங்களையும், அடைந்த பெருமைகளையும் நாம் மறக்கவில்லை. அவற்றை எல்லாம் அவரே மறந்துபோனதுதான் துரதிர்ஷ்டம்!
இயக்குநர் இமயம் என்று அவரை தலையில் வைத்துக் கொண்டாடிய தமிழ்மக்களுக்கு துரோகம் இழைக்கும்விதமாக ‘சினிமா’ என்ற பெயரில் அவர் இயக்கிய ஹிந்திப்படத்திற்கு ‘பொம்மலாட்டம்’ என்று பெயர் சூட்டி, அதை நேரடித்தமிழ்ப்படம் போன்று விளம்பரங்கள் செய்து வெளியிட்டது பித்தலாட்டமின்றி வேறில்லை. பிறமொழிப்படங்களுக்கு தமிழ்வர்ணம் பூசி, தமிழனின் பணத்தை சுரண்டும் இப்படிப்பட்ட இழிசெயலை எத்தனையோ பேர் செய்து கொண்டிருக்க, பாரதிராஜாவை மட்டும் நாம் சுட்டிக்காட்டவும், கண்டிக்கவும் காரணமிருக்கிறது.
மொழிமாற்றுப் படத்தை தமிழ்ப்படம் என்று சொல்லி பணம் சம்பாதிக்கும் எவரும், இதில் மணிரத்னமும் அடக்கம், தன்னை தமிழினத்துக்காக பாடுபடுகிறவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. சராசரியான சினிமா வியாபாரிகளாகவே இயங்கிக்கொண்டிருக் கிறார்கள்.பாரதிராஜா இப்படிப்பட்ட இயல்பு கொண்டவரில்லை. காவிரி பிரச்சனை, ஓகேனேக்கல் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை என தமிழினம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறவர். குறிப்பாக இலங்கைப் பிரச்சனையில் அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியாவின் இறையாண்மையையே பாதிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூக்குரல் எழுப்புமளவுக்கு வீர்யமுடன் வெளிப்பட்டன.
இப்படியாக சமூக, அரசியல் பிரச்சனைகளிலும் தன் குரலை உரக்க ஒலிக்க செய்கிற பாரதிராஜா, சில வருடங்களுக்கு முன் ஃபெப்ஸி தொழிலாளர் கூட்டமைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது, தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் நலனுக்காக படைப்பாளிகள் சங்கம் உருவாகவும் முக்கிய காரணமாக இருந்தார். அது மட்டுமல்ல, தன்னை தமிழினப்போராளியாகவும் அவ்வப்போது அடையாளப்படுத்திக் கொள்ளும் பாரதிராஜா, எந்த தமிழினத்துக்காக போராடுகிறாரோ அதே தமிழ்மக்களுக்குத்தான் பொம்மலாட்டம் பட விஷயத்தில் துரோகமும் இழைத்திருக்கிறார்.
தமிழ்ப்பட இயக்குநர்கள் பிற மொழிப்படங்களை இயக்குவது உலகமகா விஷயமல்ல! பாரதிராஜாவின் காலத்திலேயே பாலசந்தர், பாலுமகேந்திரா, பாக்யராஜ் என எத்தனையோ இயக்குநர்கள் இதற்கு முன் பிற மொழிப்படங்களை இயக்கியிருக்கின்றனர். அவர்கள் யாருமே அப்படங்களை மொழிமாற்றி தமிழ்ப்படம் என்று மோசடி செய்ததில்லை. கே.பாலசந்தர் ‘மரோசரித்ரா’ தெலுங்குப்படத்தை இயக்கியபோதும், அதே படத்தை ‘ஏக் துஜே கேலியே’ என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கியபோதும் அந்தந்த மொழிப்படமாகவே தமிழ் மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்தனர். பாலு மகேந்திராவோ தான் இயக்கிய ‘யாத்ரா’ போன்ற மலையாளப் படங்களை தமிழில் மறுஉருவாக்கம்(ரீமேக்)தான் செய்தாரே தவிர, பாராதிராஜாவைப்போல் ஏமாற்றுவேலையைச் செய்யவில்லை.
இத்தனைக்கு பாலசந்தரும், பாலுமகேந்திராவும் தங்களை தமிழினத்துக்காக பாடுபடுகிறவர்களாக காட்டிக்கொள்பவர் களில்லை. அதே நேரம் தான் சார்ந்த தொழிலுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். தமிழ் மக்களுக்கு நேர்மையாக இல்லை, தன் தொழிலுக்காகவாவது பாரதிராஜா நேர்மையாக இருந்திருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. பிற மொழிப்படத்தை தமிழ்ப்படமாக நிறம் மாற்றியதன் மூலம் பாரதிராஜாவின் சாயம் வெளுத்த உண்மையைப் பற்றி இங்கே பேசுகிறபோது, அவரின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதைப்பற்றியும் பேசுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
அந்த முகம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அமெரிக்காவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்தவரைப்போல் எந்நேரமும் ஜீன்ஸ், டீ சர்ட்டில் வளைய வரும் பாராதிராஜாவுக்கு ஆங்கில மொழி மீது இருக்கும் பிடிப்பும், பிரமிப்பும் அலாதியானது மட்டுமல்ல, அக்கிரமமானது. அல்லிநகரம் என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்த பாராதிராஜா ஆங்கிலம் பேசுவதில் தவறில்லை. கலையுலகைச் சேர்ந்த அவர் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த கலைஞர்களுடன் நட்புப்பாராட்டவும், தன் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளவும் ஆங்கிலம் அவசியம்தான். அதற்காக ஒரு வாக்கியத்தைக் கூட முழுமையாய் தமிழில் பேசமுடியாத அளவுக்கு தமிழை ஆங்கிலத்தில் முக்கியெடுத்து தங்கிலீஷ் பேசிக் கொண்டிருப்பதைத்தான் சகிக்கவே முடியவில்லை.
தமிழுக்கான போராட்டங்களின்போது கவனமாக தமிழ் பேசும் பாரதிராஜா மற்ற எல்லா நேரங்களிலும் இப்படித்தான் ஆங்கில அரிவாளால் தமிழைப் படுகொலை செய்து வருகிறார். அதன் உச்சமாக நடந்த ஒரு சம்பவத்தை இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும். ‘பொம்மலாட்டம்’ படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து தங்கிலீஷிலேயே உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருந்த பாரதிராஜா, தன்னையறியாமலே ‘ஐ யம் தமிழ்படைப்பாளி’ என்று ‘ஆங்கிலம்’ பேசியதைக் கண்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் கேலிச்சிரிப்பு கூட எழுந்தது. தமிழ்ப்பத்திரிகையாளர்கள் நிறைந்த ஒரு சபையில், இப்படியொரு ‘இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில்’ பேச வேண்டிய அவசியம் என்ன? இதை எல்லாம் பார்க்கும்போது, பாரதிராஜாவின் தமிழ்ப்பற்றும் பாசமும் வெளிவேஷம் என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியிருக்கிறது.
திரையுலகில் பாராதிராஜாவைவிட நன்றாக ஆங்கிலம் தெரிந்த, ஆங்கிலத்திலேயே மணிக்கணக்கில் பேசுமளவுக்கு ஆங்கில அறிவு கொண்ட எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படி உளறிக் கொண்டிருப்பதில்லை. காரணம் பாரதிராஜாவுக்கு இருப்பதுபோல் அவர்கள் யாருக்கும் ஆங்கிலத்தின் மீது பிரமிப்பும் இல்லை, காதலும் இல்லை. English is a language நாட் Knowledge என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே தவிர அது அறிவு இல்லை’.
இந்தப்புரிதல் பாரதிராஜாவுக்கும் வர வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். இதற்கு மேலும் தொடர்ந்து அவர் இப்படியே பேசிக் கொண்டிருப்பாரேயானால், குறைந்தபட்சம் தமிழினத்தின் மீது அக்கறை கொண்டவராக தன்னைக் காட்டிக் கொள்வதையாவது அவர் கைவிட வேண்டும். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் விஜயகாந்தை வளர்ப்புத்தமிழன் என்று வசை பாடிய பிறப்புத்தமிழன் பாரதிராஜாவுக்கு ஆங்கிலத்தின் மீதிருக்கும் மோகத்தினால் எதிர்காலத்தில் அவருக்கு தமிழ்மொழியே மறந்துபோய்விடக்கூடிய ஆபத்திருப்பதினாலேயே இதை எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மேடைதோறும் ‘என் இனிய தமிழ்மக்களே’ என்று முழங்கும் பாரதிராஜவுக்கு இது புரிந்தால் மகிழ்ச்சி.
No comments:
Post a Comment