நலிவடைந்த தொழில்களுக்கு அரசு சலுகைகளை அறிவிப்பது அந்தத் தொழிலை சார்ந்திருப்பவர்கள் தொடர் நஷ்டத்தினால் தெருவுக்கு வராமல் இருக்கவும், நசிந்துபோன அத்தொழிலை வீழ்ச்சி யிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவும் தான். திரையுலகுக்கு தமிழக அரசு அள்ளி இறைக்கும் சலுகைகளை இந்த அடிப்படையில் வகைப்படுத்த முடியாது! காரணம்..விவசாயம் போன்ற பிற தொழில்களோடு ஒப்பிடும்போது திரைத்தொழில் அப்படி ஒன்றும் நசிந்துவிடவில்லை. தவிர, சலுகைகளை அறிவித்து அத்தொழிலைக்காப்பாற்ற வேண்டிய அளவுக்கு திரைத்தொழில் அப்படி ஒன்றும் மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டதும் அல்ல.
அதே சமயம், சமீப காலமாக, தமிழ்ப்படங்களின் வெற்றி சதவிகிதம் குறைந்து வருவதன் மூலம் திரைப்படத்தயாரிப்புக்காக செய்யப்படும் முதலீட்டுக்கு, குறைந்தபட்ச உத்திரவாதம் கூட இல்லாமல்போய்விட்டதையும் மறுப்பதற்கில்லை. என்றாலும், அங்கே புழங்கிக்கொண்டிருக்கும் கோடிகளுக்கொன்றும் குறைச்சலில்லைதான். லாபத்தையும், வருமானத்தையும் அறுவடை செய்பவர்களுக்கும் குந்தகம் ஏற்பட்டுவிடவில்லை.
உண்மையைச் சொல்லப்போனால் செழிப்பாகத்தான் இருக்கிறது செலுலாய்டு உலகம்! ஆனாலும் நஷ்டம் நஷ்டம் என்று ஓயாமல் ஒப்பாரி வைத்தே அரசிடமிருந்து ஏராளமான சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் திரைப்படத் துறையினர். குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை ஐந்து லட்சத்திலிருந்து ஏழு லட்சமாக உயர்த்தியது தமிழக அரசு. அதையடுத்து, தமிழில் பெயர் சூட்டப்படும் புதிய படங்களுக்கு வரிவிலக்கு என்றும் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, ‘புதிய படங்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே வெளியான படங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்’ என்று அறிவித்ததன் மூலம் திரைத்துறையினரை மகிழ்ச்சியில் திளைக்கவும், திக்குமுக்காடவும் வைத்தது தமிழக அரசு. இப்படி அரசால் வழங்கப்பட்ட சலுகைகளை, குறிப்பாக வரிவிலக்கு என்ற சலுகையின் பலனை மக்களோடு பகிர்ந்து கொள்ள முன்வராமல், அதன் முழுப்பலனையும் தாங்களே அனுபவித்தார்கள் திரையுலகினர். அதன் காரணமாகவோ என்னவோ, திரையரங்குக் கட்டணங்களை கணிசமாகக் குறைத்தது அரசு.
‘திரையரங்குக் கட்டணத்தைக் குறைத்தால் திரைப்படம் பார்க்க வரும் பார்வை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்ற எண்ணத்தில், திரையுலக அமைப்புகளே அரசிடம் வேண்டுகோள் வைத்து அதன் அடிப்படையில் செய்யப்பட்ட அறிவிப்பு என்று சொல்லப்பட்டது. ஆனாலும் திரைத்துறையிலேயே ஒரு சாரருக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை!
இது ஒரு பக்கமிருக்க, திரையரங்கக்கட்டணக் குறைப்பினால் திரையரங்குகள் மீண்டும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு, 2007 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் - விஜய் நடித்த போக்கிரி, அஜீத் நடித்த ஆழ்வார், விஷால் நடித்த தாமிரபரணி போன்ற படங்கள் வெளிவந்தன. (மணிரத்னம் இயக்கிய குரு ஹிந்திப் படத்தின் தமிழ்ப்பதிப்பும் பொங்கல் வெளியீட்டுப்படங்களில் அடக்கம்.) இவற்றில் போக்கிரி படத்தின் பட்ஜெட் மட்டுமே இருபது கோடி! ஆழ்வார் எட்டு கோடி செலவிலும், தாமிரபரணி நான்கு கோடி செலவிலும் தயாரிக்கப்பட்டன. முப்பத்திரண்டு கோடிகளை விழுங்கிய இம்மூன்று படங்களும் சுமார் நாற்பது கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
நாற்பது கோடிக்கு படத்தை வாங்கியவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அவர்களின் இலக்கு ஐம்பது கோடிக்குக்குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இவர்களின் எண்ணம் ஈடேறாதது மட்டுமல்ல, போட்ட பணம் திரும்பி வராது என்பதும் ஒருகட்டத்தில் உறுதிப்பட்டது. காரணம்.. போக்கிரி, ஆழ்வார், தாமிரபரணி என மூன்று படங்களும் மக்களை திருப்திப்படுத்தவில்லை. அதன் காரணமாய் இந்தப்படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பும் இல்லை, வசூலும் இல்லை. மக்களின் இந்தத் தீர்ப்பை வைத்து, ‘திரையரங்குக் கட்டணக் குறைப்பினால் படத்துறைக்கு பயனில்லை,’ என்று திரைப்படத் துறையினர் முணுமுணுக்கத் தொடங்கினர். ஏனெனில், எந்தவொரு பிரச்சனையையுமே ஆழ்ந்து, அலசிப்பார்க்காமல், மேலோட்டமாக, மேம்போக்காக அணுகும் திரையுலகினர் இந்த விஷயத்தையும் அவ்வாறே அணுகினார்கள்.
உண்மையில் 2007 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீட்டுப் படங்கள் திரைப்படத்துறையினரையும், மக்களையும் ஏமாற்றியதற்கு என்ன காரணம்? அவற்றின் கதைஅம்சத்தைப் பார்த்தாலே காரணம் புரியும். போக்கிரி படத்தின் கதாநாயகன் கூலிப்படையைச் சேர்ந்தவன். முதல் காட்சியில் தூக்கிய துப்பாக்கியை கடைசிவரை கீழே போடவில்லை. படம் முழுக்க சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தான். போலீஸ் அவனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்க, கடைசியில் அவனைப்பற்றிய ரகசியத்தை உடைத்தார்கள். அவன் ஐபிஎஸ் படித்த போலீஸ் அதிகாரியாம். ரௌடிகளை அழிக்க ரௌடி அவதாரம் எடுத்தவனாம். முள்ளை முள்ளால் எடுக்கிறார்களாம். நான்கு வரிக்கதையே இத்தனை நாராசமாக இருக்கிறதே? மொத்தப்படத்தையும் பார்த்த மக்களின் நிலமையை நினைத்துப்பாருங்கள்? இப்படி ஒரு உலகமகா கதையை ஒரு கோடி கொடுத்து தெலுங்கிலிருந்து இறக்குமதி செய்தார்கள் என்பதுதான் வேடிக்கை. (இவர்கள் விலை கொடுத்து வாங்கிய தெலுங்குப்படம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ரஜினி நடித்த பாண்டியன் என்ற படத்தின் உல்டா என்பது தனிக்கதை)
ஆழ்வார் படத்தின் கதாநாயகனும் துப்பாக்கியோடுதான் திரிந்தான். தன் குடும்பத்தை அழித்த வில்லன்களை பழிதீர்க்கப் புறப்படும் இவன் பிணவறையில் வார்டுபாய் வேலை பார்த்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ராமன், கிருஷ்ணன் என கடவுள் அவதாரம் எடுத்து வில்லன்களை வேட்டையாடினான். தாமிரபரணி படத்தின் கதாநாயகன் கையில் துப்பாக்கி இல்லை! அதற்காக ஆறுதல் அடைய முடியவில்லை. காரணம் அவன் கையில் வீச்சரிவாள் இருந்ததே! படத்தின் முதல் காட்சியில் ஓடும் ரயிலை நிறுத்தி எதிரிகளை வெட்டிசாய்த்தான். முதல் காட்சியின் லட்சணமே இப்படி என்றால், முழுப்படத்தின் கதையையும் நீங்களே புரிந்து கொள்ளலாம். திரையில் வழியும் ரத்தம் படம் பார்க்கும் நம்மீதும் பட்டது போல் படம் நெடுகிலும் ரத்தக்களறி!கதை அம்சம் மட்டுமல்ல, காட்சி அமைப்பிலும் ஏறக்குறைய இம்மூன்று படங்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. நடித் தவர்களின் முகம்தான் வேறாக இருந்ததே தவிர, செயல்களில் வேறுபாட்டைக்காண முடியவில்லை. மொத்தத்தில், வன்முறை யைத் தூக்கிப்பிடிக்கும் துப்பாக்கி, வீச்சரிவாள் கலாச்சாரம்தான் பொதுவான அம்சமாக இருந்தது. காவல்துறையின் என்கௌன்ட் டர்களின் மூலம் தமிழகம் முழுக்க பரவலாக ரௌடிகளின் கொட்டம் அடக்கப்பட்டுவிட்ட நிலையில் தமிழப்படங்களில் மட்டும் ரௌடிகள் ராஜ்யம் நடக்கிறது. கதாநாயகன்களே ரௌடிகளாகி, குத்துப்பாட்டுப்பாடிக் கொண்டு கும்மாளம்போடுகிறார்கள்.
ஒரு பக்கம், ஏற்கனவே பார்த்து சலித்துப்போன பழைய கதை, இன்னொரு பக்கம் கதாநாயகன்களை திருப்திப்படுத்துவதற்காக வைக்கப்படும் கொஞ்சமும் நம்பமுடியாத, ஜீரணித்துக்கொள்ளவே முடியாத காட்சி அமைப்புகள். மொத்தத்தில் - கால் கடுக்க நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்க்க வரும் ரசிகனை, அவன் எதிர்பார்ப்பை இவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. அவன் ஏமாற்றமடைகிறபோது இப்படிப்பட்ட படங்களை புறக்கணிப் பதில் தப்பென்ன?ஆக - 2007 ஆம் ஆண்டின் பொங்கல் படங்கள் மட்டுமல்ல, பெருவாரியான தமிழ்ப்படங்களின் தோல்விக்கு மேற்சொன்ன அம்சங்களே காரணமாக இருக்கின்றன.
அவற்றை உணர்ந்து திரையுலகினர் தங்களின் போக்கை, மனோபாவத்தை மாற்றிக் கொள்ளாதவரை, திரையரங்குக் கட்டணக்குறைப்பு மட்டுமல்ல, வேறு எந்த சலுகையாலும் கூட திரையரங்குக்கு மக்களை வர வைத்துவிட முடியாது. ஏமாற்றமும், நஷ்டமும் தொடரவேச் செய்யும்.
No comments:
Post a Comment