Saturday 21 May 2011

கோடம்பாக்கக் காக்கைகளை விரட்டி அடியுங்கள்!

மாற்றம் வருமா என்ற பொதுத்தலைப்பில் பல்வேறு துறைகள் குறித்த தொடருக்காக குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு ஒரு கட்டுரை கேட்டார்கள். 26.05.2011 குமுதம் ரிப்பேர்ட்டர் இதழில் வெளியான கட்டுரைதான் இது.

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தங்களின் வாழ்க்கையை சுபிட்சமாக்கிவிடும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பாமர மக்கள் மத்தியில் மட்டுமல்ல, திரைப்படத்துறையிலும் ஏற்பட்டிருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. இதன் பின்னணியில் மறைமுகமாக அல்ல, வெளிப்படையாகவே தெரிகிற விஷயம் ஒன்று உண்டு. அதாவது, கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சிக்காலத்தில், கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தில் சிக்கி, திரைப்படத்துறை திணறிக்கொண்டிருந்தது, இனி அவர்களிடமிருந்து விடுதலை! என்பதே அது.

இப்படியானதொரு மகிழ்ச்சியான மனநிலையில்தான் இப்போது திரைப்படத்துறையினர் திளைத்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட அடி, தங்களை பிணைத்திருந்த அடிமை விலங்கினை அகற்றியிருப்பதுபோலவும் ஆனந்தக்கூத்தாடுகின்றனர்.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளினால் கடந்த ஆட்சியை கரித்துக் கொட்டவும், ஆட்சி மாற்றத்தை எண்ணி மகிழவும் தமிழக மக்கள் தரப்பில் நியாயமான பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

ஆனால்.. திரைப்படத்துறையினருக்கு?

சாமான்ய மக்களுக்கு ஏற்பட்டதில் ஒரு சதவிகித கஷ்டத்தைக் கூட அனுபவிக்காதவர்கள் யாரென்றால்.. அது திரைப்படத்துறையினர்தான். தங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த மக்களுக்கு செய்த நன்மைகளைவிட, சமூகத்துக்கு எவ்விதத்திலும் பயனில்லாத, படத்துறைக்கு தி.மு.க. அரசு செய்த நன்மைகளும், அள்ளிக் கொடுத்த சலுகைகளும் கொஞ்சநஞ்சமல்ல.

பிற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களை வயிறெரிய வைக்குமளவுக்கு திரைப்படத்துறைக்கு மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்பட்டது. தமிழில் தலைப்பு சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு வரி விலக்கு, பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டணக்குறைப்பு, நல வாரியம் அமைத்தது என ஏராளமான சலுகைகளை வழங்கி கோடம்பாக்கத்தினரை குஷிப்படுத்தினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக பையனூரில் 96 ஏக்கர் பரப்பளவு நிலம் வழங்கப்பட்டது.

இதற்கெல்லாம் பிரதி உபகாரமாக நமீதா வகையறாக்களின் பம்பர் குலுக்கல் நடனங்களுடன் பாசத்தலைவனுக்குப் பாராட்டுவிழா நடத்தி தங்களின் நன்றிவிசுவாசத்தை வெளிப்படுத்தினர் திரைப்படத்துறையினர்.

இப்படியாக, சினிமாக்காரர்களை செல்லப்பிள்ளையாக பாவித்து அவர்களுக்கு அளவுக்கு மீறி சலுகைகளை வழங்கியும் கூட, செல்லப்பிள்ளைகளிடம் கருணாநிதியினால் நல்ல பெயர் எடுக்கமுடியாமல்போனதுதான் வேடிக்கை.

கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தினால் சினிமாத்துறையே சிறைபிடிக்கப்பட்டதாக ஒப்பாரி சத்தம் ஓங்கி ஒலித்தது - கோடம்பாக்கத்தில். 'என் குடும்பத்தினர் மட்டுமா சினிமாவில் இருக்கிறார்கள்? ஏவிஎம் குடும்பத்தினர் இல்லையா, ரஜினியின் குடும்பத்தினர் இல்லையா?' என்றெல்லாம் அறிக்கைகள் வழியாக கருணாநிதி பதில் சொன்னாலும், படத்துறையினரின் புலம்பல் அடங்கவில்லை. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் குடும்பத்தினரிடமிருந்து திரைப்படத்துறையை மீட்போம்!' என்று அ.தி.மு.க. தரப்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்குமளவுக்கு இப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது.

இந்தளவுக்கு மக்கள் அரங்கத்தில் விவாதிக்கப்படுமளவுக்கு கடந்த ஆட்சியின்போது திரைப்படத்துறையில் அப்படி என்னதான் நடந்தது?

அரசியலுக்கு வர யாதொரு தகுதியும் தேவை இல்லை என்பதுபோலவே, சினிமாவில் தொழில் செய்யவும் தனிப்பட்ட தகுதி அவசியமில்லை. தேவை ஒன்றே ஒன்றுதான்.. பணம்! கருணாநிதியின் குடும்பத்தினருக்கு இந்தத் தகுதி தேவைக்கு அதிகமாகவே இருந்தது. கூடவே அதிகார பலமும் சேர, மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ், மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் க்ளவுட்நைன் மூவீஸ், கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் திரைத்துறையில் மளமளவென விஸ்வரூபமெடுத்தன. இந்த வேகமும், வளர்ச்சியும் நேர்வழியில் சாத்தியமில்லை என்பதும், அதிகாரத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி குறுக்குவழியில் அடைந்தது என்பதும்தான் திரைத்தொழிலில் காலம்காலமாக ஈடுபட்டிருப்பவர்களின் குற்றச்சாட்டு.

வியாபார மதிப்பு கொண்ட முன்னணி நட்சத்திரங்களின் கால்ஷீட் மற்றவர்களுக்குக் கிடைக்காமல் செய்தார்கள் என்பதுதான் கருணாநிதி குடும்பத்தினர் மீது எய்யப்படும் முதல் குற்றச்சாட்டு அம்பு. இதில் ஓரளவு அல்ல, நிறையவே நியாயம் இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் ரஜினி, கமல் தொடங்கி சூர்யா, விஜய், அஜித், தனுஷ், ஜெயம்ரவி, விஷால், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலரும் 'பேரன்களின் பேனர்'களில் நடிக்கவே ஆர்வம் காட்டினர்.

வட்டிக்குக் கடன் வாங்கி முன்னணி நட்சத்திரங்களுக்கு கோடிக்கணக்கில் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, கால்ஷீட் வரம் வேண்டி வருடக்கணக்கில் பல தயாரிப்பாளர்கள் காத்திருந்தநிலையில், இடையில் புகுந்த பேரன்களுக்கு எளிதில் கிடைத்தது கால்ஷீட். இதற்கு அவர்களால் அள்ளிக்கொடுக்கப்பட்ட அதிக சம்பளம் மட்டுமே காரணமாக இருக்கும் என்று அறிவுள்ள எவரும் நம்ப மாட்டார்கள். நாமும்தான்.

அதிகார பலமிக்கவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள் என்பதால் ஏற்பட்ட அச்ச உணர்வே முன்னணி நட்சத்திரங்களை இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வைத்தன. விளைவு..க்யூவில் நின்ற தயாரிப்பாளர்கள் ஏமாற்றமடைந்தார்கள். அதன் தொடர்ச்சியாய் தொடர்ந்து படம் தயாரித்து வந்த தயாரிப்பாளர்கள் படம் எடுக்காமல் வேதனையுடன் வேடிக்கைப் பார்க்கும்நிலை ஏற்பட்டது.

முன்னணி நட்சத்திரங்களை நம்பாமல், தன் பட்ஜெட்டுக்கு ஏற்ப, அவ்வளவாக மார்க்கெட் மதிப்பில்லாத நட்சத்திரங்களையோ, புதுமுகங்களையோ வைத்து மீடியம் மற்றும் லோ பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்தவர்களும் கூட, கருணாநிதி குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டதாக பரிதவித்துப் புலம்பினார்கள். இவர்களின் பிரச்சனை என்ன? கஷ்டப்பட்டு படம் எடுத்தும் நினைத்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. காரணம்.. தியேட்டர் கிடைக்கவில்லை! என்பது இவர்களின் புலம்பல். இவர்களின் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காததற்கும், கருணாநிதி குடும்பத்தினருக்கும் என்ன சம்மந்தம்? இவர்களின் புலம்பலில் முழுக்க நியாயம் இல்லை என்றாலும், ஓரளவு நியாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

குருவி படத்தின் மூலம் படத் தயாரிப்பில் இறங்கிய உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ், தமிழ்ப்படம் என்ற படத்தைத் தயாரித்ததன் மூலம் படத்துறைக்கு வந்த தயாநிதி அழகிரியின் க்ளவுட்நைன் மூவீஸ், காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்கத் தொடங்கின. தயாரித்தது மட்டுமல்ல, பெரிய நட்சத்திரங்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய பேனர்களின் படங்களை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிடும் தொழிலும் இறங்கின. எனவே தமிழகத்தில் உள்ள முக்கியமான திரையரங்குகளை அதிக வாடகை தருவதாக ஆசைக்காட்டி தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக சொல்லப்பட்டது. இப்படியாக, தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான, அதிகமான தொகை வசூலாகும் திரையரங்குகள் இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. கல்லாப்பெட்டி எளிதில் நிறையும் இந்தத் திரையரங்குகள் மற்றவர்களுக்கு எட்டாக்கனியாக மாறின. எனவே வேறு வழியில்லாமல் வௌங்காத திரையரங்குகளில் படங்களை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு நஷ்டமடைந்தார்கள்.

இப்படியாக பேரன்களால் தியேட்டர்கள் பிளாக் செய்யப்பட்டதால் சில பெரிய பட்ஜெட் படங்களே, ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகி பல மாதங்களாகியும் காத்திருக்க வேண்டிய சூழல் உண்டானது. உதாரணத்துக்கு விஜய் நடித்த காவலன்...! குருவி படத்துக்கு கால்ஷீட் கொடுத்ததன் மூலம் கருணாநிதி குடும்பத்தினரை கோடம்பாக்கத்துக்குக் கைப்பிடித்து அழைத்து வந்த விஜய்யின் படத்துக்கே இப்படியொரு சிக்கல் ஏற்பட்டதும்தான், அவரது தந்தை எஸ்.ஏ.சிக்கு கருணாநிதி குடும்பத்தினர் செய்வது 'சட்டப்படி குற்றம்' என்ற ஞானோதயம் ஏற்பட்டது.

பேரன்கள் திரையரங்குகளை கைப்பற்றிக் கொண்டது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்களினாலும் திரையரங்குகள் பறிபோயின. உளியின் ஓசை, பெண்சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர் என கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்கள் எதுவும் மக்களால் விரும்பப்படவில்லை. ஆனால் முதல்வரின் படம் என்று சொல்லிச் சொல்லியே பல திரையரங்குகளை கைப்பற்றப்பட்டன. கருணாநிதியின் படங்களைத் திரையிடுவதற்காக, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த களவாணி போன்ற படங்களை எல்லாம் கலெக்டர்கள் மூலம் அன்புக்கட்டளையிட்டு, திரையரங்குகளைவிட்டுத் தூக்கினார்கள் என்ற புலம்பலும் கோடம்பாக்கத்தில் கேட்டது.

திருட்டு வி.சி.டி. விஷயத்திலும் தி.மு.க. அரசு பாரபட்சமாகவே நடந்து கொண்டதாக படத்துறையினர் சுட்டுவிரல் நீட்டினார்கள். அதாவது, கருணாநிதி குடும்பத்தினர் சம்மந்தப்பட்ட படங்கள் வெளியாகும்போது மட்டும் கண்கொத்தி பாம்பாக, இரவு பகலாக வி.சி.டி.யை வேட்டையாடிய காவல்துறையினர் மற்றவர்களின் படங்கள் வெளியாகும்போது, கண்டு கொள்ளாமல், கண்ணயர்ந்தார்கள் என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு. காவல்துறை நடத்திய வி.சி.டி.யை வேட்டை பற்றி நாளிதழ்களில் வந்த செய்திகளே இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் ஆதாரங்களாக இருக்கின்றன.

கடந்த ஆட்சிக்காலத்தில் இப்படி பல்வேறு பிரச்சனைகளை படத்துறையினர் சந்தித்தாலும், திரைத்துறை முற்றாக முடங்கிப்போய்விடவில்லை என்பதையும் சொல்லித்தானாக வேண்டும். 2005-க்கு முன்புவரையிலான கடந்த காலங்களில், ஒரு ஆண்டில் நூறுக்கும் குறைவான படங்களே வெளியாகிக் கொண்டிருந்தன. 2006-க்குப் பிறகு படங்களின் எண்ணிக்கை அதிகமானது. 2006ல் 103 படங்களும், 2007ல் 108 படங்களும், 2009ல் 128 படங்களும், அதிகபட்சமாக 2010ல் 149 படங்களும் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் எத்தனை படங்கள்

வெற்றிப்படங்கள்? எத்தனை படங்கள் தரமான படங்கள் என்பது தனியாக அலச வேண்டிய விஷயம். இதற்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் சம்மந்தமில்லையே? பட எண்ணிக்கையின் அடிப்படையில் கடந்த ஆட்சிக்காலத்தில் கோடம்பாக்கம் செழிப்பாகவே இருந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஆனாலும் திரைத்துறையில் ஒப்பாரிச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. காரணம்...வேறு யாருமல்ல, எல்லா பிரச்சனைகளுக்கும் படத்துறையினரே காரணமாக இருக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தின் மீது பழியைப்போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ளப்பார்க்கும் இவர்கள் சில விஷயங்களில் உறுதியாக இருந்தால், திரையுலகம் என்றென்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

அவற்றில் முதன்மையானது, முக்கியமானது...ஆளும்கட்சிக்கு அல்லக்கையாக இருப்பதில் ஆர்வம் காட்டாமல், செய்யும் தொழிலை செம்மையாக செய்வதுதான். அதைவிட்டுவிட்டு, நேற்றுவரை கோபாலபுரத்துக்குக் காவடி தூக்கிய இவர்கள், இனி போயஸ் கார்டனை போற்றிப்புகழ்வதிலும், அம்மையாருக்கு பாராட்டுவிழா நடத்துவதிலும் கவனம் செலுத்தினால் படத்துறை பாதாளத்தை நோக்கி பயணிப்பதை எவராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.

திரையுலகில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படுவது முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் ஜெயலலிதாவின் கையிலும் இருக்கிறது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. சினிமா வேறு, அரசியல் வேறு. தமிழகத்தைப் பொருத்தவரை சினிமாக்காரர்களே அரசியலிலும் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றாலும், இரண்டும் இரு வேறு துருவங்கள்தான். உலக அளவில் இப்படித்தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் அரசியலும் சினிமாவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே என்ற கதையாய்...

சினிமாவுக்குள் அரசியலை திணிக்காமல் அதை சுயசார்புடன் இயங்கவிடுவது ஒன்றே முதல்வர் ஜெயலலிதா சினிமாவுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, கோடம்பாக்கக் காக்கைகளின் ஜால்ரா சத்தத்துக்கு மயங்கிவிட வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள்.

இதெல்லாம் நடந்தால் மட்டுமே சினிமாவில் மாற்றம் வரும்.