Sunday, 12 July 2009

சரவணனாக இருங்கள். அல்லது சத்யராஜாக இருங்கள்!

முன்குறிப்பு- சில வருடங்களுக்கு முன் வண்ணத்திரை இதழில் பத்திரிகையாளரின் டைரி என்ற தொடர் வெளிவந்தது. அத்தொடருக்காக நான் எழுதிய கட்டுரைதான் இது.

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகத் தொடர்பில் இருக்கும் நான் புரிந்து கொண்ட விஷயம்.. திரைநட்சத்திரங்கள் - முகத்துக்கு மட்டு மல்ல மனசுக்கும் மேக்கப் போட்டுக்கொள்பவர்கள்! இதில் விதிவிலக்குகளும் உண்டு!


புகழ்பெறுவதற்கு முன் சாதாரண மனிதர்களாக இருந்த இவர்களை ஒரு படத்தின் வெற்றி, அடியோடு மாற்றிவிடுகிறது. சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன், ‘நம்மைப்பற்றி பத்திரிகைகளில் எழுதமாட்டார்களா’’ என்று ஏங்கும் இவர்கள், வளர்ந்த பிறகு அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகளைக்கூட படிப்பதில்லை. அப்படியே படித்தாலும் அதை எழுதிய பத்திரிகை யாளனிடம் ‘நீங்க எழுதினதைப் படிச்சேன்’’ என்று சொல்வதையே கௌரவக்குறைச்சலாக நினைக் கிறார்கள். பேட்டிக் கண்ட பத்திரிகையாளர்கள் சம்மந்தப்பட்ட நட்சத்திரங்களை மறுமுறை சந்திக்கும்போது, ‘பேட்டியைப் படிச்சீங்களா?’’ என்று கேட்டால், ‘இல்லை ஸார் நான் பொள்ளாச்சிக்குப் போயிட்டேன்’’ என்பார்கள். பொள்ளாச்சி என்னவோ சந்திரமண்டலத்தில் இருப்பதுபோல்.


இவர்களின் மனோபாவத்தைப் புரிந்து கொள்ளா மல் சில பத்திரிகையாளர்கள், தான் எழுதிய பேட்டி அல்லது செய்தி வெளியான புத்தகத்தை சம்மந்தப்பட்ட நட்சத்திரத்தைத் தேடிச் சென்று கொடுப்பதும் உண்டு. இந்தத் தவறை நான் எந்நாளும் செய்ததில்லை. அப்படி செய்வதை எனக்கும், நான் சார்ந்த பத்திரிகைத் தொழிலுக்கும் செய்யும் இழிவாக, அவமானமாக நினைக்கிறேன். குறிப்பிட்டப் பத்திரிகைக்காக நாம் பேட்டி எடுத்திருக்கிறோம். அது எப்படி பிரசுரமாகி இருக்கிறது என்ற ஆர்வம் அல்லது விருப்பம் இருந்தால் சம்மந்தப்பட்ட நட்சத்திரமே அந்தப் பத்திரிகையை வாங்கிப் படிக்கட்டுமே!


என் அனுபவத்தில் நான் தெரிந்து கொண்ட இன்னொரு விஷயம்....திரைநட்சத்திரங்களைப்பற்றி என்னதான் மாய்ந்து மாய்ந்து பேனாவில் மை தீர்ந்து போகும்வரை பக்கம் பக்கமாக புகழ்ந்து எழுதினாலும் அதை அவர்கள் சட்டை செய்வதில்லை. ‘கையெழுத்திட்ட புகைப்படம் அனுப்பவும்’ என்ற பின்குறிப்போடு கடிதம் எழுதும் ரசிகனின் கடிதத்துக்கு என்ன மரியாதையோ அதே மரியாதைதான் பாஸிட்டிவ்வாக எழுதப்படும் பேட்டிக் கட்டுரைகளுக்கும்! அதே நட்சத்திரங்களைப்பற்றி நாலுவரி நெகட்டிவ்வாக எழுதிவிட்டால் போதும், வெளிநாட்டில் இருந்தால் கூட நம் செல்போன் நம்பரை தேடிப்பிடித்து, ‘என்ன ஸார் இப்படி எழுதிட்டீங்க?’ என்று புலம்பித் தீர்த்துவிடுவார்கள்.


சினிமாக்காரர்களின் இப்படிப்பட்ட அணுகுமுறையைப் பார்க்கும் போது - பிலிமாலயா பத்திரிகையில், அதன் ஆசிரியர் மறைந்த திரு.எம்.ஜி.வல்லபன் பல வருடங்களுக்கு முன், எழுதியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘நல்லதைச் சொல்லும்போது நன்றி கூறாதவர்கள் அல்லதைச் சொல்லும் போது ஆத்திரப்பட உரிமையில்லாதவர்கள்’ என்று எழுதுவார் வல்லபன். உண்மைதானே? தன்னைப்பற்றி நல்ல விஷயத்தை எழுதியவனைப் பாராட்ட மனமில்லாதவர்களுக்கு, நெகட்டிவ்வான விஷயத்தை எழுதுகிற போது கோபப்பட என்ன தகுதி இருக்கிறது?


இந்த விஷயத்தில் எனக்கு இரண்டு பேரைப் பிடிக்கும் - திரையுலகில். ஒருவர் ஏவிஎம் சரவணன். இன்னொருவர் சத்யராஜ். ஏவிஎம் சரவணன் தன் அனுபவத்தில் எத்தனையோ பத்திரிகைச் செய்திகளில் இடம் பிடித்திருப்பார்? ஆனாலும் இன்று வரை ஒரு நல்ல பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார் சரவணன். அவரைப்பற்றி யார் என்ன செய்தி எழுதினாலும் அதைத்தவறாமல் படிக்கும் அவர், உடனடியாய் அந்தப் பத்திரிகைக்கும், பத்திரிகையாளருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றிக்கடிதம் எழுதிவிடுவார். (இந்தக்கட்டுரை வண்ணத்திரை இதழில் வெளியான போதும் ஏவிஎம் சரவணனிடமிருந்து மறுநாளே நன்றிக்கடிதம் வந்தது)இந்த குணம் திரையுலகில் எவருக்குமே இல்லை.


ஒருமுறை வாஞ்சிநாதன் என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் மீது தன் கடுப்பைக் காட்டினார் பத்திரிகையாளர்களினாலேயே வளர்த்துவிடப்பட்ட விஜயகாந்த். ‘எங்கள் மீது கோபப்பட சினிமாத்துறையில் ஏவிஎம் சரவணனைத்தவிர யாருக்கும் உரிமையில்லை’’ என்றேன் நான் அதே கடுப்புடன் அவரிடம். ‘ஏன்?’’ என்று என்னை முறைத்தார் விஜயகாந்த் கூடுதல் கடுப்புடன். சரவணனின் இந்தப் பழக்கத்தை அவரிடம் சொன்னேன். ‘அப்படியா?’’ என்றார் விஜயகாந்த் அலட்சியமாக.


சரவணன் இப்படி என்றால் சத்யராஜ் அதற்கு நேர்மாறானவர். அவரைப்பற்றி நல்லவிதமாக எழுதினாலும் சரி, கெட்டதாக எழுதினாலும் சரி ரியாக்ட் பண்ண மாட்டார். ‘நடிக்கிறது என் வேலை. எழுதுறது உங்க வேலை. நான் என் வேலையைப் பாக்கிறேன். நீங்க உங்க வேலையைப் பாக்கறீங்க. இதில் நன்றி என்ன வேண்டிக்கிடக்கு?’’ என்பார் கேஷுவலாக. நல்லவிதமாக எழுதியதைப்பற்றி எப்படி அலட்டிக் கொள்ள மாட்டாரோ அதேபோல் கெட்டதாக எழுதினாலும் கவலைப்பட மாட்டார். அவரைப்பற்றி நெகட்டிவ்வாக எழுதிய பத்திரிகையாளர் அடுத்த நாளே அவரைச் சந்தித்தாலும் ஏன் இப்படி என்னைப்பற்றி எழுதினீர்கள் என்று ஒருவார்த்தைக் கேட்கமாட்டார். அது மட்டுமல்ல, ஒருவேளை மனதுக்குள் வருத்தம் இருந்தாலும் தப்பித்தவறிக் கூட அதை காட்டிக் கொள்ள மாட்டார். எப்போதும் எப்படி பழகுவாரோ, கலகலப்பாகப் பேசுவாரோ அதேபோல்தான் பழகுவார், பேசுவார். எனக்கும் அவருக்கும் தனிப்பட்டமுறையில் நல்ல நட்பு உண்டு. ஆனாலும் நான் எத்தனையோ முறை சத்யராஜை கடுமையாய் விமர்சித்து எழுதியிருக்கிறேன். இன்றுவரை எங்கள் நட்பில் விரிசலில்லை.


சில வருடங்களுக்கு முன் குமுதம் பத்திரிகையில் நடிகையைப்பற்றிய தொடர் ஒன்று வெளிவந்தது. அதில் சத்யராஜை அடையாளப்படுத்தி, அவரை அசிங்கப்படுத்துவதுபோல் எழுதப்பட்டது. அதனால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எப்படிப்பட்ட சங்கடங்கள், அவமானங்கள் ஏற்பட்டன என்று எனக்கும் தெரியும். அப்படி ஒரு அவமானத்தை ஏற்படுத்திய அதே பத்திரிகைக்கு சில நாட்களில் பேட்டி கொடுத்தார் சத்யராஜ். இது பற்றி ஒருமுறை பேச்சு வந்தபோது சத்யராஜ் சொன்னார்: ‘மீடியாக்களுக்கு பரபரப்பான செய்தி வேணும். அதனால இப்படி எல்லாம் எழுதுறாங்க. எழுதிட்டுப்போகட்டும். அதனால நமக்கு கஷ்டம்தான். என்ன பண்றது? நமக்குக் கிடைச்சப் புகழுக்கு நாம கொடுக்கிற விலை!’’


சரவணனையும் சத்யராஜையும் இங்கே குறிப்பிடக் காரணம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை ஹீரோக்கள் பத்திரிகையாளர்களை நண்பர்களாக, நலன்விரும்பிகளாக மதித்தார்கள். இன்றைய ஹீரோக்களில் சிலரோ பத்திரிகையாளர் களை எதிரிகளாக நினைக்கிறார்கள். ஒரு இளம் நடிகரின் அப்பா ஒருபடி மேலேபோய், தன் மகனைப்பற்றி நெகட்டிவ்வாக எழுதும் பத்திரிகைகளுக்கு ரசிகர்கள் புடைசூழ கிளம்பிப்போய் தகராறு செய்வதையே தொழிலாக வைத்திருக்கிறார். எத்தனை பத்திரிகைகள் அவர் மகனைப்பற்றி பக்கம் பக்கமாக புகழ்பாடிக் கொண்டிருக்கின்றன? அந்தப்பத்திரிகைகளுக்கு இதேபோல் கூட்டமாய் போய் நன்றி சொல்லி இருப்பாரா?


நட்சத்திரங்களுக்கும் மீடியாக்களுக்கும் இப்போது உறவு எப்படி இருக்கிறது என்பதற்கு மிக சரியான உதாரணம் சூர்யா ஜோதிகா திருமணத்தின் போது பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை. அதாவது திருமணத்துக்கு பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை! இது பற்றி எங்களின் அதிருப்தியை தெரிவித்தபோது, அதற்கு சொல்லப்பட்ட காரணம் இன்னும் மோசம். ‘பாதுகாப்பு கருதி’ பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லையாம். பத்திரிகையாளர்கள் என்ன குண்டு வைக்கும் பயங்கரவாதிகளா?


சினிமாவைப்பற்றி எழுத வேண்டிய பத்திரிகையாளர்கள் சினிமாக்காரர்களைப்பற்றி எழுதி, மக்களின் மண்டைக்குள் குப்பையைக் கொட்டும் சமூகக்குற்றத்துக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று நொந்து கொள்ளும் அதே நேரம் சினிமாக்காரர்களுக்கும் உரக்கச் சொல்ல வேண்டிய விஷயமிருக்கிறது.


நட்சத்திர நண்பர்களே! ஏஸி அறையிலும், ஏற்றிவிடப்பட்ட காரின் கருப்புக்கண்ணாடிக்குள்ளும் வாழும் நீங்கள் உலகத்தைப் பார்க்கும் ஜன்னல்தான் பத்திரிகைகள். அதிலிருந்து தென்றலும் வரும், அவ்வப்போது அனல் காற்றும் அடிக்கும். இரண்டையும் சமமாக பாவிக்கப் பழகிக்கொள்ளுங்கள். இல்லை எனில், சரவணனாக இருங்கள். அல்லது சத்யராஜாக இருங்கள்!

No comments:

Post a Comment