Tuesday, 30 June 2009

டிஜிட்டல் சினிமாவுக்கு அடித்தளம்

புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் கடந்த ஆண்டின் நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பது சந்தேகமில்லாமல் சுவாரஸ்யமான விஷயம்தான். அப்படி 2005 ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கும் போது, முந்தைய ஆண்டுகளைப் போலவே 2005லும் பட எண்ணிக்கைக்குப் பஞ்சமில்லை. தொண்ணூறு திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன- 2005 ஆம் ஆண்டில். வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை யோடு ஒப்பிடுகையில் வெற்றியின் சதவிகிதம் குறைவு தான்.


வெற்றிகரமான நூறாவது நாள் என்று போஸ்டர் ஒட்டி பல படங்கள் வெற்றி பெற்றதாகப் பிரகடனப் படுத்திக் கொண்டாலும், உண்மையான வெற்றியை ருசித்தது, சந்திரமுகி, திருப்பாச்சி, அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே, அந்நியன், கஜினி, சிவகாசி போன்ற சில படங்களே! இவற்றில், சந்திரமுகி வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றிப்படம். சுமார் பதினைந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் உலகம் தழுவிய அளவில் வசூலித்தது எழுபத்தைந்து கோடிக்கு மேல். இதற்கு முன் எந்தவொரு தமிழ்த்திரைப் படமும் எட்டாத வசூல் சாதனை இது! சந்திரமுகிக்கு அடுத்த இடத்தில் இருப்பது அந்நியன் படம். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் ஐம்பது கோடி வரை வசூல் செய்தது. ஆனாலும் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடும்போது வசூலான தொகையின் சதவிகிதம் பெருமைப்படக்கூடிய அளவில் இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

சந்திரமுகி, திருப்பாச்சி, அந்நியன், கஜினி, சிவகாசி போன்ற படங்கள் வெற்றி பெற்றதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. வணிக மதிப்பில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள், இயக்குநர்களின் கூட்டணியில் உருவான இந்தப் படங்கள் கமர்ஷியல் அம்சங்களைக் கொண்டவை. அதனால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டவை. எதிர்பார்த்ததுபோலவே வெற்றியையும் பெற்றதில் வியப்பில்லை.

எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி, வித்தியாசமான படமாய் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட வகையில் சில படங்கள் வாகை சூடியிருக்கின்றன. அவற்றில் அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே, போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. இந்தப்பட்டியலில் அமீர் இயக்கிய ராம் படத்துக்கும் இடம் உண்டு. தோல்விப்பட நாயகனாக அறியப்பட்ட ஜீவாவை வைத்து அமீர் இயக்கிய இந்தப்படம் தொழில்நுட்ப அளவில் பேசப்பட்ட படம்.

மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய சில படங்கள் தோல்வியைத் தழுவியதும் நடந்திருக்கிறது 2005ஆம் ஆண்டில். கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ், பாலா தயாரிப்பில் சூர்யா நடித்த மாயாவி, விக்ரம் நடித்த மஜா, லிங்குசாமி இயக்கத்தில் அஜீத் நடித்த ஜி, ஜெயம் ரவி நடித்த மழை, தாஸ், சூர்யா நடித்த ஆறு, சிம்பு நடித்த தொட்டி ஜெயா, விஜய் நடித்த சச்சின், பரத் நடித்த பிப்ரவரி 14, ஆர்யா நடித்த ஒரு கல்லு£ரியின் கதை, எஸ்.ஜே. சூர்யாவின் அ...ஆ.., சரத்குமார் நடித்த ஐயா, நீண்ட இடைவெளிக்குப் பின் பாசில் இயக்கிய ஒரு நாள் ஒரு கனவு, ஆட்டோகிராப் மூலம் இமாலய வெற்றியடைந்த சேரனின் தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அதனால் வெற்றிக் கோப்பையைத் தவறவிட்டுவிட்டன.

வெளிவந்த படங்களின் எண்ணிக்கை, வெற்றிப்படங்களின் சதவிகிதங்கள் இவ்வாறு இருக்க, கதை அம்சத்தில் தமிழ்சினிமா 2005 ஆம் ஆண்டில் எப்படி இருந்தன என்பதையும் பார்ப்போம். வெளிநாடுகளில் தயாராகும் படங்கள் கதை அம்சங்களைக் கொண்டு ஆக்ஷன் படம், குடும்பப்படம், குழந்தைகளுக்கான படம், நகைச்சுவைப்படம் என பல உட்பிரிவுகள் கொண்டவையாக இருக்கின்றன. தமிழில் இப்படி தரம் பிரிப்பது கடினம். பாடல், சண்டை, காமெடி, சென்ட்டிமென்ட் என கலவையாகவே இங்குள்ள படங்கள் இருக்கின்றன. எனினும் ஒரு படத்தின் அடிநாதமாக இருக்கும் விஷயத்தை வைத்து தரம்பிரித்துப் பார்க்கும்போது, 2005 ஆம் ஆண்டில் ஒன்பது காமெடிப்படங்களும், இருபத்தைந்து மசாலாப்படங்களும், பனிரெண்டு ஆக்ஷன் படங்களும், இருபது காதல் படங்களும், இருபத்தியொரு குடும்பப்படங்களும், ஒரு சயின்ஸ்ஃபிக்ஷன் படமும் (ஜித்தன்), ஒரு பக்திப்படமும் (ஐயப்பசாமி) வெளியாகி இருக்கின்றன. ஆக்ஷன் படமும் மசாலாப் படம்தான் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் முப்பத்தேழு படங்கள் மசாலாப்படங்கள்தான்.

வெளிவந்த படங்களின் எண்ணிக்கை, வெற்றிப்படங்களின் சதவிகிதம், கதை அம்சம் போன்ற அடிப்படையில் மட்டுமின்றி படங்களின் தரத்தை வைத்தும் 2005 ஆம் ஆண்டில் வெளியான படங்களை பார்ப்பதும் நம் கடமையாகிறது. ஏனெனில், வெளியான எண்ணிக்கையும் சரி, வெற்றிப்பட விகிதமும் சரி திரையுலகத்துக்கு மட்டுமே நன்மை தரக் கூடிய விஷயம். படங்களின் தரம், அதாவது படம் சொல்லும் செய்தி, அதைப்பார்க்கும் பார்வையாளனுக்குக் கிடைக்கும் அனுபவம், சமூகத்தில் அந்தப்படம் எற்படுத்தும் தாக்கம் போன்ற காரணிகளே ஒரு படத்தின் தரத்தையும் தகுதியையும் நிர்ணயிப்பதாக இருக்கின்றன.

இந்த அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு வெளியான தொண்ணூறு படங்களையும் பார்வையிடும் போது பளிச்சென கவனத்தை ஈர்ப்பதாக சில படங்களே இருக்கின்றன. பார்த்திபன் நடித்த கண்ணாடிப்பூக்கள், ஸ்ரீகாந்த் நடிக்க, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கிய கனாக்கண்டேன், ஆர்.புவனா என்ற பெண் இயக்குநர் இயக்கிய ரைட்டா தப்பா, ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் தயாரித்து, இயக்கி கதைநாயகனாகவும் நடித்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மலையாள இயக்குநர் லோகிததாஸ் இயக்கி மீராஜாஸ்மின் நடித்த கஸ்தூரிமான், கே.எஸ். அதியமான் இயக்கத்தில் மாதவன் நடித்த பிரியசகி, சேரன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்த தவமாய் தவமிருந்து போன்ற படங்கள்தான் அவை.

குழந்தைக் குற்றவாளியை இந்த சமூகம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை அம்சம் கொண்டது கண்ணாடிப் பூக்கள் படம். மலையாளப்படம் ஒன்றின் ரீமேக்கான இந்தப் படம் தமிழ்சினிமாவுக்கு பெருமை தரக் கூடிய படம். ஆனால் ரசிகர்களால் துளியும் கண்டுகொள்ளப்பாடாதது வருத்தத்துக்குரிய விஷயமே! அதே போல் ரைட்டா தப்பா என்ற படத்தையும் ரசிகர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இப்படி ஒரு படம் வெளியானதே பலருக்கும் தெரியாது என்ற அளவிலேயே இந்தப் படத்தின் வருகையும், வரவேற்பும் இருந்தன. ஈவ்டீஸிங் என்ற சமூகக் கொடுமை ஏற்படுத்தும் பாதிப்பை சிறப்பாய் சொன்ன படம் இது. பெரும்பாலான படங்களில் காதல் என்ற பெயரில் கதாநாயகர்களே ஈவ்டீஸிங் செய்து வருவதை கைதட்டி ரசிக்கும் ரசிகர்களுக்கு அதற்கு விரோதமான கருத்தைச் சொல்லும் ரைட்டா தப்பா படம் விரும்பத்தக்கதாக இல்லை என்றே தோன்றுகிறது.
கனாக்கண்டேன்- ஆடல் பாடல் சண்டை போன்ற அம்சங்கள் கொண்ட வணிகப்படமே! ஆனாலும் கடல்நீரை குடிநீராக மாற்ற வேண்டும் என்கிற சமூகப் பிரச்சனையைப் பற்றி பேசிய படம். கடல்நீரை குடிநீராக மாற்றுவது குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்காக கனாக் கண்டேன் படத்தை நல்ல படம் என்ற தகுதிப்பட்டியலில் சேர்க்கலாம் தப்பில்லை.

தமிழ்சினிமாவில் காயடிக்கப்பட்ட விஷயம் காதல்தான். அந்தக் காதலையே மாறுபட்ட கோணத்தில் அணுகிய வகையில் பிரியசகி, கஸ்தூரிமான் படங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. கண்டதும் காதலிப்பது, காதலுக்காக, காதலிக்காக உருகுவது என பொய்யான காதலை சித்தரிக்கும் படங்கள் மலிந்து விட்ட இன்றைய சூழலில், திருமணத்துக்குப் பின் காதல் எவ்வாறெல்லாம் சிதைவுக்குள்ளா கிறது. யாதார்த்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் காதல் என்ற மாயத் தோற்றம் எப்படி நிறமிழந்து போகிறது என்பதை தோலுரிக்கும் திரைப்படமாக இருந்தது பிரியசகி படம். காதல் என்பது இரண்டு பேர் சம்மந்தப்பட்டதல்ல, வெவ்வேறு பின்னணிகள் கொண்ட இரண்டு குடும்பம் சம்மந்தப்பட்டது என்று இந்தப்படம் சொல்லும் கருத்து இன்றைய இளைஞர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய விஷயமாகவும் இருந்தது.

கஸ்தூரிமான் படத்தில் சொல்லப்பட்ட காதலும் சற்று மாறுபட்டதுதான். காதல் என்பது தியாகத்தில் கட்டமைக்கப்படுவது என்பதே கஸ்தூரிமான் படத்தின் செய்தியாக இருந்தது. இந்தப்படத்தின் கதை அம்சம் மட்டுமல்ல, திரைக்கதையும் ஆரோக்கியமாய் இருந்தது கூடுதல் சிறப்பு.

தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படமும், சேரனின் தவமாய் தவமிருந்து படமும் நாணயத்தின் இரு பக்கங்களாய் ஒரே தளத்தில் இயங்கியவை. பொறுப்பில்லாத தந்தையின் தான்தோன்றித்தனத்தை சொன்ன சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படம், பொறுப்பற்ற தந்தைகளுக்கு தம் கடமையை புரிய வைக்கும் படமாய் உருவாக்கப்பட்டிருந்தது. தவமாய் தவமிருந்து படமோ.. தன் இரு பிள்ளைகளை வளர்க்க ஒரு தந்தை செய்யும் தியாகங்களையும், பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக ஒரு தந்தை எதிர்கொள்ளும் சிரமங்களையும் அழுத்தமாய் சொன்ன அற்புதமான படைப்பு. தந்தைகளை வில்லன்களாகப் பார்க்கும் இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவரும் பார்த்துத் திருந்த வேண்டிய படம். ஆனாலும் இந்தப் படத்தை ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. ரசிர்களின் ரசனைக்குறைபாடு ஒரு காரணம் என்றால், படத்தின் அநியாய நீளமும் தவமாய் தவமிருந்து சேரன் எடுத்த இந்தப்படத்தை ரசிகர்கள் நிராகரிக்க முக்கிய காரணமாகிவிட்டது.

வெற்றி தோல்வி அடிப்படையில் திரைப்படங்களை அளவிடுவது, கதை அம்சங்களை வைத்து அதன் தரத்தை எடைபோடுவது தவிர தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 2005 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

திரைப்பட தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது ஃபிலிம்! படத்தின் தயாரிப்புச் செலவில் ஃபிலிமும், அது தொடர்பான செலவுகளும் சுமார் இருபது சதவிகிதத்தை விழுங்கிவிடுகின்றன. இந்த செலவு, நல்ல கதை அம்சம் கொண்ட படங்களின் வருகைக்கு ஒருவகையில் தடையாக இருப்பதும் கண்கூடான விஷயம். செலவு செய்த பணத்தை லாபத்தோடு திரும்ப எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செலுலாய்டு குப்பைகள் எல்லாம் திரைப்படங்களாக திரையரங்கை நோக்கிப் படை எடுத்துக் கொண்டிருக்கின்றன. படத்தின் தயாரிப்புச் செலவு மட்டுப்படும் போது ஆரோக்யமான முயற்சிகள் கைகூடலாம்.

அதற்கு ஃபிலிம் இல்லாமல் படமாக்கப்படக் கூடிய டிஜிட்டல் சினிமா நல்லதொரு வரப்பிரசாதம். ஹாலிவுட்டில் புழக்கத்தில் இருக்கும் டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பம் தமிழில் ஏற்கனவே சிலரால் கையாளப்பட்டு தோல்வியடைந்தது. ஆனாலும் கமல் மீண்டும் முயற்சி செய்தார் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில். அதில் அவர் ஓரளவு வெற்றியடைந்தாலும் சின்னச்சின்ன குறைபாடுகளும் தென்பட்டன. அதனால் டிஜிட்டல் சினிமாவின் எதிர்காலம் தமிழில் கேள்விக்குறியான நிலையில், தவமாய் தவமிருந்து படத்தை டிஜிட்டலில் படமாக்கி மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் சேரன். இதன் மூலம் டிஜிட்டல் சினிமாவை பலரும் பயன்படுத்தக்கூடிய சூழல் உருவானது. எதிர்காலத்தில் டிஜிட்டல் சினிமா பரவலாகும்போது அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த வகையில் தமிழ்சினிமா வரலாற்றில் 2005 ஆம் ஆண்டு இடம்பிடிக்கும் என்பது நிச்சயம்.


No comments:

Post a Comment