Tuesday, 30 June 2009

வியாபார விருதுகள்


திரைப்பட நட்சத்திரங்களும், திரையுலகப் பிரபலங்களும் பணத்துக்கு மட்டுமல்ல, புகழ்ச்சிக்கும் அடிமைகள்தான். வெளிச்சத்தைத் தேடிப் பறக்கும் விட்டில்களைப் போல் இவர்கள் எப்போதும் புகழ்வெளிச்சத்தைத்தேடி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் - அதுவே எதிர்காலத்தில் ஆபத்தாகிவிடும் என்ற அபாயத்தை உணராமல். இவர்களின் பலவீனத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சிலர், திரைநட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கும் விழாக்களை நடத்துவதன் மூலம் பணத்தில் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ‘விருதுவிழா வியாபாரிகள்’ தாங்கள் வழங்கும் விருதுகளை தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று எண்ணுவதில்லை.


விருது விழா நிகழும் குறிப்பிட்ட நாளில் எந்த முன்னணி நடிகர், நடிகை, இயக்குநர், தொழில்நுட்பக்கலைஞர் ஓய்வாக, அதாவது விருது வாங்குவதற்காக விழாவுக்கு வர சம்மதிக்கிறாரோ அவர்களுக்கே விருதுகளை அறிவிப்பார்கள். இப்படிப்பட்ட விருதுகளுக்கு திரையுலகில் மரியாதை இல்லை என்றாலும், விருது பெறுபவர்களுக்கு மட்டும் அதுதான் ஆஸ்கார் விருது. கோடம்பாக்கத்தில் இப்படிப்பட்ட விருதுகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. இவ்வகையான மலிவான விருதுவிழாக்கள் மாதத்துக்கு ஒன்றிரண்டாவது நடைபெறாமல் இருக்காது. சில புதுமுகங்களும், பழைய முகங்களான புகழ்விரும்பிகளும் இந்த விருதுகளைப் பணம் கொடுத்துப் பெறவும் தயங்குவதில்லை. தனியார் அமைப்புகள் மட்டுமின்றி திரையுலகை அண்டிப்பிழைக்கும் சில சினிமாப்பத்திரிகைகளும் இப்படிப்பட்ட வியாபார விருதுகளை ஆண்டாண்டு காலமாகவே விற்பனை செய்து கொண்டிருக்கின்றன.


தங்களின் விருது வழங்கும் விழாவுக்கு பிரபல நட்சத்திரங்களை வர வைப்பது ஒன்றே இவர்களின் ஒரே நோக்கம். அவர் திறமையான நடிகரா, விருதுக்கு தகுதியாக நடித்திருக்கிறாரா என்பது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. பார்வையாளர்களைத் திரட்டுவதற்குத் தோதான கவர்ச்சியுடையவரா, முன்னணி நட்சத்திரமா என்பதே இவர்களின் அளவுகோல். திரைப்பிரபலங்களின் முகத்தைக்காட்டி விழா நடைபெறும் அரங்கத்தை நிறைப்பதன் மூலம் கணிசமாக பணம் சம்பாதிக்கும் இவர்கள், அந்த விழாவை ஒளிபரப்பும் உரிமையை தனியார் தொலைக்காட்சிகளுக்கு விற்பதன் மூலம் மேலும் பணம் சம்பாதிக்கிறார்கள். ஸ்பான்ஸர் என்று சொல்லப்படும் வியாபார நிறுவனங்கள் தரும் தொகை கூடுதல் லாபம்!


இப்படியாக பல வழிகளில் பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் வியாபார விருதுகளை எல்லாம் தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் மிஞ்சிவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது கண்மூடித்தனமான அல்லது அபாண்டமான குற்றச்சாட்டு என்று நினைப்பவர்கள் 2005 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பட்டியலைப் பார்வையிடலாம்.


முதலில் திரைப்படங்களுக்கான விருதுகளைப் பார்ப்போம். சிறந்த படம் என்ற பிரிவில் முதல்பரிசு சந்திரமுகி, கஜினி படங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இதே பிரிவில் இரண்டாவது பரிசு அந்நியன் படத்துக்கும், மூன்றாவது பரிசு தவமாய் தவமிருந்து படத்துக்கும் வழங்கப்பட்டதோடு, சிறந்த படம் சிறப்புப் பரிசு என்று பிரியசகி என்ற திரைப்படத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவை தவிர பெண்களை உயர்வாகச் சித்தரிக்கும் படத்துக்கான சிறப்புப் பரிசாக கஸ்தூரிமான் படத்துக்கும் விருது கிடைத்திருக்கிறது.


விருதுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் படங்களுடன், 2005 ஆம் ஆண்டு வெளியான பிற திரைப்படங்களையும் பார்த்தவர்களில் மனசாட்சி உள்ள எவரும் இந்தப் பட்டியலை ஏற்கமாட்டர்கள். ஏனெனில், சிறந்த படம் என்று முதல் பரிசைப் பெற்றிருக்கும் இரண்டு படங்களுமே மட்டமான மசாலாப்படங்கள். மணிசித்திரதாழ் என்ற அற்புதமான ஒரு மலையாளப்படத்தின் மலிவான தமிழ்ப்பதிப்பே சந்திரமுகி படம். ஒரு மசாலாப் படத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்த சந்திரமுகி படத்துக்கும், மெமன்ட்டோ என்ற ஆங்கிலப்படத்தின் ஈயடிச்சான் காப்பியான கஜினி படத்துக்கும் சிறந்த படம் என்று விருது வழங்கியதன் மூலம் தமிழக அரசின் விருதுகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. இரண்டாவது பரிசு பெற்றிருக்கும் அந்நியன் படமும் ஆடல் பாடல் என ஜனரஞ்சகமுலாம் பூசப்பட்ட அப்பட்டமான வியாபார சினிமாதான்.


தவமாய் தவமிருந்து படத்துக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டதிலும், தமிழக அரசின் பார்வைக்கோளாறு பளிச்சென தெரிகிறது. காரணம்.. தந்தைக்கும், மகனுக்குமான உறவை நெகிழ்ச்சியின் உச்சத்துடன் உணர்த்திய இந்தப்படத்துக்கே சிறந்த படத்துக்கான முதல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிள்ளைகளை வளர்ப்பதில் ஒரு தந்தையின் பங்கும், உழைப்பும், தியாகமும் எத்தனை மகத்தானது என்பதை ஒரு தந்தையால் கூட இத்தனை அழகாய் தன் மகனுக்கு விளக்கிவிட முடியாது. பெற்றோர்களைப் புறக்கணிப்பதை எந்த மன உறுத்தலும் இல்லாமல் செய்யப் பழக்கப்பட்டுவிட்ட இன்றை தலைமுறைக்கு தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் சேரன் சொன்னது கதை அல்ல, ஒரு தந்தையின் வாழ்க்கை! சந்திரமுகி, கஜினி படங்களுக்கு விருது கொடுத்ததினால் மட்டுமல்ல, தவமாய் தவமிருந்து படத்துக்கு முதல் மரியாதை செய்யத் தவறியதற்காகவும் தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தன் கடந்தகாலப் பெருமைகள் அத்தனையையும் இழந்துதான் நிற்கிறது.


விருதுக்கான திரைப்படங்களின் தேர்வில் மிக மோசமான தரநிர்ணயக் கொள்கையைக் கடைப்பிடித்ததன் மூலம் தேர்வுக்குழுவினர் செய்த பாவத்துக்கு அவர்களை அறியாமலே செய்த பிராயச்சித்தம்தான் - பிரியசகி படத்துக்கு விருது வழங்கியது. கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், ஒரு மனைவியின் கடமை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் செய்தியாகக் கொண்டிருந்த பிரியசகி திரைப்படத்துக்குக் கிடைத்த கௌரவம் தகுதியானதுதான் என்பதில் எதிர்கருத்தில்லை. காலையில் திருமணம் மாலையில் விவாகரத்து என்று கணவன் மனைவி உறவு சிக்கலுக்குள்ளாகி இருக்கும் இன்றைய நிலையில், அது குறித்த உளவியல் தீர்வாக உருவாக்கப்பட்ட பிரியசகி போன்ற படங்களை ஆதரித்தே தீர வேண்டும்.


எனினும், சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளுக்கு கனா கண்டேன், ராம், கண்ணாடிப்பூக்கள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களை நிச்சயமாக பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இத்திரைப்படங்களுக்கு கண்டிப்பாக விருதுகளையும் வழங்கியிருக்க வேண்டும்.


ஸ்ரீகாந்த் நடிப்பில், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கிய கனாக் கண்டேன் படத்தை மேலோட்டமாகப் பார்த்தால் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படம் என்றே தோன்றும். ஆனால் அப்படம் சொன்ன செய்தி, பொழுதுபோக்குப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தண்ணீர் தட்டுப்பாடு என்பது மக்களின் தலையாயப் பிரச்சனையாக இருக்கும் இன்றைய சூழலில் கடல்நீரை குடிநீராக மாற்றுவதின் அவசியத்தை கருவாகக் கொண்டிருந்தது கனாக் கண்டேன் திரைப்படம்.


அதே போல் அமீரின் ராம் படமும் சிறந்த படத்துக்கான விருதைப் பெற முழுத்தகுதி உள்ள படம்தான். அம்மாவைக் கொலை செய்தவனை மகன் பழிவாங்குகிறான் என்ற வழக்கமான கதைஅம்சத்தைக் கொண்டிருந்தாலும், திரைப்பட மொழியை, இலக்கணத்தை மிகச்சரியாய் பின்பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம் இது என்பதில் சந்தேகமில்லை. ராம் படத்துக்கு விருது வழங்கி அங்கீகரித்திருந்தால், அமீரைப்போல் வித்தியாசமாக வெளிப் படத்துடித்துக் கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கும்.


கனாக் கண்டேன், ராம் படங்களுக்கு விருது வழங்கியிருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவதில் கூட சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் பார்த்திபன் நடிக்க, ஷாஜகான் இயக்கிய கண்ணாடிப்பூக்கள், தங்கர்பச்சான் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படங்களுக்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கியிருக்க வேண்டும் என்று நான் சொல்வதில் யாரும் முரண்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். காரணம்... கண்ணாடிப்பூக்கள் படத்தின் கதை! கேரளத்தில் வெற்றியும் பெற்று, விருதுகளையும் பெற்ற ஒரு மலையாளப்படத்தின் ரீமேக்கான கண்ணாடிப்பூக்கள் படத்தில் சொல்லப்பட்டது இளம் குற்றவாளியின் கதை. இப்படத்தின் பிரதான கதாபாத்திரமான சிறுவன் மீது பாசத்தைப் பொழிந்த அவனது பெற்றோர், அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்த பிறகு அக்குழந்தை மீது முழுக்கவனத்தையும் திருப்புகிறார்கள். அதனால் மனதளவில் பாதிக்கப்படும் அச்சிறுவன், தன்னை பெற்றோர் புறக்கணிக்க அந்தக்குழந்தையேக் காரணம் என்று முடிவுக்கு வந்து, ஒரு கட்டத்தில் அக்குழந்தையை கொலையும் செய்துவிடுகிறான். சுமார் பத்து வயது நிரம்பிய அவன் சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். சீர்திருத்தப்பள்ளி வாழ்க்கை அவனை நிரந்தரமான குற்றவாளியாக மாற்றிவிடக்கூடும் என்ற நிலையில், அவனிடம் அவனது பெற்றோர் காட்டும் அன்பும், கரிசணமும்தான் கண்ணாடிப்பூக்கள் படத்தின் கதை. இப்படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் அன்றிரவு நிம்மதியாக உறங்கியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு மனசை நொறுக்கிய திரைப்படம் இது.


அதேபோல்தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி திரைப்படமும்! இதுவும் கூட ஒரு மலையாளப்படத்தின் மறு உருவாக்கம்தான். உழைக்க மனசில்லாமல் வெட்டியாய் பொழுதைக்கழிக்கும் பொறுப்பற்ற குடும்பத்தலைவனின் கதை இது. உழைப்புச் சோம்பேறியான கதையின் நாயகன், தன் முன்னால் இருக்கும் குடும்பப்பொறுப்புகளிலிருந்து தப்பிப்பதற்காக குடும்பத்தினரை விட்டு ஓடுவதும், தலைவன் இல்லாத குடும்பம் படும் கஷ்டங்களும் காட்சியாக விரிந்தபோது, அவனைப் போன்ற இயல்பு கொண்ட பார்வையாளன் ஒருவனாவது நிச்சயம் திருந்தியிருப்பான். அற்புதமான கருத்தை தாங்கி வந்த இத்திரைப்படத்தை இயக்கிய தங்கர்பச்சானே அப்பாசாமி வேடத்திலும் பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப்படத்துக்கும் தமிழக அரசின் விருதுகளில் இடமில்லை என்கிறபோது, நீதிமன்றத்தில் முறையிட்டாவது தமிழகஅரசு விருதுகள் வழங்குவதையே நிறுத்திவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.


கண்ணாடிப்பூக்கள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி திரைப்படங்களுக்கு விருது வழங்கப்படாததற்கு அவை பிற மொழிப்படத்தின் ரீமேக் என்று ஒருவேளை தேர்வுக்குழுவினர் காரணம் சொல்லக்கூடும். இதற்கு முன் எத்தனையோ ரீமேக் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதும், சந்திரமுகி படமே மணிசித்திரதாழ் என்ற மலையாளப்படத்தின் ரீமேக்தான் என்பதும் தேர்வுக்குழுவினருக்கு தெரியாமலா இருக்கும்? நிச்சயம் தெரிந்திருக்கும்! அப்படியும் இப்படிப்பட்ட நல்ல படங்களை கண்டுகொள்ளாமல் விட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ரஜினியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற காரணமே வெளிப்படையாகத் தெரிகிறது.


தமிழக அரசு விருதுக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்ததில் பாரபட்சமான அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டதைப் போலவே சிறந்த நடிகர், நடிகை தேர்விலும் மிக மோசமான பார்வையுடன் தேர்வுக்குழு செயல்பட்டிருக்கிறது என்பதை சொல்லத் தேவை யில்லை. விருதுக்குரிய கலைஞர்களின் பட்டியலைப் பார்த்தாலே எளிதில் விளங்கும்.


சந்திரமுகி படத்துக்காக சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்துக்கும், சிறந்த நடிகை விருது ஜோதிகாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியொரு படுபாதகத்தை செய்தது போதாதென்று சிறந்த நடிகருக்கான பிரிவில் சிறப்பு பரிசு என்று திருப்பாச்சி படத்துக்காக விஜய்க்கும், கஜினி படத்துக்காக சூர்யாவுக்கும் வழங்கப்பட்டிருக் கிறது. ரஜினிக்கு விருது கொடுக்கப்பட்ட அதிர்ச்சியையே ஜீரணித்துக் கொள்ள முடியாதபோது, விஜய்க்கும் விருதை வழங்கியது பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஏனெனில், திருப்பாச்சி படம் வன்முறையின் உச்சம். படம் முழுக்க விஜய்யின் கதாபாத்திரம் மிக மோசமான வன்முறையாளனாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது. இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால், விஜய்யின் முந்தைய படங்களில் இருந்த வன்முறையை மிஞ்சுகிற அளவுக்கு திருப்பாச்சி படத்தில் ரத்தம், வெட்டுக்குத்து, அடிதடி என வன்முறை மேலாங்கி இருந்தது. அது மட்டுமல்ல, இந்தப் படத்துக்குப் பிறகே விஜய்யின் படங்களிலும், மற்ற தமிழ்த் திரைப்படங்களிலும் வன்முறைக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற ஆரம்பித்தன. இப்படி தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிய திருப்பாச்சி என்கிற முழு நீள வன்முறைப்படத்தில் நடித்த விஜய்க்கு சிறந்த நடிகர் என்ற கௌரவத்தை தமிழக அரசு கொடுத்ததன் மூலம் அரசாங்கமே வன்முறையை ஆதரிக்கிறது என்றுதான் குற்றம் சாட்ட வேண்டியிருக்கிறது. கஜினி படத்திலும் வன்முறைக்குக் குறைவில்லைதான். எனினும், சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததை மறுப்பதற்கில்லை. தவிர சூர்யா சிறந்த நடிகர் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக கஜினி படத்திற்காக சூர்யாவுக்கு விருது வழங்க வேண்டுமா என்பதே என் கேள்வி!


தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தரநிர்ணயமாக இருந்தால், தவமாய் தவமிருந்து படத்தில் நடித்ததற்காக ராஜ்கிரணுக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நடித்த தங்கர்பச்சானுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சண்டக்கோழி படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகர் என்று ராஜ்கிரணுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
நடிகைக்கான தேர்வில் சந்திரமுகி படத்தில் நடித்த ஜோதிகா சரியான தேர்வாக இருந்ததைப்போலவே, சிறப்பு பரிசு என்ற பிரிவில் கஸ்தூரிமான் படத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் விருது பெற்றதும் சிறந்த தேர்வுதான். கோடம்பாக்கம் படத்தில் கதாநாயகனின் அம்மா வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கலைராணிக்கு சிறந்த குணசித்திர நடிகை விருதும், வில்லன் நடிகருக்கான விருது பிரகாஷ்ராஜுக்கு வழங்கப் பட்டதையும் குறை சொல்லமுடியாதுதான்.


தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பிரிவில், சதுரங்கம் படத்திற்காக அப்படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன் சிறந்த கதாசிரியராகவும், அமிர்தம் படத்திற்காக அப்படத்தின் இயக்குநர் வேதம்புதிது கண்ணன் சிறந்த உரையாடல் ஆசிரியராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இதிலும் தேர்வுக்குழு தவறான ஒரு முன்னுதாரணத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. சதுரங்கம் படம் தணிக்கை செய்யப்பட்ட நிலையிலும் 2005 ஆம் ஆண்டு வெளிவரவில்லை. அது மட்டுமல்ல, இரண்டு வருடங்களுக்குப் பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்ட போதும் சரி, அதற்கு சில மாதங்கள் கழித்து விருதுகள் வழங்கப்பட்ட தினம் வரையிலும் கூட சதுரங்கம் படம் திரைக்கு வரவே இல்லை. எனில், மக்களின் பார்வைக்கே வராத ஒரு படத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தோடு, அப்படத்துக்கு விருதையும் கொடுத்திருப்பதை என்னவென்று சொல்வது? தேர்வுக்குழுவினரின் அறிவை நினைத்து தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் அமிர்தம் என்ற படத்துக்கு சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. மண்ணின் மைந்தன், கண்ணம்மா படங் களுக்காக கலைஞர் கருணாநிதிக்கு இந்த விருதை கொடுக்கவில்லை என்பதை எண்ணி வேண்டுமானால் ஆறுதல் அடையலாமே தவிர அமிர்தம் படத்துக்காக விருது கொடுத்ததை நிச்சயமாக ஏற்க முடியாது.
அந்நியன், கஜினி படங்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜ் சிறந்த இசை அமைப்பாளராகவும், நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியராகவும், ஸ்ரீராம் பார்த்தசாரதி சிறந்த பின்னணிப் பாடகராகவும், சிறந்த பின்னணி பாடகியாக பாம்பே ஜெயஸ்ரீயும், சிறந்த ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், சிறந்த ஒலிப்பதிவாளராக லட்சுமி நாராயணனும், சிறந்த படத் தொகுப்பாளராக ஆண்டனியும், சிறந்த கலை இயக்குநராக தோட்டாதரணியும் விருது பெற்றிருக்கிறார்கள்.


இந்தப்பட்டியலில் சண்டக்கோழி படத்துக்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளராக விருது பெற்ற கனல் கண்ணனும், சந்திரமுகி படத்துக்காக சிறந்த நடன ஆசிரியர் விருது பெற்ற கலாவும் கூட உண்டு. இவ்விரு தேர்வுகள் பற்றி சில கருத்துக்களை பதிவு செய்வது அவசியமான ஒன்றாகவே நினைக்கிறேன். திரைப்பட உருவாக்கத்தில் சண்டைப்பயிற்சியாளருக்கான பணி என்பது, அதில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளை அமைப்பதுதான். தமிழ்த்திரைப்படங்களின் தரத்தை அதளபாதளத்தில் தள்ளியதே சண்டைக்காட்சிகள்தான். இவை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை நம் திரைப்படங்களின் தரம் உலகப்படங்களின் தரத்தின் இடுப்பு உயரத்தையாவது எட்டியிருக்கும். உலகத்தரத்தை எட்டுகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் இன்றைய தமிழ்த்திரைப்படங்களில் வழிந்தோடும் ரத்த ஆறாவது குறைந்திருக்கும். சுருக்கமாக சொல்வது எனில், தமிழ்ப்படங்களில் வன்முறைக்காட்சிகள் மலிந்து போனதற்கு இந்த சண்டைக்காட்சிகளே காரணம். அப்படிப்பட்ட சண்டைக் காட்சிகளை அமைக்கும் சண்டைப்பயிற்சியாளருக்கு அரசாங்கம் விருது வழங்குவதை எப்படி எடுத்துக் கொள்வது? மிகச்சிறந்த வன்முறையை அமைத்தவர் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதுதான் சரியாக இருக்கும். அப்படி என்றால், அரசாங்கமே வன்முறையை ஊக்குவிக்கிறதா?


தமிழ்ப்படங்களை சீரழித்து, அவற்றை ஆபாசமயமாக்கியதில் நடனக்காட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படம் என்றால் குறைந்தபட்சம் ஐந்து பாடல்காட்சிகளாவது, அதாவது நடனக்காட்சிகளாவது இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. தமிழில் ஆரோக்கியமான திரைப்படங்கள் உருவாகாமல் போனதற்கு நாசமாய்ப்போன நடனக்காட்சிகளே காரணமாக இருக்கும்போது, சிறந்த நடனத்துக்காக ஒரு அரசே விருது வழங்குவது பொறுப்பற்றத் தனமல்லவா? அப்படியொரு பொறுப்பற்ற பணியையும் நம் அரசு செய்து கொண்டிருக்கிறது - நடன அமைப்பாளருக்கு விருது வழங்குவதன் மூலம்.


அரசு விருது என்று நாம் குறிப்பிட்டாலும், உண்மையில் அது மக்களின் வரிப்பணத்திலிருந்தே வாரி இறைக்கப்படுகிறது. மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக, மக்களால் தேர்ந் தெடுக்கப்படுகிறவர்கள், ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்த பிறகு, அம்மக்களுக்கே விரோதமாய் எடுக்கப்பட்ட, அவர்களின் ரசனையையும் முடமாக்கும் திரைப்படங்களுக்கும், அவற்றில் பங்களித்தவர்களுக்கும் விருதளித்து கௌரவம் செய்வது என்ன நியாயம்? ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, அவர்களை அங்கீகரித்த மக்களும் சிந்திக்க வேண்டும்!

No comments:

Post a Comment