Thursday, 2 July 2009

தமிழ்த்தலைப்பு பலன் தந்ததா?


கதை, கவிதை, கட்டுரைகள் போன்ற படைப்புகள், இலக்கியங்களுக்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்குமே அதன் தலைப்புதான் முதல் ஈர்ப்பு. வசீகரகமான தலைப்புக்கு வாசிப்பவனை தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் உண்டு. இது திரைப்படங்களுக்கும் பொருந்தும். பழைய தமிழ்த்திரைப்படங்களின் தலைப்புகள் இப்படித்தான் அழகுடனும், ஆற்றலுடனும் இருந்தன. தலைப்பிலேயே கதை சொன்ன படங்களும் உண்டு, தலைப்பே கவிதையாக அமைந்த படங்களும் உண்டு.

தமிழ்ச்சொற்களைக் கொண்டு தலைப்புகள் வைக்கப்பட்டதால் அத்திரைப் படங்களுக்கு அழகியலையும், காலத்தைக் கடந்தும் நினைவில் நிற்கிற தன்மையையும் கொடுத்தன. இந்தநிலை ஒரு கட்டத்தில், சரியாகச் சொன்னால் கடந்த கால் நூற்றாண்டுகளாக மாறி, பிற மொழிச் சொற்களும், அநாகரிகமான வார்த்தைகளும் தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகளில் இடம்பிடிக்கத் தொடங்கின.தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிற மொழிச் சொற்களையும், தரங்கெட்ட வார்த்தைகளையும் தேடித்தேடி தமிழ்த்திரைப்படங்களுக்குத் தலைப்பு களாக வைத்ததன் மூலம் சமூகச்சீரழிவுக்கு தலைமை தாங்கிய இந்தப் போக்கு நாளடைவில் மிக வேகமாகப் பரவி, படத்தலைப்புகளில் தமிழின் அடையாளமே தொலைந்து போனது. அதன் உச்சம்தான், படுக்கையறையில் ஆணும் பெண்ணும் புணரும் காட்சிகளைக் கொண்ட நீலப்படத்தைக் குறிக்கும் ‘பி.எஃப்.’ என்ற ஆபாசவார்த்தையையே ஒரு படத்துக்குத் தலைப்பாக வைத்தது. கேடுகெட்ட, கேவலமான இந்த செயலைக்கண்ட பிறகுதான் தமிழக அரசு விழித்துக்கொண்டது.

திரைப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் அதற்கு முன் நடந்த அத்தனை அத்துமீறல்களையும் வேடிக்கைப் பார்த்த தமிழக அரசு, சினிமாக்காரர்களின் வக்கிரம் எல்லை மீறிச் செல்வதை தடுக்கும் முயற்சியாக 2006 ஆம் ஆண்டில் ‘தமிழில் பெயர் சூட்டப்படும் தமிழ்ப்படங்களுக்கு வரிவிலக்கு’ என்றொரு அவசரச் சட்டத்தை அறிவித்தது.ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், சிதைவுக்கும் தகவல் தொடர்புச் சாதனங்களும், ஊடகங்களுமே முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் குறிப்பாக திரைப்படம் என்கிற ஊடகத்தின் வீச்சும், அது விரிந்து பரவுகிற வேகமும் அசாத்தியமானது, அசுரத்தனமானது. எந்த இலக்கும் இல்லாமல், எல்லையும் இல்லாமல் மிக விரைவாக வியாபிக்கும் சக்தியைப் பெற்றுவிட்ட திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும், அனைத்து வயதினரிடமும் தன் ஆதிக்கத்தை அழுத்தமாகப் பதிக்கிறது. அப்பேற்பட்ட வலிமையும், வல்லமையும் கொண்ட ஊடகமான திரைப்படங்களின் தலைப்புகள் தரக்குறை வாகவும், தமிழில் இல்லாமல் மாற்று மொழிகளிலும் சூட்டப் படுவது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஊறுவிளைக்கும் விஷயம் அன்றி வேறில்லை.

திரைப்படத்துறையினரால் இதுவரை செய்யப்பட்டு வந்த மொழிப்படுகொலையை தடுத்தேத் தீர வேண்டிய தேவையின் பொருட்டே இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இந்த சட்டத்துக்கு உடனடிப்பலனும் கிடைக்கவே செய்தது. ஆங்கில மற்றும் பிற மொழிகளில் தலைப்பு வைக்கப்பட்டு தயாரிப்புநிலையில் இருந்த பல படங்களின் தலைப்புகள் அவசர அவசரமாக தமிழ்மயமாக்கப்பட்டன. ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் தயாராகி, அதே பெயரில் தணிக்கைச்சான்றிதழும் பெற்றுவிட்டநிலையில் ‘சம்திங் சம்திங்’ என்ற ஆங்கில வார்த்தைகளை நீக்கிவிட்டு, ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. இப்படத்தைப் போலவே ‘எம்டன் மகன்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட படம் ‘எம்மகன்’ என்ற பெயரில் வெளியானது. ‘ஜில்லுனு ஒரு காதல்’ என்ற பெயரில் தயாரான படம் ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற பெயரிலும், ‘நெஞ்சில் ஜில் ஜில்’ என்ற படம் ‘நெஞ்சில்’ என்ற பெயரிலும், ‘மிஸ்டர். ரங்கா’ என்ற படம் ‘திரு.ரங்கா’வாகவும், ‘தமிழ் எம்.ஏ.,’ என்ற படம் ‘கற்றது தமிழ்’ என்ற பெயரிலும் வெளியாகின.

படத்தலைப்புகளில் இப்படி பாதி பிற மொழிச்சொற்களைக் கொண்டிருந்த படங்கள் மட்டுமல்ல, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பெயர் வைக்கப்பட்டிருந்த படங்களும் கூட, தமிழ்ப்பெயர்களுக்கு மாறின. ‘பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருந்த படம் ‘மாணவ மாணவிகள்’ என்றும், ‘ஸ்வீட்’ என்ற படம் ‘நினைத்தாலே’ என்றும், ‘ப்ளாஷ்பேக்’ என்ற படம் ‘அந்த நாள் ஞாபகம்’ என்றும், ‘பை 2’ என்ற படம் ‘இருவர் மட்டும்’ என்றும், ‘க்ளியோபாட்ரா’ என்ற படம் ‘தொ(ல்)லைபேசி’ என்றும், ‘ஆட்டோ’ என்ற படம் ‘ஓரம்போ’வாகவும் பெயர்மாற்றம் செய்யப்பட்டன. ‘லீ’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படத்துக்கு ‘லீ’ என்பது ஆங்கில வார்த்தை, அது தமிழ்ப் பெயரில்லை’ என்ற சர்ச்சை எழுந்ததும் ‘லீ என்கிற லீலாதரன்’ என்று கூடுதலாக தமிழ் வார்த்தைகளை ஒட்ட வைத்து அப்படத்தை வெளியிட்டனர். ‘ரெண்டு’ என்ற பெயரில் தயாராகி, தணிக்கை செய்யப்பட்டு, வெளியிடத் தயாராக இருந்த ஒரு படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் ‘இரண்டு’ என்று அவசர அவசரமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘ரெண்டு’ என்பதும் தமிழ் வார்த்தைதான், அது பேச்சுத் தமிழ் என்பதைக் கூட அறியாமல் ‘இரண்டு’ என்று மாற்றுமளவுக்கு படப்பெயர்களை தமிழ்ப்படுத்துவதில் இப்படியான கேலிக்கூத்துக்கள் எல்லாம் நடந்தேறின.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திரைப்படங்களின் தலைப்பு விஷயத்தில் தமிழக அரசு இப்படியொரு அவசரச்சட்டத்தைப் பிறப்பிக்க முக்கியக் காரணமாக இருந்த ‘பி.எஃப்.’ படத்தின் பெயரும் ‘அ, ஆ’ என்று மாற்றப்பட்டது. ‘பி.எஃப்.’ என்பதற்கு ‘பெஸ்ட் ஃபிரண்டு’ என்று வியாக்கியானம் சொன்ன அப்படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ‘அ,ஆ’ வுக்கும் அருஞ்சொற்பொருள் விளக்கினார். ‘அ,ஆ’ என்றால் ‘அன்பே ஆருயிரே’ என்று அர்த்தமாம்! ‘அ, ஆ’ என்று பெயர் சூட்டியதற்கு அவர் இப்படியொரு அர்த்தத்தைச் சொன்னாலும், அதன் பின்னணியும், உண்மையான காரணமும் அதுவல்ல என்பது எஸ்.ஜே.சூர்யாவுக்கு நெருக்கமானவர்களுக்கும், திரையுலகில் இயங்கும் என்னைப் போன்ற வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். வஞ்சப்புகழ்ச்சி என்பார்களே..அப்படியொரு விஷயமே அது. ‘தமிழில்தானே பெயர் வைக்க வேண்டும்? அ,ஆன்னு பேர் வைக்கட்டுமா?’ என்ற ஒருவகை நக்கல், நையாண்டி, எரிச்சல், கோபத்தின் வெளிப்பாடுதான்.

எஸ்.ஜே.சூர்யா மட்டுமல்ல, வேறு சிலருக்கும் இப்படிப்பட்ட மனநிலை இருப்பதையும் அவர்கள் சூட்டிய தலைப்புகளிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட, தன் பெயரிலேயே கேரளசாதியின் அடையாளத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு, நுனிநாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் ‘கௌதம் வாசுதேவ் மேனன்’ என்ற இயக்குநர் தன் படத்துக்கு ‘வாரணம் ஆயிரம்’ என்று தூய தமிழில் பெயர் வைத்தது இந்த அடிப்படையில்தான் என்பதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ‘வாரணம் ஆயிரம்’ படம் தொடங்கப்பட்டபோது, ‘வாரணம் என்றால் என்ன அர்த்தம்?’ என்று இயக்குநரிடம் கேட்காதவர்களே இல்லை. ‘வாரணம் என்றால் யானைகள்’ என்று வாய்வலிக்க அவர் அர்த்தம் சொல்ல வேண்டியதாயிற்று. புழக்கத்தில் இல்லாத வார்த்தையை தேடிக் கண்டுபிடித்து பெயர் வைப்பதற்கு பதில், ‘யானைகள் ஆயிரம்’ என்று புரியும் தமிழில் தலைப்பு வைத்திருக்கலாமே? இங்குதான் மேனனின் கோபமும், குசும்பும் மறைந்திருக்கின்றன.

மற்றொரு படத்துக்கு ‘அயன்’ என்று தலைப்பு வைத்தார்கள். ‘அயன் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டபோது அப்படத்தின் இயக்குநர், கதாநாயகன், பாடலாசிரியர் என ஆளுக்கு ஒரு அர்த்தத்தைச் சொன்னார்கள். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற அரசின் சட்டத்தையே கேலி செய்வதுபோல், பேச்சு வழக்கில் இல்லாத தமிழ் வார்த்தைகளை அகராதிகளில் தேடிக்கண்டுபிடித்து தங்களின் படத்துக்கு சூட்டியது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் துணிச்சலாக பிற மொழிச் சொற்களை தங்களின் படங்களுக்கு சூட்டிவிட்டு, அப்பெயர் தமிழ்ச்சொல்தான் என்று சாதித்து வரிவிலக்கைப் பெற்ற சம்பவங்களும் நடைபெற்றன.

தாம் தூம் என்ற வடமொழி வார்த்தைகளை தலைப்பாக வைத்துவிட்டு, அது ஒலியைக்குறிக்கும் தமிழ்ச்சொல் என்ற வாதாடி வரிவிலக்கு சலுகையைப் பெற்றனர். அதே காலக்கட்டத்தில் ‘தூம்’ என்ற பெயரில் ஹிந்திப்படங்கள் வெளியாகின என்பது அரசுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் வரிவிலக்கு அளிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர்களுக்கும் தெரியாமல்போனதுதான் ஆச்சர்யம். இச்சம்பவம் ஆச்சர்யம் என்றால், ‘சிவாஜி’, ‘பில்லா’ என்ற வடமொழிச்சொல்லைத் தாங்கி வந்த படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டது வேதனை. சிவாஜி யார்? என்று கேட்டால் மராட்டிய மன்னன் என்று சின்னக் குழந்தைகூட சொல்லும். பில்லா வடநாட்டைச் சேர்ந்த கொலைகாரன் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இவ்விரு படங்களுக்கும் என்ன அடிப்படையில் வரிவிலக்கு கொடுக்கப்பட்டது? இரண்டுமே பெயர்ச்சொல் என்று வாதாடி சலுகையைப் பெற்றார்கள்.

சிவாஜியும், பில்லாவும் பெயர்ச்சொல் என்றால் ‘எம்டன்’ என்பதும் பெயர்ச்சொல்தானே? பிறகு ஏன் ‘எம்டன் மகன்’ என்ற படத்தின் பெயரை ‘எம்மகன்’ என்று மாற்றும்படி வலியுறுத்த வேண்டும்? அதையும் பெயர்ச்சொல் என்று அனுமதித்திருக்கலாமே? எது தமிழ்ச்சொல், எது பிறமொழிச்சொல் என்பதை கண்காணிக்கவும், அதன்படி வரிவிலக்கு அளிப்பதற்கான ஆணையையும் வழங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் யார்? அரசாங்கத்தில் ஊதியம் பெறுகிற அதிகாரிகளாகவே இருப்பார்கள். நிச்சயமாக தமிழ்மொழியை கற்று அறிந்தவர்களாக அவர்கள் இருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் க்ரியா தமிழ் அகராதியைக் கூட அவர்கள் புரட்டியிருக்க மாட்டர்கள். அதனால்தான் தாம்தூம் என்ற தலைப்பை தமிழ் என்று அவர்களை எளிதில் நம்ப வைக்க முடிந்திருக்கிறது. சுதேசி, குருஷேத்திரம் போன்ற தலைப்புகளை எல்லாம் தமிழாக அங்கீகரித்து வரிச்சலுகையையும் அளித்திருக் கிறார்கள்.

இப்படிப்பட்ட குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனில், தமிழ்த்திரைப்படங்களுக்கு வைக்கப்படும் தலைப்புகள் தமிழ்ச்சொற்கள்தானா என்பதை உறுதிப்படுத்த தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரைப்படியே வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது ஒரு பக்கமிருக்க, இன்னொரு விஷயத்தையும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.தமிழ்மொழியின் சிதைவைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டம் அவசியமான நடவடிக்கைதான். இல்லை என்றால் ‘ரோபோ’ என்ற படத்தின் பெயர் ‘எந்திரன்’ என்று மாறியிருக்காது. என்றாலும், சற்று ஆழ்ந்து நோக்குகையில் உணர்ச்சிவசபட்டநிலையில் அறிவிக்கப்பட்ட அவசர முடிவு என்றும் தோன்றுகிறது.

திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்கள் இல்லை, பணம் சம்பாதிப் பதற்காக எதையும் செய்யக்கூடிய வியாபாரிகள்தான். இன்றைக்கு தமிழில் பெயர் வைப்பதை வைத்து இவர்களுக்கு தமிழுணர்வு வந்துவிட்டதாகவும் அர்த்தமில்லை. தமிழ்ப்பெயர் வைக்கவில்லை என்றால் வரிவிலக்குக் கிடைக்காதே என்ற அச்சத்திலேயே வாரணம் ஆயிரம் என்றும், அயன் என்றும் பெயர் வைக்க அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டினால் வரிவிலக்கு என்று அறிவித்ததற்கு பதில், தலைப்புகளில் பிற மொழி கலப்பிருந்தால் வழக்கமான வரியைவிட அதிகமாக வரிவிதிக்கப் படும் என்று அறிவித்திருந்தாலும், இதே பலன் கிடைத்திருக்கவே செய்யும்.

கர்னாடகாவில் பிற மொழிப்படங்களை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்தால் கூடுதல் வரி என்ற சட்டமிருக்கிறது - பல ஆண்டுகளாகவே. அதன் காரணமாக மற்ற மொழிப்படங்களை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படுவதும் கணிசமாக மட்டுப் பட்டிருக்கிறது. அதே அணுகுமுறையை, தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் தலைப்பு சூட்டும் விஷயத்திலும் தமிழக அரசு பின் பற்றலாம்.ஏனெனில், திரைப்படங்கள் வாயிலாக அரசுக்கு இதற்கு முன்பு வரை கிடைத்துக் கொண்டிருந்த கேளிக்கைவரி ஆண்டுக்கு சுமார் எண்பதுகோடி!

சற்று நிதானமாக யோசித்திருந்தால், இந்த எண்பது கோடி வருவாயை இழக்காமலே திரைப்பட வியாபாரிகளிடமிருந்து தமிழக அரசினால் தமிழைக்காப்பாற்றி இருக்க முடியும்.