Tuesday 30 June 2009

சினிமாத்துறைக்கு சலுகை ஏன்?


திரைப்படத்துறைக்கு தமிழகஅரசு அள்ளிக் கொடுக்கும் சலுகைகள், பிற துறைகளுக்கு வழங்கப் பட்ட சலுகைகளோடு ஒப்பிட்டால் மிக அதிகம் மட்டுமல்ல, அளவுக்கு மீறி விஷயமும் கூட. ஆண்டு தோறும் வழங்கப்படும் திரைப்படத்துறைக்கான விருதுகளுக்காகவும், குறைந்த செலவில் தயாரிக்கப் படும் தரமான படங்களுக்கு மானியம் என்ற பெயரிலும் படத்துறைக்கு பல கோடிகள் செலவு செய்யப்படுகிறது. கலை என்ற அடிப்படையிலேயே திரைப்படத்துறைக்கு இப்படியான சலுகைகள் வழங்கப்பட்டாலும், உண்மையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் வியாபாரமே அது.


எனில், லாபத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு வியாபரத்துக்கு மக்களின் வரிப்பணத்தை வாரி யிறைப்பது நியாயமா? மக்களின் வாழ்வோடு நேரடி தொடர்பு கொண்ட ஒரு மளிகைக் கடைக்கோ, மருந்துக்கடைக்கோ அரசாங்கத்தால் மானியமோ, விருதுகளோ கொடுக்கப்படாதபோது திரைப்படத் துறைக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேகக் கவனிப்பும், ஊக்குவிப்பும்? என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியாது.


திரைப்படங்கள் மூலம் அரசுக்குக் கிடைத்து வந்த கேளிக்கை வரி இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலாய் மட்டுமின்றி, திரைத்துறைக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நியாயம் கற்பிப்பதாகவும் இருந்தது. 1989 ஆம் ஆண்டு வரை திரைப் படங்களுக்கான கேளிக்கை வரி ஐம்பத்தி நான்கு சதவிகிதமாக இருந்தது. அப்போது ஆட்சிக்கு வந்த தி.மு.க.அரசு, அதை நாற்பது சதவிகிதமாகக் குறைத்தது. பின்னர் அது மேலும் குறைக்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசால் இருபது சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.


அது முதல், புதிய திரைப்படங்களுக்கு இருபது சதவிகிதம், பழைய படங்களுக்கு பத்து சதவிகிதம் என்ற விகிதத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த வரிகளின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் எண்பது கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இப்படி கிடைத்த வருவாயில் பெரும்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராமங்களின் வளர்ச்சித்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.


2006 ஆம் ஆண்டில், தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப் படங்களுக்கு முழுமையான வரிவிலக்கு என்று அறிவித்தது தமிழக அரசு. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எதிராக, தமிழைப் புறக்கணித்துவிட்டு, பிற மொழித்தலைப்புகளில் வெளியாகி வந்த தமிழ்ப்படங்களின் எண்ணிக்கையை முற்றிலுமாக இல்லாமல் செய்ததோடு, தமிழ்ப் படங்களின் பெயர்களை தமிழில் இருக்க வேண்டும் என்பதைத் தவிர்க்க முடியாததாக்கியது இந்த அறிவிப்பு!


அரசுக்கும், அதன் வழியாய் கிராமப்புற மக்களுக்கும் கிடைத்து வந்த வருவாயை இந்த வரிவிலக்கின் மூலம் இழந்துவிட்டாலும், தமிழ்மொழியைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதால் அதை தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதே நேரம், இந்த வரிவிலக்கு முழுமையான பலன் தந்திருக்கிறதா என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.


திரைப்படங்களுக்குக் வழங்கப்பட்ட வரிவிலக்கினால் ஏற்பட்ட விளைவு எப்படி இருக்கிறது?


‘அறுவைசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்’ என்று சொல்லப்படுவதைப் போலவே, வரிவிலக்கின் விளைவும் இருக்கிறது என்பதே உண்மை.


நியூ, 12பி, பாய்ஸ், கோவை பிரதர்ஸ், டான் சேரா, டான்ஸர், ஏபிசிடி, பவர் ஆஃப் உமன், மும்பை எக்ஸ்பிரஸ், மஜா, ஜி என்றெல்லாம் சகட்டுமேனிக்கு பிற மொழிகளில் பெயர் சூட்டப்பட்ட நிலை மாறி, பாரிஜாதம், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று அழகு தமிழ்ப்பெயர்களைத் தாங்கித் தமிழ்ப்படங்கள் வெளிவரத் தொடங்கின.


அது மட்டுமல்ல, ‘ப்ளாஷ்பேக்’ என்று பெயரிடப்பட்ட படம் ‘அந்த நாள் ஞாபகம்’ என்றும், ‘ஸ்வீட்’ என்று தலைப்பு வைக்கப்பட்ட படம் ‘நினைத்தாலே’ என்றும், ‘பாய்ஸ் அண்ட கேர்ள்ஸ்’ என்று தொடங் கப்பட்ட படம் ‘மாணவ மாணவிகள்’ என்றும், இன்னும் பிற மொழி பெயர் வைக்கப்பட்ட வேறு பல படங்களும் தமிழ்ப்பெயர் மாற்றி வெளியிடப்பட்டன.


இப்படியாக, தமிழகஅரசின் வரிவிலக்குச் சலுகை, தமிழ்த்திரைப்படங்களின் தலைப்புகளில் மட்டுமே ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கதை அம்சம், காட்சி அமைப்புகள், உள்ளடக்கம் போன்ற விஷயங்களிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எப்போதும் போலவே, தமிழ்ப்பண்பாட்டுக்கு எதிரான கதைகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் காட்சிகள், ஆபாசமான வசனங்கள் என்று தமிழ்த்திரைப்படங்களின் கீழ்த்தரமான போக்கு தொடர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழில் பெயர் வைக்கப்பட்ட பிறகும் கூட, சமூக அமைதிக்கு வேட்டு வைக்கும் அரிவாள், துப்பாக்கிக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் வன்முறைக்காட்சிகள் தமிழ்த்திரைப்படங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு உதாரணம் சொல்லத் தொடங்கினால், வெகு சில படங்கள் தவிர, வெளி வந்த அத்தனை படங்களையுமே குறிப்பிட வேண்டியிருக்கும் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை.


ஆக, தூய்மையான உடை உடுத்திய ஒருவன் மனதில் அழுக்கைக் கொண்டிருப்பதைப் போலவே இன்றைய தமிழ்ப்படங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்டப் படங்களுக்கு வரிவிலக்குச் சலுகை அளிப்பது, அதன் மோசமான உள்ளடக்கத்தை அரசாங்கமே ஆதரித்து, அரவணைப்பது போன்ற தோற்றத்தையும், எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழ்ப்பெயர் சூட்டினால் வரிவிலக்கு என்பதை சற்றே மாற்றி, பிற மொழிகளில் தலைப்பு வைத்தால் கூடுதல் வரி என்று மாற்றம் செய்யலாம். அல்லது எல்லா வயதினரும் பார்க்கத் தகுதி வாய்ந்ததாக தணிக்கைக் குழுவினரால் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்ட, தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு மட்டும் வரிவிலக்கு என்று சட்டத்தை மாற்றி அமைக்கலாம்.


இப்படி செய்வதன் மூலம் மட்டுமே, பிற மொழித்தலைப்பு வைப்பதை மட்டுமின்றி, மோசமான திரைப்படங்களின் வருகையையும் வழக்கொழிய வைக்க முடியும். தமிழ்ப்பெயர் சூட்டினால் வரிவிலக்கு என்ற அடிப்படையில் மட்டும் தற்போதையை சலுகை தொடருமானால், ‘மாமனாரின் இன்பவெறி’, ‘மருமகளின் காமக்களியாட்டம்’, ‘மச்சினியின் முதல் இரவு’ போன்ற பகல் காட்சிப் படங்கள் கூட இந்த சட்டத்தின் கீழ் வரிவிலக்குச்சலுகையை மிகச் சுலபமாகப் பெற்றுவிட முடியும். சட்டம் இயற்றியவர்களால் கூட இதைத் தடுக்க முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால் தற்போது வெளியாகும் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் மேலே சுட்டிக்காட்டப்பட்டப் பகல் காட்சிப் பாலியல் படங்களின் தரத்தில்தான் இருக்கின்றன.


தமிழ்த்திரைப்படங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கினால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும், இப்படியொரு சலுகையை அரசு அறிவித்தது என்றால், அந்தச் சலுகை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, அது நாட்டுக்கும், மக்களுக்கும் பயன் தர வேண்டும் என்பதுதானே? அரசின் அடிப்படை நோக்கத்தைக் கூட நிறைவேற்றாத திரைப்படத் துறைக்கு வழங்கப்பட்ட சலுகையை மறுபரிசீலனை செய்வதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இது பற்றி அரசு யோசிக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட!






துரோகம் தொடரப் போகிறதா?


தமிழ்த்திரைப்படங்களின் வியாபார எல்லை விரிந்து பரவிய வண்ணமிருக்க, தரம் மட்டும் இன்னமும் தரைமட்டத்தைத் தாண்டவே இல்லை. இது குறித்த விவாதங்கள் நடைபெறும்போதெல்லாம் இரண்டு பிரிவினரையே காரணமாக சொல்வார்கள். ‘மலிவான, மட்டமான மசாலாப்படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களே சினிமாவை சீரழித்தவர்கள்’ என்று ஒரு சாரரும், ‘இல்லை.. இல்லை.. மக்கள்தான் மசாலாப்படங்களை விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் விருப்பத்துக்கேற்ப மசாலாப்படங்களைக் கொடுக்கிறோம்’ என்று திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டை யிலிருந்து கோழி வந்ததா என்பதைப் போன்ற விவாதத்தை, விதண்டாவாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு சற்றே யோசித்துப் பார்த்தால், இரண்டு பிரிவினரின் கருத்துக்களுமே ஏற்புடையதுதான். காரணம்.. ஒரு பக்கம், பன்றி குட்டிகளைப்போடுவது போல் மலிவுப்படங்களை எடுத்துத்தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள் - திரையுலகினர். சமூகத்துக்குப் பயனுள்ள படங்களை எடுக்காதது மட்டுமல்ல, அப்படிப்பட்ட படங்களை எடுக்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச சிந்தனை, முயற்சிகூட இல்லாமல் இருக்கிறார்கள்.


இன்னொரு பக்கம், மக்களும் தப்பித்தவறி அத்திப்பூத்தாற்போல் எப்போதாவது வெளிவரும் நல்ல படங்களை ஆதரிக்காமல் படு தோல்வியடையச் செய்துவிடுகிறார்கள். அது மட்டுமல்ல, மிக மோசமான, தீமையான திரைப்படங்களை தலையில் வைத்துக் கொண்டாடியும் தொலைத்துவிடுகிறார்கள். ஆக.. தமிழ்த்திரைப் படங்கள் தரமற்று, குப்பைகளாக இருப்பதற்கு இந்த இரு பிரிவினருமே காரணம் என்று நம்மால் எளிதில் முடிவுக்கு வந்துவிட முடியும்.
தமிழ்த்திரைப்படங்களின் கவலை தரக்கூடிய இந்தப் போக்குக்கு திரைப்படங்களை உற்பத்தி செய்பவர்களையும், அவற்றின் பார்வையாளர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிற அதே சமயம், அரசாங்கத்தையும் இவர்களுடன் இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், தமிழில் திரைப்படக்கலை இந்தளவுக்கு அழுகிப்போனதற்கும், ஆபாசமயமானதற்கும் நம் அரசும் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை வேதனையுடன் சொல்லித்தானாக வேண்டும்.


ஒரு நல்ல செயலை வளர்க்க வேண்டுமானால், அதை ஊக்குவிக்க வேண்டும், ஒரு தீய செயலைத் தடுக்க வேண்டுமானால் அதை ஒடுக்க வேண்டும். திரைப்படங்கள் விஷயத்தில் நம் அரசாங்கம் இதற்கு மாறான போக்கையே கடைபிடித்து வருகிறது என்று பகிரங்கமாகச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் மானியமும், விருதுகளும் எப்படிப்பட்ட திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதை வைத்தே என் குற்றச்சாட்டில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு 2006 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்கான பட்டியலைப் பார்ப்போம்.


சிறந்த படத்துக்கான பிரிவில் முதல்பரிசு வெயில் திரைப்படத்துக்கும், அதே பிரிவில் இரண்டாவது பரிசு பருத்திவீரன் திரைப்படத்துக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விரு திரைப்படங்களைத் தேர்வு செய்ததற்காக விருதுக்குழுவினரை பாராட்ட நினைக்கும்போது, சிறந்த படத்துக்கான மூன்றாவது பரிசு என்று திருட்டுப் பயலே என்ற படத்தைத் தேர்வு செய்ததால் பாராட்டு வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள்ளேயே புதைந்து விடுகின்றன.


அது மட்டுமல்ல, திருட்டுப்பயலே படத்தைத் தேர்வு செய்த தேர்வுக்குழுவினரை வக்கிரப்பார்வை கொண்டவர்கள் என்றும் எண்ண வைக்கிறது. ஏனெனில், திருட்டுப்பயலே திரைப்படம் வெறும் மசாலாப்படம் மட்டுமல்ல, பாலியல் மற்றும் வக்கிரமான காட்சிகளும், வசனங்களும் மலிந்திருந்த படம். கணவனின் நண்பனுடன் கள்ளக்காதலில் ஈடுபடும் ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை வீடியோ படம் எடுத்து வைத்துக் கொண்டு, அதைக்காட்டியே அவளை பிளாக்மெயில் செய்து சொகுசாக வாழ்கிறவனைப்பற்றிய இந்தப்படத்துக்கு அரசாங்கமே விருது வழங்கி மக்களின் வரிப்பணத்தையும் வாரிக்கொடுக்கிறது என்றால், அரசின் நோக்கம்தான் என்ன? மக்களை சீரழிக்கிற திரைப்படங்களை அரசாங்கமே ஆதரிக்கிறது என்றல்லவா அர்த்தம்?


சிறந்த படத்துக்கான பிரிவில் சிறப்புப் பரிசு ‘இலக்கணம்’ என்ற திரைப்படத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. புதுமுகங்களின் நடிப்பில், புதிய இயக்குநரால் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பிற மொழிக்கலப்பில்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வசனங்களே இடம்பெற்றன. இந்த முயற்சியை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில் இலக்கணம் திரைப்படம் தகுதியான தேர்வு என்பதில் யாருக்கும் வேறு கருத்திருக்க முடியாது.


தமிழக அரசின் விருதுப்பட்டியலில் பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்புப்பரிசு என்ற பிரிவும் உண்டு. இப்பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் திரைப்படங்கள் அதற்கு மாறான, பெண்களை சிறுமைப்படுத்துகிற படங்களாகவே இருந்து வருவதுதான் சோகம். ‘காதலே என் காதலே’ என்ற திரைப்படத்துக்கு பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்புப்பரிசு வழங்கப்பட்டதன் மூலம் இந்த ஆண்டும் அதே காரியத்தை கர்மசிரத்தையாகச் செய்திருக்கிறது - தமிழக அரசு. இப்படத்தின் தரத்தைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இதன் தலைப்பை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.


தமிழகஅரசின் திரைப்பட விருதுகளில் அரசியல் தலையீடும், சிபாரிசும், செல்வாக்கும் முக்கிய பங்கு வகிப்பதாக திரையுலகில் சொல்லப்படுவதுண்டு. விருது கிடைக்காதவர்களின் புலம்பல் என்று இதை அலட்சியப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் படங்களைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உண்மை இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன.


2006 ஆம் ஆண்டில், சித்திரம் பேசுதடி, கொக்கி, ஈ, தம்பி, நாகரிகக் கோமாளி, சாசனம், எம்டன் மகன் போன்ற குறிப்பிடத்தக்கப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றை தேர்வுக்குழுவினர் கவனத்திலேயே எடுத்துக் கொள்ளவில்லை என்கிறபோது, தமிழகஅரசின் விருதுகளின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகிறது.


சித்திரம் பேசுதடி காதல் பட வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் உறைந்துகிடந்த வேறு பல அம்சங்களினால் வித்தியாசமான திரைப்படமாக மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தப்படத்துக்கு அரசின் அங்கீகாரமில்லை. அதேபோல், சகுனம் பார்க்கும் ஒருவனால், தன் வாழ்வையே தொலைத்தவனின் கதையாக எடுக்கப்பட்ட கொக்கி படத்துக்கும் விருதளித்து கௌரவித்திருக்க வேண்டும். பகுத்தறிவுபேசி ஆட்சியைப்பிடித்தவர்களே மூடநம்பிக்கையை முறியடிக்கும் கருத்தைக் கொண்டிருந்த ‘கொக்கி’யை ஆதரிக்காதபோது, அது போன்ற சீர்திருத்தக்கருத்துக்களை யார்தான் சொல்ல முன்வருவார்கள்?


வன்முறை வேண்டாம் என்ற கருத்தைச் சொன்ன தம்பி, மனித இனத்தை சத்தமில்லாமல் அழிக்கத்துடிக்கும் நாசகார சக்திகளைப்பற்றி விழிப்புணர்வை உண்டாக்கிய ஈ, தந்தை மகனுக்குமான உறவின் மேன்மையைச் சொன்ன எம்(டன்)மகன், நாட்டார்களின் வாழ்வியலைச் சொன்ன சாசனம், சமூக, அரசியல் பிரச்சனைகளைப் பற்றி மிகத் துணிச்சலாகப் பேசிய நாகரிகக்கோமாளி போன்ற திரைப்படங்களுக்கும் தமிழக அரசின் விருதுகள் இல்லை என்பதை ஏற்கவே முடியாது. வெகு அபூர்வமாக வெளிவரும் இவை போன்ற கருத்தின் அடிப்படையில் வரவேற்கப்பட வேண்டிய படைப்புகளை அரசே உதாசீனப்படுத்துவது பொறுப்பற்ற செயல் அன்றி வேறில்லை.


திரைப்படக்கலைஞர்களுக்கான விருதுப்பட்டியலில் சிறந்த நடிகர் விருது கமலஹாசனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் உலகத்தரமிக்க சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனக்கும்தான். ஆனால் வேட்டையாடு விளையாடு என்ற மசாலாப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகர் என்று பரிவட்டத்தைக் கட்ட வேண்டுமா என்பதே என் கேள்வி. இந்த விருதை பெறும்போது கமல்ஹாசனே மனசுக்குள் கூச்சப்பட்டிருப்பார்.


சிறந்த நடிகர் என்பவர் ஒருவராகவே இருக்க வேண்டும். அப்படி இருப்பதுதான் விருது பெறுநருக்குப் பெருமை சேர்க்கும். இங்கே அளிக்கப்படுவது பெருமை அல்ல, அவமானம். விருது வழங்கும் விழாவுக்கு நிறைய நட்சத்திரங்களை வர வைக்கும் தந்திரமாக விருதுகளின் எண்ணிக்கையை எக்கச்சக்கமாக அதிகரித்திருக் கின்றனர். சிறப்புப்பரிசு என்ற பெயரில் விருதுகளை கூறுபோடுவதும் அவற்றில் ஒன்றுதான்.


சிறந்த நடிகர் என்று கமல்ஹாசனை தேர்வு செய்தவர்களே, சிறப்புப் பரிசு என்று பருத்தி வீரன் படத்தில் நடித்த கார்த்திக்கும், டிஷ்யூம் படத்தில் நடித்த குள்ளமனிதர் பக்ருவுக்கும் வழங்கி யிருக்கிறார்கள்.


பருத்தி வீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது பொருத்தமான தேர்வு. ஆனால், அதே பிரிவில் சிறப்புப்பரிசு என்று டிஷ்யூம் படத்தில் நடித்த சந்தியாவுக்கும் விருது வழங்கியதை எப்படி ஏற்க முடியும்? ஏனெனில் குறிப்பிட்ட அந்தப்படத்தில் சந்தியா ஏற்றது தமிழ்சினிமாவுக்கே உரிய சராசரியான கதாநாயகி வேடம்தான்.


எம்(டன்)மகன் படத்தில் நடித்ததற்காக நாசருக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருதும், அதே படத்துக்காக சரண்யாவுக்கு சிறந்த குணசித்திர நடிகை விருதும், ஈ படத்துக்காக பசுபதிக்கு சிறந்த வில்லன் நடிகர் விருதும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் கேலிக்கூத்தான விஷயம்.... ஈ படத்தில் பசுபதி ஏற்றது வில்லன் வேடமே அல்ல, தீய சக்தியை அழிக்கப் புறப்பட்ட ஒரு போராளியாகவே அவர் நடித்திருந்தார். அவருக்கு வில்லன் நடிகர் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டிருக்கிறது என்றால், தேர்வுக் குழுவினர் ஈ படத்தையே பார்க்கவில்லை என்ற முடிவுக்« வர வேண்டியிருக்கிறது. இவர்களை கெட்ட வார்த்தையால் திட்டினால் என்ன?


இதற்காக மட்டுமல்ல, திருப்பதி படத்துக்காக இயக்குநர் பேரரசுவுக்கு சிறந்த கதாசிரியர் விருது வழங்கியதற்காகவும்தான்! பேரரசுவுக்கு விருது வழங்கிய பாவத்துக்குப் பிராயச்சித்தமாகவோ என்னவோ தம்பி படத்துக்காக சிறந்த உரையாடலாசிரியர் விருதை இயக்குநர் சீமானுக்கு வழங்கியிருக்கிறார்கள் போலும்.


கதைக்கும், வசனத்துக்கும் விருதுகளை வழங்கும் அரசுக்கு திரைப்படத்தின் அச்சாணியே திரைக்கதைதான் என்பது இன்னமும் தெரியாமலே இருப்பதுதான் வேதனை, வேடிக்கை. பக்கத்து மாநிலமான கேரளத்தில் பல வருடங்களாகவே திரைக்கதைக்கு விருது வழங்கி வருகிறார்கள். இங்கே திரைக்கதையின் முக்கியத்துவமே தெரியாமல் திரைப்பட விருதுகளை வழங்கிக் கொண்டிருக் கிறார்கள்.


கேரளாவில் மேலும் சில பிரிவுகளிலும் அரசு விருதுகளை வழங்குகிறார்கள். அவற்றில் முக்கியமானது...குழந்தைகளுக்காக எடுக்கப்படும் திரைப்படத்துக்கு வழங்கப்படும் விருது! இப்படியொரு பிரிவில் விருது வழங்குவதன் மூலம் குழந்தை களுக்கான திரைப்படங்களை ஊக்குவிக்கிறது கேரள அரசு. தமிழக அரசோ, மசாலாப்படங்களுக்கும், அடிதடி படங்களுக்கும், பாலியல் படங்களுக்கும், வன்முறைப்படங்களுக்கும் விருதுகளை வழங்கி அப்படிப்பட்ட படங்களை ஆராதித்துக் கொண்டிருக்கிறது.


முழுக்க முழுக்க கேரளாவிலேயே எடுக்கப்பட்ட படத்துக்காகவும் விருது வழங்கப்படுகிறது கேரளத்தில். இது கேரளத்தின் வாழ்வியலை, அம்மக்களின் வாழ்க்கையை திரைப்படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை படைப்பாளிகளின் மனதில் பதியம்போடுகிற பணியாகவே தோன்றுகிறது.


நம் அரசும் இதுபோல் ஆக்கபூர்வமான விருதுகளை வழங்கக் கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் தமிழிலும் நல்ல திரைப்படங்கள் உருவாகக்கூடிய ஆரோக்கியமான சூழல் நிலவும். அதைவிட்டுவிட்டு, இப்போது போலவே சமூகத்துக்கு பாதகமான படங்களுக்கு விருதுகளையும், மானியத்தையும் வழங்கிக் கொண்டிருந்தால் மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே இருக்கும். துரோகம் தொடரப் போகிறதா? தமிழக அரசு யோசிக்கட்டும்!

வியாபார விருதுகள்


திரைப்பட நட்சத்திரங்களும், திரையுலகப் பிரபலங்களும் பணத்துக்கு மட்டுமல்ல, புகழ்ச்சிக்கும் அடிமைகள்தான். வெளிச்சத்தைத் தேடிப் பறக்கும் விட்டில்களைப் போல் இவர்கள் எப்போதும் புகழ்வெளிச்சத்தைத்தேடி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் - அதுவே எதிர்காலத்தில் ஆபத்தாகிவிடும் என்ற அபாயத்தை உணராமல். இவர்களின் பலவீனத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சிலர், திரைநட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கும் விழாக்களை நடத்துவதன் மூலம் பணத்தில் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ‘விருதுவிழா வியாபாரிகள்’ தாங்கள் வழங்கும் விருதுகளை தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று எண்ணுவதில்லை.


விருது விழா நிகழும் குறிப்பிட்ட நாளில் எந்த முன்னணி நடிகர், நடிகை, இயக்குநர், தொழில்நுட்பக்கலைஞர் ஓய்வாக, அதாவது விருது வாங்குவதற்காக விழாவுக்கு வர சம்மதிக்கிறாரோ அவர்களுக்கே விருதுகளை அறிவிப்பார்கள். இப்படிப்பட்ட விருதுகளுக்கு திரையுலகில் மரியாதை இல்லை என்றாலும், விருது பெறுபவர்களுக்கு மட்டும் அதுதான் ஆஸ்கார் விருது. கோடம்பாக்கத்தில் இப்படிப்பட்ட விருதுகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. இவ்வகையான மலிவான விருதுவிழாக்கள் மாதத்துக்கு ஒன்றிரண்டாவது நடைபெறாமல் இருக்காது. சில புதுமுகங்களும், பழைய முகங்களான புகழ்விரும்பிகளும் இந்த விருதுகளைப் பணம் கொடுத்துப் பெறவும் தயங்குவதில்லை. தனியார் அமைப்புகள் மட்டுமின்றி திரையுலகை அண்டிப்பிழைக்கும் சில சினிமாப்பத்திரிகைகளும் இப்படிப்பட்ட வியாபார விருதுகளை ஆண்டாண்டு காலமாகவே விற்பனை செய்து கொண்டிருக்கின்றன.


தங்களின் விருது வழங்கும் விழாவுக்கு பிரபல நட்சத்திரங்களை வர வைப்பது ஒன்றே இவர்களின் ஒரே நோக்கம். அவர் திறமையான நடிகரா, விருதுக்கு தகுதியாக நடித்திருக்கிறாரா என்பது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. பார்வையாளர்களைத் திரட்டுவதற்குத் தோதான கவர்ச்சியுடையவரா, முன்னணி நட்சத்திரமா என்பதே இவர்களின் அளவுகோல். திரைப்பிரபலங்களின் முகத்தைக்காட்டி விழா நடைபெறும் அரங்கத்தை நிறைப்பதன் மூலம் கணிசமாக பணம் சம்பாதிக்கும் இவர்கள், அந்த விழாவை ஒளிபரப்பும் உரிமையை தனியார் தொலைக்காட்சிகளுக்கு விற்பதன் மூலம் மேலும் பணம் சம்பாதிக்கிறார்கள். ஸ்பான்ஸர் என்று சொல்லப்படும் வியாபார நிறுவனங்கள் தரும் தொகை கூடுதல் லாபம்!


இப்படியாக பல வழிகளில் பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் வியாபார விருதுகளை எல்லாம் தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் மிஞ்சிவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது கண்மூடித்தனமான அல்லது அபாண்டமான குற்றச்சாட்டு என்று நினைப்பவர்கள் 2005 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பட்டியலைப் பார்வையிடலாம்.


முதலில் திரைப்படங்களுக்கான விருதுகளைப் பார்ப்போம். சிறந்த படம் என்ற பிரிவில் முதல்பரிசு சந்திரமுகி, கஜினி படங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இதே பிரிவில் இரண்டாவது பரிசு அந்நியன் படத்துக்கும், மூன்றாவது பரிசு தவமாய் தவமிருந்து படத்துக்கும் வழங்கப்பட்டதோடு, சிறந்த படம் சிறப்புப் பரிசு என்று பிரியசகி என்ற திரைப்படத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவை தவிர பெண்களை உயர்வாகச் சித்தரிக்கும் படத்துக்கான சிறப்புப் பரிசாக கஸ்தூரிமான் படத்துக்கும் விருது கிடைத்திருக்கிறது.


விருதுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் படங்களுடன், 2005 ஆம் ஆண்டு வெளியான பிற திரைப்படங்களையும் பார்த்தவர்களில் மனசாட்சி உள்ள எவரும் இந்தப் பட்டியலை ஏற்கமாட்டர்கள். ஏனெனில், சிறந்த படம் என்று முதல் பரிசைப் பெற்றிருக்கும் இரண்டு படங்களுமே மட்டமான மசாலாப்படங்கள். மணிசித்திரதாழ் என்ற அற்புதமான ஒரு மலையாளப்படத்தின் மலிவான தமிழ்ப்பதிப்பே சந்திரமுகி படம். ஒரு மசாலாப் படத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்த சந்திரமுகி படத்துக்கும், மெமன்ட்டோ என்ற ஆங்கிலப்படத்தின் ஈயடிச்சான் காப்பியான கஜினி படத்துக்கும் சிறந்த படம் என்று விருது வழங்கியதன் மூலம் தமிழக அரசின் விருதுகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. இரண்டாவது பரிசு பெற்றிருக்கும் அந்நியன் படமும் ஆடல் பாடல் என ஜனரஞ்சகமுலாம் பூசப்பட்ட அப்பட்டமான வியாபார சினிமாதான்.


தவமாய் தவமிருந்து படத்துக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டதிலும், தமிழக அரசின் பார்வைக்கோளாறு பளிச்சென தெரிகிறது. காரணம்.. தந்தைக்கும், மகனுக்குமான உறவை நெகிழ்ச்சியின் உச்சத்துடன் உணர்த்திய இந்தப்படத்துக்கே சிறந்த படத்துக்கான முதல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிள்ளைகளை வளர்ப்பதில் ஒரு தந்தையின் பங்கும், உழைப்பும், தியாகமும் எத்தனை மகத்தானது என்பதை ஒரு தந்தையால் கூட இத்தனை அழகாய் தன் மகனுக்கு விளக்கிவிட முடியாது. பெற்றோர்களைப் புறக்கணிப்பதை எந்த மன உறுத்தலும் இல்லாமல் செய்யப் பழக்கப்பட்டுவிட்ட இன்றை தலைமுறைக்கு தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் சேரன் சொன்னது கதை அல்ல, ஒரு தந்தையின் வாழ்க்கை! சந்திரமுகி, கஜினி படங்களுக்கு விருது கொடுத்ததினால் மட்டுமல்ல, தவமாய் தவமிருந்து படத்துக்கு முதல் மரியாதை செய்யத் தவறியதற்காகவும் தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தன் கடந்தகாலப் பெருமைகள் அத்தனையையும் இழந்துதான் நிற்கிறது.


விருதுக்கான திரைப்படங்களின் தேர்வில் மிக மோசமான தரநிர்ணயக் கொள்கையைக் கடைப்பிடித்ததன் மூலம் தேர்வுக்குழுவினர் செய்த பாவத்துக்கு அவர்களை அறியாமலே செய்த பிராயச்சித்தம்தான் - பிரியசகி படத்துக்கு விருது வழங்கியது. கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், ஒரு மனைவியின் கடமை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் செய்தியாகக் கொண்டிருந்த பிரியசகி திரைப்படத்துக்குக் கிடைத்த கௌரவம் தகுதியானதுதான் என்பதில் எதிர்கருத்தில்லை. காலையில் திருமணம் மாலையில் விவாகரத்து என்று கணவன் மனைவி உறவு சிக்கலுக்குள்ளாகி இருக்கும் இன்றைய நிலையில், அது குறித்த உளவியல் தீர்வாக உருவாக்கப்பட்ட பிரியசகி போன்ற படங்களை ஆதரித்தே தீர வேண்டும்.


எனினும், சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளுக்கு கனா கண்டேன், ராம், கண்ணாடிப்பூக்கள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களை நிச்சயமாக பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இத்திரைப்படங்களுக்கு கண்டிப்பாக விருதுகளையும் வழங்கியிருக்க வேண்டும்.


ஸ்ரீகாந்த் நடிப்பில், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கிய கனாக் கண்டேன் படத்தை மேலோட்டமாகப் பார்த்தால் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படம் என்றே தோன்றும். ஆனால் அப்படம் சொன்ன செய்தி, பொழுதுபோக்குப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தண்ணீர் தட்டுப்பாடு என்பது மக்களின் தலையாயப் பிரச்சனையாக இருக்கும் இன்றைய சூழலில் கடல்நீரை குடிநீராக மாற்றுவதின் அவசியத்தை கருவாகக் கொண்டிருந்தது கனாக் கண்டேன் திரைப்படம்.


அதே போல் அமீரின் ராம் படமும் சிறந்த படத்துக்கான விருதைப் பெற முழுத்தகுதி உள்ள படம்தான். அம்மாவைக் கொலை செய்தவனை மகன் பழிவாங்குகிறான் என்ற வழக்கமான கதைஅம்சத்தைக் கொண்டிருந்தாலும், திரைப்பட மொழியை, இலக்கணத்தை மிகச்சரியாய் பின்பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம் இது என்பதில் சந்தேகமில்லை. ராம் படத்துக்கு விருது வழங்கி அங்கீகரித்திருந்தால், அமீரைப்போல் வித்தியாசமாக வெளிப் படத்துடித்துக் கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கும்.


கனாக் கண்டேன், ராம் படங்களுக்கு விருது வழங்கியிருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவதில் கூட சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் பார்த்திபன் நடிக்க, ஷாஜகான் இயக்கிய கண்ணாடிப்பூக்கள், தங்கர்பச்சான் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படங்களுக்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கியிருக்க வேண்டும் என்று நான் சொல்வதில் யாரும் முரண்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். காரணம்... கண்ணாடிப்பூக்கள் படத்தின் கதை! கேரளத்தில் வெற்றியும் பெற்று, விருதுகளையும் பெற்ற ஒரு மலையாளப்படத்தின் ரீமேக்கான கண்ணாடிப்பூக்கள் படத்தில் சொல்லப்பட்டது இளம் குற்றவாளியின் கதை. இப்படத்தின் பிரதான கதாபாத்திரமான சிறுவன் மீது பாசத்தைப் பொழிந்த அவனது பெற்றோர், அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்த பிறகு அக்குழந்தை மீது முழுக்கவனத்தையும் திருப்புகிறார்கள். அதனால் மனதளவில் பாதிக்கப்படும் அச்சிறுவன், தன்னை பெற்றோர் புறக்கணிக்க அந்தக்குழந்தையேக் காரணம் என்று முடிவுக்கு வந்து, ஒரு கட்டத்தில் அக்குழந்தையை கொலையும் செய்துவிடுகிறான். சுமார் பத்து வயது நிரம்பிய அவன் சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். சீர்திருத்தப்பள்ளி வாழ்க்கை அவனை நிரந்தரமான குற்றவாளியாக மாற்றிவிடக்கூடும் என்ற நிலையில், அவனிடம் அவனது பெற்றோர் காட்டும் அன்பும், கரிசணமும்தான் கண்ணாடிப்பூக்கள் படத்தின் கதை. இப்படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் அன்றிரவு நிம்மதியாக உறங்கியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு மனசை நொறுக்கிய திரைப்படம் இது.


அதேபோல்தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி திரைப்படமும்! இதுவும் கூட ஒரு மலையாளப்படத்தின் மறு உருவாக்கம்தான். உழைக்க மனசில்லாமல் வெட்டியாய் பொழுதைக்கழிக்கும் பொறுப்பற்ற குடும்பத்தலைவனின் கதை இது. உழைப்புச் சோம்பேறியான கதையின் நாயகன், தன் முன்னால் இருக்கும் குடும்பப்பொறுப்புகளிலிருந்து தப்பிப்பதற்காக குடும்பத்தினரை விட்டு ஓடுவதும், தலைவன் இல்லாத குடும்பம் படும் கஷ்டங்களும் காட்சியாக விரிந்தபோது, அவனைப் போன்ற இயல்பு கொண்ட பார்வையாளன் ஒருவனாவது நிச்சயம் திருந்தியிருப்பான். அற்புதமான கருத்தை தாங்கி வந்த இத்திரைப்படத்தை இயக்கிய தங்கர்பச்சானே அப்பாசாமி வேடத்திலும் பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப்படத்துக்கும் தமிழக அரசின் விருதுகளில் இடமில்லை என்கிறபோது, நீதிமன்றத்தில் முறையிட்டாவது தமிழகஅரசு விருதுகள் வழங்குவதையே நிறுத்திவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.


கண்ணாடிப்பூக்கள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி திரைப்படங்களுக்கு விருது வழங்கப்படாததற்கு அவை பிற மொழிப்படத்தின் ரீமேக் என்று ஒருவேளை தேர்வுக்குழுவினர் காரணம் சொல்லக்கூடும். இதற்கு முன் எத்தனையோ ரீமேக் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதும், சந்திரமுகி படமே மணிசித்திரதாழ் என்ற மலையாளப்படத்தின் ரீமேக்தான் என்பதும் தேர்வுக்குழுவினருக்கு தெரியாமலா இருக்கும்? நிச்சயம் தெரிந்திருக்கும்! அப்படியும் இப்படிப்பட்ட நல்ல படங்களை கண்டுகொள்ளாமல் விட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ரஜினியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற காரணமே வெளிப்படையாகத் தெரிகிறது.


தமிழக அரசு விருதுக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்ததில் பாரபட்சமான அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டதைப் போலவே சிறந்த நடிகர், நடிகை தேர்விலும் மிக மோசமான பார்வையுடன் தேர்வுக்குழு செயல்பட்டிருக்கிறது என்பதை சொல்லத் தேவை யில்லை. விருதுக்குரிய கலைஞர்களின் பட்டியலைப் பார்த்தாலே எளிதில் விளங்கும்.


சந்திரமுகி படத்துக்காக சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்துக்கும், சிறந்த நடிகை விருது ஜோதிகாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியொரு படுபாதகத்தை செய்தது போதாதென்று சிறந்த நடிகருக்கான பிரிவில் சிறப்பு பரிசு என்று திருப்பாச்சி படத்துக்காக விஜய்க்கும், கஜினி படத்துக்காக சூர்யாவுக்கும் வழங்கப்பட்டிருக் கிறது. ரஜினிக்கு விருது கொடுக்கப்பட்ட அதிர்ச்சியையே ஜீரணித்துக் கொள்ள முடியாதபோது, விஜய்க்கும் விருதை வழங்கியது பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஏனெனில், திருப்பாச்சி படம் வன்முறையின் உச்சம். படம் முழுக்க விஜய்யின் கதாபாத்திரம் மிக மோசமான வன்முறையாளனாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது. இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால், விஜய்யின் முந்தைய படங்களில் இருந்த வன்முறையை மிஞ்சுகிற அளவுக்கு திருப்பாச்சி படத்தில் ரத்தம், வெட்டுக்குத்து, அடிதடி என வன்முறை மேலாங்கி இருந்தது. அது மட்டுமல்ல, இந்தப் படத்துக்குப் பிறகே விஜய்யின் படங்களிலும், மற்ற தமிழ்த் திரைப்படங்களிலும் வன்முறைக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற ஆரம்பித்தன. இப்படி தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிய திருப்பாச்சி என்கிற முழு நீள வன்முறைப்படத்தில் நடித்த விஜய்க்கு சிறந்த நடிகர் என்ற கௌரவத்தை தமிழக அரசு கொடுத்ததன் மூலம் அரசாங்கமே வன்முறையை ஆதரிக்கிறது என்றுதான் குற்றம் சாட்ட வேண்டியிருக்கிறது. கஜினி படத்திலும் வன்முறைக்குக் குறைவில்லைதான். எனினும், சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததை மறுப்பதற்கில்லை. தவிர சூர்யா சிறந்த நடிகர் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக கஜினி படத்திற்காக சூர்யாவுக்கு விருது வழங்க வேண்டுமா என்பதே என் கேள்வி!


தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தரநிர்ணயமாக இருந்தால், தவமாய் தவமிருந்து படத்தில் நடித்ததற்காக ராஜ்கிரணுக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நடித்த தங்கர்பச்சானுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சண்டக்கோழி படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகர் என்று ராஜ்கிரணுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
நடிகைக்கான தேர்வில் சந்திரமுகி படத்தில் நடித்த ஜோதிகா சரியான தேர்வாக இருந்ததைப்போலவே, சிறப்பு பரிசு என்ற பிரிவில் கஸ்தூரிமான் படத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் விருது பெற்றதும் சிறந்த தேர்வுதான். கோடம்பாக்கம் படத்தில் கதாநாயகனின் அம்மா வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கலைராணிக்கு சிறந்த குணசித்திர நடிகை விருதும், வில்லன் நடிகருக்கான விருது பிரகாஷ்ராஜுக்கு வழங்கப் பட்டதையும் குறை சொல்லமுடியாதுதான்.


தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பிரிவில், சதுரங்கம் படத்திற்காக அப்படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன் சிறந்த கதாசிரியராகவும், அமிர்தம் படத்திற்காக அப்படத்தின் இயக்குநர் வேதம்புதிது கண்ணன் சிறந்த உரையாடல் ஆசிரியராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இதிலும் தேர்வுக்குழு தவறான ஒரு முன்னுதாரணத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. சதுரங்கம் படம் தணிக்கை செய்யப்பட்ட நிலையிலும் 2005 ஆம் ஆண்டு வெளிவரவில்லை. அது மட்டுமல்ல, இரண்டு வருடங்களுக்குப் பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்ட போதும் சரி, அதற்கு சில மாதங்கள் கழித்து விருதுகள் வழங்கப்பட்ட தினம் வரையிலும் கூட சதுரங்கம் படம் திரைக்கு வரவே இல்லை. எனில், மக்களின் பார்வைக்கே வராத ஒரு படத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தோடு, அப்படத்துக்கு விருதையும் கொடுத்திருப்பதை என்னவென்று சொல்வது? தேர்வுக்குழுவினரின் அறிவை நினைத்து தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் அமிர்தம் என்ற படத்துக்கு சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. மண்ணின் மைந்தன், கண்ணம்மா படங் களுக்காக கலைஞர் கருணாநிதிக்கு இந்த விருதை கொடுக்கவில்லை என்பதை எண்ணி வேண்டுமானால் ஆறுதல் அடையலாமே தவிர அமிர்தம் படத்துக்காக விருது கொடுத்ததை நிச்சயமாக ஏற்க முடியாது.
அந்நியன், கஜினி படங்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜ் சிறந்த இசை அமைப்பாளராகவும், நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியராகவும், ஸ்ரீராம் பார்த்தசாரதி சிறந்த பின்னணிப் பாடகராகவும், சிறந்த பின்னணி பாடகியாக பாம்பே ஜெயஸ்ரீயும், சிறந்த ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், சிறந்த ஒலிப்பதிவாளராக லட்சுமி நாராயணனும், சிறந்த படத் தொகுப்பாளராக ஆண்டனியும், சிறந்த கலை இயக்குநராக தோட்டாதரணியும் விருது பெற்றிருக்கிறார்கள்.


இந்தப்பட்டியலில் சண்டக்கோழி படத்துக்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளராக விருது பெற்ற கனல் கண்ணனும், சந்திரமுகி படத்துக்காக சிறந்த நடன ஆசிரியர் விருது பெற்ற கலாவும் கூட உண்டு. இவ்விரு தேர்வுகள் பற்றி சில கருத்துக்களை பதிவு செய்வது அவசியமான ஒன்றாகவே நினைக்கிறேன். திரைப்பட உருவாக்கத்தில் சண்டைப்பயிற்சியாளருக்கான பணி என்பது, அதில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளை அமைப்பதுதான். தமிழ்த்திரைப்படங்களின் தரத்தை அதளபாதளத்தில் தள்ளியதே சண்டைக்காட்சிகள்தான். இவை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை நம் திரைப்படங்களின் தரம் உலகப்படங்களின் தரத்தின் இடுப்பு உயரத்தையாவது எட்டியிருக்கும். உலகத்தரத்தை எட்டுகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் இன்றைய தமிழ்த்திரைப்படங்களில் வழிந்தோடும் ரத்த ஆறாவது குறைந்திருக்கும். சுருக்கமாக சொல்வது எனில், தமிழ்ப்படங்களில் வன்முறைக்காட்சிகள் மலிந்து போனதற்கு இந்த சண்டைக்காட்சிகளே காரணம். அப்படிப்பட்ட சண்டைக் காட்சிகளை அமைக்கும் சண்டைப்பயிற்சியாளருக்கு அரசாங்கம் விருது வழங்குவதை எப்படி எடுத்துக் கொள்வது? மிகச்சிறந்த வன்முறையை அமைத்தவர் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதுதான் சரியாக இருக்கும். அப்படி என்றால், அரசாங்கமே வன்முறையை ஊக்குவிக்கிறதா?


தமிழ்ப்படங்களை சீரழித்து, அவற்றை ஆபாசமயமாக்கியதில் நடனக்காட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படம் என்றால் குறைந்தபட்சம் ஐந்து பாடல்காட்சிகளாவது, அதாவது நடனக்காட்சிகளாவது இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. தமிழில் ஆரோக்கியமான திரைப்படங்கள் உருவாகாமல் போனதற்கு நாசமாய்ப்போன நடனக்காட்சிகளே காரணமாக இருக்கும்போது, சிறந்த நடனத்துக்காக ஒரு அரசே விருது வழங்குவது பொறுப்பற்றத் தனமல்லவா? அப்படியொரு பொறுப்பற்ற பணியையும் நம் அரசு செய்து கொண்டிருக்கிறது - நடன அமைப்பாளருக்கு விருது வழங்குவதன் மூலம்.


அரசு விருது என்று நாம் குறிப்பிட்டாலும், உண்மையில் அது மக்களின் வரிப்பணத்திலிருந்தே வாரி இறைக்கப்படுகிறது. மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக, மக்களால் தேர்ந் தெடுக்கப்படுகிறவர்கள், ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்த பிறகு, அம்மக்களுக்கே விரோதமாய் எடுக்கப்பட்ட, அவர்களின் ரசனையையும் முடமாக்கும் திரைப்படங்களுக்கும், அவற்றில் பங்களித்தவர்களுக்கும் விருதளித்து கௌரவம் செய்வது என்ன நியாயம்? ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, அவர்களை அங்கீகரித்த மக்களும் சிந்திக்க வேண்டும்!

மறுபடியும் மசாலாவே முன்னிலை


பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஏனோ தமிழ்த்திரைப்படங்களுக்கு மட்டும் பொருந்துவதே இல்லை. சர்வதேச அளவில் திரைப்படக்கலை ஆச்சர்யத்தக்க அளவில் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கண்டுவருகிறது. தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, கதை அம்சத்திலும், அதன் உள்ளடக்கத்திலும் நாளுக்கு நாள் உலகப்படங்கள் உயரத்தை எட்டிக் கொண்டிருக்க, தமிழ்ப்படங்களோ கண்டதும் காதல், ரௌடியுடன் மோதல் என்று குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றன.


புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம் கூடவே புதிய நம்பிக்கைகளும் பிறப்பது இயல்பான ஒன்று. தமிழ்த்திரைப்படங்கள் குறித்தும் இப்படியான நம்பிக்கைகள் பிறப்பதுண்டு. இந்த வருடமாவது, தமிழ்த்திரைப்படங்கள் மசாலா மாயையிலிருந்து விலகி, விடுபட்டு யதார்த்தமான படங்களை உருவாக்கக்கூடிய ஆரோக்கியமான திசைக்குத் திரும்புமா என்பதே அந்த நம்பிக்கை! இப்படிப்பட்ட நம்பிக்கைக்கு ஒவ்வொரு ஆண்டும் பலனில்லாமலே போய்க் கொண்டிருப்பது மீள முடியாத சோகம்தான்.


சரி..2007 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள் எப்படி? கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழ்த்திரைப்படங்களின் போக்கில் ஏதேனும் மாற்றங்கள், வளர்ச்சி தெரிகின்றனவா? வியாபாரம் என்ற பெயரில் சமூகத்துக்கு உபயோகமற்ற படங்கள் வெளியாகும் நிலை மாறியிருக்கிறதா? நல்ல சிந்தனையைத் தூண்டுகிற தரமான படங்கள் வெளியாகி இருக்கின்றனவா? தமிழ்த்திரைப்படங்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்கிற வகையில் உலகத்தரத்தை எட்டுகிற படங்கள் ஏதேனும் உருவாக்கப்பட்டிருக்கிறதா?


இதுபோன்ற கேள்விகளுடன் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த்திரைப்படங்களை பார்வையிட்டால், கிடைக்கும் பதில் என்ன? இந்த ஆண்டில் தொண்ணூற்றி எட்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் முன்னிலை வகிப்பது வழக்கம்போல் மசாலாப்படங்கள்தான். சுமார் நாற்பது படங்கள் இந்த ரகத்தை சேர்ந்தவையாகவே இருப்பதைக் காணமுடிகிறது. இருபத்தி ஆறு என்ற எண்ணிக்கையில் அதற்கு அடுத்த இடத்தை காதல் படங்கள் கைப்பற்றி இருக்கின்றன!


தமிழ்த்திரைப்படங்களைப் பொருத்தவரை ஏறக்குறைய எல்லாப்படங்களுமே மசாலாப்படங்கள்தான். ஏனெனில் ஆடல், பாடல், சண்டை, நகைச்சுவை, செண்ட்டிமெண்ட், கிளர்ச்சி என பல்வேறு அம்சங்களின் தொகுப்பாகவே தமிழ்த்திரைப்படங்கள் இருந்து வருகின்றன. அதன் பொருட்டு ஒட்டுமொத்த படங்களையும் மசாலாப்படங்கள் என்று எளிதில் சொல்லிவிட முடியும் என்றாலும், அதன் கதைஅம்சத்தில், அடிப்படையாக எடுத்துக் கொண்ட விஷயத்தை வைத்து நம் வசதிக்காக வகைப்படுத்த வேண்டியதாக இருக்கிறது.


இந்த அளவுகோலின்படி 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களைப் பார்க்கும்போது, ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய சிவாஜி, அஜீத் நடித்த ஆழ்வார், கிரீடம், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன், ஹரி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த வேல், தனுஷ் நடித்த பொல்லாதவன், சரத்குமார் நடித்த நம் நாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், எம்.ரத்னகுமார் இயக்க எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவருடன் இணைந்து ராஜ்கிரண் நடித்த முனி, விஜயகாந்த் நடித்த சபரி, ஆர்யா நடிப்பில் புஷ்கர்-காயத்ரி என்ற தம்பதி இயக்கிய ஓரம்போ, விஷால் நடித்த மலைக்கோட்டை, தாமிரபரணி, சீனு ராமசாமி என்ற புதிய இயக்குநரின் இயக்கத்தில் பரத் இரட்டை வேடத்தில் நடித்த கூடல் நகர், மாதவன் நடித்த ஆர்யா, ஜீவன் நடித்த நான் அவன் இல்லை, ஜீவா நடிக்க சுப்ரமணியம் சிவா இயக்கிய பொறி, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த வியாபாரி, வஸந்த் இயக்கிய சத்தம் போடாதே, பிரபுசாலமனின் இயக்கத்தில் சிபிராஜ் நடித்த லீ, அர்ஜுன் நடித்த மணிகண்டா, மருதமலை, ரமேஷ் நடித்த மதுரைவீரன், சத்யராஜ் நடித்த அடாவடி, ரஞ்சித் நடித்த பசுபதி மே/பா ராசக்காபாளையம், விஜய.டி.ராஜேந்தர் இயக்கி நடித்த வீராச்சாமி போன்ற படங்கள் மட்டுமின்றி, வேகம், தொ(ல்)லைபேசி, திருத்தம், அகரம், முருகா, படங்களும் கூட மசாலாப்படங்கள் என்று வகைப்படுத்தக்கூடிய படங்களே!


இவை தவிர - விஷ்ணுவர்தன் இயக்கி அஜித் நடித்த பில்லா, முன்னாள் கதாநாயக நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி, சுரேஷ்கிருஷ்ணா இயக்கி தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகுசுந்தரம், சுந்தர் சி. நடித்த வீராப்பு, சரவணன் நடித்த வீரமும் ஈரமும் போன்ற படங்களும் மசாலாப்படங்கள்தான். முந்தைய பட்டியலிலிருந்து இந்தப் படங்களை தனியாய் பட்டியலிடுவதற்குக் காரணமிருக்கிறது. இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் படங்களுமே ரௌடியைக் கதைநாயகனாக சித்தரித்த படங்கள்! இப்படங்களின் கதாநாயகப் பாத்திரம் ரௌடியாக மாறியதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் அக்கதைகளுக்கு ஏற்புடையதாக இருந்தாலும் திரைக்கலைக்கும் சமூக அமைதிக்கும் விரோதமான விஷயம் என்றே சொல்ல வேண்டும்.


திரைப்படம் என்பது பார்வையாளனுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற மசாலாப்படங்களை நாம் கடுமையாய் எதிர்த்தாலும், பாமர ரசிகர்களின் மத்தியில் இது குறித்த பார்வை ஏதுமில்லை என்பதையும், அவர்களைப் பொருத்தவரை கொடுத்த காசுக்கு போரடிக்காமல் பொழுதுபோனால் போதும் என்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும் கவலையுடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டில் வெளியான மசாலாப்படங்களுக்குக் கிடைத்த வெற்றி இப்படித்தான் நம்மை எண்ண வைக்கிறது.


குறிப்பாக, ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்துக்கு உலகம் முழுக்கக் கிடைத்த வெற்றி அசாதாரணமான விஷயம். சுமார் நாற்பது கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தப்படம், எழுபது கோடிகளுக்கு வியாபாரம் செய்யப்பட்டது. அதன் வசூலோ சுமார் நூறு கோடி. கருப்புப்பணத்துக்கு எதிரான கருத்தை கருவாகக் கொண்ட இந்தப்படத்தின் வியாபாரத்திலும் கருப்பு பணம் விளையாடியது என்பதுதான் சுவாரஸ்யமான முரண்பாடு!


பல வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த பில்லா படத்தை மறுஉருவாக்கம் செய்து எடுக்கப்பட்ட அஜீத்தின் பில்லா படமும் சுமார் இருபத்தைந்து கோடிகளுக்கு மேல் பணத்தை அள்ளியது. ரஜினியின் பில்லாவில் இருந்த விறுவிறுப்பு அஜீத்தின் பில்லா படத்தில் இல்லை என்ற விமர்சனம் எழுந்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை. இப்படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்தப் படத்துக்கு பல கோடிகளை சம்பளமாகக் கேட்குமளவுக்கு பில்லா படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்றது.


அஜீத்தின் போட்டியாளரான விஜய் நடித்து கடந்த 2006-ஆம் ஆண்டில் வெளியான ஆதி படத்தின் படு தோல்வியினால் துவண்டு போயிருந்தார். சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் புதிய படத்தில் நடிக்காமல் குழப்பத்தில் சிக்கித்தவிக்கும் அளவுக்கு ஆதியின் தோல்வி விஜய்யை இடிந்து போக வைத்திருந்தது. போக்கிரி என்ற தெலுங்குப்படத்தின் ரீமேக்கான போக்கிரி படத்தின் மிகப்பெரிய வெற்றி விஜய்யை மறபடி நிமிர வைத்தது. விஜய்யைப் போலவே தோல்வியினால் துவண்டிருந்த தனுஷுக்கோ பொல்லாதவன் படத்தின் வெற்றி, மகிழ்ச்சியை மட்டுமல்ல மமதையையே கொடுத்தது. ஹரி இயக்கத்தில் வெளியான வேல் படம் சூர்யாவுக்கும், தாமிரபரணி படம் விஷாலுக்கும் வெற்றியை வசப்படுத்தின.


பில்லா படத்தைப் போலவே - கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி நடித்த நான் அவன் இல்லை படத்தின் ரீமேக்காக, ஜீவன் நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை படமும், அதை வாங்கியவர்களை மோசம் பண்ணாமல் வர்த்தக வெற்றியடைந்தது. விளையாட்டுத்துறையில் நிலவும் ஊழலை வெளிச்சம்போட்டுக் காட்டிய சிபிராஜ் நடித்த லீ, அர்ஜுன் நடித்த மருதமலை, சுந்தர் சி. நடித்த வீராப்பு போன்ற படங்களும் வர்த்தரீதியில் வாகை சூடிய படங்களாகவே இருக்கின்றன.


2007 ஆம் ஆண்டில் வெளியான பல மாசாலாப்படங்கள் வெற்றி பெற்றதைப் போலவே, தயாரிப்பில் இருக்கும்போது எதிர்பார்க்கப்பட்ட பல மசாலாப்படங்கள் தோல்வியையும் தழுவி இருக்கின்றன. அவற்றில்- அஜீத் நடித்த ஆழ்வார், கிரீடம், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன், விஷால் நடித்த மலைக்கோட்டை, தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகுசுந்தரம், ஜீவா நடித்த பொறி, பரத் இரட்டை வேடத்தில் நடித்த கூடல் நகர், மாதவன் நடித்த ஆர்யா, சரத்குமார் நடித்த நம் நாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி, விஜயகாந்த் நடித்த சபரி, ஆர்யா நடித்த ஓரம்போ குறிப்பிடத்தக்கப் படங்கள்!


இவை தோல்வியடைந்ததற்கு நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. அஜீத் நடித்த ஆழ்வார் படத்தின் தோல்விக்கு அதன் கதையும், திரைக்கதையும் படு பலவீனமாக இருந்தது காரணம் என்றால், கிரீடம் படத்தின் தோல்விக்கு இவற்றை காரணமாக சொல்ல முடியாது. ஏனெனில் பல வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான கிரீடம் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் இது. திரைக்கதையிலும் கூட பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை. அப்படியும் தோல்வியடைந்ததுதான் புதிராக இருக்கிறது.


விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தின் கதை கூட மம்முட்டி நடித்த அய்யர் தி கிரேட் மலையாளப்படத்தை நினைவூட்டுவதாகவே இருந்தது. எதிர்காலத்தில் நடப்பதை முன் கூட்டியே சொல்லும் எக்ஸ்ட்ரா சுப்ரீம் பவர் கொண்டவராக இப்படத்தில் நடித்திருந்தார் விஜய். காதில் பூச்சுற்றும் கதை என்று எண்ணியோ என்னவோ அழகிய தமிழ்மகனை மக்கள் நிராகரித்துவிட்டனர்.


விஷால் நடித்த மலைக்கோட்டை படத்தில் அவரது சாகஸக்காட்சிகள் அளவுக்கு மீறி இருந்தன. அதுவே மலைக்கோட்டையை மாங்கொட்டையாக்கிவிட்டதாக எண்ணத் தோன்றுகிறது. தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகு சுந்தரம் என்ற படத்தின் தோல்விக்கும் இதே காரணம் பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டும். கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜோகி என்ற படத்தின் ரீமேக்கான இதில் தன் வயசுக்கும் தோற்றத்துக்கும் பொருத்தமில்லாத வேடத்தில் நடித்திருந்தார் தனுஷ். அழகுசுந்தரம் அசிங்கசுந்தரமானதற்கு இதையே முக்கிய காரணமாக சொல்லலாம்.


சில வருடங்களுக்கு முன் வெளியாகி வசூலில் சரித்திரம் படைத்த ‘திருடா திருடி’ படத்தை இயக்கிய சுப்பிரமணியம் சிவாவின் இரண்டாவது படமான பொறி, பரத் இரட்டை வேடத்தில் நடித்த கூடல் நகர் படங்களின் தோல்விக்கு சாரமற்ற கதைஅம்சத்தையும், சுவாரஸ்யமில்லாத திரைக்கதையையும்தான் காரணமாக சொல்ல வேண்டியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன் படத்தில் காதல் என்ற பெயரில் விரச எல்லையைத் தொட்டதே இப்படத்துக்கு தொல்லையாக அமைந்துவிட்டது. எஸ்.ஜே.சூர்யாவின் மற்றொரு படமான வியாபாரி படமோ மல்ட்டிபிள் சிட்டி என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான உல்டா. தன்னைப்போலவே குளோனிங் முறையில் இன்னொரு வனை உருவாக்குகிறான் என்ற கற்பனையை மக்கள் நம்பவில்லை. ஒரு ஆட்டோடிரைவரின் கதையாக வெளி வந்த ஆர்யா நடித்த ஓரம்போ படத்தை மக்கள் ஓரங்கட்ட அப்படத்தில் மலிந்துகிடந்த மசாலா அம்சங்களைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்? மாதவன் நடித்த ஆர்யா, விஜயகாந்த் நடித்த சபரி, சரத்குமார் நடித்த நம் நாடு படங்களின் தோல்விக்கும் இதே காரணம் பொருந்தும்.


சரத்குமார் நடித்த மற்றொரு படமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் பேசப்பட்ட அளவுக்கு படம் வெற்றியடையவில்லை. அப்படியே வெற்றிபெற்றிருந்தாலும் அதன் பெருமை இயக்குநர் கௌதம்மேனனை சேராது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். காரணம்.. டி ரெயில்ட் என்ற ஆங்கிலப்படத்தின் ஈயடிச்சான் காப்பி இது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் தோல்விக்கு காலத்துக்குப் பொருந்தமல் ஆவி, முனி என்று காதில் பூச்சுற்றியதுதான் காரணம் என்பதை தனியாக சொல்லத்தேவையில்லை.


பிலிம் இல்லாமல் கூட தமிழ்த்திரைப்படங்களை எடுத்தாலும் எடுப்பார்கள், ஆனால் காதல் இல்லாமல் எடுக்கவே மாட்டார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. இது சற்று மிகைப்படுத்தப்பட்டது என்றாலும், காதலை தவிர்த்துவிட்டு தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருவதில்லை என்ற யதார்த்தத்தையும் மறுக்க முடியாது. 2007 ஆம் ஆண்டும் இந்த கூற்றுக்கு விதிலக்கில்லைதான்! ஏற்கனவே சொன்னது போல் இருபத்தாறு காதல் திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன - இந்த ஆண்டில்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.எழில் இயக்க, லிங்குசாமி தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த தீபாவளி, சேரன் இயக்கி நடித்த மாயக்கண்ணாடி, மறைந்த ஜீவாவின் இயக்கத்தில் புதுமுகம் வினய் நடித்த உன்னாலே உன்னாலே, கரண் நடித்த கருப்பசாமி குத்தகைதாரர், செல்வம் இயக்கத்தில் ஜீவா நடித்த ராமேஸ்வரம், செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இயக்க விக்ராந்த் நடித்த நினைத்து நினைத்து பார்த்தேன், பி.வாசு இயக்கி, அவரது மகன் ஷக்தி கதாநாயகனாக அறிமுகமான தொட்டால் பூ மலரும், நந்தா நடித்த உற்சாகம், ஜித்தன் ரமேஷ் நடித்த புலி வருது, அருண்விஜய் நடித்த தவம், வெங்கட்பிரபு நடித்த வசந்தம் வந்தாச்சு, பாண்டியராஜனின் மகள் ப்ருத்வி நடித்த நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களுடன், நினைத்தாலே, நெஞ்சைத்தொடு, என் உயிரினும் மேலான, ஒரு பொண்ணு ஒரு பையன், இப்படிக்கு என் காதல், தூவானம், மனசே மௌனமா, பதினெட்டு வயசு புயலே, முதல் முதலாய், முதல்கனவே, நீ நான் நிலா, நண்பனின் காதலி, கண்ணா, பழனியப்பா கல்லூரி போன்ற சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகின.


இவற்றில் காதலன் காதலி இடையே நிலவிய ஈகோவைச் சொன்ன உன்னாலே உன்னாலே, காதலன் உருவில் தன் தாயைப் பார்த்த ஒரு பெண்ணின் காதலைச் சொன்ன கருப்பசாமி குத்தகைதாரர் என இரண்டு படங்கள் மட்டுமே வெற்றியடைந்த படங்கள். ஜெயம் ரவி நடித்த தீபாவளி, சேரனின் மாயக்கண்ணாடி, ஜீவா நடித்த ராமேஸ்வரம் போன்ற படங்கள் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியைத் தழுவிய படங்கள். இவற்றில் சேரன் இயக்கி நடித்த மாயக்கண்ணாடி படத்தின் படு தோல்விக்கு ராஜாஜியின் குலக்கல்வியை ஆதரிக்கும் கதை அம்சம் மட்டுமல்ல, சேரனின் சகிக்க முடியாத தோற்றமும் முக்கிய காரணமாக இருந்தது. இலங்கை அகதியான கதாநாயகனுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்குமான காதலைச் சொன்ன ராமேஸ்வரம் படத்தின் தோல்விக்கு காட்சிகளிலும், காதலிலும் அழுத்தம் இல்லாததே காரணம்!


காதல் என்ற பெயரில் வக்கிரத்தை வியாபாரம் செய்யும் போக்கிலும் மாற்றமில்லை. கணவனின் தம்பி மீது காமுறும் பெண்ணைப் பற்றி கடந்த ஆண்டில் உயிர் என்ற படத்தை எடுத்து விளம்பர ருசி கண்ட சாமி இயக்கத்தில் வெளியான மிருகம் படம் இந்த வகையில் குறிப்பிட வேண்டிய படம். படம் முழுக்க பெண்களை புணருவதற்கு அலையாய் அலையும் ஒரு காமுகன் கடைசியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறான். சாகும் தறுவாயில் தன் கிராமத்துக்கு தண்ணீர் கிடைக்க உதவுகிறான் என்ற கதையில் விரவிக்கிடந்தது விரசமும் ஆபாசமும்தான். பிரவீன்காந்த் இயக்கியதோடு கதாநாயகனாகவும் நடித்த துள்ளல், தமிழ்வாணன் இயக்கத்தில் ஜீவன் நடித்த மச்சக்காரன், சித்திரைச்செல்வன் இயக்கிய ஆக்ரா போன்ற படங்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். நல்லவேளை! இந்த நான்கு படங்களையுமே மக்கள் நிராகரித்துவிட்டனர்.


நகைச்சுவைப்படங்கள் என்ற பிரிவிலும் தமிழில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி மக்களை சிரிக்க வைக்கிறேன் என்று கிச்சுகிச்சு மூட்டும். டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் பிரசன்னா நடித்த சீனா தானா, சத்யராஜ், பிருத்திவிராஜ் நடிக்க, ப்ரியா.வி இயக்கிய கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்கள் இப்பிரிவில் அடங்குபவை. சிரிக்க வைக்க எடுக்கப்பட்ட இவ்விரு படங்களுமே அப்படங்களின் தயாரிப்பாளர்களை அழ வைத்ததுதான் சோகம்.


இவை தவிர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில், முழுக்க முழுக்க அனிமேஷன் பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இனிமே நாங்கதான், த்ரில்லராக வெளியான சிவி, மலைசாதி யினரின் மொழியான படுக மொழியில் எடுக்கப்பட்ட பாலி போன்ற படங்களும் 2007 ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கின்றன. ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்கள் சென்னையிலிருந்து தப்பித்தது முதல் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டது வரையிலான சம்பவங்களை வைத்து கன்னடத்தில் எடுக்கப்பட்ட சயனைடு என்ற படத்தை மொழிமாற்றம் செய்ததோடு, புதிதாக சில காட்சிகளையும் சேர்த்து நேரடி தமிழ்ப்படம் போன்ற தோற்றத்துடன் குப்பி என்ற பெயரில் வெளியானது. அதே போல் முழுக்க முழுக்க குள்ள மனிதர்களை வைத்து மலையாளத்தில் வினயன் இயக்கிய படமும் தமிழுக்காக சில காட்சிகளைச் சேர்த்து அற்புதத் தீவு என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவ்விரு படங்களும் வித்தியாசமான படங்களாக சிலாகிக்கப் பட்டாலும், வர்த்த அளவில் வரவேற்கப்படவில்லை. மொழி மாற்றுப் படத்தை நேரடிப் படம்போல் நம்ப வைப்பதில் நிபுணரான மணிரத்னம் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராயை வைத்து ஹிந்தியில் இயக்கிய குரு படத்தை அதே பெயரில் தமிழிலும் வெளியிட்டார். ரிலையன்ஸ் அம்பானியின் வாழ்க்கை வரலாறாக மட்டுமின்றி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் படமாகவும் தோற்றமளித்த குரு படத்தை, அதில் தென்பட்ட அன்னியத்தனத்தினாலோ என்னவோ மக்கள் வெற்றி பெற வைக்கவில்லை.


தமிழ்சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வித்தியாசமான சில முயற்சிகளும் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028, புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் வெளியான ரசிகர் மன்றம், மாதவன் நடிக்க நிஷிகாந்த் இயக்கிய எவனோ ஒருவன், ஜெய்லானி என்ற புதியவர் இயக்கி நாயகனாகவும் நடித்த கேள்விக்குறி, காதல் படத்தை அடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி, ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த கற்றது தமிழ், எல்.வி.இளங்கோவன் என்ற புதிய இயக்குநர் இயக்கிய பிறப்பு, பார்த்திபன் நடிப்பில், பத்மாமகன் இயக்கிய அம்முவாகிய நான் ஆகிய படங்களை இந்த வகையில் பட்டியலிடலாம்.


சென்னை 600028 என்ற தலைப்பு மட்டுமல்ல, அப்படத்தின் கதையும், திரைக்கதையும் நிச்சயம் தமிழ்சினிமாவுக்குப் புதுசுதான். தெருவில் கிரிக்கெட் விளையாடும் வாலிபப்பசங்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக பதிவு செய்த இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்ததில் வியப்பில்லை.


இன்றைய இளைஞர்களை துருப்பிடிக்க வைத்ததில் சினிமா நட்சத்திரங்களுக்கு பெரும் பங்குண்டு. தங்களுக்கு துதிபாடுவதற்காக ரசிகர்மன்றங்களை ஆதரித்து வளர்க்கும் நட்சத்திரங்கள், அது தன் ரசிகர்களின் வாழ்க்கையை பாழ்படுத்துவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த அவலத்தையே ரசிகர் மன்றம் திரைப்படம் சுட்டிக்காட்டியது. தோல்விப்படப் பட்டியலில் இப்படம் சேர்ந்தாலும் திரைப்படம் செய்ய வேண்டிய பணியை செவ்வனே செய்த படம் என்பதை மறுக்க முடியாது.


மாதவன் நடிப்பில் மராட்டி மொழியில் வெளியான படத்தின் ரீமேக்கான எவனோ ஒருவன் திரைப்படம் சமூகத்தில் நிலவும் அவலங்களுக்கு எதிராக பொங்கியெழும் நடுத்தரவர்க்க இளைஞன் ஒருவன், அதிகார வர்க்கத்தினால் என்கவுண்டர் செய்யப்படுவதுதான் இப்படத்தின் கதை. மாதவனின் கதாபாத்திர அமைப்பு பிராமண இளைஞனாக சித்தரிக்கப்பட்டதன் மூலம், ‘அவாளுக்கு’ மட்டுமே சமூக அக்கறை உண்டு என்ற மறைமுகமான கருத்துத்திணிப்பை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எவனோ ஒருவன் பெருமைக்குரிய படம்தான்.


ஜெய்லானி என்ற புதியவர் இயக்கி நடித்த கேள்விக்குறி படத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயம் சற்று புரட்சிகரமானது. காவல்துறையின் அலட்சியத்தினாலும், அராஜகத்தினாலும் பாதிக்கப்படும் ஒருவனின் போராட்டம்தான் இப்படத்தின் கதை. தணிக்குக்குழுவினரால் சான்றிதழ் மறுக்கப்பட்டு, பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெளியான இப்படத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அதிகாரவர்க்கத்துக்கு எதிரான கலகக்குரலாக இருந்ததே கேள்விக்குறி திரைப்படத்தை இங்கே குறிப்பிடக் காரணமாக இருக்கிறது.


காதல் படத்தின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கையை தந்த பாலாஜி சக்திவேல் பல மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு இயக்கிய படம் கல்லூரி. ராகிங், குத்துப்பாட்டு, கண்டதும் காதல், மலிவான காட்சிகள் என வழக்கமான கல்லூரி படங்களின் அம்சங்களை புறக்கணித்துவிட்டு வித்தியாசமான படமாக இருந்தாலும், அதன் பலவீனமான கதை மற்றும் திரைக்கதையினால் வெற்றியை தவறவிட்டது. எனினும், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் உயிரோடு பஸ்ஸில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை படத்தின் மையமான விஷயமாக வைத்ததன் மூலம், ஒரு துயரமான உண்மையை கல்லூரி படத்தில் பதிவு செய்ததை பாராட்டலாம்.


ராம் என்ற புதிய இயக்குநர் இயக்கிய கற்றது தமிழ் படம் தமிழ்படித்த ஒருவனுக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் மரியாதையை சொல்வதாக இருந்தாலும், இலக்கில்லாமல் சென்ற திரைக்கதையால் சொல்ல வந்த விஷயம் பலவீனப்பட்டுப் போனதோடு, படத்தின் வெற்றியும் பறிபோனது. ஆனாலும் உலக மயமாக்கல் உட்பட பல பிரச்சனைகளைப் பற்றிப் பேசிய படம் என்ற வகையிலும், உருவாக்கத்திலும் கற்றது தமிழ் கவனிக்கத்தக்கப் படமாக இருந்ததையும் மறுக்க முடியாது.


எல்.வி.இளங்கோவன் என்ற புதிய இயக்குநர் இயக்கிய பிறப்பு என்ற படத்தை இங்கே குறிப்பிடக்காரணம் அப்படத்தில் சொல்லப்பட்ட விஷயம்தான். தாழ்த்தப்பட்ட சாதி என்று ஒரு இனத்தையே நிராகரிக்கும் மேல்சாதி மனப்போக்கை செவிட்டில் அடித்ததுபோல், இப்படம் பதிவு செய்திருந்தது.


பார்த்திபன் நடிப்பில், பத்மாமகன் இயக்கிய அம்முவாகிய நான் படம் ஒரு விலைமகளின் கதையாக எடுக்கப்பட்டிருந்தது. ஒரு விலைமகளை மணந்து கொண்ட எழுத்தாளனின் வாழ்வில் அவன் எதிர் கொள்ளும் பிரச்சனை எவ்வாறானது என்பதே இப்படத்தின் கதை. கதைநாயகியான விலைமகள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தாத காட்சிஅமைப்பினாலோ என்னவோ இப்படத்தை மக்கள் ரசிக்கவில்லை.


சென்னை 600028 தொடங்கி அம்முவாகிய நான் வரையிலான திரைப்படங்கள் குறிப்பிட்ட சில அம்சங்களில் சிறப்பாக இருந்ததால் தனித்துவப்பட்டன. அடுத்து வரும் படங்களோ அனைத்து அம்சங்களிலும் கவனத்தை ஈர்த்த இணையற்ற படங்கள். மொழி, பள்ளிக்கூடம், பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பருத்தி வீரன் ஆகியவையே இந்த கௌரவத்துக்கும், பெருமைக்கும் உரித்தான திரைப்படங்கள்.


பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான மொழி படத்தின் மைய இழை, ஒரு இசைக் கலைஞனுக்கும் (ப்ருத்திவிராஜ்) செவிட்டு ஊமைப்பெண்ணுக்குமான (ஜோதிகா) காதல்தான் என்றாலும், ஊமைப்பெண்ணின் மன உணர்வுகளை மிக நுணுக்கமாக, நெருக்கமாக பதிவு செய்திருந்த வகையில் மொழி திரைப்படம் இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இப்படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும் நல்ல திரைப்படங்களை மக்களை ஆதரிக்கத் தயங்குவதில்லை என்பதை மறுபடியும் நிரூபிப்பதாக இருந்தது.


தங்கர்பச்சான், நரேன், சீமான், சினேகா, ஸ்ரேயாரெட்டி நடிக்க தங்கர்பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம் திரைப்படத்துக்கும் மரியாதைதைக்குரிய இடம் உண்டு. மூடப்படவிருந்த ஒரு பள்ளிக்கூடத்தை, அங்கே படித்த பழைய மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெறுவதுதான் பள்ளிக்கூடம் படத்தின் கதை. கடவுள் சிலை வடிவில் கற்கள் உறங்கும் கோவில்களை பாது காப்பதிலும், பேணுவதிலும் காட்டும் அக்கறையை கல்விச் செல்வத்தை அள்ளித் தரும் பள்ளிக்கூடத்தில் காட்ட வேண்டும் என்பதை இதைவிட நெகிழ்ச்சியாய், நேர்த்தியாய் சொல்ல முடியாது. அந்த வகையில் தங்கர்பச்சான் என்ற படைப்பாளனின் சமூகக்கடமையை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.


இதே ஆண்டில் தங்கர்பச்சானின் மற்றொரு மகத்தான படைப்பும் திரைப்படமாக வெளிவந்து தமிழ்த்திரைக்கே பெருமையையும், மரியாதையையும் ஏற்படுத்தியது. ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படம்தான் அது. தங்கர்பச்சான் எழுதிய நாவலின் திரைவடிவமான இத்திரைப்படம் மாதவப்படையாச்சி என்ற விவசாயியின் நெடிய வாழ்க்கையின் பதிவு. மாதவரின் கதை மட்டுமல்ல, பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் வயதான பெற்றோர்களின் கதையாகவும் உருவாக்கப்பட்டிருந்த ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தை சத்யராஜ், நாஸர், அர்ச்சணா போன்ற கலைஞர்களின் நடிப்பு உலகத்தரத்துக்கு உயர்த்தியதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் அமைந்த கிராமத்தையும், அம்மக்களின் வாழ்வியலையும் கண்முன் நிறுத்தியது என்றால், அமீரின் பருத்தி வீரன் திரைப்படம் இன்னொரு பகுதி கிராமத்தை நமக்கு அறிமுகம் செய்தது. பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் ஊருக்குள் சண்டியர்தனம் செய்து கொண்டு திரியும் ஒருவன், அதற்காகக் கொடுக்கும் மிகப்பெரிய விலை பார்வையாளர்களை உலுக்கி எடுத்ததோடு, அதிர்ச்சியில் உறையவும் வைத்தது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமாரின் இளையமகன் கார்த்தி மிகச்சிறந்த நடிகராக வெளிப்பட்டிருந்தது மட்டுமல்ல, அந்த கதாபாத்திரமாகவே தோற்றமளித்தார். பருத்திவீரன் திரைப்படம் ஒரு வருடத்தைக் கடந்து ஓடியதன் மூலம் வர்த்தக மதிப்பு கொண்ட இயக்குநராக அமீரை சிகரத்தில் ஏற்றி வைத்தது.


2007 ஆம் ஆண்டு வெளியான எல்லாப்படங்களையும் விட மிகச்சிறந்த திரைப்படமாக பெரியார் திரைப்படத்தையே சொல்லி யாக வேண்டும். பாரதி படத்தை இயக்கிய ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த பெரியார் திரைப்படத்தை, இப்படி உயர்த்திப்பிடிப்பதற்கு ஒரே காரணம்தான். ரௌடிகளையும், தாதாக்களையும், கொலை செய்பவனையும், கொள்ளையடிப்பவனை யும், காதல் என்ற பெயரில் காமத்துக்காக அலைபவனையும் கதாநாயகர்களாக சித்திரித்து வரும் தமிழ்ப்படங்களுக்கு மத்தியில், ஒரு இனத்தின் விடுதலைக்காக விடியலுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த பெரியார் என்ற உண்மையான சரித்திர நாயகனின் கதையைச் சொன்ன படம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை. பெரியாரின் பெயரை சொல்லிக் கொண்டு வந்தவர்களே அவரது கொள்கையை மறந்துவிட்ட தற்காலச் சூழலில், எதிர்காலத் தலைமுறைக்கு பெரியார் யார் என்றே தெரியாமல் போகும் அபாயம் இருக்கிறது. அந்த அபாயத்தின் சதவிகிதத்தைக் குறைத்து, பெரியாரையும், அவரது பெருமையையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சென்ற வகையில் பெரியார் திரைப்படம்தான் 2007 ஆம் ஆண்டில் வெளியான மற்ற அனைத்துப் படங்களிலிருந்தும் உயர்ந்த படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.


இப்படியொரு திரைப்படம் வெளியான ஒரு காரணத்துக்காகவே தமிழ்த்திரைப்பட வரலாற்றிலும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக இருக்கும். இருக்க வேண்டும்.

ஆதிக்கு அடி, வெயிலுக்கு வெற்றி


திரைப்படத்துறையை கனவுத் தொழிற்சாலை என்று குறிப்பிடுவதற்கு, அது பார்வையாளனின் மனதில் கனவுகளை உற்பத்தி செய்யும் துறையாக இருக்கிறது என்பது நேரடி அர்த்தமாக இருந்தாலும், திரைத்துறையை இன்னொரு வகையிலும் ‘தொழிற்சாலை’ என்று சொல்வது பொருத்தமாகவே தோன்றுகிறது. திரைப்படங்களை, அவை மக்களால் விரும்பப்படுகிறதோ இல்லையோ, அது குறித்து சிறிதும் கவனம் கொள்ளாமல் தொடர்ந்து அவற்றை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது - திரையுலகம்.


2006 ஆம் ஆண்டும் தொண்ணூற்றி ஆறு திரைப் படங்களை உற்பத்தி செய்திருக்கிறது கோடம்பாக்கத் தில் இயங்கி வரும் தமிழ்த்திரைப்படத்துறை. அவற்றில் எத்தனை திரைப்படங்கள் மக்களுக்கு பயன்தரத்தக்கப் படைப்புகளாக இருந்தன? எத்தனை திரைப்படங்கள் சமூகத்துக்கு விரோதமான கருத்துகளை எடுத்துச் சென்றன? என்பன பற்றி திரைப்பட வியாபாரிகள் கவலைப்படுவதில்லை. அது அவர்களின் பிரச்சனையும் இல்லை. திரைப்பட வியாபாரிகளின் ஒரே கவலை, எதிர்பார்ப்பு அவை ஈட்டித்தரும் லாபம் மட்டுமே!


அதன்பொருட்டே காலம்காலமாக செலுலாய்டு குப்பைகளை மக்களின் மண்டைக்குள் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் திரைப்பட வியாபாரிகள். மண்ணில் கொட்டப்பட்டு மக்கிப் போகாமல் சுற்றுப்புறச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைப் போலவே, இந்த செலுலாய்டு குப்பைகளும் மக்களின் மனவெளியை அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை பகுத்தாய்ந்து பார்க்கும் போது, மேற்சொன்ன இந்தப்போக்கு மாறாதிருப்பதையும், முந்தைய ஆண்டுகளைப்போலவே நீடித்து, நிலைபெற்று வருவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.


இப்படியொரு குற்றச்சாட்டுக்குக் காரணமில்லாமல் இல்லை. 2006 ஆம் ஆண்டில் வெளியான மசாலாப்படங்களே இதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.


கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, அஜீத் நடிப்பில் வெளியான வரலாறு, திருப்பதி, பரமசிவன், விஜய் நடித்த ஆதி, அர்ஜூன் நடித்து, இயக்கிய மதராஸி, அர்ஜூன் நடிகராக மட்டும் முகம் காட்டிய வாத்தியார், தருண்கோபி இயக்க, விஷால் நடித்த திமிரு, விஜயகாந்த் நடிப்பில் வெளியான சுதேசி, தர்மபுரி, பேரரசு, சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்த தலைமகன், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சிம்பு நடித்த சரவணா, சிம்பு நடித்து, இயக்கிய வல்லவன், தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம், பிரசாந்த் நடித்த ஜாம்பவான், ரவிகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, அவரது அண்ணன் ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான கேடி, மாதவன் நடித்த இரண்டு என கவலை தரக்கூடிய அளவுக்கு மசாலாப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.


அதே சமயம் ஆறுதல் தரக்கூடிய விஷயமும் நடந்திருப்பது சற்றே மகிழ்ச்சியைத் தருகிறது. மசாலாப்படங்களுக்குக் கிடைத்த மரண அடிதான் அது. வேட்டையாடு விளையாடு, வரலாறு, திமிரு, வல்லவன், திருவிளையாடல் ஆரம்பம், இரண்டு, பேரரசு போன்ற வெகு சில படங்கள் தவிர ஏனைய படங்கள் எதுவும் கல்லாப்பெட்டியை நிரப்பவில்லை. அதிலும் குறிப்பாக விஜய் நடித்த ஆதி படம் மரண அடி வாங்கியது. இப்படத்தின் தோல்வியினால், அடுத்து என்ன வகையான கதையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்திலேயே சுமார் ஆறு மாதங்கள் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தார் விஜய். அரதப்பழசான கதையை எடுத்தாலும் தன் முகத்துக்காக அப்படத்தை மக்கள் சிகரத்தில் ஏற்றி வைப்பார்கள் என்ற ஹீரோக்களின் முட்டாள்தனத்துக்கு மக்கள் எழுதிய முடிவுரையாக இல்லாவிட்டாலும், ஒரு எச்சரிகையாக அமைந்த மறுக்க முடியாது.


ஆடல், பாடல், அடிதடி, சண்டை என மசாலாப்பட வகையில் அடங்கக்கூடிய படங்களாக இருந்தாலும் சில படங்கள் சமூகத்துக்கு அவசியமான செய்தியையும் தாங்கி, தனித்த அம்சங்களையும் கொண்டிருந்தன. தம்பி, சிவப்பதிகாரம், ஈ, கொக்கி, தகப்பன்சாமி போன்ற படங்களே அவை. சீமான இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி படம் வன்முறைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தது. கரு.பழனியப்பன் இயக்கத்தில் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தின் கதை, மக்களுக்கு விரோதமாக இயங்கும் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாணவர்கள் ஆயுதமேந்தும் சூழலைச் சொன்னதோடு, சிவப்புச்சிந்தனையையும் விதைத்தது. ஜனநாதன் இயக்கி ஜீவா நடித்த ஈ படம் 2006ஆம் ஆண்டின் குறிப்பிடத்தக்க படைப்பாக கவனம் ஈர்த்தது. இன்றைய சூழலில் உலகத்தையே அச்சுறுத்தும் பயோவார் பற்றிய விழ்ப்புணர்ச்சியை ஊட்டுவதாக இப்படத்தின் கதை அம்சம் இருந்தது. வில்லன் நடிகராக இருந்த கரண் கதாநாயகனாகி நடித்த கொக்கி திரைப்படம் மூட நம்பிக்கையினால் ஒரு இளைஞனின் வாழ்க்கை எவ்விதம் சீர்கெட்டது என்பதை சிறப்புடன் சித்தரித்தது. மழை பொய்த்துப்போனதால் வறட்சியில் சிக்கி, உயிர் போராட்டத்தில் கொத்தடிமைகளான ஒரு கிராமத்து மக்களின் பிரச்சனையைச் சொன்ன தகப்பன்சாமி படத்தையும் இந்தப் பிரிவில் சேர்ப்பதில் தவறில்லை. இந்தப் படங்களின் கருத்தில் சமூக நோக்கம் இருந்தாலும், உருவாக்கத்தில் தென்பட்ட மசாலா அம்சங்கள், கருத்தை பின்னுக்குத்தள்ளி விட்டதையும் நினைவு கொண்டுதான் ஆக வேண்டும்.


தொண்ணூற்றி ஆறு படங்களில் மசாலாப்படங்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா? மிக குறைவான எண்ணிக்கையில் தானே மசாலாப்படங்கள் வெளிவந்திருக்கின்றன? என்று எண்ணி விட வேண்டாம். இவ்வகை மசாலாப்படங்கள் இன்னும் கூட இருக்கின்றன. அவை அனைத்தும் மேற்கண்ட பட்டியலிலிருந்து சற்று மாறுபட்டவை. அதாவது ரௌடிகளையும், தாதாக்களையும் கதாநாயகனாக சித்தரித்த படங்கள்! அந்தவகையில் அடுத்து வரும் பட்டியலில் இடம்பெறும் அத்தனை படங்களுமே சமூகத்துக்கு ஆபத்தான படங்கள்.


இந்தப் பிரிவில் அடங்கக்கூடிய பரத் - ஆர்யா நடிக்க, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான பட்டியல், தனுஷ் நடிக்க, அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை என இரண்டு படங்களும் ‘சில்ட்ரன்ஸ் ஆப் காட்’ என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள். பார்த்திபன் நடித்து, இயக்கிய பச்சக்குதிர, சுந்தர்.சி. கதாநாயகன் அவதாரம் எடுத்த தலைநகரம், நடன இயக்குநர் ஹரிகுமார் கதாநாயகனாக நடித்த தூத்துகுடி, ரஞ்சித் நடித்த டான்சேரா, விக்னேஷ் நடித்த ஆச்சார்யா, சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த வட்டாரம், சஞ்சய்ராம் இயக்கிய ஆடு புலி ஆட்டம், பாலா நடித்த கலிங்கா போன்ற படங்களின் கதாநாயகன் பாத்திரம் ரௌடிகளாகவும், தாதாக்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதனால் இவை அனைத்துமே வன்முறைக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் மோசமான படங்கள் என்று நிச்சயமாக குற்றம்சாட்டலாம்.


இவற்றில் புதுப்பேட்டை படம் மிக மோசமான காட்சி அமைப்புகளைக் கொண்டிருந்தது. அதாவது மிக சாதுவான ஒருவன் இப்படத்தைப் பார்த்தால், அடுத்த கணமே கொலை, கொள்ளைகளை அஞ்சாமல் செய்யக் கூடிய தொழில்முறை ரௌடியாக அவனால் சுலபமாக மாறிவிட முடியும். அந்தளவுக்கு ஒரு கொலையை எப்படி செய்ய வேண்டும், கத்தியை எப்படி பிடிக்க வேண்டும், அரிவாளால் எப்படி வெட்ட வேண்டும் என்பதை எல்லாம் மிக நுணுக்கமாகக் கற்றுக் கொடுத்தது. இந்தப்படத்தை மக்கள் வெற்றிபெற வைக்கவில்லை என்பது மிகப்பெரிய ஆறுதலாக மட்டுமல்ல, இப்படிப்பட்ட வன்முறைப் படம் எடுப்பவர்களுக்கு ரசிகர்கள் விடுத்த எச்சரிகையாகவும் அமைந்தது.


ரௌடிகளை, தாதாக்களை கதாநாயகனாக சித்தரித்த இவ்வகைப் படங்களைப் போலவே இன்னொரு வகைப்படங்களும் இந்த ஆண்டில் கணிசமான எண்ணிக்கையில் வெளி வந்தன. ஆபாசம் மற்றும் வக்கிரமான கதை மற்றும் காட்சிகளைக் கொண்ட படங்களே அவை.


இகோர் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஆர்யா நடித்த கலாபக்காதலன், சாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்த உயிர், சுசிகணேசன் இயக்க, ஜீவன் நடித்த திருட்டுப் பயலே போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. தன் அக்காள் கணவனின் மீது காதல் கொண்டு, முறை தவறிய தன் காதல் நிறைவேறாததினால் உயிரையே மாய்த்துக்கொள்ளும் மச்சினியின் கதையாக கலாபக்காதலன் படமும், தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே, கணவனின் தம்பி மீது காமம் கொண்டு, அதனால் தன் கணவன் தற்கொலை செய்து கொள்ளவும் காரணமாக இருப்பதோடு, மைத்துனனை அடைவதற்காக எதையும் செய்யத்துணியும் அண்ணியின் கதையாக உயிர் படமும் இருந்தன. கணவனின் நண்பனுடன் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணின் அந்தரங்கத்தை வீடியோ கேமராவில் படம் பிடித்து, அதை வைத்து அப்பெண்ணை பிளாக்மெயில் செய்யும் ஒருவனின் கதைதான் திருட்டுப்பயலே படம்.


எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் பார்த்த கணமே அவளைப் புணருவதற்குத் துடிக்கும் இளைஞனின் கதையாக எடுக்கப் பட்டிருந்தது எஸ்.ஜே. சூர்யா நடித்த கள்வனின் காதலி படம். பார்த்திபன் நடித்த பச்ச குதிர படமோ வார்த்தைகளால் சுட்டிக்காட்ட முடியாத வக்கிரத்தின் உச்சம். தன் மகனை வைத்து துள்ளுவதோ இளமை என்ற பாலியல் படத்தை இயக்கி, அதன் மூலம் கோடிகளை அள்ளிய கஸ்தூரிராஜா, அதே பேராசையில் தனுஷைப் போலவே தோற்ற ஒற்றுமை கொண்ட ஒரு சிறுவனை வைத்து இது காதல் வரும் பருவம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியதும் இந்த ஆண்டுதான். நல்லவேளை! கஸ்தூரிராஜாவின் இந்த பாலியல் படத்தை இளைஞர்களே நிராகரித்துவிட்டனர். இந்தப்படங்கள் தவிர, உணர்ச்சிகள், தீண்டத்தீண்ட, லயா, துள்ளுற வயசு, பிரதி ஞாயிறு காலை 9 மணி முதல் 10.30 வரை- என மேலும் சில பாலியல் கதை அம்சத்துடன் கூடிய படங்கள் வெளி வந்தன. இவை அனைத்தும் தோல்வியடைந்ததன் மூலம் எதிர்காலத்தில் ஷகீலாவுக்கு தமிழகத்தில் கோவில் கட்டும் அபாயம் தவிர்க்கப்பட்டது.


ஆபாசத்துக்கும், காதலுக்கும் தமிழ்த்திரைப்படங்களைப் பொருத்தவரை நூழிலை வித்தியாசம்தான். இந்த வித்தியாசப்புள்ளியைத் தொட்டும் தொடாமலும் காதல்கதை என்ற பெயரில் காலம்காலமாக திரைப்படங்கள் வெளி வந்து கொண்டுதானிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டும் இப்படிப்பட்டப் படங்கள் வெளிவராமலா இருக்கும்? காதலை அடிப்படையாகக் கொண்டும், அதே நேரம் மற்ற அம்சங்களை தவிர்த்துவிடாமலும் கலவையானக் காட்சிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட பல படங்கள் வெளியாகின.


சூர்யா, ஜோதிகா நடிக்க, சூர்யாவின் சொந்தப்படமாக வெளிவந்த சில்லுனு ஒரு காதல், ஸ்ரீகாந்த் நடித்த கிழக்குக் கடற்கரை சாலை, சசி இயக்கத்தில் ஜீவா நடித்த டிஷ்யூம், சரண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த இதயத்திருடன், ராஜா இயக்கத்தில் அவரது தம்பி ஜெயம்ரவி நடித்த (சம்திங் சம்திங்) உனக்கும் எனக்கும், விக்ரமன் இயக்கத்தில் பரத் நடித்த சென்னைக்காதல், மிஷ்கின் என்ற புது இயக்குநர் இயக்க நரேன் நடித்த சித்திரம் பேசுதடி, சேரனின் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் பரத் நடித்த அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, நரேன் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை, ரமேஷ் நடித்த நீ வேணுன்டா செல்லம் போன்ற படங்களை காதல் படங்களாக வகைப்படுத்தலாம். இவை தவிர, தொடாமலே, ஒரு காதல் செய்வீர், என் காதலே, காதலே என் காதலே, காதலும் கற்றுமற, மறந்தேன் மெய்மறந்தேன், இளவட்டம், மனசுக்குள்ளே, திருடி, நெஞ்சில் போன்ற படங்களும் இந்த ஆண்டில் வெளியான காதல் படங்களே!


மிக ஆச்சர்யமான விஷயம்.. இவற்றில் சித்திரம்பேசுதடி, (சம்திங் சம்திங்) உனக்கும் எனக்கும் என இரண்டு படங்கள் மட்டுமே வெற்றியடைந்தன! அதிலும் வெளியாகி முதல் மூன்று வாரங்கள் பார்வையாளர்களால் பாராமுகம் காட்டப்பட்ட சித்திரம்பேசுதடி படத்தை பிரபல விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவி என்பவர் வாங்கி, மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து வெற்றிப்படமாக் கினார். பல வருடங்களுக்கு முன் ஒருதலைராகம் படம் வெளியான போது பல தியேட்டர்களிலிருந்து படம் சரியில்லை என்று தூக்கப்பட்டு, அதன் பிறகு நடந்த அதிசயத்தினால் அப்படம் வெள்ளிவிழா வெற்றியடைந்து தமிழ்த்திரையுலக வரலாற்றிலும் இடம் பிடித்தது. அது போன்றதொரு நிகழ்வே சித்திரம் பேசுதடி படத்திற்கும் ஏற்பட்டது.


இந்தப்படம் தவிர, மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சில்லுனு ஒரு காதல், சிறு இடைவெளிக்குப் பிறகு விக்ரமன் இயக்கிய சென்னைக்காதல் உட்பட வேறு எந்த காதல் படமும் வெற்றியடையவில்லை. வேறு இயக்குநரை வைத்து சேரன் தயாரித்த படம் என்ற வகையில் எதிர்பார்க்கப்பட்ட அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படமும் கூட தோல்வியிலிருந்து தப்பவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப்போராடும் தன் காதலியைக் காப்பாற்றுவதற்காக தன் இதயத்தையே அவளுக்கு தானம் செய்து தன் உயிரை தியாகம் செய்யும் காதலனைப் பற்றிய கதையாக வெளி வந்த நெஞ்சிருக்கும்வரை படத்தையும் ரசிகர்கள் ஆதரிக்கவில்லை. சசி இயக்கத்தில் ஜீவா நடித்த டிஷ்யூம் படம் சினிமாவில் டூப் போடும் சண்டைக் கலைஞனுக்கும், சிற்பம் வடிக்கும் ஒரு பெண்ணுக்குமான காதலைச் சொன்னது. பிற காதல் படங்களிலிருந்து மாறுபட்டிருந்த இந்தப்படத்தையும் ரசிகர்கள் விரும்பவில்லை.


காதல் படங்களைப் போலவே காமெடிப்படங்களையும் இந்த ஆண்டு ரசிகர்கள் உச்சிமுகரவில்லை என்பது உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயம்தான். சத்யராஜ் - சிபி இணைந்து நடித்த கோவை பிரதர்ஸ், ரமேஷ் நடித்த ஜெர்ரி, பிரபு, கார்த்திக் நடித்த குஸ்தி என மூன்று காமெடிப்படங்களும் வெளிவந்த வேகத்தில் தியேட்டர்களிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டன.


சின்னத்திரையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மெட்டிஒலி என்ற மெகாத்தொடரை இயக்கிய திருமருகன் பரத்தை வைத்து இயக்கிய எம்(டன்) மகன் என்ற படத்தை குடும்பக்கதை அம்சம் கொண்ட படமாக சொல்லமுடியும். இந்தப்படத்திலும் காதல் போன்ற பிற அம்சங்கள் இருந்தாலும், தந்தைக்கும் மகனுக்குமான உறவுச்சிக்கலே பிரதானமாக சொல்லப்பட்டது. ஸ்டான்லி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்த மெர்க்குரிபூக்கள், மு.கருணாநிதியின் கதை வசனத்தில் பிரபு - முரளி இணைந்து நடித்த பாசக்கிளிகள், வேதம்புதிது கண்ணன் இயக்கிய அமிர்தம், ரேவதி வர்மா என்ற பெண் இயக்குநர் இயக்கத்தில் ஜோதிகா நடித்த ஜூன்ஆர் போன்ற படங்களையும் இந்த வகையில் அடக்கலாம். ஆனால் எம்(டன்) மகன் படத்துக்குக் கிடைத்த வெற்றி மற்ற படங்களுக்குக் கிடைக்கவில்லை. எனினும் கதாநாயகன் இல்லாமல் முழுக்க முழுக்க பெண்ணை முன்னிலைப்படுத்திய ஜூன்ஆர் திரைப்படம் அடிக்கோடிட்டு கவனிக்கத்தக்கப் படமே!


ஆண் பெண் நட்பை மையமாக வைத்து அற்புதன் என்ற இயக்குநர் இயக்கத்தில் மனதோடு மழைக்காலம் என்ற படமும் வெளியானது. ஷாம் நடித்த இந்தப்படம் வெற்றி எல்லையைத் தொடவில்லை!


ஒரு காலத்தில் திரைக்கதை மன்னன் என்று சிலாகிக்கப்பட்ட கே.பாக்யராஜ் தன் மகள் சரண்யாவை கதாநாயகியாக்கி பாரிஜாதம் என்ற படத்தை இயக்கினார். அவரது சிஷ்யரான பாண்டியராஜனும் குருநாதர் வழியிலேயே கைவந்தகலை என்ற படத்தில் தன் மகன் ப்ரிதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இரண்டு படங்களையும் மட்டுமல்ல, இரண்டு வாரிசுகளையும் ரசிகர்கள் ஏற்கவில்லை. எனினும் பாரிஜாதம் படத்தில் புதுமையான திரைக்கதையை கையாண்டு நான் இன்னமும் திரைக்கதையில் மன்னன்தான் என்பதை நிரூபித்திருந்தார் கே.பாக்யராஜ்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலசந்தரின் இயக்கத்தில் பொய் என்ற படம் வெளியானது. அவரது நூறாவது படமான இப்படத்தை அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகாஷ்ராஜ் தயாரித்திருந்தார். குருவுக்கு சிஷ்யர் கொடுத்த காஸ்ட்லியான காணிக்கையானது பொய் படம். ஆம்.. மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதன் மூலம் பிரகாஷ்ராஜுக்கு சுமார் மூன்று கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.


கே.பாலசந்தரைப் போலவே மகேந்திரனும் பல வருட இடைவெளிக்குப் பிறகு முகம் காட்டினார் - சாசனம் என்ற படத்தின் மூலம். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்த இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், நாட்டார்களின் வாழ்க்கையை நேர்த்தியாய் பதிவு செய்த படம் என்ற நற்பெயரை பெறத்தவறவில்லை. மகேந்திரனைப் போலவே கடந்தகாலங்களில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அடையாளத்தைப் பெற்றிருக்கும் ஜெயபாரதி சத்யராஜை வைத்து குருஷேத்திரம் என்ற படத்தை இயக்கினார். தயாரிப்பாளரின் குடும்பத்தில் குருஷேத்திரம் ஏற்பட்டிருக்குமளவுக்கு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.


மசாலாப்படங்கள், வன்முறைப்படங்கள், வக்கிரமான படங்கள், காதல் படங்கள், குடும்பப்படங்கள், காமெடிப்படங்கள் மட்டுமல்ல, மோகன்லால், ஜீவா நடிப்பில், மேஜர் ரவி இயக்கிய அரண் என்ற தேசப்பற்று படமும், யார் கண்ணன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிக்க, ஆவியுலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யுகா என்ற திகில் படமும், சத்யராஜ் நடிக்க,குருதனபால் இயக்கிய சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அரசியல் படமும், நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய இம்சைஅரசன் 23ம் புலிகேசி என்ற சரித்திரப்படமும் இந்த ஆண்டில் வெளிவந்தன.


இவற்றில் இம்சைஅரசன் 23ம் புலிகேசி படத்துக்கு எவருமே எதிர்பார்த்திராத மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, அதாவது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துக்குப் பிறகு தமிழில் வெளியான சரித்திரப்படம் என்பதும், நகைச்சுவை நடிகரான வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக நடித்த படம் என்பதும், சரித்திரப் பின்னணியில் நகைச்சுவைக்கதையை சிந்தித்த சிம்புதேவனின் துணிச்சல் என எல்லாம் சேர்ந்து இம்சை அரசனை மக்கள் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்தனர்.


இவை மட்டுமின்றி, நந்தாவின் நடிப்பில் ஜெகன்ஜியின் இயக்கத்தில், திரைத்துறையில் முதல் படம் இயக்க ஒருவன் படும் கஷ்டங்களை விவரித்த கோடம்பாக்கம், இலங்கையில் படமாக்கப்பட்டு இலங்கையின் நிகழ்கால பதிவாக இருந்த மண், இரண்டு பேர் மட்டுமே நடித்த இருவர் மட்டும், பிற மொழிக் கலப்பில்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வசனங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இலக்கணம், சுனாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் டிசம்பர் 26 போன்ற சற்று மாறுபட்ட முயற்சிகளும் இவ்வாண்டில் செய்யப்பட்டன. இவை யாவும் தோல்விப்படப்பட்டியலில் சேர்ந்தது ஒரு பக்கம் பரிதாபம் என்றாலும், இன்னொரு பக்கம் திரைத்தொழிலின் சூட்சுமத்தை புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டதால்தான் தோல்வியடைந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.


சினிமா தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ளாமல், வீடியோ கேமராவை வைத்துக் கொண்டு கல்யாணக்காட்சிகளை எடுத்ததைப் போல் ஏனோதானோவென்று எடுக்கப்பட்ட படம்தான் - ராம்ஜி எஸ். பாலன் இயக்கிய நாகரிகக் கோமாளி! தொழில்நுட்பத்தில் பூஜ்யமாக இருந்தாலும் அது சொல்லும் செய்தியில் இந்த ஆண்டு வெளியான மற்ற எல்லாப்படங்களையும்விட நிகரற்ற படைப்பாக இருந்தது நாகரிகக்கோமாளி. தண்ணீர் பிரச்சனை தொடங்கி உலகமயமாக்கள் வரை இப்படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்த வைத்தன. ஒரு திரைப்படம் அது உருவாகிற பிரதேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை எவ்விதமானது என்பதற்கு இந்தப் படமே மிகத் துல்லியமான உதாரணம்! இப்படியொரு படத்தை எடுக்கத் துணிவில்லாத கோடம்பாக்க வியாபாரிகள் நிச்சயம் வெட்கித்தலைகுனிய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


வெற்றிபெற்றவனின் கதை மட்டுமே திரைப்படமாக்குவதற்குப் பொருத்தமான கதை என்ற நம்பிக்கை நிலவி வருகிறது திரையுலகில். இந்த மூடநம்பிக்கையிலிருந்து முற்றிலும் விலகி, வாழ்வில் தோற்றுப்போன ஒருவனின் கதையாக வெளியான படம் வெயில். இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில், அவரது சிஷ்யர் வசந்தபாலன் இயக்கிய இப்படத்தில் பரத் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவரது அண்ணன் வேடத்தில் நடித்திருந்த பசுபதியைச் சுற்றியே கதையோட்டம் அமைக்கப்பட்டிருந்தது தற்செயல் அல்ல. வணிக நோக்கத்துக்காக பரத்தின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது போல் தோன்றினாலும், அதையும் மீறி பசுபதி ஏற்ற பாத்திரமே மேலோங்கி நின்றது. கதையின் துவக்கமும், முடிவும் கூட அவரது பாத்திரத்தின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் வெயில் படத்தின் கதை என்பது பசுபதி ஏற்ற கதாபாத்திரத்தின் கதைதான். வெயில் படத்தில் சினிமா பேரடைஸோ படத்தின் சாயல் சில இடங்களில் தென்பட்டாலும், 2006 ஆம் ஆண்டின் மிகச்சிறப்பான படைப்பு இது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


ஆதி போன்ற மசாலாப்படங்களும், இது காதல் வரும் பருவம் போன்ற பாலியல் படங்களும், புதுப்பேட்டை போன்ற வன்முறைப்படங்களும், திருட்டுப்பயலே போன்ற வக்கிரப்படங்களும் இந்த ஆண்டில் தோல்வியடைந்தது திரைப்பட வியாபாரிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திய கசப்பான சம்பவங்கள். ஆனால் தமிழில் ஆரோக்கியமான திரைப்படங்கள் வர வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும், அப்படிப்பட்ட படங்களைப் படைக்க வேண்டும் என்று விரும்புகிற படைப்பாளிகளுக்கும் மகிழ்வையும், நம்பிக்கையையும் தரக் கூடிய நிகழ்வுகள். இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி வரும் வருடங்களில் தொடர வேண்டும் என்று விரும்புவோம்.

டிஜிட்டல் சினிமாவுக்கு அடித்தளம்

புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் கடந்த ஆண்டின் நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பது சந்தேகமில்லாமல் சுவாரஸ்யமான விஷயம்தான். அப்படி 2005 ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கும் போது, முந்தைய ஆண்டுகளைப் போலவே 2005லும் பட எண்ணிக்கைக்குப் பஞ்சமில்லை. தொண்ணூறு திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன- 2005 ஆம் ஆண்டில். வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை யோடு ஒப்பிடுகையில் வெற்றியின் சதவிகிதம் குறைவு தான்.


வெற்றிகரமான நூறாவது நாள் என்று போஸ்டர் ஒட்டி பல படங்கள் வெற்றி பெற்றதாகப் பிரகடனப் படுத்திக் கொண்டாலும், உண்மையான வெற்றியை ருசித்தது, சந்திரமுகி, திருப்பாச்சி, அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே, அந்நியன், கஜினி, சிவகாசி போன்ற சில படங்களே! இவற்றில், சந்திரமுகி வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றிப்படம். சுமார் பதினைந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் உலகம் தழுவிய அளவில் வசூலித்தது எழுபத்தைந்து கோடிக்கு மேல். இதற்கு முன் எந்தவொரு தமிழ்த்திரைப் படமும் எட்டாத வசூல் சாதனை இது! சந்திரமுகிக்கு அடுத்த இடத்தில் இருப்பது அந்நியன் படம். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் ஐம்பது கோடி வரை வசூல் செய்தது. ஆனாலும் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடும்போது வசூலான தொகையின் சதவிகிதம் பெருமைப்படக்கூடிய அளவில் இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

சந்திரமுகி, திருப்பாச்சி, அந்நியன், கஜினி, சிவகாசி போன்ற படங்கள் வெற்றி பெற்றதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. வணிக மதிப்பில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள், இயக்குநர்களின் கூட்டணியில் உருவான இந்தப் படங்கள் கமர்ஷியல் அம்சங்களைக் கொண்டவை. அதனால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டவை. எதிர்பார்த்ததுபோலவே வெற்றியையும் பெற்றதில் வியப்பில்லை.

எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி, வித்தியாசமான படமாய் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட வகையில் சில படங்கள் வாகை சூடியிருக்கின்றன. அவற்றில் அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே, போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. இந்தப்பட்டியலில் அமீர் இயக்கிய ராம் படத்துக்கும் இடம் உண்டு. தோல்விப்பட நாயகனாக அறியப்பட்ட ஜீவாவை வைத்து அமீர் இயக்கிய இந்தப்படம் தொழில்நுட்ப அளவில் பேசப்பட்ட படம்.

மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய சில படங்கள் தோல்வியைத் தழுவியதும் நடந்திருக்கிறது 2005ஆம் ஆண்டில். கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ், பாலா தயாரிப்பில் சூர்யா நடித்த மாயாவி, விக்ரம் நடித்த மஜா, லிங்குசாமி இயக்கத்தில் அஜீத் நடித்த ஜி, ஜெயம் ரவி நடித்த மழை, தாஸ், சூர்யா நடித்த ஆறு, சிம்பு நடித்த தொட்டி ஜெயா, விஜய் நடித்த சச்சின், பரத் நடித்த பிப்ரவரி 14, ஆர்யா நடித்த ஒரு கல்லு£ரியின் கதை, எஸ்.ஜே. சூர்யாவின் அ...ஆ.., சரத்குமார் நடித்த ஐயா, நீண்ட இடைவெளிக்குப் பின் பாசில் இயக்கிய ஒரு நாள் ஒரு கனவு, ஆட்டோகிராப் மூலம் இமாலய வெற்றியடைந்த சேரனின் தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அதனால் வெற்றிக் கோப்பையைத் தவறவிட்டுவிட்டன.

வெளிவந்த படங்களின் எண்ணிக்கை, வெற்றிப்படங்களின் சதவிகிதங்கள் இவ்வாறு இருக்க, கதை அம்சத்தில் தமிழ்சினிமா 2005 ஆம் ஆண்டில் எப்படி இருந்தன என்பதையும் பார்ப்போம். வெளிநாடுகளில் தயாராகும் படங்கள் கதை அம்சங்களைக் கொண்டு ஆக்ஷன் படம், குடும்பப்படம், குழந்தைகளுக்கான படம், நகைச்சுவைப்படம் என பல உட்பிரிவுகள் கொண்டவையாக இருக்கின்றன. தமிழில் இப்படி தரம் பிரிப்பது கடினம். பாடல், சண்டை, காமெடி, சென்ட்டிமென்ட் என கலவையாகவே இங்குள்ள படங்கள் இருக்கின்றன. எனினும் ஒரு படத்தின் அடிநாதமாக இருக்கும் விஷயத்தை வைத்து தரம்பிரித்துப் பார்க்கும்போது, 2005 ஆம் ஆண்டில் ஒன்பது காமெடிப்படங்களும், இருபத்தைந்து மசாலாப்படங்களும், பனிரெண்டு ஆக்ஷன் படங்களும், இருபது காதல் படங்களும், இருபத்தியொரு குடும்பப்படங்களும், ஒரு சயின்ஸ்ஃபிக்ஷன் படமும் (ஜித்தன்), ஒரு பக்திப்படமும் (ஐயப்பசாமி) வெளியாகி இருக்கின்றன. ஆக்ஷன் படமும் மசாலாப் படம்தான் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் முப்பத்தேழு படங்கள் மசாலாப்படங்கள்தான்.

வெளிவந்த படங்களின் எண்ணிக்கை, வெற்றிப்படங்களின் சதவிகிதம், கதை அம்சம் போன்ற அடிப்படையில் மட்டுமின்றி படங்களின் தரத்தை வைத்தும் 2005 ஆம் ஆண்டில் வெளியான படங்களை பார்ப்பதும் நம் கடமையாகிறது. ஏனெனில், வெளியான எண்ணிக்கையும் சரி, வெற்றிப்பட விகிதமும் சரி திரையுலகத்துக்கு மட்டுமே நன்மை தரக் கூடிய விஷயம். படங்களின் தரம், அதாவது படம் சொல்லும் செய்தி, அதைப்பார்க்கும் பார்வையாளனுக்குக் கிடைக்கும் அனுபவம், சமூகத்தில் அந்தப்படம் எற்படுத்தும் தாக்கம் போன்ற காரணிகளே ஒரு படத்தின் தரத்தையும் தகுதியையும் நிர்ணயிப்பதாக இருக்கின்றன.

இந்த அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு வெளியான தொண்ணூறு படங்களையும் பார்வையிடும் போது பளிச்சென கவனத்தை ஈர்ப்பதாக சில படங்களே இருக்கின்றன. பார்த்திபன் நடித்த கண்ணாடிப்பூக்கள், ஸ்ரீகாந்த் நடிக்க, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கிய கனாக்கண்டேன், ஆர்.புவனா என்ற பெண் இயக்குநர் இயக்கிய ரைட்டா தப்பா, ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் தயாரித்து, இயக்கி கதைநாயகனாகவும் நடித்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மலையாள இயக்குநர் லோகிததாஸ் இயக்கி மீராஜாஸ்மின் நடித்த கஸ்தூரிமான், கே.எஸ். அதியமான் இயக்கத்தில் மாதவன் நடித்த பிரியசகி, சேரன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்த தவமாய் தவமிருந்து போன்ற படங்கள்தான் அவை.

குழந்தைக் குற்றவாளியை இந்த சமூகம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை அம்சம் கொண்டது கண்ணாடிப் பூக்கள் படம். மலையாளப்படம் ஒன்றின் ரீமேக்கான இந்தப் படம் தமிழ்சினிமாவுக்கு பெருமை தரக் கூடிய படம். ஆனால் ரசிகர்களால் துளியும் கண்டுகொள்ளப்பாடாதது வருத்தத்துக்குரிய விஷயமே! அதே போல் ரைட்டா தப்பா என்ற படத்தையும் ரசிகர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இப்படி ஒரு படம் வெளியானதே பலருக்கும் தெரியாது என்ற அளவிலேயே இந்தப் படத்தின் வருகையும், வரவேற்பும் இருந்தன. ஈவ்டீஸிங் என்ற சமூகக் கொடுமை ஏற்படுத்தும் பாதிப்பை சிறப்பாய் சொன்ன படம் இது. பெரும்பாலான படங்களில் காதல் என்ற பெயரில் கதாநாயகர்களே ஈவ்டீஸிங் செய்து வருவதை கைதட்டி ரசிக்கும் ரசிகர்களுக்கு அதற்கு விரோதமான கருத்தைச் சொல்லும் ரைட்டா தப்பா படம் விரும்பத்தக்கதாக இல்லை என்றே தோன்றுகிறது.
கனாக்கண்டேன்- ஆடல் பாடல் சண்டை போன்ற அம்சங்கள் கொண்ட வணிகப்படமே! ஆனாலும் கடல்நீரை குடிநீராக மாற்ற வேண்டும் என்கிற சமூகப் பிரச்சனையைப் பற்றி பேசிய படம். கடல்நீரை குடிநீராக மாற்றுவது குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்காக கனாக் கண்டேன் படத்தை நல்ல படம் என்ற தகுதிப்பட்டியலில் சேர்க்கலாம் தப்பில்லை.

தமிழ்சினிமாவில் காயடிக்கப்பட்ட விஷயம் காதல்தான். அந்தக் காதலையே மாறுபட்ட கோணத்தில் அணுகிய வகையில் பிரியசகி, கஸ்தூரிமான் படங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. கண்டதும் காதலிப்பது, காதலுக்காக, காதலிக்காக உருகுவது என பொய்யான காதலை சித்தரிக்கும் படங்கள் மலிந்து விட்ட இன்றைய சூழலில், திருமணத்துக்குப் பின் காதல் எவ்வாறெல்லாம் சிதைவுக்குள்ளா கிறது. யாதார்த்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் காதல் என்ற மாயத் தோற்றம் எப்படி நிறமிழந்து போகிறது என்பதை தோலுரிக்கும் திரைப்படமாக இருந்தது பிரியசகி படம். காதல் என்பது இரண்டு பேர் சம்மந்தப்பட்டதல்ல, வெவ்வேறு பின்னணிகள் கொண்ட இரண்டு குடும்பம் சம்மந்தப்பட்டது என்று இந்தப்படம் சொல்லும் கருத்து இன்றைய இளைஞர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய விஷயமாகவும் இருந்தது.

கஸ்தூரிமான் படத்தில் சொல்லப்பட்ட காதலும் சற்று மாறுபட்டதுதான். காதல் என்பது தியாகத்தில் கட்டமைக்கப்படுவது என்பதே கஸ்தூரிமான் படத்தின் செய்தியாக இருந்தது. இந்தப்படத்தின் கதை அம்சம் மட்டுமல்ல, திரைக்கதையும் ஆரோக்கியமாய் இருந்தது கூடுதல் சிறப்பு.

தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படமும், சேரனின் தவமாய் தவமிருந்து படமும் நாணயத்தின் இரு பக்கங்களாய் ஒரே தளத்தில் இயங்கியவை. பொறுப்பில்லாத தந்தையின் தான்தோன்றித்தனத்தை சொன்ன சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படம், பொறுப்பற்ற தந்தைகளுக்கு தம் கடமையை புரிய வைக்கும் படமாய் உருவாக்கப்பட்டிருந்தது. தவமாய் தவமிருந்து படமோ.. தன் இரு பிள்ளைகளை வளர்க்க ஒரு தந்தை செய்யும் தியாகங்களையும், பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக ஒரு தந்தை எதிர்கொள்ளும் சிரமங்களையும் அழுத்தமாய் சொன்ன அற்புதமான படைப்பு. தந்தைகளை வில்லன்களாகப் பார்க்கும் இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவரும் பார்த்துத் திருந்த வேண்டிய படம். ஆனாலும் இந்தப் படத்தை ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. ரசிர்களின் ரசனைக்குறைபாடு ஒரு காரணம் என்றால், படத்தின் அநியாய நீளமும் தவமாய் தவமிருந்து சேரன் எடுத்த இந்தப்படத்தை ரசிகர்கள் நிராகரிக்க முக்கிய காரணமாகிவிட்டது.

வெற்றி தோல்வி அடிப்படையில் திரைப்படங்களை அளவிடுவது, கதை அம்சங்களை வைத்து அதன் தரத்தை எடைபோடுவது தவிர தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 2005 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

திரைப்பட தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது ஃபிலிம்! படத்தின் தயாரிப்புச் செலவில் ஃபிலிமும், அது தொடர்பான செலவுகளும் சுமார் இருபது சதவிகிதத்தை விழுங்கிவிடுகின்றன. இந்த செலவு, நல்ல கதை அம்சம் கொண்ட படங்களின் வருகைக்கு ஒருவகையில் தடையாக இருப்பதும் கண்கூடான விஷயம். செலவு செய்த பணத்தை லாபத்தோடு திரும்ப எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செலுலாய்டு குப்பைகள் எல்லாம் திரைப்படங்களாக திரையரங்கை நோக்கிப் படை எடுத்துக் கொண்டிருக்கின்றன. படத்தின் தயாரிப்புச் செலவு மட்டுப்படும் போது ஆரோக்யமான முயற்சிகள் கைகூடலாம்.

அதற்கு ஃபிலிம் இல்லாமல் படமாக்கப்படக் கூடிய டிஜிட்டல் சினிமா நல்லதொரு வரப்பிரசாதம். ஹாலிவுட்டில் புழக்கத்தில் இருக்கும் டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பம் தமிழில் ஏற்கனவே சிலரால் கையாளப்பட்டு தோல்வியடைந்தது. ஆனாலும் கமல் மீண்டும் முயற்சி செய்தார் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில். அதில் அவர் ஓரளவு வெற்றியடைந்தாலும் சின்னச்சின்ன குறைபாடுகளும் தென்பட்டன. அதனால் டிஜிட்டல் சினிமாவின் எதிர்காலம் தமிழில் கேள்விக்குறியான நிலையில், தவமாய் தவமிருந்து படத்தை டிஜிட்டலில் படமாக்கி மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் சேரன். இதன் மூலம் டிஜிட்டல் சினிமாவை பலரும் பயன்படுத்தக்கூடிய சூழல் உருவானது. எதிர்காலத்தில் டிஜிட்டல் சினிமா பரவலாகும்போது அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த வகையில் தமிழ்சினிமா வரலாற்றில் 2005 ஆம் ஆண்டு இடம்பிடிக்கும் என்பது நிச்சயம்.


தறிகெட்ட தயாரிப்புச் செலவு

திரையுலகில் கோரிக்கைகளும், கூக்குரல்களும் எப்போதுமே ஓய்வதில்லை. ஏதாவது ஒரு அமைப்பிடமிருந்து, ஏதேனும் கோரிக்கைகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவை பல நேரங்களில் அபத்தமாகவும், அபூர்வமாக சில சமயங்களில் ஆக்கபூர்வமானதாகவும் இருப்பதுண்டு. அப்படி திரையுலகில் சமீப காலத்தில் ஒலித்த கோரிக்கை..’தமிழ்ப்படங்களின் தயாரிப்புச் செலவை கட்டுப்படுத்த வேண்டும்’ என்பது! அதன் பின்னணிக் காரணத்துக்குள் போவதற்கு முன், தமிழ்ப்படங்களின் தயாரிப்புச் செலவு இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.


தொண்ணூறுகளின் துவக்கம் வரை தமிழ்ப்படங்களின் தயாரிப்புச் செலவு என்பது லட்சங்களிலேயே இருந்தது. லோ பட்ஜெட் என்கிற சிறு முதலீட்டுப்படங்கள் அதிகபட்சம் இருபத்தைந்து லட்சங்களிலும், மீடியம் பட்ஜெட் படங்கள் ஐம்பது லட்சங்களுக்கு மிகாமலும், பெரிய பட்ஜெட் படங்கள் எழுபது முதல் தொண்ணூறு லட்சங்களிலும் தயாராகின.


இன்றைக்கு லோ பட்ஜெட் படங்களின் பட்ஜெட்டே ஒரு கோடி! மீடியம் பட்ஜெட் படங்களுக்கு இரண்டு முதல் மூன்று கோடிகள் வரையிலும் செலவிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு உச்சவரம்பு இல்லை. ஷங்கரின் சிவாஜி படத்தின் பட்ஜெட் ஐம்பது கோடி என்றும், கமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தின் பட்ஜெட் நாற்பது கோடி என்றும் சொல்லப்பட்டன. இவற்றை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்தின் பட்ஜெட் நூற்றி ஐம்பது கோடி!


தமிழ்ப்படங்களின் பட்ஜெட் இந்தளவுக்கு எகிறியதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களே சொல்வது... நட்சத்திரங்களின் சம்பளத்தைத்தான்! இதை அலட்சியப்படுத்த முடியாது. படத்தின் தயாரிப்புச் செலவில் சுமார் நாற்பது சதவிகிதம் நட்சத்திரங்களுக்கு சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. ஏன் இப்படி? படங்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வணிக மதிப்புள்ள பட நாயகர்களின் எண்ணிக்கைக் குறைவாகவும் இருப்பதுதான் அடிப்படையான காரணம்.


ஒரு வெற்றிப்படத்தில் நடித்தால் போதும், அந்தக் கதாநாயக நடிகரை தயாரிப்பாளர்கள் மொய்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். தனக்கு இத்தனை வரவேற்பு இருப்பது தெரிந்ததும் அவர் ஒரு கோடி சம்பளம் கேட்கிறார். கொடுக்கத்தயாராகிறார்கள் தயாரிப்பாளர்கள். ஒரு படத்தில் நடித்தவருக்கே இப்படி என்றால் முன்னணி கதாநாயகர்களுக்கு எத்தனை கிராக்கி இருக்கும்?
கதாநாயக நடிகர்களின் சம்பளம் இந்தளவுக்கு உச்சத்தைத் தொட காரணம் என்ன? வெயிலில் காய்ந்து, வியர்வையில் குளித்து, வயலில் ஏர் உழுகிற ஏழை விவசாயத் தொழிலாளியைவிட இவர்கள் அதிகம் உழைத்துவிடவில்லை. அவன் நியாயமான சம்பளத்துக்கே போராட வேண்டியிருக்கிறது. இவர்களுக்கோ கரன்ஸிக் கட்டுகளை காலடியில் கொட்டுகிறார்கள். நட்சத்திரங்களின் சம்பளம் என்பது அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமாக இல்லாமல் வியாபாரத்துக்கான ஊதியமாக நியாயப்படுத்தப்படுவதுதான் காரணம்!


வியாபாரத்துக்கான ஊதியம் என்றால்?

இது பற்றி சற்று விளக்கமாகப் பேச வேண்டும்!


ஒரு கதாநாயக நடிகருக்கு ஒரு கோடி கொடுத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர், மேலும் இரண்டு கோடிகள் செலவு செய்து மூன்று கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கிறார். அவர் முதலீடு செய்த மூன்று கோடிக்கு வட்டியையும், லாபத்தையும் கணக்குப் போட்டு அந்தப் படத்தை நான்கு கோடிக்கு விற்கிறார். நான்கு கோடிக்கு படத்தை வாங்கியவர்கள், தங்களின் லாபத்தைக் கணக்கிட்டு, திரையரங்கினரிடமிருந்து ஐந்து கோடி பெறுகிறார்கள். ஐந்து கோடிக்கு படத்தை வாங்கிய திரையரங்கினர், ஒருவேளை படம் சரியில்லை என்றால் என்ன செய்வது என்ற பயத்திலும், தன் முதலீட்டையும், லாபத்தையும் சீக்கிரமே எடுத்துவிட வேண்டும் என்பதற்காவும் அதிகக் கட்டணத்தை வசூல் செய்தும், நிர்ண யிக்கப்பட்ட அளவுக்கு மேல் மக்களை அனுமதித்தும் பணத்தை அள்ளுகிறார்கள்.


இப்படியாக - அந்தப்படம் ஏழு கோடி வசூல் செய்வதாக வைத்துக் கொள்வோம். இந்த செய்தி அந்தப்படத்தில் நடித்த கதாநாயக நடிகரின் காதுக்குப் போகும் போது, ‘Ôஎன்னை வைத்துப்படம் எடுத்தால் ஏழு கோடி வசூலாகும். அதனால் எனக்கு இரண்டு கோடி சம்பளம் வேணும்’’ என்று தன்னை ஏலம் போடுகிறார். அதோடு, ‘Ôஐந்து கோடி பட்ஜெட்டில் படத்தை எடுக்க வேண்டும்’’ என்று அன்புக் கட்டளையும் (அதிகாரக் கட்டளை?) போடுகிறார். அதற்கு உடன்பட்டு வேறொருவர், ஐந்து கோடியில் படம் எடுக்கும்போது, விநியோகஸ்தர், திரையரங்கினர் என்று கைமாறி, கடைசியில் அதன் வியாபாரம் பத்துகோடி என்றாகிவிடுகிறது. பத்து கோடிக்கு விற்கப்பட்ட படம் பதினைந்து கோடி வசூல் செய்யும் போது...மீண்டும் உயர்கின்றன நட்சத்திர சம்பளமும், படத்தின் பட்ஜெட்டும்! லட்சங்களில் இருந்த தமிழ்த்திரைப்படங்களின் தயாரிப்புச் செலவு கோடிகளான கதை இப்படித்தான்.


சரி.. தயாரிப்புச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற விஷயத்துக்கு வருவோம். சாத்தியம்தானா இது? திரைத்துறையில் பிற பிரிவினரிடம் இதற்கு ஆதரவு இருந்தாலும், கதாநாயக நடிகர்கள் மத்தியில் மட்டும் கடும் எதிர்ப்பு. எனவே, அவர்களுக்கு பாதகமான இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதும் கடினமே! ஏனெனில் இன்றைய திரைப்படத்துறை நடிகர்களை நம்பியே இருக்கிறது.


தயாரிப்பாளரின் பணம், இயக்குநரின் எண்ணம், பிற தொழில் நுட்பக்கலைஞர்களின் உழைப்பு ஒன்றிணையும்போதுதான் திரைப்படம் சாத்தியமாகிறது. என்றாலும் திரைப்படங்களின் வியாபார பேரத்தின்போது, இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. கதாநாயக நடிகர்களின் மார்க்கெட் வேல்யூ என்கிற வணிக மதிப்பு மட்டுமே திரைப்படங்களின் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது. அதனால் அத்திரைப்படம் வெற்றியடைகிறபோது அதன் பலனை அறுவடை செய்கிறவர்களாகவும் கதாநாயக நடிகர்களே இருக்கிறார்கள். (பலன் என்பது பெரும்பாலும் அவர்களின் சம்பள உயர்வு)


ஆக - பணத்தை முதலீடு செய்வது தயாரிப்பாளர்களாக இருந்தாலும், திரைப்பட வணிகத்தில் கதாநாயக நடிகர்களே முன்னிலைப்படுத்தப்படுவதால், அவர்களுக்கு பாதகம் தரக்கூடிய இந்த விஷயத்துக்கு உடன்பட மாட்டார்கள் என்பது உறுதியான விஷயம். அதற்காக இந்த கோரிக்கையை கைவிடுவதும் நியாய மில்லை என்றே தோன்றுகிறது. பட்ஜெட்டிலும், வியாபாரத்திலும் தமிழ்த்திரைப்படங்கள் விண்ணைத் தொட்டாலும், கதை அம்சத்தில் இன்னமும் குண்டு சட்டிக்குள்தான் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.


குடும்பத்தை கொன்ற வில்லனை பழிவாங்குகிறவனும், சாலையில் சந்தித்த பெண்ணை அடைவதற்காக அவள் பின்னால் லோ லோ என்று அலைகிறவனும்தான் இன்னமும் தமிழ்ப் படங்களின் கதைக்குத் தலைமை தாங்குகிறார்கள். அதாவது கதாநாயகன்! விதிவிலக்காய் சில வித்தியாசமான படங்கள் வந்தாலும், தொண்ணூறு சதவிகிதப்படங்களில் இப்படிப்பட்ட புளித்துப்போன கதைகள்தான். இதைப் படமாக எடுக்க எதற்கு பதினைந்து கோடியும், இருபது கோடியும்?


திரைப்படங்களுக்கு எத்தனை கோடி செலவு செய்தாலும் அதை திரையரங்குகளில்தான் திரும்ப எடுத்தாக வேண்டும். அங்கே பணம் கொடுத்து படம் பார்ப்பவர்கள் பாமர மக்கள்தான். தமிழ்ப்படங்களின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பதன் மூலம் மக்களே மேலும் மேலும் மொட்டையடிக்கப்படுகிறார்கள். திரைப்படத் துறைக்கு வரும் ஆபத்திலிருந்து அதை காப்பாற்றுவதற்காக இல்லாவிட்டாலும், மக்கள் நலனை மனதில் கொண்டாவது தமிழ்ப்படங்களின் தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தியே தீர வேண்டும்.


திரைப்படங்களையும், திரைப்படத்துறையையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மீது சினிமாக்காரர்களுக்கு உண்மை யிலேயே அக்கறை இருந்தால் இதை உடனே அவர்கள் செய்ய வேண்டும்.

தாமதம் ஏன்? தரமா...தயக்கமா...

படத்துறையைப்பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால்..அது ஒரு பரமபதம்! இங்கே ஏணியில் ஏறி உச்சிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையைவிட, பாம்பின் வாய்க்குள் அகப்பட்டு பாதாளத்துக்கு செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். குறுகிய காலத்திலேயே கோடிகளில் புரளலாம் என்பது மட்டுமல்ல, புகழ் வெளிச்சத்தில் ஜொலிக்க வேண்டும் என்பதே பலரும் படத்துறையை நோக்கி படையெடுக்க முதன்மையான காரணமாக இருக்கிறது. புகழோடு பணம் என்கிற நோக்கத்தோடு திரைத்துறைக்குள் அடியெடுத்து வைப்பவர்களில் வெகு சிலருக்கே வெற்றி வசப்படுகிறது. பலருக்கும் வெற்றி கடைசிவரை கனவாகவே ஆகிவிடுகிறது.


வெற்றி பெற்றவர்கள் அடுத்தடுத்த படிகளில் ஏறி உச்சியை அடைவதும், தோற்றவர்கள் துவண்டுபோய், ஒரு கட்டத்தில் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், தன் லட்சியத்தைவிட்டே வெகுதொலைவு விலகிப் போய்விடுவதும் வியப்பான விஷயமில்லை.
வெற்றி பெற்றவர்களே காணாமல் போகிறார்கள் என்றால்? அதுவும் பணம் கொட்டும் படத்துறையில்? இப்படி ஒரு அதிசயத்தை அண்மை வருடங்களாக படத்துறையில் காணமுடிவதுதான் ஆச்சர்யத்தையும், கூடவே கேள்விகளையும் எழுப்புகிறது. தனக்குக் கிடைத்த வெற்றியை சற்றும் தாமதிக்காமல், உடனடியாய் பணமாக்குவது திரைப்படத் துறையினருக்கே உரித்தான பொதுவான குணாம்சம். அதாவது காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வது! கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், திரைத்துறையில் காலா காலத்துக்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதைவிட, அதை எப்படி பணமாக்குவது என்பதில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். இதில் நட்சத்திரங்கள் என்றில்லை, இயக்குநர்களும் அடக்கம்தான்.

ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்துவிட்டால் போதும், அடுத்த சில நாட்களிலேயே அந்த இயக்குநர் அரை டஜன் படங்களில் ஒப்பந்தமாகிவிடுவதும், கதை இன்ன பிற விஷயங்கள் முடிவா காமலே படபூஜைகள் விமரிசையாக நடப்பதும் திரைப்படத் துறையில் சர்வசாதாரணம்.

அந்த இயக்குநரிடம் அடுத்தப்படத்துக்கு கதை தயாராக இருக்கிறதா என்று அவரை வைத்து படம் எடுக்க முன்வருபவர் களும் கவலைப்பட்டதில்லை. கதை என்னவென்று முடிவு செய்யாமலே கைநீட்டி அட்வான்ஸை வாங்குகிறோமே என்று இயக்குநர்களும் கவலைப்பட்டதில்லை. இப்படியான சூழல் தமிழ்த்திரையுலகில் நிலவியதால்தான் சில இயக்குநர்களால் வருஷத்துக்கு நான்கைந்து படங்களைக்கூட இயக்க முடிந்தது. ஒரு காலத்தில் ராமநாராயணன் மாதத்துக்கு ஒரு படம் இயக்கியதாகக் கூட செய்தி உண்டு.

இதற்கு நேர்மாறாக இருக்கிறது திரையுலகில் தென்படும் இன்றைய சூழல். மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர்களில் பலர் அடுத்தப்படத்தைப் பற்றி அறிவிக்காமலே வருடக்கணக்கில் அமைதிகாத்தனர்.

‘பிதாமகன்’ படத்தை இயக்கிய பிறகு ‘நான் கடவுள்’ படத்தைத் தொடங்க இயக்குநர் பாலாவுக்கு மூன்றாண்டுகளுக்கு மேலானது. வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த ‘திருடா திருடி’ என்ற படத்தை இயக்கிய சுப்பிரமணியம்சிவா, ‘பொறி’ என்ற தன் அடுத்தப்படத்தை ஆரம்பிக்க எடுத்து கொண்ட காலமும் மூன்றாண்டுகளுக்குமேல்தான். வணிக மதிப்பில்லாத நட்சத் திரங்களை வைத்து ‘ராம்’ என்ற படத்தை இயக்கி வெற்றியடைந்த தோடு, வித்தியாசமான இயக்குநர் என்ற விலாஸத்தையும் பெற்ற அமீருக்கு, அடுத்தப்படம் - ‘பருத்திவீரன்’ - தொடங்க, ஒன்றரை ஆண்டுகள் பிடித்தது. ‘காதல்’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்ததன் மூலம் திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த, இயக்குநர் பாலாஜிசக்திவேல், ‘காதல்’ படம் வெளியாகி ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கடந்த பிறகே Ôகல்லூரி’ படத்தை ஆரம்பித்தார். ‘இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி’ என்ற சரித்திர நகைச்சுவைப்படத்தைக் கொடுத்த சிம்புதேவன், மாதங்கள் பல கடந்துவிட்ட நிலையில் கனத்த மௌனத்துக்குப்பிறகே Ôஅறை எண் 301ல் கடவுள்’ படத்தின் அறிவிப்பையே வெளியிட்டார். ‘சித்திரம் பேசுதடி’ இயக்குநர் மிஷ்கினும் கூட இந்தப் பட்டியலில் உண்டு!

இவர்கள் எல்லாம் சட்டென நினைவுக்கு வந்த உதாரணங்கள்தான்! வெற்றி பெற்ற வேறு சில இயக்குநர்களும் கூட அடுத்த அடியை எடுத்த வைக்காமலே இருந்தார்கள்.

இந்த தாமதத்துக்கு அல்லது தயக்கத்துக்கு என்ன காரணம் இருக்க முடியும்? நட்சத்திர நடிகர்களை நம்பி இருக்கும் திரையுலகில் அவர்களின் கால்ஷீட்டை பொறுத்தே இயக்குநர்களின் தலைஎழுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் மறுப்பதற் கில்லை. ஆனால் வெற்றியடைந்த இயக்குநர்களுக்கு நட்சத் திரங்களின் கால்ஷீட் ஒரு பிரச்சனையே இல்லை. ஏனெனில், முன்னணி நட்சத்திரங்கள் காத்திருப்பதும், விரும்புவதும் வெற்றி பெற்ற இயக்குநர்களின் கூட்டணியைத்தான்.

அதுபோல் இவர்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்களும் தயாராகவே இருப்பார்கள் என்பதை தனியாக சொல்லத்தேவை யில்லை. ஆக இவர்களுக்கு நட்சத்திர நடிகர்களின் கால்ஷீட்டும், தயாரிப்பாளர்களும் பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை என்கிறபோது வேறென்ன காரணங்கள் இருக்க முடியும் என்ற கேள்வியின் தொடர்ச்சியாக, வேறுசில உப கேள்விகளும் எழுகின்றன.

முந்தைய படத்தில் கிடைத்த வெற்றி ஏற்படுத்திய பயமா? அல்லது, அந்த வெற்றியால் ரசிகத்தரப்பில் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யப்போகிறோம் என்ற கவலையா? அடுத்து என்ன கதையை படமாக்கலாம் என்ற குழப்பமா? ஒருவேளை, கதைப்பஞ்சமா? அல்லது அவர்களின் சரக்கே அவ்வளவுதானா? பட எண்ணிக்கையைவிட தரமான படைப்பைத் தரவேண்டும் என்ற வேட்கையா? தெரியவில்லை!

ஒன்று மட்டும் நிச்சயம். இவை எல்லாமே அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றே காரணமாக இருக்க முடியும் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. அதே நேரம், கைக்கெட்டும் தூரத்தில் பணப்பெட்டியோடு தயாரிப்பாளர்கள் காத்திருப்பது தெரிந்தும், அவர்களின் அவசரத்துக்கு ஆட்படாமல் தன் படைப்பின் பொருட்டு காலத்தை செலவிட்டுக் கொண்டிருப்பதும் இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களிடம் காணப்படும் நல்ல அம்சம் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

உலக அளவில் காலங்கள் பல கடந்தும் இன்றளவும் பேசப்படும் புகழ்பெற்ற பல படைப்பாளிகள் திரைப்பட ரசிக மனங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் அவர்களின் பட எண்ணிக்கை அல்ல, அவர்களின் படைப்பின் தரமே!

நம் இயக்குநர்களின் தாமதமும் இப்படியான படைப்புகளைத் தருவதற்கான காலஅவகாசமாக இருக்கும்பட்சம், அவர்களின் தாமதத்தில் தவறில்லை என்றே தோன்றுகிறது. மொத்தத்தில், இவர்களின் தாமதத்துக்குப் பின்னால் தரமான படைப்பு வெளிப்பட்டால் மகிழ்ச்சி. அப்போதுதான் இந்த தாமதத்துக்கும் அர்த்தம் இருக்கும்.

எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்


நலிவடைந்த தொழில்களுக்கு அரசு சலுகைகளை அறிவிப்பது அந்தத் தொழிலை சார்ந்திருப்பவர்கள் தொடர் நஷ்டத்தினால் தெருவுக்கு வராமல் இருக்கவும், நசிந்துபோன அத்தொழிலை வீழ்ச்சி யிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவும் தான். திரையுலகுக்கு தமிழக அரசு அள்ளி இறைக்கும் சலுகைகளை இந்த அடிப்படையில் வகைப்படுத்த முடியாது! காரணம்..விவசாயம் போன்ற பிற தொழில்களோடு ஒப்பிடும்போது திரைத்தொழில் அப்படி ஒன்றும் நசிந்துவிடவில்லை. தவிர, சலுகைகளை அறிவித்து அத்தொழிலைக்காப்பாற்ற வேண்டிய அளவுக்கு திரைத்தொழில் அப்படி ஒன்றும் மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டதும் அல்ல.

அதே சமயம், சமீப காலமாக, தமிழ்ப்படங்களின் வெற்றி சதவிகிதம் குறைந்து வருவதன் மூலம் திரைப்படத்தயாரிப்புக்காக செய்யப்படும் முதலீட்டுக்கு, குறைந்தபட்ச உத்திரவாதம் கூட இல்லாமல்போய்விட்டதையும் மறுப்பதற்கில்லை. என்றாலும், அங்கே புழங்கிக்கொண்டிருக்கும் கோடிகளுக்கொன்றும் குறைச்சலில்லைதான். லாபத்தையும், வருமானத்தையும் அறுவடை செய்பவர்களுக்கும் குந்தகம் ஏற்பட்டுவிடவில்லை.

உண்மையைச் சொல்லப்போனால் செழிப்பாகத்தான் இருக்கிறது செலுலாய்டு உலகம்! ஆனாலும் நஷ்டம் நஷ்டம் என்று ஓயாமல் ஒப்பாரி வைத்தே அரசிடமிருந்து ஏராளமான சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் திரைப்படத் துறையினர். குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை ஐந்து லட்சத்திலிருந்து ஏழு லட்சமாக உயர்த்தியது தமிழக அரசு. அதையடுத்து, தமிழில் பெயர் சூட்டப்படும் புதிய படங்களுக்கு வரிவிலக்கு என்றும் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, ‘புதிய படங்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே வெளியான படங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்’ என்று அறிவித்ததன் மூலம் திரைத்துறையினரை மகிழ்ச்சியில் திளைக்கவும், திக்குமுக்காடவும் வைத்தது தமிழக அரசு. இப்படி அரசால் வழங்கப்பட்ட சலுகைகளை, குறிப்பாக வரிவிலக்கு என்ற சலுகையின் பலனை மக்களோடு பகிர்ந்து கொள்ள முன்வராமல், அதன் முழுப்பலனையும் தாங்களே அனுபவித்தார்கள் திரையுலகினர். அதன் காரணமாகவோ என்னவோ, திரையரங்குக் கட்டணங்களை கணிசமாகக் குறைத்தது அரசு.

‘திரையரங்குக் கட்டணத்தைக் குறைத்தால் திரைப்படம் பார்க்க வரும் பார்வை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்ற எண்ணத்தில், திரையுலக அமைப்புகளே அரசிடம் வேண்டுகோள் வைத்து அதன் அடிப்படையில் செய்யப்பட்ட அறிவிப்பு என்று சொல்லப்பட்டது. ஆனாலும் திரைத்துறையிலேயே ஒரு சாரருக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை!

இது ஒரு பக்கமிருக்க, திரையரங்கக்கட்டணக் குறைப்பினால் திரையரங்குகள் மீண்டும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு, 2007 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் - விஜய் நடித்த போக்கிரி, அஜீத் நடித்த ஆழ்வார், விஷால் நடித்த தாமிரபரணி போன்ற படங்கள் வெளிவந்தன. (மணிரத்னம் இயக்கிய குரு ஹிந்திப் படத்தின் தமிழ்ப்பதிப்பும் பொங்கல் வெளியீட்டுப்படங்களில் அடக்கம்.) இவற்றில் போக்கிரி படத்தின் பட்ஜெட் மட்டுமே இருபது கோடி! ஆழ்வார் எட்டு கோடி செலவிலும், தாமிரபரணி நான்கு கோடி செலவிலும் தயாரிக்கப்பட்டன. முப்பத்திரண்டு கோடிகளை விழுங்கிய இம்மூன்று படங்களும் சுமார் நாற்பது கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

நாற்பது கோடிக்கு படத்தை வாங்கியவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அவர்களின் இலக்கு ஐம்பது கோடிக்குக்குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இவர்களின் எண்ணம் ஈடேறாதது மட்டுமல்ல, போட்ட பணம் திரும்பி வராது என்பதும் ஒருகட்டத்தில் உறுதிப்பட்டது. காரணம்.. போக்கிரி, ஆழ்வார், தாமிரபரணி என மூன்று படங்களும் மக்களை திருப்திப்படுத்தவில்லை. அதன் காரணமாய் இந்தப்படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பும் இல்லை, வசூலும் இல்லை. மக்களின் இந்தத் தீர்ப்பை வைத்து, ‘திரையரங்குக் கட்டணக் குறைப்பினால் படத்துறைக்கு பயனில்லை,’ என்று திரைப்படத் துறையினர் முணுமுணுக்கத் தொடங்கினர். ஏனெனில், எந்தவொரு பிரச்சனையையுமே ஆழ்ந்து, அலசிப்பார்க்காமல், மேலோட்டமாக, மேம்போக்காக அணுகும் திரையுலகினர் இந்த விஷயத்தையும் அவ்வாறே அணுகினார்கள்.

உண்மையில் 2007 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீட்டுப் படங்கள் திரைப்படத்துறையினரையும், மக்களையும் ஏமாற்றியதற்கு என்ன காரணம்? அவற்றின் கதைஅம்சத்தைப் பார்த்தாலே காரணம் புரியும். போக்கிரி படத்தின் கதாநாயகன் கூலிப்படையைச் சேர்ந்தவன். முதல் காட்சியில் தூக்கிய துப்பாக்கியை கடைசிவரை கீழே போடவில்லை. படம் முழுக்க சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தான். போலீஸ் அவனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்க, கடைசியில் அவனைப்பற்றிய ரகசியத்தை உடைத்தார்கள். அவன் ஐபிஎஸ் படித்த போலீஸ் அதிகாரியாம். ரௌடிகளை அழிக்க ரௌடி அவதாரம் எடுத்தவனாம். முள்ளை முள்ளால் எடுக்கிறார்களாம். நான்கு வரிக்கதையே இத்தனை நாராசமாக இருக்கிறதே? மொத்தப்படத்தையும் பார்த்த மக்களின் நிலமையை நினைத்துப்பாருங்கள்? இப்படி ஒரு உலகமகா கதையை ஒரு கோடி கொடுத்து தெலுங்கிலிருந்து இறக்குமதி செய்தார்கள் என்பதுதான் வேடிக்கை. (இவர்கள் விலை கொடுத்து வாங்கிய தெலுங்குப்படம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ரஜினி நடித்த பாண்டியன் என்ற படத்தின் உல்டா என்பது தனிக்கதை)

ஆழ்வார் படத்தின் கதாநாயகனும் துப்பாக்கியோடுதான் திரிந்தான். தன் குடும்பத்தை அழித்த வில்லன்களை பழிதீர்க்கப் புறப்படும் இவன் பிணவறையில் வார்டுபாய் வேலை பார்த்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ராமன், கிருஷ்ணன் என கடவுள் அவதாரம் எடுத்து வில்லன்களை வேட்டையாடினான். தாமிரபரணி படத்தின் கதாநாயகன் கையில் துப்பாக்கி இல்லை! அதற்காக ஆறுதல் அடைய முடியவில்லை. காரணம் அவன் கையில் வீச்சரிவாள் இருந்ததே! படத்தின் முதல் காட்சியில் ஓடும் ரயிலை நிறுத்தி எதிரிகளை வெட்டிசாய்த்தான். முதல் காட்சியின் லட்சணமே இப்படி என்றால், முழுப்படத்தின் கதையையும் நீங்களே புரிந்து கொள்ளலாம். திரையில் வழியும் ரத்தம் படம் பார்க்கும் நம்மீதும் பட்டது போல் படம் நெடுகிலும் ரத்தக்களறி!கதை அம்சம் மட்டுமல்ல, காட்சி அமைப்பிலும் ஏறக்குறைய இம்மூன்று படங்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. நடித் தவர்களின் முகம்தான் வேறாக இருந்ததே தவிர, செயல்களில் வேறுபாட்டைக்காண முடியவில்லை. மொத்தத்தில், வன்முறை யைத் தூக்கிப்பிடிக்கும் துப்பாக்கி, வீச்சரிவாள் கலாச்சாரம்தான் பொதுவான அம்சமாக இருந்தது. காவல்துறையின் என்கௌன்ட் டர்களின் மூலம் தமிழகம் முழுக்க பரவலாக ரௌடிகளின் கொட்டம் அடக்கப்பட்டுவிட்ட நிலையில் தமிழப்படங்களில் மட்டும் ரௌடிகள் ராஜ்யம் நடக்கிறது. கதாநாயகன்களே ரௌடிகளாகி, குத்துப்பாட்டுப்பாடிக் கொண்டு கும்மாளம்போடுகிறார்கள்.

ஒரு பக்கம், ஏற்கனவே பார்த்து சலித்துப்போன பழைய கதை, இன்னொரு பக்கம் கதாநாயகன்களை திருப்திப்படுத்துவதற்காக வைக்கப்படும் கொஞ்சமும் நம்பமுடியாத, ஜீரணித்துக்கொள்ளவே முடியாத காட்சி அமைப்புகள். மொத்தத்தில் - கால் கடுக்க நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்க்க வரும் ரசிகனை, அவன் எதிர்பார்ப்பை இவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. அவன் ஏமாற்றமடைகிறபோது இப்படிப்பட்ட படங்களை புறக்கணிப் பதில் தப்பென்ன?ஆக - 2007 ஆம் ஆண்டின் பொங்கல் படங்கள் மட்டுமல்ல, பெருவாரியான தமிழ்ப்படங்களின் தோல்விக்கு மேற்சொன்ன அம்சங்களே காரணமாக இருக்கின்றன.

அவற்றை உணர்ந்து திரையுலகினர் தங்களின் போக்கை, மனோபாவத்தை மாற்றிக் கொள்ளாதவரை, திரையரங்குக் கட்டணக்குறைப்பு மட்டுமல்ல, வேறு எந்த சலுகையாலும் கூட திரையரங்குக்கு மக்களை வர வைத்துவிட முடியாது. ஏமாற்றமும், நஷ்டமும் தொடரவேச் செய்யும்.