தமிழ்த்திரைப்படங்களின் வியாபார எல்லை விரிந்து பரவிய வண்ணமிருக்க, தரம் மட்டும் இன்னமும் தரைமட்டத்தைத் தாண்டவே இல்லை. இது குறித்த விவாதங்கள் நடைபெறும்போதெல்லாம் இரண்டு பிரிவினரையே காரணமாக சொல்வார்கள். ‘மலிவான, மட்டமான மசாலாப்படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களே சினிமாவை சீரழித்தவர்கள்’ என்று ஒரு சாரரும், ‘இல்லை.. இல்லை.. மக்கள்தான் மசாலாப்படங்களை விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் விருப்பத்துக்கேற்ப மசாலாப்படங்களைக் கொடுக்கிறோம்’ என்று திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டை யிலிருந்து கோழி வந்ததா என்பதைப் போன்ற விவாதத்தை, விதண்டாவாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு சற்றே யோசித்துப் பார்த்தால், இரண்டு பிரிவினரின் கருத்துக்களுமே ஏற்புடையதுதான். காரணம்.. ஒரு பக்கம், பன்றி குட்டிகளைப்போடுவது போல் மலிவுப்படங்களை எடுத்துத்தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள் - திரையுலகினர். சமூகத்துக்குப் பயனுள்ள படங்களை எடுக்காதது மட்டுமல்ல, அப்படிப்பட்ட படங்களை எடுக்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச சிந்தனை, முயற்சிகூட இல்லாமல் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், மக்களும் தப்பித்தவறி அத்திப்பூத்தாற்போல் எப்போதாவது வெளிவரும் நல்ல படங்களை ஆதரிக்காமல் படு தோல்வியடையச் செய்துவிடுகிறார்கள். அது மட்டுமல்ல, மிக மோசமான, தீமையான திரைப்படங்களை தலையில் வைத்துக் கொண்டாடியும் தொலைத்துவிடுகிறார்கள். ஆக.. தமிழ்த்திரைப் படங்கள் தரமற்று, குப்பைகளாக இருப்பதற்கு இந்த இரு பிரிவினருமே காரணம் என்று நம்மால் எளிதில் முடிவுக்கு வந்துவிட முடியும்.
தமிழ்த்திரைப்படங்களின் கவலை தரக்கூடிய இந்தப் போக்குக்கு திரைப்படங்களை உற்பத்தி செய்பவர்களையும், அவற்றின் பார்வையாளர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிற அதே சமயம், அரசாங்கத்தையும் இவர்களுடன் இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், தமிழில் திரைப்படக்கலை இந்தளவுக்கு அழுகிப்போனதற்கும், ஆபாசமயமானதற்கும் நம் அரசும் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை வேதனையுடன் சொல்லித்தானாக வேண்டும்.
ஒரு நல்ல செயலை வளர்க்க வேண்டுமானால், அதை ஊக்குவிக்க வேண்டும், ஒரு தீய செயலைத் தடுக்க வேண்டுமானால் அதை ஒடுக்க வேண்டும். திரைப்படங்கள் விஷயத்தில் நம் அரசாங்கம் இதற்கு மாறான போக்கையே கடைபிடித்து வருகிறது என்று பகிரங்கமாகச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் மானியமும், விருதுகளும் எப்படிப்பட்ட திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதை வைத்தே என் குற்றச்சாட்டில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு 2006 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்கான பட்டியலைப் பார்ப்போம்.
சிறந்த படத்துக்கான பிரிவில் முதல்பரிசு வெயில் திரைப்படத்துக்கும், அதே பிரிவில் இரண்டாவது பரிசு பருத்திவீரன் திரைப்படத்துக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விரு திரைப்படங்களைத் தேர்வு செய்ததற்காக விருதுக்குழுவினரை பாராட்ட நினைக்கும்போது, சிறந்த படத்துக்கான மூன்றாவது பரிசு என்று திருட்டுப் பயலே என்ற படத்தைத் தேர்வு செய்ததால் பாராட்டு வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள்ளேயே புதைந்து விடுகின்றன.
அது மட்டுமல்ல, திருட்டுப்பயலே படத்தைத் தேர்வு செய்த தேர்வுக்குழுவினரை வக்கிரப்பார்வை கொண்டவர்கள் என்றும் எண்ண வைக்கிறது. ஏனெனில், திருட்டுப்பயலே திரைப்படம் வெறும் மசாலாப்படம் மட்டுமல்ல, பாலியல் மற்றும் வக்கிரமான காட்சிகளும், வசனங்களும் மலிந்திருந்த படம். கணவனின் நண்பனுடன் கள்ளக்காதலில் ஈடுபடும் ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை வீடியோ படம் எடுத்து வைத்துக் கொண்டு, அதைக்காட்டியே அவளை பிளாக்மெயில் செய்து சொகுசாக வாழ்கிறவனைப்பற்றிய இந்தப்படத்துக்கு அரசாங்கமே விருது வழங்கி மக்களின் வரிப்பணத்தையும் வாரிக்கொடுக்கிறது என்றால், அரசின் நோக்கம்தான் என்ன? மக்களை சீரழிக்கிற திரைப்படங்களை அரசாங்கமே ஆதரிக்கிறது என்றல்லவா அர்த்தம்?
சிறந்த படத்துக்கான பிரிவில் சிறப்புப் பரிசு ‘இலக்கணம்’ என்ற திரைப்படத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. புதுமுகங்களின் நடிப்பில், புதிய இயக்குநரால் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பிற மொழிக்கலப்பில்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வசனங்களே இடம்பெற்றன. இந்த முயற்சியை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில் இலக்கணம் திரைப்படம் தகுதியான தேர்வு என்பதில் யாருக்கும் வேறு கருத்திருக்க முடியாது.
தமிழக அரசின் விருதுப்பட்டியலில் பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்புப்பரிசு என்ற பிரிவும் உண்டு. இப்பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் திரைப்படங்கள் அதற்கு மாறான, பெண்களை சிறுமைப்படுத்துகிற படங்களாகவே இருந்து வருவதுதான் சோகம். ‘காதலே என் காதலே’ என்ற திரைப்படத்துக்கு பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்புப்பரிசு வழங்கப்பட்டதன் மூலம் இந்த ஆண்டும் அதே காரியத்தை கர்மசிரத்தையாகச் செய்திருக்கிறது - தமிழக அரசு. இப்படத்தின் தரத்தைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இதன் தலைப்பை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
தமிழகஅரசின் திரைப்பட விருதுகளில் அரசியல் தலையீடும், சிபாரிசும், செல்வாக்கும் முக்கிய பங்கு வகிப்பதாக திரையுலகில் சொல்லப்படுவதுண்டு. விருது கிடைக்காதவர்களின் புலம்பல் என்று இதை அலட்சியப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் படங்களைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உண்மை இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன.
2006 ஆம் ஆண்டில், சித்திரம் பேசுதடி, கொக்கி, ஈ, தம்பி, நாகரிகக் கோமாளி, சாசனம், எம்டன் மகன் போன்ற குறிப்பிடத்தக்கப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றை தேர்வுக்குழுவினர் கவனத்திலேயே எடுத்துக் கொள்ளவில்லை என்கிறபோது, தமிழகஅரசின் விருதுகளின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகிறது.
சித்திரம் பேசுதடி காதல் பட வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் உறைந்துகிடந்த வேறு பல அம்சங்களினால் வித்தியாசமான திரைப்படமாக மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தப்படத்துக்கு அரசின் அங்கீகாரமில்லை. அதேபோல், சகுனம் பார்க்கும் ஒருவனால், தன் வாழ்வையே தொலைத்தவனின் கதையாக எடுக்கப்பட்ட கொக்கி படத்துக்கும் விருதளித்து கௌரவித்திருக்க வேண்டும். பகுத்தறிவுபேசி ஆட்சியைப்பிடித்தவர்களே மூடநம்பிக்கையை முறியடிக்கும் கருத்தைக் கொண்டிருந்த ‘கொக்கி’யை ஆதரிக்காதபோது, அது போன்ற சீர்திருத்தக்கருத்துக்களை யார்தான் சொல்ல முன்வருவார்கள்?
வன்முறை வேண்டாம் என்ற கருத்தைச் சொன்ன தம்பி, மனித இனத்தை சத்தமில்லாமல் அழிக்கத்துடிக்கும் நாசகார சக்திகளைப்பற்றி விழிப்புணர்வை உண்டாக்கிய ஈ, தந்தை மகனுக்குமான உறவின் மேன்மையைச் சொன்ன எம்(டன்)மகன், நாட்டார்களின் வாழ்வியலைச் சொன்ன சாசனம், சமூக, அரசியல் பிரச்சனைகளைப் பற்றி மிகத் துணிச்சலாகப் பேசிய நாகரிகக்கோமாளி போன்ற திரைப்படங்களுக்கும் தமிழக அரசின் விருதுகள் இல்லை என்பதை ஏற்கவே முடியாது. வெகு அபூர்வமாக வெளிவரும் இவை போன்ற கருத்தின் அடிப்படையில் வரவேற்கப்பட வேண்டிய படைப்புகளை அரசே உதாசீனப்படுத்துவது பொறுப்பற்ற செயல் அன்றி வேறில்லை.
திரைப்படக்கலைஞர்களுக்கான விருதுப்பட்டியலில் சிறந்த நடிகர் விருது கமலஹாசனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் உலகத்தரமிக்க சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனக்கும்தான். ஆனால் வேட்டையாடு விளையாடு என்ற மசாலாப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகர் என்று பரிவட்டத்தைக் கட்ட வேண்டுமா என்பதே என் கேள்வி. இந்த விருதை பெறும்போது கமல்ஹாசனே மனசுக்குள் கூச்சப்பட்டிருப்பார்.
சிறந்த நடிகர் என்பவர் ஒருவராகவே இருக்க வேண்டும். அப்படி இருப்பதுதான் விருது பெறுநருக்குப் பெருமை சேர்க்கும். இங்கே அளிக்கப்படுவது பெருமை அல்ல, அவமானம். விருது வழங்கும் விழாவுக்கு நிறைய நட்சத்திரங்களை வர வைக்கும் தந்திரமாக விருதுகளின் எண்ணிக்கையை எக்கச்சக்கமாக அதிகரித்திருக் கின்றனர். சிறப்புப்பரிசு என்ற பெயரில் விருதுகளை கூறுபோடுவதும் அவற்றில் ஒன்றுதான்.
சிறந்த நடிகர் என்று கமல்ஹாசனை தேர்வு செய்தவர்களே, சிறப்புப் பரிசு என்று பருத்தி வீரன் படத்தில் நடித்த கார்த்திக்கும், டிஷ்யூம் படத்தில் நடித்த குள்ளமனிதர் பக்ருவுக்கும் வழங்கி யிருக்கிறார்கள்.
பருத்தி வீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது பொருத்தமான தேர்வு. ஆனால், அதே பிரிவில் சிறப்புப்பரிசு என்று டிஷ்யூம் படத்தில் நடித்த சந்தியாவுக்கும் விருது வழங்கியதை எப்படி ஏற்க முடியும்? ஏனெனில் குறிப்பிட்ட அந்தப்படத்தில் சந்தியா ஏற்றது தமிழ்சினிமாவுக்கே உரிய சராசரியான கதாநாயகி வேடம்தான்.
எம்(டன்)மகன் படத்தில் நடித்ததற்காக நாசருக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருதும், அதே படத்துக்காக சரண்யாவுக்கு சிறந்த குணசித்திர நடிகை விருதும், ஈ படத்துக்காக பசுபதிக்கு சிறந்த வில்லன் நடிகர் விருதும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் கேலிக்கூத்தான விஷயம்.... ஈ படத்தில் பசுபதி ஏற்றது வில்லன் வேடமே அல்ல, தீய சக்தியை அழிக்கப் புறப்பட்ட ஒரு போராளியாகவே அவர் நடித்திருந்தார். அவருக்கு வில்லன் நடிகர் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டிருக்கிறது என்றால், தேர்வுக் குழுவினர் ஈ படத்தையே பார்க்கவில்லை என்ற முடிவுக்« வர வேண்டியிருக்கிறது. இவர்களை கெட்ட வார்த்தையால் திட்டினால் என்ன?
இதற்காக மட்டுமல்ல, திருப்பதி படத்துக்காக இயக்குநர் பேரரசுவுக்கு சிறந்த கதாசிரியர் விருது வழங்கியதற்காகவும்தான்! பேரரசுவுக்கு விருது வழங்கிய பாவத்துக்குப் பிராயச்சித்தமாகவோ என்னவோ தம்பி படத்துக்காக சிறந்த உரையாடலாசிரியர் விருதை இயக்குநர் சீமானுக்கு வழங்கியிருக்கிறார்கள் போலும்.
கதைக்கும், வசனத்துக்கும் விருதுகளை வழங்கும் அரசுக்கு திரைப்படத்தின் அச்சாணியே திரைக்கதைதான் என்பது இன்னமும் தெரியாமலே இருப்பதுதான் வேதனை, வேடிக்கை. பக்கத்து மாநிலமான கேரளத்தில் பல வருடங்களாகவே திரைக்கதைக்கு விருது வழங்கி வருகிறார்கள். இங்கே திரைக்கதையின் முக்கியத்துவமே தெரியாமல் திரைப்பட விருதுகளை வழங்கிக் கொண்டிருக் கிறார்கள்.
கேரளாவில் மேலும் சில பிரிவுகளிலும் அரசு விருதுகளை வழங்குகிறார்கள். அவற்றில் முக்கியமானது...குழந்தைகளுக்காக எடுக்கப்படும் திரைப்படத்துக்கு வழங்கப்படும் விருது! இப்படியொரு பிரிவில் விருது வழங்குவதன் மூலம் குழந்தை களுக்கான திரைப்படங்களை ஊக்குவிக்கிறது கேரள அரசு. தமிழக அரசோ, மசாலாப்படங்களுக்கும், அடிதடி படங்களுக்கும், பாலியல் படங்களுக்கும், வன்முறைப்படங்களுக்கும் விருதுகளை வழங்கி அப்படிப்பட்ட படங்களை ஆராதித்துக் கொண்டிருக்கிறது.
முழுக்க முழுக்க கேரளாவிலேயே எடுக்கப்பட்ட படத்துக்காகவும் விருது வழங்கப்படுகிறது கேரளத்தில். இது கேரளத்தின் வாழ்வியலை, அம்மக்களின் வாழ்க்கையை திரைப்படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை படைப்பாளிகளின் மனதில் பதியம்போடுகிற பணியாகவே தோன்றுகிறது.
நம் அரசும் இதுபோல் ஆக்கபூர்வமான விருதுகளை வழங்கக் கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் தமிழிலும் நல்ல திரைப்படங்கள் உருவாகக்கூடிய ஆரோக்கியமான சூழல் நிலவும். அதைவிட்டுவிட்டு, இப்போது போலவே சமூகத்துக்கு பாதகமான படங்களுக்கு விருதுகளையும், மானியத்தையும் வழங்கிக் கொண்டிருந்தால் மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே இருக்கும். துரோகம் தொடரப் போகிறதா? தமிழக அரசு யோசிக்கட்டும்!
No comments:
Post a Comment