Tuesday, 30 June 2009

மறுபடியும் மசாலாவே முன்னிலை


பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஏனோ தமிழ்த்திரைப்படங்களுக்கு மட்டும் பொருந்துவதே இல்லை. சர்வதேச அளவில் திரைப்படக்கலை ஆச்சர்யத்தக்க அளவில் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கண்டுவருகிறது. தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, கதை அம்சத்திலும், அதன் உள்ளடக்கத்திலும் நாளுக்கு நாள் உலகப்படங்கள் உயரத்தை எட்டிக் கொண்டிருக்க, தமிழ்ப்படங்களோ கண்டதும் காதல், ரௌடியுடன் மோதல் என்று குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றன.


புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம் கூடவே புதிய நம்பிக்கைகளும் பிறப்பது இயல்பான ஒன்று. தமிழ்த்திரைப்படங்கள் குறித்தும் இப்படியான நம்பிக்கைகள் பிறப்பதுண்டு. இந்த வருடமாவது, தமிழ்த்திரைப்படங்கள் மசாலா மாயையிலிருந்து விலகி, விடுபட்டு யதார்த்தமான படங்களை உருவாக்கக்கூடிய ஆரோக்கியமான திசைக்குத் திரும்புமா என்பதே அந்த நம்பிக்கை! இப்படிப்பட்ட நம்பிக்கைக்கு ஒவ்வொரு ஆண்டும் பலனில்லாமலே போய்க் கொண்டிருப்பது மீள முடியாத சோகம்தான்.


சரி..2007 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள் எப்படி? கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழ்த்திரைப்படங்களின் போக்கில் ஏதேனும் மாற்றங்கள், வளர்ச்சி தெரிகின்றனவா? வியாபாரம் என்ற பெயரில் சமூகத்துக்கு உபயோகமற்ற படங்கள் வெளியாகும் நிலை மாறியிருக்கிறதா? நல்ல சிந்தனையைத் தூண்டுகிற தரமான படங்கள் வெளியாகி இருக்கின்றனவா? தமிழ்த்திரைப்படங்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்கிற வகையில் உலகத்தரத்தை எட்டுகிற படங்கள் ஏதேனும் உருவாக்கப்பட்டிருக்கிறதா?


இதுபோன்ற கேள்விகளுடன் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த்திரைப்படங்களை பார்வையிட்டால், கிடைக்கும் பதில் என்ன? இந்த ஆண்டில் தொண்ணூற்றி எட்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் முன்னிலை வகிப்பது வழக்கம்போல் மசாலாப்படங்கள்தான். சுமார் நாற்பது படங்கள் இந்த ரகத்தை சேர்ந்தவையாகவே இருப்பதைக் காணமுடிகிறது. இருபத்தி ஆறு என்ற எண்ணிக்கையில் அதற்கு அடுத்த இடத்தை காதல் படங்கள் கைப்பற்றி இருக்கின்றன!


தமிழ்த்திரைப்படங்களைப் பொருத்தவரை ஏறக்குறைய எல்லாப்படங்களுமே மசாலாப்படங்கள்தான். ஏனெனில் ஆடல், பாடல், சண்டை, நகைச்சுவை, செண்ட்டிமெண்ட், கிளர்ச்சி என பல்வேறு அம்சங்களின் தொகுப்பாகவே தமிழ்த்திரைப்படங்கள் இருந்து வருகின்றன. அதன் பொருட்டு ஒட்டுமொத்த படங்களையும் மசாலாப்படங்கள் என்று எளிதில் சொல்லிவிட முடியும் என்றாலும், அதன் கதைஅம்சத்தில், அடிப்படையாக எடுத்துக் கொண்ட விஷயத்தை வைத்து நம் வசதிக்காக வகைப்படுத்த வேண்டியதாக இருக்கிறது.


இந்த அளவுகோலின்படி 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களைப் பார்க்கும்போது, ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய சிவாஜி, அஜீத் நடித்த ஆழ்வார், கிரீடம், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன், ஹரி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த வேல், தனுஷ் நடித்த பொல்லாதவன், சரத்குமார் நடித்த நம் நாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், எம்.ரத்னகுமார் இயக்க எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவருடன் இணைந்து ராஜ்கிரண் நடித்த முனி, விஜயகாந்த் நடித்த சபரி, ஆர்யா நடிப்பில் புஷ்கர்-காயத்ரி என்ற தம்பதி இயக்கிய ஓரம்போ, விஷால் நடித்த மலைக்கோட்டை, தாமிரபரணி, சீனு ராமசாமி என்ற புதிய இயக்குநரின் இயக்கத்தில் பரத் இரட்டை வேடத்தில் நடித்த கூடல் நகர், மாதவன் நடித்த ஆர்யா, ஜீவன் நடித்த நான் அவன் இல்லை, ஜீவா நடிக்க சுப்ரமணியம் சிவா இயக்கிய பொறி, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த வியாபாரி, வஸந்த் இயக்கிய சத்தம் போடாதே, பிரபுசாலமனின் இயக்கத்தில் சிபிராஜ் நடித்த லீ, அர்ஜுன் நடித்த மணிகண்டா, மருதமலை, ரமேஷ் நடித்த மதுரைவீரன், சத்யராஜ் நடித்த அடாவடி, ரஞ்சித் நடித்த பசுபதி மே/பா ராசக்காபாளையம், விஜய.டி.ராஜேந்தர் இயக்கி நடித்த வீராச்சாமி போன்ற படங்கள் மட்டுமின்றி, வேகம், தொ(ல்)லைபேசி, திருத்தம், அகரம், முருகா, படங்களும் கூட மசாலாப்படங்கள் என்று வகைப்படுத்தக்கூடிய படங்களே!


இவை தவிர - விஷ்ணுவர்தன் இயக்கி அஜித் நடித்த பில்லா, முன்னாள் கதாநாயக நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி, சுரேஷ்கிருஷ்ணா இயக்கி தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகுசுந்தரம், சுந்தர் சி. நடித்த வீராப்பு, சரவணன் நடித்த வீரமும் ஈரமும் போன்ற படங்களும் மசாலாப்படங்கள்தான். முந்தைய பட்டியலிலிருந்து இந்தப் படங்களை தனியாய் பட்டியலிடுவதற்குக் காரணமிருக்கிறது. இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் படங்களுமே ரௌடியைக் கதைநாயகனாக சித்தரித்த படங்கள்! இப்படங்களின் கதாநாயகப் பாத்திரம் ரௌடியாக மாறியதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் அக்கதைகளுக்கு ஏற்புடையதாக இருந்தாலும் திரைக்கலைக்கும் சமூக அமைதிக்கும் விரோதமான விஷயம் என்றே சொல்ல வேண்டும்.


திரைப்படம் என்பது பார்வையாளனுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற மசாலாப்படங்களை நாம் கடுமையாய் எதிர்த்தாலும், பாமர ரசிகர்களின் மத்தியில் இது குறித்த பார்வை ஏதுமில்லை என்பதையும், அவர்களைப் பொருத்தவரை கொடுத்த காசுக்கு போரடிக்காமல் பொழுதுபோனால் போதும் என்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும் கவலையுடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டில் வெளியான மசாலாப்படங்களுக்குக் கிடைத்த வெற்றி இப்படித்தான் நம்மை எண்ண வைக்கிறது.


குறிப்பாக, ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்துக்கு உலகம் முழுக்கக் கிடைத்த வெற்றி அசாதாரணமான விஷயம். சுமார் நாற்பது கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தப்படம், எழுபது கோடிகளுக்கு வியாபாரம் செய்யப்பட்டது. அதன் வசூலோ சுமார் நூறு கோடி. கருப்புப்பணத்துக்கு எதிரான கருத்தை கருவாகக் கொண்ட இந்தப்படத்தின் வியாபாரத்திலும் கருப்பு பணம் விளையாடியது என்பதுதான் சுவாரஸ்யமான முரண்பாடு!


பல வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த பில்லா படத்தை மறுஉருவாக்கம் செய்து எடுக்கப்பட்ட அஜீத்தின் பில்லா படமும் சுமார் இருபத்தைந்து கோடிகளுக்கு மேல் பணத்தை அள்ளியது. ரஜினியின் பில்லாவில் இருந்த விறுவிறுப்பு அஜீத்தின் பில்லா படத்தில் இல்லை என்ற விமர்சனம் எழுந்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை. இப்படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்தப் படத்துக்கு பல கோடிகளை சம்பளமாகக் கேட்குமளவுக்கு பில்லா படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்றது.


அஜீத்தின் போட்டியாளரான விஜய் நடித்து கடந்த 2006-ஆம் ஆண்டில் வெளியான ஆதி படத்தின் படு தோல்வியினால் துவண்டு போயிருந்தார். சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் புதிய படத்தில் நடிக்காமல் குழப்பத்தில் சிக்கித்தவிக்கும் அளவுக்கு ஆதியின் தோல்வி விஜய்யை இடிந்து போக வைத்திருந்தது. போக்கிரி என்ற தெலுங்குப்படத்தின் ரீமேக்கான போக்கிரி படத்தின் மிகப்பெரிய வெற்றி விஜய்யை மறபடி நிமிர வைத்தது. விஜய்யைப் போலவே தோல்வியினால் துவண்டிருந்த தனுஷுக்கோ பொல்லாதவன் படத்தின் வெற்றி, மகிழ்ச்சியை மட்டுமல்ல மமதையையே கொடுத்தது. ஹரி இயக்கத்தில் வெளியான வேல் படம் சூர்யாவுக்கும், தாமிரபரணி படம் விஷாலுக்கும் வெற்றியை வசப்படுத்தின.


பில்லா படத்தைப் போலவே - கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி நடித்த நான் அவன் இல்லை படத்தின் ரீமேக்காக, ஜீவன் நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை படமும், அதை வாங்கியவர்களை மோசம் பண்ணாமல் வர்த்தக வெற்றியடைந்தது. விளையாட்டுத்துறையில் நிலவும் ஊழலை வெளிச்சம்போட்டுக் காட்டிய சிபிராஜ் நடித்த லீ, அர்ஜுன் நடித்த மருதமலை, சுந்தர் சி. நடித்த வீராப்பு போன்ற படங்களும் வர்த்தரீதியில் வாகை சூடிய படங்களாகவே இருக்கின்றன.


2007 ஆம் ஆண்டில் வெளியான பல மாசாலாப்படங்கள் வெற்றி பெற்றதைப் போலவே, தயாரிப்பில் இருக்கும்போது எதிர்பார்க்கப்பட்ட பல மசாலாப்படங்கள் தோல்வியையும் தழுவி இருக்கின்றன. அவற்றில்- அஜீத் நடித்த ஆழ்வார், கிரீடம், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன், விஷால் நடித்த மலைக்கோட்டை, தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகுசுந்தரம், ஜீவா நடித்த பொறி, பரத் இரட்டை வேடத்தில் நடித்த கூடல் நகர், மாதவன் நடித்த ஆர்யா, சரத்குமார் நடித்த நம் நாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி, விஜயகாந்த் நடித்த சபரி, ஆர்யா நடித்த ஓரம்போ குறிப்பிடத்தக்கப் படங்கள்!


இவை தோல்வியடைந்ததற்கு நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. அஜீத் நடித்த ஆழ்வார் படத்தின் தோல்விக்கு அதன் கதையும், திரைக்கதையும் படு பலவீனமாக இருந்தது காரணம் என்றால், கிரீடம் படத்தின் தோல்விக்கு இவற்றை காரணமாக சொல்ல முடியாது. ஏனெனில் பல வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான கிரீடம் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் இது. திரைக்கதையிலும் கூட பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை. அப்படியும் தோல்வியடைந்ததுதான் புதிராக இருக்கிறது.


விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தின் கதை கூட மம்முட்டி நடித்த அய்யர் தி கிரேட் மலையாளப்படத்தை நினைவூட்டுவதாகவே இருந்தது. எதிர்காலத்தில் நடப்பதை முன் கூட்டியே சொல்லும் எக்ஸ்ட்ரா சுப்ரீம் பவர் கொண்டவராக இப்படத்தில் நடித்திருந்தார் விஜய். காதில் பூச்சுற்றும் கதை என்று எண்ணியோ என்னவோ அழகிய தமிழ்மகனை மக்கள் நிராகரித்துவிட்டனர்.


விஷால் நடித்த மலைக்கோட்டை படத்தில் அவரது சாகஸக்காட்சிகள் அளவுக்கு மீறி இருந்தன. அதுவே மலைக்கோட்டையை மாங்கொட்டையாக்கிவிட்டதாக எண்ணத் தோன்றுகிறது. தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகு சுந்தரம் என்ற படத்தின் தோல்விக்கும் இதே காரணம் பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டும். கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜோகி என்ற படத்தின் ரீமேக்கான இதில் தன் வயசுக்கும் தோற்றத்துக்கும் பொருத்தமில்லாத வேடத்தில் நடித்திருந்தார் தனுஷ். அழகுசுந்தரம் அசிங்கசுந்தரமானதற்கு இதையே முக்கிய காரணமாக சொல்லலாம்.


சில வருடங்களுக்கு முன் வெளியாகி வசூலில் சரித்திரம் படைத்த ‘திருடா திருடி’ படத்தை இயக்கிய சுப்பிரமணியம் சிவாவின் இரண்டாவது படமான பொறி, பரத் இரட்டை வேடத்தில் நடித்த கூடல் நகர் படங்களின் தோல்விக்கு சாரமற்ற கதைஅம்சத்தையும், சுவாரஸ்யமில்லாத திரைக்கதையையும்தான் காரணமாக சொல்ல வேண்டியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன் படத்தில் காதல் என்ற பெயரில் விரச எல்லையைத் தொட்டதே இப்படத்துக்கு தொல்லையாக அமைந்துவிட்டது. எஸ்.ஜே.சூர்யாவின் மற்றொரு படமான வியாபாரி படமோ மல்ட்டிபிள் சிட்டி என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான உல்டா. தன்னைப்போலவே குளோனிங் முறையில் இன்னொரு வனை உருவாக்குகிறான் என்ற கற்பனையை மக்கள் நம்பவில்லை. ஒரு ஆட்டோடிரைவரின் கதையாக வெளி வந்த ஆர்யா நடித்த ஓரம்போ படத்தை மக்கள் ஓரங்கட்ட அப்படத்தில் மலிந்துகிடந்த மசாலா அம்சங்களைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்? மாதவன் நடித்த ஆர்யா, விஜயகாந்த் நடித்த சபரி, சரத்குமார் நடித்த நம் நாடு படங்களின் தோல்விக்கும் இதே காரணம் பொருந்தும்.


சரத்குமார் நடித்த மற்றொரு படமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் பேசப்பட்ட அளவுக்கு படம் வெற்றியடையவில்லை. அப்படியே வெற்றிபெற்றிருந்தாலும் அதன் பெருமை இயக்குநர் கௌதம்மேனனை சேராது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். காரணம்.. டி ரெயில்ட் என்ற ஆங்கிலப்படத்தின் ஈயடிச்சான் காப்பி இது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் தோல்விக்கு காலத்துக்குப் பொருந்தமல் ஆவி, முனி என்று காதில் பூச்சுற்றியதுதான் காரணம் என்பதை தனியாக சொல்லத்தேவையில்லை.


பிலிம் இல்லாமல் கூட தமிழ்த்திரைப்படங்களை எடுத்தாலும் எடுப்பார்கள், ஆனால் காதல் இல்லாமல் எடுக்கவே மாட்டார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. இது சற்று மிகைப்படுத்தப்பட்டது என்றாலும், காதலை தவிர்த்துவிட்டு தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருவதில்லை என்ற யதார்த்தத்தையும் மறுக்க முடியாது. 2007 ஆம் ஆண்டும் இந்த கூற்றுக்கு விதிலக்கில்லைதான்! ஏற்கனவே சொன்னது போல் இருபத்தாறு காதல் திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன - இந்த ஆண்டில்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.எழில் இயக்க, லிங்குசாமி தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த தீபாவளி, சேரன் இயக்கி நடித்த மாயக்கண்ணாடி, மறைந்த ஜீவாவின் இயக்கத்தில் புதுமுகம் வினய் நடித்த உன்னாலே உன்னாலே, கரண் நடித்த கருப்பசாமி குத்தகைதாரர், செல்வம் இயக்கத்தில் ஜீவா நடித்த ராமேஸ்வரம், செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இயக்க விக்ராந்த் நடித்த நினைத்து நினைத்து பார்த்தேன், பி.வாசு இயக்கி, அவரது மகன் ஷக்தி கதாநாயகனாக அறிமுகமான தொட்டால் பூ மலரும், நந்தா நடித்த உற்சாகம், ஜித்தன் ரமேஷ் நடித்த புலி வருது, அருண்விஜய் நடித்த தவம், வெங்கட்பிரபு நடித்த வசந்தம் வந்தாச்சு, பாண்டியராஜனின் மகள் ப்ருத்வி நடித்த நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களுடன், நினைத்தாலே, நெஞ்சைத்தொடு, என் உயிரினும் மேலான, ஒரு பொண்ணு ஒரு பையன், இப்படிக்கு என் காதல், தூவானம், மனசே மௌனமா, பதினெட்டு வயசு புயலே, முதல் முதலாய், முதல்கனவே, நீ நான் நிலா, நண்பனின் காதலி, கண்ணா, பழனியப்பா கல்லூரி போன்ற சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகின.


இவற்றில் காதலன் காதலி இடையே நிலவிய ஈகோவைச் சொன்ன உன்னாலே உன்னாலே, காதலன் உருவில் தன் தாயைப் பார்த்த ஒரு பெண்ணின் காதலைச் சொன்ன கருப்பசாமி குத்தகைதாரர் என இரண்டு படங்கள் மட்டுமே வெற்றியடைந்த படங்கள். ஜெயம் ரவி நடித்த தீபாவளி, சேரனின் மாயக்கண்ணாடி, ஜீவா நடித்த ராமேஸ்வரம் போன்ற படங்கள் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியைத் தழுவிய படங்கள். இவற்றில் சேரன் இயக்கி நடித்த மாயக்கண்ணாடி படத்தின் படு தோல்விக்கு ராஜாஜியின் குலக்கல்வியை ஆதரிக்கும் கதை அம்சம் மட்டுமல்ல, சேரனின் சகிக்க முடியாத தோற்றமும் முக்கிய காரணமாக இருந்தது. இலங்கை அகதியான கதாநாயகனுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்குமான காதலைச் சொன்ன ராமேஸ்வரம் படத்தின் தோல்விக்கு காட்சிகளிலும், காதலிலும் அழுத்தம் இல்லாததே காரணம்!


காதல் என்ற பெயரில் வக்கிரத்தை வியாபாரம் செய்யும் போக்கிலும் மாற்றமில்லை. கணவனின் தம்பி மீது காமுறும் பெண்ணைப் பற்றி கடந்த ஆண்டில் உயிர் என்ற படத்தை எடுத்து விளம்பர ருசி கண்ட சாமி இயக்கத்தில் வெளியான மிருகம் படம் இந்த வகையில் குறிப்பிட வேண்டிய படம். படம் முழுக்க பெண்களை புணருவதற்கு அலையாய் அலையும் ஒரு காமுகன் கடைசியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறான். சாகும் தறுவாயில் தன் கிராமத்துக்கு தண்ணீர் கிடைக்க உதவுகிறான் என்ற கதையில் விரவிக்கிடந்தது விரசமும் ஆபாசமும்தான். பிரவீன்காந்த் இயக்கியதோடு கதாநாயகனாகவும் நடித்த துள்ளல், தமிழ்வாணன் இயக்கத்தில் ஜீவன் நடித்த மச்சக்காரன், சித்திரைச்செல்வன் இயக்கிய ஆக்ரா போன்ற படங்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். நல்லவேளை! இந்த நான்கு படங்களையுமே மக்கள் நிராகரித்துவிட்டனர்.


நகைச்சுவைப்படங்கள் என்ற பிரிவிலும் தமிழில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி மக்களை சிரிக்க வைக்கிறேன் என்று கிச்சுகிச்சு மூட்டும். டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் பிரசன்னா நடித்த சீனா தானா, சத்யராஜ், பிருத்திவிராஜ் நடிக்க, ப்ரியா.வி இயக்கிய கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்கள் இப்பிரிவில் அடங்குபவை. சிரிக்க வைக்க எடுக்கப்பட்ட இவ்விரு படங்களுமே அப்படங்களின் தயாரிப்பாளர்களை அழ வைத்ததுதான் சோகம்.


இவை தவிர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில், முழுக்க முழுக்க அனிமேஷன் பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இனிமே நாங்கதான், த்ரில்லராக வெளியான சிவி, மலைசாதி யினரின் மொழியான படுக மொழியில் எடுக்கப்பட்ட பாலி போன்ற படங்களும் 2007 ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கின்றன. ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்கள் சென்னையிலிருந்து தப்பித்தது முதல் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டது வரையிலான சம்பவங்களை வைத்து கன்னடத்தில் எடுக்கப்பட்ட சயனைடு என்ற படத்தை மொழிமாற்றம் செய்ததோடு, புதிதாக சில காட்சிகளையும் சேர்த்து நேரடி தமிழ்ப்படம் போன்ற தோற்றத்துடன் குப்பி என்ற பெயரில் வெளியானது. அதே போல் முழுக்க முழுக்க குள்ள மனிதர்களை வைத்து மலையாளத்தில் வினயன் இயக்கிய படமும் தமிழுக்காக சில காட்சிகளைச் சேர்த்து அற்புதத் தீவு என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவ்விரு படங்களும் வித்தியாசமான படங்களாக சிலாகிக்கப் பட்டாலும், வர்த்த அளவில் வரவேற்கப்படவில்லை. மொழி மாற்றுப் படத்தை நேரடிப் படம்போல் நம்ப வைப்பதில் நிபுணரான மணிரத்னம் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராயை வைத்து ஹிந்தியில் இயக்கிய குரு படத்தை அதே பெயரில் தமிழிலும் வெளியிட்டார். ரிலையன்ஸ் அம்பானியின் வாழ்க்கை வரலாறாக மட்டுமின்றி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் படமாகவும் தோற்றமளித்த குரு படத்தை, அதில் தென்பட்ட அன்னியத்தனத்தினாலோ என்னவோ மக்கள் வெற்றி பெற வைக்கவில்லை.


தமிழ்சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வித்தியாசமான சில முயற்சிகளும் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028, புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் வெளியான ரசிகர் மன்றம், மாதவன் நடிக்க நிஷிகாந்த் இயக்கிய எவனோ ஒருவன், ஜெய்லானி என்ற புதியவர் இயக்கி நாயகனாகவும் நடித்த கேள்விக்குறி, காதல் படத்தை அடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி, ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த கற்றது தமிழ், எல்.வி.இளங்கோவன் என்ற புதிய இயக்குநர் இயக்கிய பிறப்பு, பார்த்திபன் நடிப்பில், பத்மாமகன் இயக்கிய அம்முவாகிய நான் ஆகிய படங்களை இந்த வகையில் பட்டியலிடலாம்.


சென்னை 600028 என்ற தலைப்பு மட்டுமல்ல, அப்படத்தின் கதையும், திரைக்கதையும் நிச்சயம் தமிழ்சினிமாவுக்குப் புதுசுதான். தெருவில் கிரிக்கெட் விளையாடும் வாலிபப்பசங்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக பதிவு செய்த இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்ததில் வியப்பில்லை.


இன்றைய இளைஞர்களை துருப்பிடிக்க வைத்ததில் சினிமா நட்சத்திரங்களுக்கு பெரும் பங்குண்டு. தங்களுக்கு துதிபாடுவதற்காக ரசிகர்மன்றங்களை ஆதரித்து வளர்க்கும் நட்சத்திரங்கள், அது தன் ரசிகர்களின் வாழ்க்கையை பாழ்படுத்துவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த அவலத்தையே ரசிகர் மன்றம் திரைப்படம் சுட்டிக்காட்டியது. தோல்விப்படப் பட்டியலில் இப்படம் சேர்ந்தாலும் திரைப்படம் செய்ய வேண்டிய பணியை செவ்வனே செய்த படம் என்பதை மறுக்க முடியாது.


மாதவன் நடிப்பில் மராட்டி மொழியில் வெளியான படத்தின் ரீமேக்கான எவனோ ஒருவன் திரைப்படம் சமூகத்தில் நிலவும் அவலங்களுக்கு எதிராக பொங்கியெழும் நடுத்தரவர்க்க இளைஞன் ஒருவன், அதிகார வர்க்கத்தினால் என்கவுண்டர் செய்யப்படுவதுதான் இப்படத்தின் கதை. மாதவனின் கதாபாத்திர அமைப்பு பிராமண இளைஞனாக சித்தரிக்கப்பட்டதன் மூலம், ‘அவாளுக்கு’ மட்டுமே சமூக அக்கறை உண்டு என்ற மறைமுகமான கருத்துத்திணிப்பை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எவனோ ஒருவன் பெருமைக்குரிய படம்தான்.


ஜெய்லானி என்ற புதியவர் இயக்கி நடித்த கேள்விக்குறி படத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயம் சற்று புரட்சிகரமானது. காவல்துறையின் அலட்சியத்தினாலும், அராஜகத்தினாலும் பாதிக்கப்படும் ஒருவனின் போராட்டம்தான் இப்படத்தின் கதை. தணிக்குக்குழுவினரால் சான்றிதழ் மறுக்கப்பட்டு, பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெளியான இப்படத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அதிகாரவர்க்கத்துக்கு எதிரான கலகக்குரலாக இருந்ததே கேள்விக்குறி திரைப்படத்தை இங்கே குறிப்பிடக் காரணமாக இருக்கிறது.


காதல் படத்தின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கையை தந்த பாலாஜி சக்திவேல் பல மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு இயக்கிய படம் கல்லூரி. ராகிங், குத்துப்பாட்டு, கண்டதும் காதல், மலிவான காட்சிகள் என வழக்கமான கல்லூரி படங்களின் அம்சங்களை புறக்கணித்துவிட்டு வித்தியாசமான படமாக இருந்தாலும், அதன் பலவீனமான கதை மற்றும் திரைக்கதையினால் வெற்றியை தவறவிட்டது. எனினும், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் உயிரோடு பஸ்ஸில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை படத்தின் மையமான விஷயமாக வைத்ததன் மூலம், ஒரு துயரமான உண்மையை கல்லூரி படத்தில் பதிவு செய்ததை பாராட்டலாம்.


ராம் என்ற புதிய இயக்குநர் இயக்கிய கற்றது தமிழ் படம் தமிழ்படித்த ஒருவனுக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் மரியாதையை சொல்வதாக இருந்தாலும், இலக்கில்லாமல் சென்ற திரைக்கதையால் சொல்ல வந்த விஷயம் பலவீனப்பட்டுப் போனதோடு, படத்தின் வெற்றியும் பறிபோனது. ஆனாலும் உலக மயமாக்கல் உட்பட பல பிரச்சனைகளைப் பற்றிப் பேசிய படம் என்ற வகையிலும், உருவாக்கத்திலும் கற்றது தமிழ் கவனிக்கத்தக்கப் படமாக இருந்ததையும் மறுக்க முடியாது.


எல்.வி.இளங்கோவன் என்ற புதிய இயக்குநர் இயக்கிய பிறப்பு என்ற படத்தை இங்கே குறிப்பிடக்காரணம் அப்படத்தில் சொல்லப்பட்ட விஷயம்தான். தாழ்த்தப்பட்ட சாதி என்று ஒரு இனத்தையே நிராகரிக்கும் மேல்சாதி மனப்போக்கை செவிட்டில் அடித்ததுபோல், இப்படம் பதிவு செய்திருந்தது.


பார்த்திபன் நடிப்பில், பத்மாமகன் இயக்கிய அம்முவாகிய நான் படம் ஒரு விலைமகளின் கதையாக எடுக்கப்பட்டிருந்தது. ஒரு விலைமகளை மணந்து கொண்ட எழுத்தாளனின் வாழ்வில் அவன் எதிர் கொள்ளும் பிரச்சனை எவ்வாறானது என்பதே இப்படத்தின் கதை. கதைநாயகியான விலைமகள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தாத காட்சிஅமைப்பினாலோ என்னவோ இப்படத்தை மக்கள் ரசிக்கவில்லை.


சென்னை 600028 தொடங்கி அம்முவாகிய நான் வரையிலான திரைப்படங்கள் குறிப்பிட்ட சில அம்சங்களில் சிறப்பாக இருந்ததால் தனித்துவப்பட்டன. அடுத்து வரும் படங்களோ அனைத்து அம்சங்களிலும் கவனத்தை ஈர்த்த இணையற்ற படங்கள். மொழி, பள்ளிக்கூடம், பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பருத்தி வீரன் ஆகியவையே இந்த கௌரவத்துக்கும், பெருமைக்கும் உரித்தான திரைப்படங்கள்.


பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான மொழி படத்தின் மைய இழை, ஒரு இசைக் கலைஞனுக்கும் (ப்ருத்திவிராஜ்) செவிட்டு ஊமைப்பெண்ணுக்குமான (ஜோதிகா) காதல்தான் என்றாலும், ஊமைப்பெண்ணின் மன உணர்வுகளை மிக நுணுக்கமாக, நெருக்கமாக பதிவு செய்திருந்த வகையில் மொழி திரைப்படம் இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இப்படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும் நல்ல திரைப்படங்களை மக்களை ஆதரிக்கத் தயங்குவதில்லை என்பதை மறுபடியும் நிரூபிப்பதாக இருந்தது.


தங்கர்பச்சான், நரேன், சீமான், சினேகா, ஸ்ரேயாரெட்டி நடிக்க தங்கர்பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம் திரைப்படத்துக்கும் மரியாதைதைக்குரிய இடம் உண்டு. மூடப்படவிருந்த ஒரு பள்ளிக்கூடத்தை, அங்கே படித்த பழைய மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெறுவதுதான் பள்ளிக்கூடம் படத்தின் கதை. கடவுள் சிலை வடிவில் கற்கள் உறங்கும் கோவில்களை பாது காப்பதிலும், பேணுவதிலும் காட்டும் அக்கறையை கல்விச் செல்வத்தை அள்ளித் தரும் பள்ளிக்கூடத்தில் காட்ட வேண்டும் என்பதை இதைவிட நெகிழ்ச்சியாய், நேர்த்தியாய் சொல்ல முடியாது. அந்த வகையில் தங்கர்பச்சான் என்ற படைப்பாளனின் சமூகக்கடமையை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.


இதே ஆண்டில் தங்கர்பச்சானின் மற்றொரு மகத்தான படைப்பும் திரைப்படமாக வெளிவந்து தமிழ்த்திரைக்கே பெருமையையும், மரியாதையையும் ஏற்படுத்தியது. ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படம்தான் அது. தங்கர்பச்சான் எழுதிய நாவலின் திரைவடிவமான இத்திரைப்படம் மாதவப்படையாச்சி என்ற விவசாயியின் நெடிய வாழ்க்கையின் பதிவு. மாதவரின் கதை மட்டுமல்ல, பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் வயதான பெற்றோர்களின் கதையாகவும் உருவாக்கப்பட்டிருந்த ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தை சத்யராஜ், நாஸர், அர்ச்சணா போன்ற கலைஞர்களின் நடிப்பு உலகத்தரத்துக்கு உயர்த்தியதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் அமைந்த கிராமத்தையும், அம்மக்களின் வாழ்வியலையும் கண்முன் நிறுத்தியது என்றால், அமீரின் பருத்தி வீரன் திரைப்படம் இன்னொரு பகுதி கிராமத்தை நமக்கு அறிமுகம் செய்தது. பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் ஊருக்குள் சண்டியர்தனம் செய்து கொண்டு திரியும் ஒருவன், அதற்காகக் கொடுக்கும் மிகப்பெரிய விலை பார்வையாளர்களை உலுக்கி எடுத்ததோடு, அதிர்ச்சியில் உறையவும் வைத்தது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமாரின் இளையமகன் கார்த்தி மிகச்சிறந்த நடிகராக வெளிப்பட்டிருந்தது மட்டுமல்ல, அந்த கதாபாத்திரமாகவே தோற்றமளித்தார். பருத்திவீரன் திரைப்படம் ஒரு வருடத்தைக் கடந்து ஓடியதன் மூலம் வர்த்தக மதிப்பு கொண்ட இயக்குநராக அமீரை சிகரத்தில் ஏற்றி வைத்தது.


2007 ஆம் ஆண்டு வெளியான எல்லாப்படங்களையும் விட மிகச்சிறந்த திரைப்படமாக பெரியார் திரைப்படத்தையே சொல்லி யாக வேண்டும். பாரதி படத்தை இயக்கிய ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த பெரியார் திரைப்படத்தை, இப்படி உயர்த்திப்பிடிப்பதற்கு ஒரே காரணம்தான். ரௌடிகளையும், தாதாக்களையும், கொலை செய்பவனையும், கொள்ளையடிப்பவனை யும், காதல் என்ற பெயரில் காமத்துக்காக அலைபவனையும் கதாநாயகர்களாக சித்திரித்து வரும் தமிழ்ப்படங்களுக்கு மத்தியில், ஒரு இனத்தின் விடுதலைக்காக விடியலுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த பெரியார் என்ற உண்மையான சரித்திர நாயகனின் கதையைச் சொன்ன படம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை. பெரியாரின் பெயரை சொல்லிக் கொண்டு வந்தவர்களே அவரது கொள்கையை மறந்துவிட்ட தற்காலச் சூழலில், எதிர்காலத் தலைமுறைக்கு பெரியார் யார் என்றே தெரியாமல் போகும் அபாயம் இருக்கிறது. அந்த அபாயத்தின் சதவிகிதத்தைக் குறைத்து, பெரியாரையும், அவரது பெருமையையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சென்ற வகையில் பெரியார் திரைப்படம்தான் 2007 ஆம் ஆண்டில் வெளியான மற்ற அனைத்துப் படங்களிலிருந்தும் உயர்ந்த படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.


இப்படியொரு திரைப்படம் வெளியான ஒரு காரணத்துக்காகவே தமிழ்த்திரைப்பட வரலாற்றிலும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக இருக்கும். இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment