Sunday 8 November 2009

சாசனம்

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி என மிகச்சிறந்த படங்களைத் தந்த மகேந்திரன் நீண்ட ஓய்வுக்குப் பிறகு எழுதி இயக்கிய திரைப்படம் சாசனம்! கதை அம்சம் தொடங்கி உருவாக்கம் வரை எல்லா வகையிலும் இன்றைய தமிழ்ப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபடும் படமாக சாசனத்தை தந்திருந்தார் மகேந்திரன்.

நம் நாட்டில் எழுதப்பட்ட எத்தனையோ சாசனங் கள் இருக்கின்றன. சட்டங்கள் என்கிற அந்த சாசனங் களை மீறாமல் கடைபிடிக்கிறோம். சாசனம் படத்தில் சொல்லப்பட்டிருப்பதோ, நன்றி மறக்காதிருத்தல், பிறரிடம் அன்பு காட்டுதல், மதித்தல் போன்ற எழுதப் படாத சாசனங்கள் பற்றி. இவற்றை பின்பற்றி வாழும் போதுதான் வாழ்க்கை அர்த்தபூர்வமாகிறது. அப்படி ஒரு வாழ்க்கையை வாழும் மனிதர்களின் கதைதான் சாசனம் படம்!

காரைக்குடியை உள்ளடக்கிய செட்டிநாட்டில் படப்பிடிப்பு நடைபெறுவது இன்றைய தமிழ்ப்படங் களில் தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது. ஆனால் சாசனம் படத்தின் படப்பிடிப்பு செட்டி நாட்டில் நடத்தப்பட்டதில் அர்த்தபூர்வமான விஷயம் அடங்கியிருக்கிறது. அதன் கதைக்களமே செட்டிநாடு தான். படப்பிடிப்பு நடத்தப்பட்ட கண்டணூர் கிராமத்தில்தான் சாசனம் படத்தின் கதையும் நிகழ்கிறது என்பது ஆச்சர்யமான ஒற்றுமை. கதைக்களத்திலேயே, நிஜமான மனிதர்களின் மத்தியில் படப்பிடிப்பு நடத்தியது சாசனம் படத்தின் கதைக்கு கூடுதல் வலிமையை சேர்த்திருப்பது மட்டுமல்ல, நகரத்தார்களின் வாழ்க்கைப் பதிவாகவும் சாசனம் படம் புதுப்பரிணாமம் பெற்றிருக்கிறது.

செட்டிநாட்டுக் கலாச்சாரத்தின் இன்றைய யதார்த்த நிலையை அசலாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதனாலேயே சாசனம் - நகரத்தார்களின் வாழ்க்கை சரிதமாகி இருக்கிறது. செட்டிநாட்டுக் கலாச்சாரப் பெருமைகளைக் நகரத்தார் கட்டிக்காக்கும் விதம், வாழ்க்கையின் துயரச்சூழலில் சில நேரங்களில் தன் கலாச்சாரத்தை இழக்க நேரும் நிர்ப்பந்தம் அவர்களை ஆட்கொள்ளும்போது அடையும் துயரம் என அவர்களின் உணர்வுகள் படம் முழுக்க வியாபித்து நிற்கின்றன.

கதை நிகழும் பகுதியிலேயே சாசனம் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும் கலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருதுவின் பணியும் அலாதியானது. பின்புலத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நுணுக்கமாகக் கிரகித்து தன் பங்களிப்பை அளித்திருக்கிறார் மருது.இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் அரவிந்த்ஸாமி! சுவீகாரம் கொடுக்கப்பட்ட ஒருவனின் மனத்துயரத்தை இத்தனை அழகாய் எவரால் வெளிப்படுத்த முடியும்? அவரது மனைவியாக கௌதமி! நமக்கும் இப்படி ஒரு மனைவி வாய்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரம். அவருக்குக் கொடுக்கப்பட்ட பின்னணிக் குரல்தான் ஆண்தனமாக பயமுறுத்தியது.சரபோஜி மன்னரின் வம்சத்தில் வந்த சரோஜி எனும் ஏழைப்பெண்ணாக ரஞ்சிதா! இவரது திரைவாழ்க்கையிலும் பேர் சொல்லும் பாத்திரம்.மகேந்திரனின் படங்களில் இளையராஜாவின் இசையும், அஷோக்குமாரின் ஒளிப்பதிவும் பலமாக இருக்கும். சாசனம் படத்திற்கோ இசை பாலபாரதி! மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது துரதிஷ்டம்.உலகத்தரம் என்பது நவீன சாதனங்களைக் கொண்டு படம் எடுப்பதல்ல, அந்தப்படம் உருவாகும் சமூக அமைப்பின் கலாச்சாரத்தை, யதார்த்தத்தை நசுக்காமல் உள்ளது உள்ளபடி எடுப்பதுதான்! அந்த அடிப்படையில் சாசனம் உலகத்தரத்துடன் எடுக்கப்பட்ட படம்.மகேந்திரனின் முந்தையப்படைங்களைப் போலவே சாசனம் படமும் ஆரோக்கியமான சினிமாவை விரும்புகிறவர்களின் மத்தியில் நல்ல ரசனையை வளர்க்கும். திரைப்படம் என்பதால் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

கதை அல்ல, திரைக்கதை!

சிறுகதை, நாவல் போன்ற எழுத்திலக்கியத்தை வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் தருவது நடை என்று சொல்லப்படும் கதை சொல்லும் உத்தி. அது போலவே, திரைப்படத்தை சுவாரஸ்யப்படுத்துவது திரைக்கதை என்கிற சினிமா மொழி. ராம் படத்தின் மூலம் மிகச் சிறந்த திரைக்கதை நிபுணராகவே வெளிப்பட்டிருக் கிறார் இயக்குநர் அமீர்.


ஒரு திரைப்படப் பத்திரிகையாளனாய் திரைத்துறை யில் தொடர்புக் கொண்டிருக்கும் என் அனுபவத்தில், திரைக்கதையின் அர்த்தத்தையும், வலிமையையும் மிகச்சரியாய் புரிந்து கொண்ட இயக்குநராக நான் உணர்ந்தவர்களில் ஒருவராக இருக்கிறார் அமீர்.


திரைப்படத்தயாரிப்பில் தவிர்க்க முடியாத சம்பிர தாயமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று. பத்திரிகை யாளர் சந்திப்பு. பிரஸ்மீட் என்று சொல்லப்படும் இந்தச் சந்திப்பில், படம் எடுப்பவர்கள் தங்கள் படத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். பெரும்பாலும் பொய்யாய், மிகையாய்.


அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர் களிடமிருந்து தவறாமல் எழுப்பப்படும் கேள்வி: ‘Ôபடத்தோட கதை என்னங்க?’’ அப்போது கெட்ட வார்த்தையைக் கேட்டது போல் துள்ளிக் குதிப்பார்கள், துடித்துப் போவார்கள் சினிமாக்காரர்கள். இதற்கு கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களும் கூட விதிவிலக்கில்லை.


‘கதையைச் சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடும் ஸார். அதை மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்!’’ என்று கதை ரகசியத்தைக் கட்டிக்காப் பார்கள். எனக்கு அவர்களைப் பார்க்கும்போது கோபத்தை விட, அவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்பு வருவதை தவிர்க்க முடிந்ததில்லை.


சினிமாவின் வெற்றிக்குக் காரணமே கதைதான் என்று நினைக்கும் இந்த பத்தாம்பசலிகளுக்கு, திரைப்படத்தில் திரைக்கதையின் பங்கு என்னவென்பதே புரியவில்லையே என்று வருத்தப்பட்ட நாட்களும் உண்டு.


சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லியாக வேண்டும். சினிமாக்கார்கள் கட்டிக் காக்கும் கதை ரகசியத்தை உடைத்த பாவத்தை செய்ததால் நான் சந்தித்த அனுபவம் இது.


வித்தியாசமான இயக்குநராக தன்னை வெளிப்படுத்தி வரும் இயக்குநர் சேரன் பாரசீக ரோஜா என்ற பெயரில் புதிய படம் தொடங்கும் முயற்சியில் இருந்தார் அப்போது. அப்படம் தொடங்கப்படுவதற்கு முன்பு, அவரது படத்தின் கதையைப்பற்றி, இதுதான் கதை என்று ஒரு பத்திரிகையில் எழுதிவிட்டேன். அந்தச் செய்தி வெளியான அன்று கோபத்தின் உச்சிக்கேப் போய்விட்டார் சேரன்.


நான் எழுதிய செய்தியை வெளியிட்ட அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு, சில பல சண்டியர்களை திரட்டிக் கொண்டு சென்ற இயக்குநர் சேரன் அங்கே மிகப்பெரிய கலாட்டாவே செய்தார். அதோடு அடங்கவில்லை அவரது ஆத்திரம். நான் தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகை அலுவலகங்களை எல்லாம் தொடர்பு கொண்டு,


‘பிஸ்மிக்கு உங்கள் பத்திரிகையில் எழுத வாய்ப்புக் கொடுக்கக் கூடாது’’
என்று கேட்டுக் கொண்டதன் மூலம் என் பத்திரிகை வாழ்க்கைக்கே முடிவுரை எழுதும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

அதற்கு சில பத்திரிகையாளர்களும் உதவி செய்தார். ஆனாலும், அது அத்தனை சுலபமல்ல என்று உடனடியாகவே சேரனுக்குத் தெரிய வந்தது. அடுத்தக் கட்டமாக, அவரது உதவியாளர் மூலம் என் வீட்டுக்கு தினமும் மலர்க்கொத்து அனுப்பி பின்குறிப்பாய் நன்றி என்று வஞ்சப்புகழ்ச்சி செய்தார்.

இந்த சம்பவத்துக்குப் பின் எனக்கும் அவருக்குமான நட்பு விரிசல் அடைந்ததும், சில வருடங்கள் இருவரும் பகையாளியாய் இருந்து, பின்னர் கைக்குலுக்கிக் கொண்டதெல்லாம் தனிக்கதை.


இதை இங்கே நினைவுகூரக்காரணம் திரைப்படத்தின் வெற்றிக்கு கதை கதை மட்டுமே காரணம் என்று சினிமாக்காரர்கள் எவ்வளவு அழுத்தமாக, அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கோடிட்டுக் காட்டவே!


சரி.. திரைப்படத்தின் வெற்றிக்குக் கதை மட்டும்தான் காரணமா? ஆம் என்றால், எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன. பட வெளியீட்டுக்கு முன் என்னதான் பொத்திப் பொத்தி வைத்தாலும், படம் வெளியான முதல் நாளில், முதல் காட்சியிலேயே படத்தின் கதை இதுதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. போதாக்குறைக்கு தினப்பத்திரிகைகள் விமர்சனம் என்ற பெயரில், இடைவேளை, வணக்கம் டைட்டில் கார்ட் தவிர படத்தின் மொத்தக் கதையையும் பத்திப்பத்தியாய் எழுதித் தள்ளிவிடுகின்றன.


தனியார் டி.வி. சேனல்களின் திரைவிமர்சனங்களிலும், கவுண்ட வுன் நிகழ்ச்சிகளிலும் கூட படக்கதையை பகிரங்கப்படுத்திவிடு கிறார்கள். அதற்கு மேல், க்ளிப்பிங்ஸ் என்ற துண்டுக்காட்சிகள் மூலம் படத்தின் முக்கால்வாசி, மற்றும் முக்கியமானக் காட்சிகள், வெவ்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை சென்ற டைந்துவிடுகின்றன.


இத்தனைக்குப் பிறகும் படங்கள் வெற்றியடைகின்றனவே எப்படி? ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம் கதைதான் என்றால், அந்தக்கதை வெளியே தெரிந்ததும், படத்தின் வெற்றி பாதிக்கப்பட வேண்டுமே? ஏன் அப்படி நடப்பதில்லை?


எஸ்.ஜே. சூர்யா இயக்கிய குஷி படத்தை மறந்திருக்க மாட்டோம். படத்தின் முதல் காட்சியிலேயே, கதாநாயகன் கதாநாயகி இருவரும் கடைசியில் சேரப்போகிறார் என்ற விஷயத்தை சொல்லிவிட்டுத்தான் கதையே தொடங்கும். அந்தப்படம் அடைந்த வெற்றியை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அ ஆ படத்திலும் இதே உத்தியில்தான் கதை சொன்னார் எஸ்.ஜே.சூர்யா! என்ன குடிமுழுகிவிட்டது?


இன்னொரு விஷயம்! காதல்கதை அம்சம் கொண்ட படம் என்று வைத்துக் கொள்வோம். என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் கடைசியில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்பது ரசிகர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்த விஷயம்தான். அடிதடிப்படம் என்றால் கடைசியில் ஹீரோ வில்லனை ஜெயித்துவிடுவான் என்பதும்..அப்புறமும் எப்படி இந்தப்படங்கள் வெற்றியடைகின்றன?


திரைப்பட விளம்பரங்களின் மூலமும், அது காதல்ப்படமா? அடிதடிப்படமா, குடும்பப்படமா என்பதை, அதாவது படத்தின் கதையை ஓரளவு எளிதில் விளங்கிக் கொண்டுவிட முடியும். அதைப்பார்க்கும் பார்வையாளன், இது இன்ன மாதிரியான படம் என்ற முன் தீர்மானத்தோடுதான் திரையரங்குக்கு வருகிறான். அதற்கு மாறாய் படம் இருக்கும் போதுதான் ஏமாற்றமடைகிறான்.
ஆக, திரைப்படங்களின் வெற்றிக்குக் கதை முக்கியம்தான். ஆனால், கதை மட்டுமே முக்கியமில்லை. எனில் எது முக்கியம்? சந்தேகமில்லாமல் திரைக்கதைதான். கதையைச் சொல்லும் உத்தியிலேயே எந்தவொரு படமும் போற்றப்படுகிறது, அல்லது தூற்றப்படுகிறது.


ராம் படத்தின் கதையைப் பார்ப்போம். அம்மாவைக் கொலை செய்தவனை மகன் பழி வாங்குகிறான் என்பதே ராம் படத்தின் ஒரு வரிக்கதை. இந்த ஸ்டோரி லைனைக் கேட்கும்போது ராம் படத்தின் மீது என்ன நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருக்கும்? வழக்கமான பழிவாங்கும் கதைதானே என்ற அலட்சியமான எண்ணமே ஏற்படும். காரணம்.. அம்மாவைக் கொன்றவனை மகன் பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட எத்தனையோ திரைப்படங்களைத் திகட்டத் திகட்டப் பார்த்திருக்கிறோம்.


அப்படி ஒரு கதை அம்சத்தைக் கொண்ட ராம் படம் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டதோடு, இந்தியன் பனோரமா விழாவில் திரையிட தேர்வு பெற்றது என்றால்..காரணம் என்ன? புதுசாக சொல்லப்பட்டவிதம்தான்! அதாவது அமீர் கதையைச் சொன்ன உத்தியே ராம் படத்துக்கு புதிய நிறத்தைக் கொடுத்தது.


சுருக்கமாகச் சொன்னால் திரைக்கதையின் வலிமையையும் வல்லமையையும் புரிய வைக்கு படமாக ராம் இருந்தது

ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு சமகாலப்படங்களில் மிகச்சிறந்த உதாரணம் ராம் படமே!

Saturday 17 October 2009

கூத்தாடிகளுக்கு சில கேள்விகள்..!

திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் பக்கம் பக்கமாகப் பேசுகிற வசனங்கள் அவர்களின் அறிவிலிருந்து உதிப்பவை அல்ல. எழுதிக்கொடுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்து கேமிராவுக்கு முன் ஒப்பிக்கும் கிளிப்பிள்ளைகளே இவர்கள். இதுகாறும், இரவல் வசனங்களையே பேசிப்பழக்கப்பட்டவர்கள், சில நடிகைகளைப் பற்றி ஒரு நாளிதழ் அவதூறு செய்தி வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் சொந்த வசனத்தைப் பேசியிருக்கிறார்கள்.
அவதூறு செய்த நாளிதழைக் கண்டிக்கிற பெயரில் கூடிய கூத்தாடிகள்கூட்டம் ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும், அவர்களின் குடும்பத்துப்பெண்கள் மீதும் வார்த்தைமலத்தை வாரியிறைத்திருக்கிறது. தங்களின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் முக்கியக் காரணமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் மீது இந்தக் கூத்தாடிகள் வாசித்த குற்றப்பத்திரிகையில் ஒருவேளை நியாயம் இருக்கலாம், ஆனால் நன்றியுணர்ச்சியோ, நாகரிகமோ, கண்ணியமோ எள் அளவுமில்லை. மாறாக, வரம்பு மீறிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் மூலம், இதுநாள்வரை அரிதாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் அசிங்கமான, அருவறுப்பான, ஆபாசமுகம் வெளிப்பட்டிருக்கிறது.
பத்திரிகையாளர்கள் மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?
திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகளை, அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்குக் கீழே உட்கார்ந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதும் அங்கே வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று. இப்படியொரு கருத்தை முன்வைக்கிற நடிகர் சூர்யா, பொது விழாக்களில் ஆபாச உடையணிந்து வந்ததாக சில நடிகைகள் மீது வழக்குகள் பாய்ந்ததை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு பேசியிருக்கிறார்.
படுக்கையறையில் அணியும் உடைக்கும், பல பேர் கூடும் பொதுஇடத்திற்கு வரும்போது அணிய வேண்டிய உடைக்கும் வித்தியாசம் உண்டு. இந்த அடிப்படைகூட தெரியாமல், திரைப்படங்களில் அணிந்தாலே ஆபாசம் என்று தணிக்கைக்குழு ஆட்சேபிக்கக்கூடிய படு ஆபாசமான உடைகளை விழாக்களுக்கு கொஞ்சமும் கூச்சமில்லாமல் அணிந்து வரும் எத்தனையோ நடிகைகள் இருப்பதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இதைத் தற்செயலாகவோ, தவறென்று தெரியாமலோ செய்வதில்லை - அவர்கள்.
அங்க, அவயங்கள் தெரிவதுபோல் உடை அணிந்து வருவதென்பது, திரைப்படத்துறையினரின், குறிப்பாக - கதாநாயக நடிகர்களின் கவனஈர்ப்பைப்பெற விழையும் முயற்சியே அது. அதன் மூலம் பட வாய்ப்பைப்பெற முடியும் என்று நம்புகிற நடிகைகளுக்கு உடனடிப்பலன் கிடைத்து வருவதும் நாம் அறியாததல்ல! ஆபாச உடையணிந்து வரும் நடிகைகள் தங்களை மீடியாக்கள் புகைப்படம் எடுக்க வேண்டும், அவை பத்திரிகைகளில் வெளியாக வேண்டும் என்று விரும்பித்தான் கர்ச்சீப்பைக் கூட கட்டிக்கொண்டு வருகிறார்கள்.
எந்தவொரு புகைப்படக்கலைஞனும், (சூர்யா சொன்னதுபோல்) நாற்காலிக்குக் கீழே உட்கார்ந்து எடுத்த நடிகைகளின் புகைப்படங்களை தன் வீட்டில் மாட்டி வைத்துக்கொள்வதில்லை என்பதை இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறி கொதித்தெழுந்தவர் புரிந்து கொள்ள வேண்டும்.''இந்த ஈனப்பயலுக....'' இதுவும் அவரே உதிர்த்த பொன்மொழிதான். அது மட்டுமல்ல, ''இவனுங்களை நசுக்கிடணும்..'' என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார் சூர்யா. இதெல்லாம் சக நடிகைகள் மீது அவதூறு செய்தி வெளியிட்ட கோபத்தில் சம்மந்தப்பட்ட பத்திரிகை மீது மட்டும் இவர் கக்கிய அனல் என்று அறிவுள்ள எவரும் நம்பமாட்டார்கள். அவர் வேண்டுமானால், ஒருமைக்கும், பன்மைக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கலாம், மற்றவர்களும் தன்னைப்போலவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது அறிவான செயல் அல்ல! கம்பராமாயணத்தைக் கரைத்துக்குடித்த அவரது தந்தை சிவகுமாரிடம் தமிழ் கற்றுக் கொண்டு இனி மேடையில் முழங்க வேண்டும் என்பதே சூர்யாவுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள்!
அது மட்டுமல்ல, தான் பேசிய பேச்சு நியாயமானது, அதில் தவறில்லை என்று அவர் கருதினால் கடைசிவரை தன் கருத்தில் உறுதியாக இருந்திருக்க வேண்டுமல்லவா? அதுதான் நேர்மையாகவும் இருக்கும். பல பேர் கூடியிருக்கும் சபையில் பகிரங்கமாக ஈனப்பிறவிகள் என்று இழித்துப்பேசிவிட்டு, அதன் விளைவுகள் கடுமையாய் இருக்கும், அது தன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தெரிந்த பிறகு, 'ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் நான் பேசவில்லை', 'பத்திரிகை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கிருக்கிற ஆரோக்கியமான நல்லுறவை நான் மதிக்கிறேன்' என்று பல்டியடிப்பது ஏன்? சூர்யாவுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். 'நசுக்குவதற்கு ஒன்றும் நாங்கள் மூட்டைப்பூச்சிகள் இல்லை நண்பரே!'
அதே மேடையில் 'நான் மானஸ்தன்' என்று மார்தட்டியதோடு, தன்னை கவரிமானுக்கு நிகரானவராகக் காட்டிக்கொண்ட மூத்த நடிகர் விஜயகுமாரோ, 'உங்க அக்காத்தங்கச்சிங்களை கவர்ச்சியாய் படம் எடுத்து பத்திரிகையில் போடுங்க' என்று ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்துக்கே அறிவுரை வழங்கி இருக்கிறார். அவதூறு செய்தியினால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஆத்திரத்தில் இப்படி பேசியிருக்கும் விஜயகுமாருக்கு அவருடைய பாஷையிலேயே பதில் சொல்வது நமக்கு மிக எளிதானதுதான்.
அதைவிட, அந்த கண்டனக்கூட்டத்தில் ரஜினி பேசியதையே விஜயகுமாருக்கு பதிலாக சொல்வது பொருத்தமாக இருக்கும். ''நீங்க எப்படிப்பட்டவங்க என்பது உங்கள் குடும்பத்துக்கு தெரியும், உங்கள் நண்பர்களுக்குத் தெரியும், உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மேலே கடவுளுக்குத் தெரியும்.!'' இதுதான் ரஜினி சொன்னது. மேடைகளில் பேசும்போது குட்டிக்கதைகள் சொல்லும் ரஜினி, இம்முறை பேசியதும் 'குட்டிக்கதை'தான். இதன் உள்ளர்த்தம் புரிகிறவர்களுக்குப் புரியும்.
தன் பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ விருதை பெருமையுடன் போட்டுக் கொள்ளும் கமல் அவர்களுக்கு இந்த சந்தர்பத்தில் ஒரு வேண்டுகோள்! இனி பத்மஸ்ரீ பட்டத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.! ஏனெனில், நகைச்சுவை என்ற பெயரில் திரைப்படங்களில் மிமிக்ரி செய்து பிழைக்கும் விவேக்குக்கு வழங்கப்பட்டபோதே பத்மஸ்ரீ விருது, தன் பெருமையையும், கௌரவத்தையும் இழந்துவிட்டது. இப்போது அதே விவேக்கினால் பத்மஸ்ரீ விருது இன்னொரு தடவை அசிங்கப்பட்டிருக்கிறது. அவதூறு செய்தியில் அவருக்கு நெருக்கமான நடிகை அஞ்சுவையும் சேர்த்துவிட்டார்களே என்ற ஆத்திரமோ என்னவோ.. தன் பேச்சில் ஆபாசத்தின் உச்சத்தைத்தொட்டிருக்கிறார் இந்த விரசகவி. பத்திரிகையாளர்கள் அனைவரும் தன் குடும்பத்துப் பெண்களின் புகைப்படத்தை இவரிடம் கொடுக்க வேண்டுமாம். அந்தப் புகைப்படங்களில் உள்ள பெண்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் ஜட்டியும், பிராவும் அணிவித்து அதை உலகம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டப்போவதாக கொக்கரித்திருக்கிறார் இந்தக்கோமாளி.
இவரின் தனிப்பட்ட வாழ்க்கை அசிங்கங்களையும், நட்சத்திர ஹோட்டல்களில் இவர் நடத்துவதாக நம் காதுக்கு வருகிற பாலியல் லீலைகளையும் பட்டியலிட்டால், இவரை புகழின் உச்சியில் அமர்த்திய தமிழக மக்களே இந்தக்கோமாளியை தமிழ்நாட்டிலிருந்தே ஓடஓட விரட்டியடிப்பார்கள்.
தன்நிலை மறந்த ஒரு குடிகாரனைப்போல் பொதுமேடையில் ஆபாசஉரை நிகழ்த்திய இந்த அதிமேதாவி, பத்மஸ்ரீ விருதுக்கு மட்டுமல்ல, சின்னக்லைவாணர் என்ற அடைமொழிக்கும் அருகதையற்றவர்தான். தன் நகைச்சுவை மூலம் மக்களை சிந்திக்க வைத்த கலைவாணர் எங்கே? திரையில் கோமாளியாய், நிஜத்தில் இழிபிறவியாய் இரட்டைமுகம் காட்டும் இவர் எங்கே?
இந்தியத்திருநாட்டின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீயை உடனடியாய் இவரிடமிருந்து திரும்பப்பெற வேண்டும் என்பதே குடியரசுத்தலைவருக்கு நாம் வைக்கும் கோரிக்கை!
பெயரில் மட்டுமே விவேகத்தை வைத்திருக்கும் இந்தக் கோமாளியின் பேச்சு பத்திரிகையாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது தெரிந்ததும், அவசர அவசரமாக ஒரு அறிக்கையை அனுப்புகிறார். 'நான் பொதுமக்களை அழைத்துப்பேசிய கூட்டமல்ல அது, என் கலைக்குடும்பம் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட கூட்டம்' இதுதான் அந்தத் தன்னிலை விளக்கத்தின் சாரம்சம். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தை தன் மகளுக்கு நடந்த பூப்புனித நீராட்டுவிழா என்று நினைத்துக்கொண்டாரா இவர்? பெற்ற அம்மாவையே வயோதிகக்காலத்தில் கவனிக்க வக்கத்துப்போன இவர் கலைக்குடும்பத்தைப் பற்றிக்கவலைப்படுவதும், பேசுவதுவும் வேடிக்கைதான். சாத்தான் வேதம் ஓதுகிறது!
கிராபிக்ஸில் ஜட்டி, பிரா போட்டு போஸ்டர் அடிக்க முன்வந்த விவேக்கிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார் சத்யராஜ். ''சின்ன சைஸ் ஜட்டி, பிராவாகப் போடுங்க. வேணும்னா நானே வாங்கித்தர்றேன்'' இதுதான் புரட்சித்தமிழன் அங்கே வைத்த வேண்டுகோள். பத்திரிகையாளர்களின் மனைவி, மகளும் தமிழச்சிகள்தான் என்பதை மறந்துவிட்ட. புரட்சித்தமிழனுக்கு பொதுவிழாக்களில் ஆபாசமாகப்பேசுவது புதிதல்ல. சில வருடத்துக்கு முன் ஓகேனேக்கல் பிரச்சனைக்காக திரைப்பட நட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரத நாடகத்தின்போதும் இப்படித்தான் கெட்ட வார்த்தைப்பேசி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினார். பெண்ணினத்துக்காகப் போராடிய பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுகிறவராக தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் சத்யராஜிடம் வைக்கவும் ஒரு கோரிக்கை இருக்கிறது.
'தயவு செய்து இனி பெரியாரின் பெயரைக்கூட உச்சரிக்காதீர்கள்!'
நடிகைகளின் கற்பைக் காப்பாற்றக் கிளம்பிய இந்த ரட்சகர்களிடம் கேட்க இப்படி எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன. சில கேள்விகளை மட்டும் இங்கே முன் வைக்கிறேன்.
தமிழ்த்திரைப்படத்துறையில் 'அட்ஜெஸ்ட்மெண்ட்' என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறதே. அதன் அர்த்தம் என்ன?
கதைக்குத் தேவையில்லை என்று தெரிந்தும் கதாநாயகி சகிதமாக வெளிநாட்டில் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறீர்களே ஏன்?
உங்களுக்கு ஜோடியாக இன்னார்தான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்களே..ஏன்?
உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளை எந்த அடிப்படையில் சிபாரிசு செய்கிறீர்கள்? கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர் என்றா? அல்லது....
வெளிப்புறப்படப்பிடிப்புக்கு செல்லும்போது கதாநாயகி தங்கும் அறைக்குப் பக்கத்திலேயே எனக்கும் அறை வசதி செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போடுவது ஏன்?
விபச்சார வழக்கில் சிக்குமளவுக்கு நடிகைகளின் வாழ்க்கை சீரழிந்ததற்கு யார் காரணம்?
நடிகைகளின் வாழ்க்கை துயரமானது என்று கிளிசரின் இல்லாமலே கண்ணீர் வடிக்கிறீர்களே? அவர்களின் துயரத்துக்கு யார் காரணம்?
சில வருடங்களுக்கு முன் நடிகர் சங்கம் தொடர்பான மோதலில் விஜயகுமாரும், ராதாரவியும் எதிரெதிர் அணியில் இருந்தபோது, 'விஜயகுமார்வீட்டில் அறுபது அறைகள் இருப்பது ஏன்?' என்று ராதாரவி பத்திரிகைப்பேட்டிகளில் கேள்வி எழுப்பினாரே? அதற்கான பதிலை இன்னமும் விஜயகுமார் சொல்லாமல் இருப்பது ஏன்?
கலைக்குடும்பத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றத் துடிப்பவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.

Sunday 12 July 2009

ஒருநாள் கமலிடமிருந்து அழைப்பு


கமல் அழைத்திருந்தார். விஷயம்? விருமாண்டி என்று பெயர் மாற்றப்பட்ட சண்டியர் படம் பற்றி பத்திரிக்கைகளில் பல வாறு செய்திகள். சண்டியராய் சத்யராஜ் நடிக்கிறார் என்றும்,, நாஸர் நடிக்கிறார் என்றும், இன்னும் எக்குத்தப்பான செய்திகள் எல்லாம் மக்களை குழப்பிக் கொண் டிருந்தன. அது மட்டுமல்ல கமலையும் கவலைக் குள்ளாக்கியிருந்தது. அதன்பொருட்டே கமல் அழைத்திருந்தார்.


‘’சண்டியர் படத்தை பற்றிய செய்திகள் போட்டோக்களை விரைவில் உங்களை எல்லாம் அழைத்துக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். அதுவரை சண்டியர் படத்தை பற்றி எதுவும் எழுதாமல் இருக்க வேண்டும். அதை தனிப்பட்ட முறையில் சொல்லவே உங்களை அழைத்தேன்,’’என்ற கமல் வந்த வேகத்தில் ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு விடைபெற எத்தனித்தார். எழுந்த அவரை மறுபடி அமர வைத்தது நான் கேட்ட கேள்வி. கமலிடம் கேட்க வேண்டும் என்று பல கேள்விகள் உண்டு. அதற்கு பதில் பெற இதைவிட சிறந்த சந்தர்ப்பம் அமையுமா என்ன?அவை அப்புறம். முதலில், கமல் அழைத்ததின் காரணத்திலேயே எனக்கு கருத்து மாறுபாடு உண்டு, அதையே கேள்வியாக்கி உரையாடலை ஆரம்பித்தேன்.


எந்தவொரு எதிர்பார்ப்புக்குரிய விஷயம் பற்றியும் அதிகாரபூர்வ செய்தி வரும் முன்பு யூகங்களும் வதந்திகளும் செய்திகளாக வருவது சகஜம்தான், அதற்கு திரைப்படமும் விதிவிலக்கில்லை, அதுவும் கமல் போன்ற மூத்த, முன்னணி கலைஞன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது மக்கள் மத்தியில் உலா வரும் கேள்வி. அதற்குத்தான் தீனி போடுகின்றன பத்திரிகைகள். அவற்றில் கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய். இதைப் போய் இத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா கமல் ஸார்?அதுவும் இத்தனை காலமாக இதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அமைதிகாத்துவிட்டு இப்போது பதற வேண்டிய அவசியம் என்ன?’’


நான் இப்படிப் கேட்டதும் கமல் ஒரு கணம் அதிர்ச்சி யடைந்தார். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு உட்கார்ந்தார்.


‘இன்று செய்ததை என் ஒவ்வொரு படத்தின் போதும் செய்ய நினைத்திருக்கிறேன், வேறு தயாரிப்பாளர் என்பதால் செய்ய இயலாமல் போய்விட்டது, உதாரணத்துக்கு அன்பே சிவம் படம் பண்ணும் போது உங்களை இப்படி அழைத்து அன்பே சிவம் படத்தைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று சொன்னால் அந்தத் தயாரிப்பாளர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்னடா நம்ம படத்தைப் பற்றி எழுத வேண்டாம் என்று இவர் சொல்கிறாரே என்று வருத்தப்படக்கூடும். சண்டியரில் இப்படிப் பட்ட சிக்கல் இல்லை. இது என் படம். சண்டியர் படம் பண்ணப்போறது உண்மை. அது சம்மந்தமாக சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. அதற்குள் கண்டமேனிக்கு செய்திகள் வருகின்றன. அவற்றில் சில செய்திகள் பேச்சுவார்த்தையை பாதிக்கக் கூடிய தாகவும் இருக்கின்றன. இதை அலட்சியப்படுத்திவிடலாம் தான். ஹேராம் போல் கதையாகிவிட்டால்?’’ என்று நிறுத்தினார் கமல்.


அட, அதென்ன ஹேராம் கதை?


‘ஹேராம் எப்படிப்பட்ட கதை என்று எல்லாருக்கும் தெரியும். அந்த படம் அண்டர்புரடக்ஷனில் இருந்த போது இதே போல்தான் இஷ்டத்துக்கு எழுதினார்கள். காந்திக்கு விரோதமான படம் என்று சில பத்திரிகைகள் எழுதியதை நம்பி ஜெயந்தி நடராஜன் அறிக்கையே விட்டுவிட்டார். அதற்கு என் ரசிகர்கள் சிலர் பதில் கொடுத்து அறிக்கைப் போரே நடந்துவிட்டது. வெளியூர் போய்விட்டு வந்த எனக்கு அதை எல்லாம் கேள்விப்பட்டதும் தலையேச்சுற்றிவிட்டது. உண்மை இல்லாத ஒரு விஷயத்தை வைத்து இவ்வளவு பிரச்சனைகள், இதை என்னவென்று சொல்வது?’’


யூகங்கள் செய்தி அவதராம் எடுப்பதில் இத்தனை சிக்கல்களா? ஏன் வம்பு? யூகங்கள் வரும் முன்பே அதிகாரபூர்வச் செய்திகளை ஊடகங்களுக்குக் கொடுத்துவிடலாம்தானே? பொத்திப்பொத்தி வைக்கும் போதுதான் அதை அறிந்து கொள்ளும் ஆவலும் அதிகமாகிறது.’’


‘அதுவும் ஆபத்துதான். ஒரே நேரத்தில் பல பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதும்போது அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும், அப்போது படம் வெளிவந்தால் சரி. தாமதமாகும்போது அதெல்லாம் படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். சண்டியர் படத்தை இப்போதுதான் தொடங்குகிறோம். அதற்குள் அதிக அளவு விளம்பரம் வேண்டாமே என்று பார்க்கிறேன். படம் தொடக்கநிலையில் இருக்கும் போது அதீத விளம்பரம் வருவது அத்தனை ஆரோக்கியமில்லை, ஆபத்தான விஷயம், ஆளவந்தான் படத்தின் போது அதுதானே நடந்தது? மாபெரும் பப்ளிஸிட்டிதான் அதற்கு வினையானது,’’


கமல் சொல்லும்போது என்னையும் அறியாமல் நமுட்டுச் சிரிப்பு வந்ததை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் நல்ல நகைச்சுவையைக் கேட்கும்போது சிரிப்பு வரத்தானே செய்யும்? கமல் அதை கவனிக்கவில்லை, பேச்சைத் தொடர்ந்தார்...


‘இன்னொரு காரணம் படத்தை பெரிய விலைக்கு விற்றது, சின்ன விலைக்கு விற்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.’’

என்று கமல் சொன்ன போது குறுக்கிட்டேன்.


ஆளவந்தான் தோற்றுப்போனதற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் சப்பைக்கட்டு தவிர வேறென்ன? அதிக பப்ளிஸிட்டி, பெரிய விலைக்கு விற்றது என்பதையெல்லாம்விட ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு படத்தில் விஷயம் இல்லை என்பதுதானே நிஜம்? அதை மறந்துவிட்டீர்களே கமல் ஸார்?’’


என் வாதத்தை கமல் ஒப்புக்கொள்வதாக இல்லை. சப்பைக் கட்டுகள் தொடர்ந்து, ஒரு கட்டத்தில்,‘கீழே துப்பின சாக்லெட்டை மறுபடி கையால எடுக்கிற மாதிரிதான் இதுவும், இப்ப அதைப் பத்தி பேசிப் பிரயோஜன மில்லை,’’ என்று அவரே ஆளவந்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.


அடுத்த விஷயத்துக்குப் போனேன்.


அன்பேசிவம் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி என்பது படத்தின் டைட்டிலில் மட்டுமே இருந்தது. படத்தில் அவரது பாணி ஒரு காட்சியிலும் இல்லை. கமலின் ஆளுமைதான் எங்கும். இந்தப் படத்தை ஆரம்பத்தில் ப்ரியதர்ஷன் இயக்குவதாக இருந்து, ஏனோ அவர் கழன்று கொண்டார். கமலுடன் அவருக்கு ஒத்துப்போகவில்லை என்று செய்திகள் விழுந்தன காதில். இவற்றை எல்லாம் குறிப்பிட்டு கமலிடம் கேட்டேன்...


பெரிய இயக்குநருடன் இணைந்தால் படம் ஆரம்பிக்கும் முன்பே உரசல் வந்துவிடுகிறது, இளைய இயக்குநர்களுடன் இணையும்போது அவர்களை இய(ங்)க்க விடாமல் நீங்களே டாமினேட் செய்கிறீர்கள். நியாயமா இது?’’என்பதே என் கேள்வி.


‘என்ன தப்பு? எம்,ஜி,ஆர் நடித்த படங்களை மக்கள் எம்.ஜி.ஆர் படம் என்றுதான் சொன்னார்கள். அது போல் நான் நடிக்கும் படங்கள் எல்லாம் கமல் படங்கள்தான். கமல் படத்தில் கமலின் ஆளுமை இருப்பதில் என்ன தப்பு?’’


என்று கமல் கேட்ட எதிர்கேள்வியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது சாதுர்யத்தை ரசிக்கவும்தான்.


அன்பேசிவம் படத்தைப் பார்த்த ரசிகன் இயக்குநரைப் பாராட்ட நினைக்கிறான். யாரைப் பாராட்டுவது? சுந்தர்.சியையா? கமலையா?’’


‘’ரெண்டு பேரையும் பாராட்ட வேண்டியதுதான்,’’ என்றார் கமல் பலத்த சிரிப்புடன்.


திரைப்படம் என்பது இயக்குநரின் மீடியா என்பதை மறந்து விட்டு பேசும் நீங்கள் உங்களது படங்களை நீங்களே இயக்கிவிட்டுப் போகலாமே? அதைச் செய்யாமல் வேறு ஒருவரை இயக்குநராகப் போட்டுவிட்டு அவரை நீங்கள் வழி நடத்துவதுகிற பெயரில் அந்த இயக்குநரின் தனித்தன்மையை காவு கொடுப்பது போல் இருக்கிறதே?’’


நான் இப்படிக் கேட்டதும் நேரடியாக பதில் சொல்லாமல்,‘இனி கமல் நடிக்கும் படங்கள் கமல் படங்களாக இருக்கும்’’என்றார் விடுகதையாக.


அதன் அர்த்தம் என்ன? இனி உங்களின் இயக்கத்தில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறீர்களா?’’

கேட்டதும் அர்த்தபூர்வமாக சிரித்தார்.


அன்பேசிவம் படத்தைப் பார்த்த போது புரிபட்ட விஷயம்.. அந்த படத்தின் கதை உருவான மையப்புள்ளி சில வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட வீதி நாடகக் கலைஞர் சப்தர்ஹஸ்மி.கரெக்ட் மிஸ்டர் கமல்?


‘ரொம்பச் சரி. சப்தர்ஹஸ்மி கொல்லப்பட்டப்ப நாங்கள் எல்லாம் டெல்லியில கண்டன ஊர்வலம் நடத்தினோம். அவரது மரணம் மறக்க முடியாத கொடூரம். அது மனசுக்குள்ள ஒரு முள்ளு மாதிரி குத்திக்கிட்டே இருந்த விஷயம். அதுதான் அன்பே சிவம் கதையா உருவாச்சு. படம் ரெடியானதும் பிரிண்ட்டை டெல்லிக்கு எடுத்துப் போய் சப்தர்ஹஸ்மியோட ஃபேமிலிக்குப் போட்டுக் காட்டினேன். நானூறு பேர் உட்கார்ந்து படம் பாக்குற தியேட்டர்ல அவரோட ஃபேமிலியை சேர்ந்த எழுபத்தைந்து பேர் மட்டும் அன்பேசிவம் படத்தைப் பாத்தாங்க. அவருக்கு செலுத்தின அஞ்சலின்னு கூட இதை சொல்லலாம்.’’


நெகிழ்ச்சி தெரிந்தது கமல் முகத்தில்.


கமல் நடிக்கும் படங்கள் நவீன தொழில்நுட்பத்தை முன்மொழிவதாக இருப்பது போற்றத்தக்க விஷயம். ஆனால் அவரது படங்களின் கதைகள் ஆங்கிலப்படங்களில் இருந்து சுட்டதாகவே இருக்கின்றன - பெரும்பாலும். நாயகன் - காட்ஃபாதர், அவ்வைசண்முகி - மிஸஸ் டவுட்ஃபயர், மகளிர் மட்டும் - நைன் டூ ஃபைவ், சதிலீலாவதி - ஷி டெவில் என்று இப்படி பெரிய பட்டியலேப் போடலாம். அனேகமாக தேவர்மகன்தான் ஒரிஜினல் சரக்கு? என்று நினைக்கிறேன்.


என்று நான் கேட்ட கேள்விக்குக் கொஞ்சமும் கோபப்படாத கமல் புதிய தகவல் ஒன்றையும் சொன்னார்.


‘அதுவும் ஒரு ஆங்கிலப்படத்திலிருந்து எடுத்ததுதான்.’’ என்று வெளிப்படையாக சொன்னதோடு, அந்த ஆங்கிலப் படத்தின் பெயரையும் சொன்னார் கமல்.


‘நல்ல விஷயங்களில் இன்ஸ்ஃபயர் ஆவதில் தப்பென்ன?’’ என்று தன் உல்ட்டாலக்கடியை ஒரே வரியில் நியாயப்படுத்தினார்.


திரையுலகில் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஒரு நடிகராக கமல் என்ன வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது?


‘நாயகன் வந்தப்ப யாரும் காட்ஃபாதரைப் பாத்திருக்க மாட்டாங்க. இப்ப அப்படியில்லை. நாயகனை இப்பப் பண்ணியிருந்தா காட்ஃபாதர்னு சொல்லிடுவாங்க. காரணம் டி.வி. சேனல்ல எல்லாப் படங்களையும் மக்கள் சுலபமாப் பாக்கிறாங்க. போதாக்குறைக்கு ஆங்கிலப்படங்கள் எல்லாம் டூரிங் கொட்டகையில தமிழ் பேசிக்கிட்டு இருக்கு. ஸோ நாங்க இன்னும் அட்வான்ஸா வொர்க் பண்ணணும். சுருக்கமாச் சொன்னா ஆங்கிலப் படங்கள் மாதிரி படம் பண்றதைவிட ஆங்கிலப் படங்களை மிஞ்சுற அளவுக்குப் பண்ணணும். அவற்றொடு நேரடியாய் போட்டிப் போடணும்’’


உண்மையில் கமல் மற்ற நடிகர்களிடமிருந்து வித்தியாசமானவர்தான். இதே கேள்வியை மற்ற ஹீரோக்களிடம் கேட்டிருந்தால் திருட்டு வி.சி.டி,தான் இப்போதைய சவால் என்று ஆரம்பித்து ஒரு பாட்டம் அழுதுத்தீர்த்திருப்பார்கள். கமலுக்கோ அது ஒரு பிரச்சனையாகவே இல்லை.


‘வி.சி.டியை ஒழிக்க முடியாது, ஒழிக்கக் கூடாது. அது விஞ்ஞான வளர்ச்சி. அதைத் தடுக்கவோ, தடை போடவோ முடியாதுங்கிறது யதார்த்தமான உண்மை. இதைப் புரிஞ்சுக்காமப் பேசிக்கிட்டிருப் பதில் பிரயோஜனமில்லைன்னுதான் நான் சொல்லுவேன். அதை எப்படி நம்மளோட வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கணும்னுதான் நாம் பார்க்கணும். உதாரணமா ஆம்னி பஸ்களில் சர்வசாதாரணமா புதுப்பட வி.சி.டி.களைப் போடுறாங்க. இதை எப்படி தடுக்கிறது? யார் தடுக்கிறது? முடியாது, அப்ப இதை நாம பயன்படுத்திக் கிறதைப் பத்தி யோசிக்கணும். சில வருடங்களுக்கு முன்பு வி.ஹெச்.எஸ். வந்தப்பவும் இப்படித்தான் கூக்குரல் போட்டோம். கடைசியில என்னாச்சு?’’


வரட்டுக் கூச்சல்களுக்கு மத்தியில் கமல் யதார்த்தமாக சிந்திப்பவர். இந்த வி.சி,.டி. விஷயத்தில் முன்னுதாரணமாக கமல் ஏதேனும் செய்யலாம், இல்லையா?


‘எல்லாரும் கூடி செய்யிற வேலை இது. நான் மட்டும் எதையும் சாதிச்சிட முடியாது. நம் கருத்தை மற்றவர்களும் ஒப்புக் கொள்ளும் சூழ்நிலை வரும் வரை காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வெகுவிரைவிலேயே வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.’’

தணிக்கைக்குழுவின் லட்சணம் இதுதான்

தமிழ்சினிமாக்களில் வன்முறையும் ஆபாசமும் அதிகரித்திருப்பதாக கடந்த சில வருடங்களாகவே பொதுமக்கள், மகளிர் அமைப்புகள், அரசியல்வாதிகள் என பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த எதிர்ப்பில் ஓரளவு அல்ல, நிறையவே நியாயம் இருப்பதை நாம் உணரமுடியும். இந்தப் போக்குக்கு தணிக்கைக்குழு முக்கியமானதொரு காரணம். திரைப்படங்களை நேர்மையாய் கண் காணிக்க வேண்டிய தணிக்கைக்குழு தன் கடமை யிலிருந்து தவறிவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது.


இன்னொரு பக்கம் தணிக்கைக்குழு படைப்பாளி களின் குரல்வளையை நெரிப்பதாக திரையுலகில் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகிறார் கள். பொதுமக்கள் மற்றும் திரையுலகின் எண்ண ஓட்டங்களை பிரதி பலிக்கும் கேள்விகளுடன் ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டி காண்பதற்காக சில வருடங்களுக்கு முன் சென்னை மண்டல தணிக்கை அதிகாரியாக ராஜூ இருந்தபோது அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் முன் நான் வைத்த கேள்விகளையும், அவற்றுக்கு ராஜூ அளித்த பதில்களையும் இங்கே தந்ததற்குக் காரணமிருக்கிறது.


தணிக்கைக்குழு என்கிற அரசு அமைப்பு கொள்கைத் தெளிவோ, தீர்க்கமான பார்வையோ இல்லாமல் எத்தனை மேம்போக்காகவும், அலட்சியமாகவும் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான்.


இதில் தணிக்கை அதிகாரியான ராஜூவின் கருத்துகள் அவரது சொந்தக்கருத்துகள் இல்லை என்பதையும், அவை தணிக்குக்குழுவுக்கு அரசு வகுத்த விதிகள், சட்டத்தின் அடிப்படையிலேயே அவர் பேசியிருக்கிறார் என்பதையும் யோசிக்கும்போது, தமிழ்த்திரைப்படங்களின் மலிவான போக்குக்கு தணிக்கைக்குழு எவ்வகையில் எல்லாம் காரணமாக இருக்கிறது என்ற உண்மையை உணரமுடியும்.


உங்கள் பார்வையில் இப்போது தமிழ்த்திரைப்படங்கள் எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க?


மக்கள் எதிர்பார்க்கிற மாதிரியான படங்கள் இப்போது வருவதில்லை என்பதுதான் என்னோட அபிப்ராயம். மக்களோட எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளாமல் படம் எடுக்கிறார்கள். என்னதான் திருட்டு விசிடி அது இது என்றாலும் நல்ல படங்கள் ஓடத்தான் செய்கின்றன. ஆபாசத்துக்காகவோ வன்முறைக்காகவோ எந்தப் படமும் ஓடியதில்லை. அதையும் தாண்டி படத்தில் ஏதாவது புதுமை இருந்தால்தான் படம் ஓடுகிறது. இதைத் தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.


இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசம், வன்முறை என்று இன்றைய தமிழ்த்திரைப்படங்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கின்றன. இந்த மோசமான போக்குக்கு ஒரு வகையில் தணிக்கை குழுவும் காரணம் என்று சொல்லலாமா?


இதற்கு எங்களை குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. கடந்த சில ஆண்டுகளாக வந்த படங்களில் கவர்ச்சியும் வன்முறையும் அதிகமாகத்தான் இருக்கின்றன. பதினைந்து வருஷத்துக்கு முன்னால் எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய யூ சர்ட்டிஃபிகேட் படங்கள் எண்பது சதவிகிதம் வெளி வந்தன. யூஏ சர்ட்டிஃபிகேட் படங்கள் இருபது சதவிகிதம்தான் வெளி வந்தன. கடந்த மூன்று வருடங்களாக யூஏ படங்கள் அறுபது சதவிகிதமாக உயர்ந்திருக்கின்றன. யூ சர்ட்டிஃபிகேட் படங்கள் நாற்பது சதவிகிதமாகக் குறைந்துவிட்டன. அதாவது யூ படங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. யூஏ, ஏ படங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. போகப்போக யூ படங்களின் எண்ணிக்கை இன்னும் குறையும்.
இதற்கு தயாரிப்பாளர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள் தெரியுமா? பெண்கள் இப்போதெல்லாம் தியேட்டருக்கே வருவதில்லை, சீரியலில் உட்கார்ந்துவிட்டார்கள். படம் பார்க்க வருவது யூத் ஆடியன்ஸ்தான். அவர்களை திருப்திப்படுத்த இப்படித்தான் படங்களை எடுக்க வேண்டியதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதனால்தான் இன்றைய படங்களைப் பார்க்கும்போது கவர்ச்சி அதிகமாகவோ வன்முறை அதிகமாகவோ தெரிகிறது. அது உண்மையும்கூட.


குறிப்பிட்ட காட்சி அல்லது வசனம் ஆட்சேபகரமாக இருக்கிறது அல்லது இல்லை என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள்? அது பற்றி உங்கள் தணிக்கைக்குழுவினரிடையே மாறுபட்ட கருத்து ஏற்பட்டால் எப்படி முடிவெடுக்கிறீர்கள்?


ஒரு படத்தை ஐந்து பேர் பார்க்கிறோம். நானும் நான்கு உறுப்பினர்களும். அப்படி பார்க்கும் போது மக்களை பாதிக்கிற விஷயங்கள் இருந்தால் எங்களுக்குள் விவாதிப்போம். மெஜாரிட்டி கருத்தின் அடிப்படையில் அனுமதிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கிறோம். அது நியாயமோ இல்லையோ, மெஜாரிட்டிதான் எங்களுக்கு முக்கியம்.


தணிக்கைக்குழு உறுப்பினர்களில் பலருக்கு திரைப்படங்கள் பற்றிய அறிவே இல்லை. அவர்களை எந்த தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அப்படிச் சொல்வது தவறான கருத்து. அது பிரமை. அதில் உண்மையில்லை. ஒரு படம் மக்களை பாதிக்குமா இல்லையா என்பதைக் கணிக்கும் திறமைதான் சென்ஸாரில் மெம்பராக ஒரே தகுதி. வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் மெம்பர்களுக்கு சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை. தெரியாமல் இருப்பதுதான் நல்லது. சிலரை நாங்களே சஜஸ்ட் செய்வோம். சிலரை எங்கள் உயர் அலுவலகத்திலிருந்து நியமிப்பார்கள்.


ஒரு திரைப்படத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கலை என்றா? பொழுதுபோக்கு என்றா?


சினிமாவை நாங்கள் ஆர்ட் என்றோ, எண்டெர்டெயிண்மென்ட் என்றோ, தொழில் என்றோ பார்ப்பதில்லை. நாங்கள் பார்ப்பது இந்தப் படம் மக்களை பாதிக்குமா இல்லையா என்ற ஒரே கண்ணோட்டத்தில்தான். இந்தப்படத்துக்கு புரட்யூஸர் எவ்வளவு பணத்தைப் போட்டு எடுத்தார் என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு அக்கறையே இல்லை. அக்கறைப்படவும் கூடாது. அது எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். ஒரு காட்சியைக் கட் பண்ணச் சொல்கிறோம். அந்த காட்சிக்காக புரட்யூஸர் எவ்வளவு செலவு பண்ணி இருப்பார்? அதைக் கட் பண்ணச் சொல்வதால் அவருக்கு எவ்வளவு நஷ்டம் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவே மாட்டோம். நினைத்துப் பார்க்கவும் கூடாது.


சமீப காலமாக தமிழ்திரைப்படங்கள் அரசியல்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. சரியாகச் சொல்வதென்றால் நீங்கள் செய்ய வேண்டிய அல்லது செய்யத் தவறிய பணியை அரசியல்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இதில் உங்களுக்கு சந்தோஷமா.. வருத்தமா?

சென்ஸாரைப் போல் அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு கட் கொடுப்பதில்லையே? அதனால் அவர்கள் எங்கள் வேலையை செய்வதாகச் சொல்ல முடியாது. அதே நேரம் ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட எதிர்ப்புகள் இருப்பதும் நல்லதுதான். ஆரோக்கியமான விஷயமும்கூட. சென்ஸார் போர்டு மட்டுமே மனசு வைத்து நல்லப் படங்களைக் கொண்டு வந்துவிட முடியாது. மக்களும், அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் அடிக்கடி குரல் கொடுத்தால்தான் நல்லப் படங்களைக் கொண்டு வர முடியும். அதனால் அரசியல்கட்சிகள் சினிமாவை எதிர்ப்பதை ஜனநாயக அடிப்படையில் தப்பு என்று சொல்ல முடியாது.


ஒரு அரசியல் கட்சியின் எதிர்ப்பால் கமலின் சண்டியர் என்ற படத்தின் தலைப்பு விருமாண்டி என்று மாற்றப்பட்டது. ஒரு வேளை அப்படி ஒரு எதிர்ப்பு வராமல் இருந்தால் சண்டியர் என்ற தலைப்பை நீங்கள் அனுமதித்து இருப்பீர்களா?


படம் வெளியாவதற்கு முன் சர்ச்சைகள் வருவது எங்களைப் பொருத்த வரை நல்லதுதான். எங்களுக்கு மக்களின் எண்ணம் என்ன? என்ற ஃபீட்பேக் கிடைக்கிறது. நாங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.


முத்தமிடலாமா என்று ஒரு திரைப்படத்துக்கு தலைப்பு வைத்தபோது அதை அனுமதிக்க மறுத்தீர்கள். அதனால் முத்தம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். முத்தமிடலாமா என்ற தலைப்பினால் சமூகத்தில் அப்படி என்ன தீங்கு ஏற்பட்டுவிடப் போகிறது என்று நினைத்து ஆட்சேபித்தீர்கள்?

முத்தமிடலாமா என்ற தலைப்பு தப்புதான். ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து முத்தமிடலாமா என்று கேட்டால் அது ஈவ்டீசிங்கா இல்லையா? அதனால் அதை மாற்றச் சொன்னோம்.


நீங்கள் தணிக்கை அதிகாரியாக வந்த பிறகுதான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தணிக்கைக்குழு சர்ச்சைக்குள்ளானது. காற்றுக்கென்ன வேலி, மனதைத் திருடிவிட்டாய், பாய்ஸ், ஈரநிலம், இளசு புதுசு ரவுசு, நியூ என பல படங்கள் சிக்கலுக்குள்ளாகின. இதற்கு என்ன காரணம்?

எனக்கு மனசாட்சி இருக்கிறது. எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் நேர்மையானமுறையில் நான் இயங்குகிறேன். அவ்வளவுதான். என் வேலையில் நான் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ள மாட்டேன். இதுவரைக்கும் எந்த அரசியல் வாதிக்கிட்டேயும் போய் நான் நின்னதில்லை. யார்கிட்டேயும் பணம் வாங்கினதுமில்லை. எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்கிறேன். அது சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டுவிடுகிறது.


ஒரு சின்ன தயாரிப்பாளரின் படத்தில் ஒரு பெண் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிக்கு கட்ஸ் கொடுத்திருக்கிறீர்கள். அதே காட்சிகள் எத்தனையோ படங்களிலும், குறிப்பாக நியூ படத்திலும் (ஐஸ்வர்யா தம்மடிப்பது), எம்.குமரன் படத்திலும் (அசின் பீடி பிடிப்பது) இடம் பெற்றிருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும் போது தணிக்கைக்குழு பாரபட்சமான கொள்கையை, அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்றுதானே அர்த்தம்?

என்ன பண்றது? விடக்கூடாதுதான். ரொம்ப ரிக்வெஸ்ட் பண்றாங்க. கட் பண்ணுவதால் சில சமயம் டயலாக் அடிபடும். அதனால் அனுமதிக்க வேண்டியதாகிவிடுகிறது. பாம்பேயிலும், கேரளாவிலும் இதை எல்லாம் அனுமதிக்கிறாங்க. நாங்க ஓரளவுக்குத்தான் கட்டுப்பாடா இருக்க முடியும். ரொம்ப இறுக்கிப்பிடிக்க முடியாது.
மற்றபடி, சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. எங்களுக்கு எல்லாரும் ஒண்ணுதான். இன்னும் சொல்லப் போனால் சின்னப் படங்களைவிட பெரிய படங் களைத்தான் நாங்கள் கவனமாகப் பார்ப்போம். சின்னப்படங்களை மக்கள் அவ்வளவாகப் பார்ப்பதில்லை. அதனால் அதில் எதையாவது விட்டிருந்தால் கூட அது வெளியே தெரியாது. பெரிய படத்தை எல்லாரும் பார்க்கிறார்கள். அதனால் கவனமாகத்தான் இருக்கிறோம்.
இன்னொரு விஷயம்.. பெரிய புரட்யூஸர்களின் படங்களுக்கும் நாங்கள் கட்ஸ் கொடுப்பதால்தானே அது கான்ட்ரவர்ஸியாக வெளியே வருகிறது? சின்ன புரட்யூஸர்கள் யாரும் சர்ச்சையைக் கிளப்புவது இல்லையே?
இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். பெரிய புரட்யூஸர்களுக்கு சென்ஸாரில் எப்படி நடந்த கொள்ள வேண்டும் என்பதில் அனுபவம் இருக்கும். அதனால் எப்படிப் பேசினால் கட்ஸை அனுமதிப்பார்கள் என்ற திறமை அவர்களுக்கு உண்டு. சின்ன புரட்யூஸர்களுக்கு அனுபவம் இல்லாததினால் நீங்கள் சொன்ன மாதிரியான சம்பவங்கள் நேர்ந்துவிடுகின்றன.


வன்முறை படத்தின் தீர்வாக இருக்கக் கூடாது என்பது முக்கியமான தணிக்கை விதிகளில் ஒன்று. பிதாமகன் உட்பட முக்கால்வாசிப் படங்கள் வன்முறைக்கு ஆதரவான முடிவையே கொண்டிருக்கின்றன. தணிக்கைக்குழுவின் கொள்கைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே?

ராமாயண மகாபாரதக் காலத்திலிருந்து வில்லனும் ஹீரோவும் சண்டைப் போட்டுக்கிட்டுத்தானே இருக்காங்க?

அப்புறம் ஏன் இதை ஒரு விதியாக வைக்க வேண்டும்?


அதாவது ஒருவன் குற்றம் செய்துவிட்டு தண்டனை அனுபவிக்காமல் ஜாலியாக போகக்கூடாது. அதைத்தான் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் கைடுலைனிலேயே இரண்டுவிதமான ரூல்ஸ் இருக்கின்றன. ஒன்று அப்ஜெக்ட்டிவ் சட்டதிட்டங்கள். இன்னொன்று இன்ட்வீஜ்வல் கைடுலைன்ஸ். இது ஜஸ்ட் வழிகாட்டிதானே தவிர எங்களுக்கான சட்டம் இல்லை. இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால்.. இந்த கைடு லைன்ஸ் முன்னே பின்னே இருக்கலாம் தப்பில்லை.


வில்லன் ஒருவனை கொலை செய்தால் வன்முறை. அதையே ஹீரோ செய்தால் சாகஸம் என்பதான சித்தரிப்பு இருக்கிறது தமிழ்த்திரைப்படங்களில். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


உலகமே அதானே? ஹீரோ பண்ணினால் காதல். அதையே வில்லன் பண்ணினால் ரேப்.


ஒரு ரசிகன் இப்படியான கண்ணோட்டத்தில் திரைப்படத்தைப் பார்க்கலாம். தணிக்கைக்குழு அதிகாரியான நீங்களும் இப்படி பார்க் கலாமா?

ஹீரோவை ஹீரோவாகப் பார்க்காமல் எப்படி பார்ப்பது?


விஞ்ஞானத்திற்கு எதிரான விஷயங்களை அனுமதிக்கக் கூடாது என்பது கூட உங்கள் விதிகளில் ஒன்றுதான். வில்லனுடன் சண்டை போடும் ஹீரோ கையில் வேல் வைத்திருக்கும் போது வீரனாகிறான். வேல் இல்லாத போது கோழையாகிவிடுகிறான். (ஜெயம்) இது போல் எத்தனையோ மூட நம்பிக்கைத் திரைப்படங்கள் வருகின்றன. இதை எல்லாம் எந்த அடிப்படையில் அனுமதிக்கிறீர்கள்?


நம்ம நாடு மத சார்பற்ற நாடு. எல்லா மதத்தின் நம்பிக்கை களையும் மதிக்க வேண்டியது எங்கள் கடமை. அதை மூட நம்பிக்கை என்று நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்.


அப்படி என்றால்..விஞ்ஞானத்திற்கு எதிரான விஷயங்களை அனுமதிக்கக் கூடாது என்ற விதிக்கான அர்த்தம்தான் என்ன?


கொசு கடிச்சதால், அல்லது மூட்டைப்பூச்சி கடிச்சதால் எய்ட்ஸ் வருதுன்னு சொன்னாங்கன்னா அதை அனுமதிக்க மாட்டோம்.


சில திரைப்படங்களில் வசனங்களை மட்டும் நீக்குகிறீர்கள். அப்படி நீக்குவதாலேயே அவை மக்களால் அதிகமாகக் கவனிக்கப் படுகின்றன. அதனால் வசனத்தை நீக்கிய உங்கள் நோக்கத்துக்கு பலனில்லாமல் போய்விடுகிறது. ஏனிப்படி?


ஆட்சேபகரமான வசனத்தை நீக்கச் சொல்லுகிறோம். அப்படி நீக்கச் சொல்வதினாலேயே சில சமயம் வல்காரிட்டி அதிகமாகத் தெரிய வாய்ப்புண்டுதான். எங்களுக்குத் தவறு என்று தெரிந்த வார்த்தையை நீக்கிவிட்ட பிறகு மக்கள் நீக்கப்பட்ட வசனத்தை புரிந்து கொண்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?


சில வருடங்களுக்கு முன் வெளியான எம்.குமரன் என்ற திரைப்படத்தில் பாஸ்டர்ட் என்ற வசனத்தை நீக்கியிருக்கிறீர்கள். இதே வார்த்தை எத்தனையோ படங்களில் இடம் பெற்றிருக்கிறதே?


ஆமாம். அதை நான் மறுக்கவில்லை. ஜூலிகணபதி படத்தில் கூட பாஸ்டர்ட் என்ற வார்த்தையை அனுமதித்திருக்கிறோம். அதற்காக எல்லாப்படங்களிலும் அதை அனுமதிக்க வேண்டும் என்பது இல்லை. ஒரு படத்தில் அனுமதித்த காட்சியையோ, வசனத்தையோ இன்னொரு படத்திலும் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. அது ஒரு கலைப்பொருள். இது ஒரு கலைப்பொருள். இரண்டையும் கம்பேர் பண்ணக்கூடாது. சினிமாக்காரர்களுக்கும் எங்கள் பிரச்சனை வருவதே இப்படிப்பட்ட ஆர்க்யூமெண்ட்டுகளினால்தான். அந்தப்படத்தில் விட்டீங் களே..இந்தப் படத்தில் ஏன் விடலைன்னு கேக்கிறாங்க. அப்படிக் கேக்கவே கூடாது. அப்படிக் கேக்கிறதால புரட்யூஸர்களுக்குத்தான் நஷ்டம்.


தயாரிப்பாளர்கள் தங்களின் தரப்பை சொல்வதினால் அவங்களுக்கு நஷ்டம் வரும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?


உதாரணத்துக்கு பாரதிராஜாவோட ஈரநிலம் படத்தை எடுத்துக்கு வோம். அதில் நிர்வாணக்காட்சியை வைத்திருந்தார். கலைஞராக அவர் அந்தக் காட்சியை இப்படிக் காட்டுவது சரி என்று ஃபீல் பண்ணி எடுத்திருக்கலாம். அவருடைய ஃபீலிங் நியாயமாக்கூட இருந்திருக்கலாம். ஆனா எங்க ஃபீலிங் என்னன்னா.. அதைவிட்டால் பல பேர் அதே மாதிரி காட்சிகளை எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க படத்துக்கு கட்ஸ் கொடுத்தால் ஈரநிலம் படத்தில மட்டும் விட்டீங்களேன்னு கேப்பாங்க. இப்படிக் கேக்கிறதாலதான் எல்லாத்தையும் கண்மூடித்தனமா கட் பண்ண வேண்டியிருக்கு. எம்.குமரன் படத்தில கூட பாஸ்டர்ட் என்ற வார்த்தையைவிட்டிருக்கலாம்தான். அவன் பாக்ஸர் இல்லைடா.. பாஸ்டர்ட் என்ற வசனம் கூட பொருத்தமாகத்தான் இருந்தது. அதையும் மீறி ஏன் கட்ஸ் கொடுத்தோம் என்றால் பின்னால் வருகிறவர்கள் இதைக் காட்டி ஆர்க்யூமெண்ட் பண்ணுவார்களே என்பதால்தான். அதனாலதான் சென்ஸாருக்கு வரும் ஒவ்வொரு புரட்யூஸர்கள்கிட்டேயும், டைரக்டர்கள் கிட்டேயும் சொல்றேன். மற்ற படங்களோட கம்பேர் பண்ணி பேசாதீங்கன்னு.


எப்படிப்பட்ட காட்சிகள், வசனங்கள் படத்தில் இடம்பெறக்கூடாது என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் நீங்கள் இதுவரை கட்ஸ் கொடுத்த ஷாட்ஸ், டயலாக்கை தொகுத்து டெமோ ஃபிலிம் மாதிரி விஷூவல் கைடுலைன்ஸ் தயாரித்து திரையுலகினருக்கு வழங்கினால் என்ன? அதன் மூலம் அனாவசிய சர்ச்சைகளை தவிர்க்கலாமே?


அப்படி ஒரு விஷயம் பண்ணணும். யார் பண்றது? அவங்களுக்குத் தானே இது பிரச்சனை? அப்ப அவங்கதான் இதைப் பண்ணணும். கேயார் பிலிம் சேம்பர் தலைவரா இருந்தப்ப இது பத்திப் பேசினோம். அப்போது இது போன்ற ஆக்கபூர்வமான பல விஷயங்கள் பத்தி தயாரிப்பாளர்களுக்கு கடிதம் கூட எழுதினோம். தயாரிப்பாளர்களிடமிருந்தோ இயக்குநர் களிடமிருந்தோ பதிலே இல்லை. அவங்களுக்கு பிரச்சனை இருக்கும் போது அவங்கதானே எங்களைக் கூப்பிடணும்? கூப்பிடவே இல்லை. அவங்களுக்கு இதில் உண்மையான அக்கறை இல்லைன்னுதான் சொல்லணும். திருட்டு விசிடி ஒரு பிரச்சனையா இருக்கிறது என்றதும் அணி திரண்டு ஊர்வலமாப் போறாங்களே? அதே மாதிரி இந்த பிரச்சனைக்கும் அவங்க வரணும்.


கதாநாயகியின் தொப்புளைச்சுற்றி பம்பரம் விடுவது, ஆம்லெட் போடுவது, கரப்பான்பூச்சியை விடுவது போன்ற காட்சிகளை அனுமதித்து இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் என்ன நியாயம் சொல்ல முடியும் உங்களால்?


அடல்ட்ஸ் ஒன்லி பார்க்கக் கூடிய ஏ படத்தில் அந்த மாதிரியான காட்சிகள் இருக்கத்தானே செய்யும்? அதனால்தானே ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறோம்.? சமீபகாலமாக ஏ படங்கள் அதிகமாக வருகின்றன. அதனால் இப்படிப்பட்ட காட்சிகளும் அதிகமாக இருப்பதுபோல் தெரிகின்றன.


நல்ல திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் ஆபாசமாகவோ வன்முறையாகவோ இருந்தால் அதை அனுமதிப்பீர்களா?


அனுமதிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பாக்கிறப்ப நல்லக் கருத்துள்ள படமாக இருக்கும்போது இடையில் ஒன்றிரண்டு விஷயங்கள் முன்னே பின்னே இருந்தாலும் அனுமதிக்கிறோம். உதாரணமாக..ராமகிருஷ்ணா படம். மொத்தமாக பார்த்தால் அது நல்ல படம். அதில் வச்சிருக்கேன் வச்சிருக்கேன் என்று டயலாக் எல்லாம் இருக்கு. இருந்தாலும் அதை விட்டிருக்கோம். அதேசமயம் நல்ல படங்கள் வருவதுதான் இப்ப அபூர்வமாக இருக்கிறதே?


காக்க காக்க என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரம்யா கிருஷ்ணன் படு ஆபாசமாக காட்டப்பட்டிருந்தார். அவரது அந்தரங்க உறுப்பை மையப்படுத்தியே பல ஷாட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை எப்படி அனுமதித்தீர்கள்?


அப்படியா இருக்கு? நாங்கள் பார்த்த போது எங்களுக்கு அது தப்பாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயமாக அனுமதித்திருக்க மாட்டோம்.


இப்போதைய படங்களில், குறிப்பாக காமெடி காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருக்கின்றன. இதை எல்லாம் தணிக்கைக்குழுவினர் கட்டுப்படுத்துவதுபோல் தெரியவில்லையே?


சென்ஸார் யாருக்காகப் பண்றோம்? மாரலான மக்களுக்காகத் தான். அவங்க படத்தை எப்படிப் பாக்கிறாங்கன்னுதான் நாங்க பார்க்க முடியுமே தவிர வக்ரபுத்தி உள்ளவர்களை மனதில் வைத்து சென்ஸார் பண்ண முடியுமா? எல்லாத்¬யும் வக்ரபுத்தியோடு பார்த்தால் எல்லாமே டபுள் மீனிங்காகத்தான் தெரியும். உதாரணமா.. பேரழகன் படத்தில் ஒன்பது டபுள்மீனிங் டயலாக் இருக்குன்னு ஒருத்தன் வந்து சொல்றான். இதுக்கு என்ன பதில் சொல்றது சொல்லுங்க?


பிற மொழிப்படங்களை டப் செய்பவர்களில் சிலர் தமிழ் காமெடி நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்து படத்தில் சேர்த்துவிட்டு நேரடி தமிழ்ப்படம் போல் வெளியிடுகிறார்கள். இந்த மோசடிக்கு தணிக்கைக்குழுவும் உடந்தையாக இருக்கிறதே?


டப்பிங் பட விஷயத்தில் இருக்கும் சென்ஸாரின் விதிதான் இதற்குக் காரணம். ஒரிஜினல் படத்தில் உள்ள காட்சிகள் ஃப்ரேம் ட்டூ ஃப்ரேம் அப்படியே இருந்தால்தான் அது டப்பிங் படம்! அதில் புதிதாக எடுத்த காட்சிகளை ஒரு அடி நீளத்துக்கு சேர்த்திருந்தாலும் அதை நேரடிப்படமாக கணக்கில் கொள்ள வேண்டும் என்று சென்ஸார் விதி சொல்கிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஹெட்குவார்ட் டர்ஸுக்கு பரிந்துரை செய்து அதன்படி புதிய ஆர்டர் வந்திருக்கிறது. இனி டப்பிங் படங்களில் புதிய காட்சிகளை சேர்த்திருந்தாலும் அது டப்பிங் படம்தான்!


ஒரு தலைப்பில் படத்தை சென்ஸார் செய்து வெளியிட்டுவிட்டு அல்லது வெளியிடாமல் இருக்கும் நிலையில் வேறு தலைப்பில் படத்தை ரிலீஸ் செய்யலாமா?


ரிலீஸுக்குப் பிறகு படத்தின் டைட்டிலை மாற்றவே முடியாது. ஆனால் ரிலீஸுக்கு முன்னால் மாற்றிக் கொள்ளலாம். அப்படி ரிலீஸ் செய்யவும் எங்கள் அனுமதியை வாங்க வேண்டும். அதற்கு அனுமதி கொடுக்கும் போது பழைய டைட்டிலையும் குறிப்பிட்டுத் தான் அனுமதி கொடுப்போம். அதை படத்தின் டைட்டிலிலும், போஸ்டர்களிலும் குறிப்பிட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தப்பு. அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியம்.உதாரணத்துக்கு ஜமீலா படம் நதிக்கரையினிலே என்ற பெயரில் வெளியானது. டைட்டிலில் இரண்டு பெயரும் இருக்கும். ஏன் இப்படி செய்யச் சொல்கிறோம் என்றால் அந்தப் பெயரில் இருந்த படம்தான் இந்தப்படம் என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.


தணிக்கைச் செய்யும் முன்பே டிரெய்லர்களை டி.வி.யில் ஒளிபரப்புகிறார்கள். அப்படி ஒளிபரப்பப்படும் காட்சியை நீங்கள் தணிக்கையின் போது கட் பண்ணுவதாக வைத்துக் கொள்வோம். அந்த டிரெய்லர்கள்...


நாங்கள் ஏ என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தப் படங்களின் காட்சிகளைக் கூட டி.வி.யில் போடக்கூடாது. அதுதான் சட்டம். அதனால நாங்க என்ன பண்ணிருக்கோம்னா..குறைந்தபட்சம் டிரெய்லர்களை நாங்கள் சர்ட்டிஃபிகேட் கொடுத்த பிறகு டி.வி.க்குக் கொடுங்கன்னு அட்வைஸ் பண்ணிருக்கோம். அதையும் மீறி சென்ஸார் செய்வதற்கு முன் டிரெய்லர்களை டி.வி.க்குக் கொடுத்தால் அந்தப் படங்களை நாங்கள் பார்க்க மாட்டோம். சர்ட்டிஃபிகேட் தர மாட்டோம் என்று சொல்லியிருக்கோம்.


தணிக்கையின் போது நீங்கள் கட்ஸ் கொடுத்த காட்சிகளின் நெகட்டிவ்களை உங்களிடம் ஒப்படைத்த பிறகுதான் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது அதே காட்சிகள் பல படங்களில் இடம் பெறுகின்றனவே? இதைத்தடுக்க என்ன வழி?


சில படங்களில் அப்படி தவறு செய்யப்பட்டதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். தியேட்டர்கள் மீது நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம்.இதற்கு தியேட்டர்காரர்கள் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்?


நீங்கள் சொல்வது சரிதான். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், லேப்காரர்கள் கூட இதற்குக் காரணமாக இருக்க முடியும். கட் பண்ணப்பட்ட காட்சிகளை படத்தில் இணைப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று..எங்கே கட்ஸ் கொடுக்கப்பட்டது என்று தெரியாத அளவுக்கு இருப்பது. அப்படி இருந்தால் தவறு தயாரிப்பாளர், லேப்காரர்கள் மீது என்று அர்த்தம். இதற்கு தியேட்டர்காரர்கள் காரணமாக இருக்க முடியாது. இன்னொன்று.. கட்ஸ் கொடுக்கப்பட்ட இடம் தெரிவது போல் காட்சிகளை இணைப்பது. இதற்கு தியேட்டர்காரர்கள்தான் பொறுப்பு.


டி.வி.க்கும் சென்ஸார் தேவை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது அண்மைக்காலமாக. இது சாத்தியம்தானா?


டி.வி.க்கு சென்ஸார் தேவைதான். ஆனால் அதை எப்படி செய்வது என்பதில் இன்னும் தெளிவான திட்டம் இல்லை. எங்களை மாதிரி ஒரு குழு உட்கார்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை சென்ஸார் பண்ணுவது சாத்தியமில்லை. அதே நேரம் அதற்கு கண்டிப்பாக ஏதாவது வழிமுறைகளைக் கண்டுபிடித்துத்தான் ஆக வேண்டும். மற்றபடி கேபிள் டி.வி.க்கான சட்டத்தின்படி வேண்டுமானால் அதை முறைப்படுத்தலாம். கேபிள் டி.வி. சட்டம் என்பது ஏறக்குறைய சினிமாவுக்கான சென்ஸார் விதிகள் போலவே இருக்கின்றன.

சரவணனாக இருங்கள். அல்லது சத்யராஜாக இருங்கள்!

முன்குறிப்பு- சில வருடங்களுக்கு முன் வண்ணத்திரை இதழில் பத்திரிகையாளரின் டைரி என்ற தொடர் வெளிவந்தது. அத்தொடருக்காக நான் எழுதிய கட்டுரைதான் இது.

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகத் தொடர்பில் இருக்கும் நான் புரிந்து கொண்ட விஷயம்.. திரைநட்சத்திரங்கள் - முகத்துக்கு மட்டு மல்ல மனசுக்கும் மேக்கப் போட்டுக்கொள்பவர்கள்! இதில் விதிவிலக்குகளும் உண்டு!


புகழ்பெறுவதற்கு முன் சாதாரண மனிதர்களாக இருந்த இவர்களை ஒரு படத்தின் வெற்றி, அடியோடு மாற்றிவிடுகிறது. சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன், ‘நம்மைப்பற்றி பத்திரிகைகளில் எழுதமாட்டார்களா’’ என்று ஏங்கும் இவர்கள், வளர்ந்த பிறகு அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகளைக்கூட படிப்பதில்லை. அப்படியே படித்தாலும் அதை எழுதிய பத்திரிகை யாளனிடம் ‘நீங்க எழுதினதைப் படிச்சேன்’’ என்று சொல்வதையே கௌரவக்குறைச்சலாக நினைக் கிறார்கள். பேட்டிக் கண்ட பத்திரிகையாளர்கள் சம்மந்தப்பட்ட நட்சத்திரங்களை மறுமுறை சந்திக்கும்போது, ‘பேட்டியைப் படிச்சீங்களா?’’ என்று கேட்டால், ‘இல்லை ஸார் நான் பொள்ளாச்சிக்குப் போயிட்டேன்’’ என்பார்கள். பொள்ளாச்சி என்னவோ சந்திரமண்டலத்தில் இருப்பதுபோல்.


இவர்களின் மனோபாவத்தைப் புரிந்து கொள்ளா மல் சில பத்திரிகையாளர்கள், தான் எழுதிய பேட்டி அல்லது செய்தி வெளியான புத்தகத்தை சம்மந்தப்பட்ட நட்சத்திரத்தைத் தேடிச் சென்று கொடுப்பதும் உண்டு. இந்தத் தவறை நான் எந்நாளும் செய்ததில்லை. அப்படி செய்வதை எனக்கும், நான் சார்ந்த பத்திரிகைத் தொழிலுக்கும் செய்யும் இழிவாக, அவமானமாக நினைக்கிறேன். குறிப்பிட்டப் பத்திரிகைக்காக நாம் பேட்டி எடுத்திருக்கிறோம். அது எப்படி பிரசுரமாகி இருக்கிறது என்ற ஆர்வம் அல்லது விருப்பம் இருந்தால் சம்மந்தப்பட்ட நட்சத்திரமே அந்தப் பத்திரிகையை வாங்கிப் படிக்கட்டுமே!


என் அனுபவத்தில் நான் தெரிந்து கொண்ட இன்னொரு விஷயம்....திரைநட்சத்திரங்களைப்பற்றி என்னதான் மாய்ந்து மாய்ந்து பேனாவில் மை தீர்ந்து போகும்வரை பக்கம் பக்கமாக புகழ்ந்து எழுதினாலும் அதை அவர்கள் சட்டை செய்வதில்லை. ‘கையெழுத்திட்ட புகைப்படம் அனுப்பவும்’ என்ற பின்குறிப்போடு கடிதம் எழுதும் ரசிகனின் கடிதத்துக்கு என்ன மரியாதையோ அதே மரியாதைதான் பாஸிட்டிவ்வாக எழுதப்படும் பேட்டிக் கட்டுரைகளுக்கும்! அதே நட்சத்திரங்களைப்பற்றி நாலுவரி நெகட்டிவ்வாக எழுதிவிட்டால் போதும், வெளிநாட்டில் இருந்தால் கூட நம் செல்போன் நம்பரை தேடிப்பிடித்து, ‘என்ன ஸார் இப்படி எழுதிட்டீங்க?’ என்று புலம்பித் தீர்த்துவிடுவார்கள்.


சினிமாக்காரர்களின் இப்படிப்பட்ட அணுகுமுறையைப் பார்க்கும் போது - பிலிமாலயா பத்திரிகையில், அதன் ஆசிரியர் மறைந்த திரு.எம்.ஜி.வல்லபன் பல வருடங்களுக்கு முன், எழுதியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘நல்லதைச் சொல்லும்போது நன்றி கூறாதவர்கள் அல்லதைச் சொல்லும் போது ஆத்திரப்பட உரிமையில்லாதவர்கள்’ என்று எழுதுவார் வல்லபன். உண்மைதானே? தன்னைப்பற்றி நல்ல விஷயத்தை எழுதியவனைப் பாராட்ட மனமில்லாதவர்களுக்கு, நெகட்டிவ்வான விஷயத்தை எழுதுகிற போது கோபப்பட என்ன தகுதி இருக்கிறது?


இந்த விஷயத்தில் எனக்கு இரண்டு பேரைப் பிடிக்கும் - திரையுலகில். ஒருவர் ஏவிஎம் சரவணன். இன்னொருவர் சத்யராஜ். ஏவிஎம் சரவணன் தன் அனுபவத்தில் எத்தனையோ பத்திரிகைச் செய்திகளில் இடம் பிடித்திருப்பார்? ஆனாலும் இன்று வரை ஒரு நல்ல பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார் சரவணன். அவரைப்பற்றி யார் என்ன செய்தி எழுதினாலும் அதைத்தவறாமல் படிக்கும் அவர், உடனடியாய் அந்தப் பத்திரிகைக்கும், பத்திரிகையாளருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றிக்கடிதம் எழுதிவிடுவார். (இந்தக்கட்டுரை வண்ணத்திரை இதழில் வெளியான போதும் ஏவிஎம் சரவணனிடமிருந்து மறுநாளே நன்றிக்கடிதம் வந்தது)இந்த குணம் திரையுலகில் எவருக்குமே இல்லை.


ஒருமுறை வாஞ்சிநாதன் என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் மீது தன் கடுப்பைக் காட்டினார் பத்திரிகையாளர்களினாலேயே வளர்த்துவிடப்பட்ட விஜயகாந்த். ‘எங்கள் மீது கோபப்பட சினிமாத்துறையில் ஏவிஎம் சரவணனைத்தவிர யாருக்கும் உரிமையில்லை’’ என்றேன் நான் அதே கடுப்புடன் அவரிடம். ‘ஏன்?’’ என்று என்னை முறைத்தார் விஜயகாந்த் கூடுதல் கடுப்புடன். சரவணனின் இந்தப் பழக்கத்தை அவரிடம் சொன்னேன். ‘அப்படியா?’’ என்றார் விஜயகாந்த் அலட்சியமாக.


சரவணன் இப்படி என்றால் சத்யராஜ் அதற்கு நேர்மாறானவர். அவரைப்பற்றி நல்லவிதமாக எழுதினாலும் சரி, கெட்டதாக எழுதினாலும் சரி ரியாக்ட் பண்ண மாட்டார். ‘நடிக்கிறது என் வேலை. எழுதுறது உங்க வேலை. நான் என் வேலையைப் பாக்கிறேன். நீங்க உங்க வேலையைப் பாக்கறீங்க. இதில் நன்றி என்ன வேண்டிக்கிடக்கு?’’ என்பார் கேஷுவலாக. நல்லவிதமாக எழுதியதைப்பற்றி எப்படி அலட்டிக் கொள்ள மாட்டாரோ அதேபோல் கெட்டதாக எழுதினாலும் கவலைப்பட மாட்டார். அவரைப்பற்றி நெகட்டிவ்வாக எழுதிய பத்திரிகையாளர் அடுத்த நாளே அவரைச் சந்தித்தாலும் ஏன் இப்படி என்னைப்பற்றி எழுதினீர்கள் என்று ஒருவார்த்தைக் கேட்கமாட்டார். அது மட்டுமல்ல, ஒருவேளை மனதுக்குள் வருத்தம் இருந்தாலும் தப்பித்தவறிக் கூட அதை காட்டிக் கொள்ள மாட்டார். எப்போதும் எப்படி பழகுவாரோ, கலகலப்பாகப் பேசுவாரோ அதேபோல்தான் பழகுவார், பேசுவார். எனக்கும் அவருக்கும் தனிப்பட்டமுறையில் நல்ல நட்பு உண்டு. ஆனாலும் நான் எத்தனையோ முறை சத்யராஜை கடுமையாய் விமர்சித்து எழுதியிருக்கிறேன். இன்றுவரை எங்கள் நட்பில் விரிசலில்லை.


சில வருடங்களுக்கு முன் குமுதம் பத்திரிகையில் நடிகையைப்பற்றிய தொடர் ஒன்று வெளிவந்தது. அதில் சத்யராஜை அடையாளப்படுத்தி, அவரை அசிங்கப்படுத்துவதுபோல் எழுதப்பட்டது. அதனால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எப்படிப்பட்ட சங்கடங்கள், அவமானங்கள் ஏற்பட்டன என்று எனக்கும் தெரியும். அப்படி ஒரு அவமானத்தை ஏற்படுத்திய அதே பத்திரிகைக்கு சில நாட்களில் பேட்டி கொடுத்தார் சத்யராஜ். இது பற்றி ஒருமுறை பேச்சு வந்தபோது சத்யராஜ் சொன்னார்: ‘மீடியாக்களுக்கு பரபரப்பான செய்தி வேணும். அதனால இப்படி எல்லாம் எழுதுறாங்க. எழுதிட்டுப்போகட்டும். அதனால நமக்கு கஷ்டம்தான். என்ன பண்றது? நமக்குக் கிடைச்சப் புகழுக்கு நாம கொடுக்கிற விலை!’’


சரவணனையும் சத்யராஜையும் இங்கே குறிப்பிடக் காரணம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை ஹீரோக்கள் பத்திரிகையாளர்களை நண்பர்களாக, நலன்விரும்பிகளாக மதித்தார்கள். இன்றைய ஹீரோக்களில் சிலரோ பத்திரிகையாளர் களை எதிரிகளாக நினைக்கிறார்கள். ஒரு இளம் நடிகரின் அப்பா ஒருபடி மேலேபோய், தன் மகனைப்பற்றி நெகட்டிவ்வாக எழுதும் பத்திரிகைகளுக்கு ரசிகர்கள் புடைசூழ கிளம்பிப்போய் தகராறு செய்வதையே தொழிலாக வைத்திருக்கிறார். எத்தனை பத்திரிகைகள் அவர் மகனைப்பற்றி பக்கம் பக்கமாக புகழ்பாடிக் கொண்டிருக்கின்றன? அந்தப்பத்திரிகைகளுக்கு இதேபோல் கூட்டமாய் போய் நன்றி சொல்லி இருப்பாரா?


நட்சத்திரங்களுக்கும் மீடியாக்களுக்கும் இப்போது உறவு எப்படி இருக்கிறது என்பதற்கு மிக சரியான உதாரணம் சூர்யா ஜோதிகா திருமணத்தின் போது பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை. அதாவது திருமணத்துக்கு பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை! இது பற்றி எங்களின் அதிருப்தியை தெரிவித்தபோது, அதற்கு சொல்லப்பட்ட காரணம் இன்னும் மோசம். ‘பாதுகாப்பு கருதி’ பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லையாம். பத்திரிகையாளர்கள் என்ன குண்டு வைக்கும் பயங்கரவாதிகளா?


சினிமாவைப்பற்றி எழுத வேண்டிய பத்திரிகையாளர்கள் சினிமாக்காரர்களைப்பற்றி எழுதி, மக்களின் மண்டைக்குள் குப்பையைக் கொட்டும் சமூகக்குற்றத்துக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று நொந்து கொள்ளும் அதே நேரம் சினிமாக்காரர்களுக்கும் உரக்கச் சொல்ல வேண்டிய விஷயமிருக்கிறது.


நட்சத்திர நண்பர்களே! ஏஸி அறையிலும், ஏற்றிவிடப்பட்ட காரின் கருப்புக்கண்ணாடிக்குள்ளும் வாழும் நீங்கள் உலகத்தைப் பார்க்கும் ஜன்னல்தான் பத்திரிகைகள். அதிலிருந்து தென்றலும் வரும், அவ்வப்போது அனல் காற்றும் அடிக்கும். இரண்டையும் சமமாக பாவிக்கப் பழகிக்கொள்ளுங்கள். இல்லை எனில், சரவணனாக இருங்கள். அல்லது சத்யராஜாக இருங்கள்!

நாவை அடக்கு நன்றிகெட்ட சேரனே...

முன்குறிப்பு - சில மாதங்களுக்கு முன்பு ஒரு திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்களை கெட்ட வார்த்தையால் சாடினார் சேரன். அதற்கு பதிலடியாக குங்குமம் இதழில் நான் எழுதிய கட்டுரையே இது.

படைப்பாளனை செழுமைப்படுத்துவது பாராட்டு அல்ல, விமர்சனம்! நிஜமான படைப்பாளி எவரைக் கேட்டாலும் இந்த கருத்தில் நிச்சயம் உடன் படுவார்கள். இதில் முரண்படுகிறவர் படைப்பாளியாய் இருக்க மாட்டார், படைப்பாளியாய் வேஷம் கட்டிக் கொண்ட, முகமூடி தரித்துக் கொண்ட, புகழ் போதைக்கு அடிமையானவராகவே இருப்பார். தமிழ்சினிமாவை புரட்டிப்போட புறப்பட்டு வந்த வராக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் சேரன் இப்படியான ஒரு புகழ்போதை அடிமைதான் என்று சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.


சினிமா - சில நேரங்களில் அல்ல, பல நேரங்களில், குப்பைகளை எல்லாம் கோபுரத்தில் ஏற்றி வைத்து விடுகிறது. அப்படி கோபுரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட குப்பையாகவே நான் சேரனைப் பார்க்கிறேன். இந்த பாவத்தை செய்ததில் ஊடகங்களுக்கும், என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் வெட்கத்தோடு ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். ஏனெனில், சேரனின் முதல் படம் பாரதிகண்ணம்மா தொடங்கி, தவமாய் தவமிருந்து வரை அவரது ஒவ்வொரு படத்தையும் சிலாகித்து, சிகரத்தில் ஏற்றி வைத்ததோடு, சேரனையும் சிம்மாசனத்தில் அமர்த்தியது ஊடகங்கள்தான்.


சேரன் இயக்கிய படங்களில் வெகு சில தவிர தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி போன்ற பல படங்கள் வர்த்த ரீதியில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய படங்கள். அந்தப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பலர் இன்று படத்துறையிலேயே இல்லை. இருக்கும் வெகு சிலரும் சேரனை வைத்து படம் எடுத்த பாவத்துக்கு இன்னமும் கூட வட்டிக் கட்டிக் கொண்டு கடனாளியாய்..! ஆனாலும் சேரனுக்கு படத்துக்குப் படம் பேரும், புகழும் கூடிக் கொண்டே போனதற்கு ஊடகங்கள் அன்றி வேறு யார் காரணமாக இருக்க முடியும்?


தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் தனிக்குடித்தனம் நடத்துமளவுக்கு நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அசிங்கமும், அவரது ஆபாசமான, அருவறுப்பான முகமும் நாம் அறியாதது அல்ல. பட வாய்ப்புக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் பெண்களிடம் மட்டுமின்றி திருச்சியை சேர்ந்த ஒரு குடும்பப் பெண்ணிடமும் தன் பாலியல் வக்கிரத்தைக் காட்டி அசிங்கப்பட்டவர்தான் இந்த சேரன். அப்படிப்பட்ட சேரனின் தனிப்பட்ட வாழ்க்கையை மறந்து அவரது படைப்பை மட்டுமே பாராட்டி உச்சிமுகர்ந்ததன் விளைவே - இன்றைக்கு சேரனுக்குக் கிடைத்த இந்த பகட்டு வாழ்க்கை! போர்க்கொடி படக்கம்பெனியில் ஒரு அகதியைப் போல் ஒட்டிக்கொண்டு வறுமை வாழ்க்கை வாழ்ந்த சேரன், இன்று கோடிகளில் புரள்கிறார். சேரனின் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தன் உயர்வுக்குக் காரணமானவர்களை தினமும் நன்றியோடு நினைவுகூர்ந்திருப்பார்.


ஆனால் சேரன்? பொது நிகழ்ச்சியில் சபை நாகரிகம் மறந்து, தன்னிலை மறந்த ஒரு குடிகாரனைப்போல் சென்னையின் கெட்ட வார்த்தையால் பத்திரிகையாளர்களைத் திட்டித்தீர்த்திருக்கிறார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், எனக்கு அது அதிர்ச்சியாக இல்லை. ஏனெனில், தன்னை வாழ வைப்பவர்களை எல்லாம் பிறகுவசைபாடுவதுதான் சேரனின் குணஇயல்பு. தன் நண்பனை எப்படியாவது இயக்குநராக்கியே தீர வேண்டும் என்று தன் சைக்கிளின் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு கோடம் பாக்கத்தை சுற்றி வந்த தேனப்பனையும், சேரனுக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஹென்றியையும், இதெல்லாம் ஒரு கதையா என்று அப்போதைய ஹீரோக்கள் நிராகரித்த பாரதிகண்ணம்மா கதையில் நம்பிக்கை வைத்து அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டன் மூலம் சேரனுக்கு இயக்குநர் அந்தஸ்தைக் கொடுத்த பார்த்திபனையும், இன்னும் அவரது வாழ்வின் உயர்வுக்காக தோள் கொடுத்த பலரையும் சேரனின் விஷநாக்கு எப்படி எல்லாம் பதம் பார்த்தது என்பதை நான் நிறையவே அறிவேன்.


சொல்லப்போனால் சேரன் என்கிற விஷப்பாம்பு என்னையும் கூட ஒரு நாள் தீண்டிப் பார்த்தது. பொற்காலம் படத்துக்குப் பிறகு பாரசீக ரோஜா என்ற பெயரில் ஒரு படத்தை அவர் இயக்குவதாக இருந்து, பிறகு அப்படம் கைவிடப்பட்டது. ஏன் என்ற காரணத்தை புலனாய்வு செய்து வண்ணத்திரை இதழில் எழுதினேன். இதுதான் நான் செய்த குற்றம். அதைக் கண்டு வெகுண்டெழுந்த சேரன், சில அடியாட்களுடன் வந்து அந்த பத்திரிகை அலுவலகத்தில் சண்டித்தனம் செய்தார். அப்படியும் அவரது ஆத்திரம் அடங்க வில்லை. நான் எழுதுகிற பத்திரிகைகளின் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு என்னை பத்திரிகை உலகத்திலிருந்தே அப்புறப்படுத்தும் அரிய பணியையும் செய்து கடைசியில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தார்.திரையுலகம் எத்தனையோ ஜாம்பவான்களை சந்தித்திருக்கிறது. அவர்கள் பலருக்கு பல நேரங்களில் தென்றலாக இருந்த பத்திரிகைள் சில நேரங்களில் அனல் காற்றையும் வீசி இருக்கிறது. அதற்காக எம்.ஜி.ஆர். உட்பட எவருமே சம்மந்தப்பட்ட பத்திரிகையாளரின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைத்ததில்லை. அப்படியொரு கேவலமான செயலைச் செய்த ஒரே சினிமாக்காரர் சேரன்தான். (அதே சேரன் சில வருடங்களுக்குப் பிறகு பாண்டவர்பூமி பட விழாவில் தன் செயலுக்கு வருந்தி என்னிடம் நட்புப் பாராட்டத் தலைப்பட்டது தனிக்கதை!) சேரனின் குரூரபுத்திக்கு இப்படி எத்தனையோ உதாரணங்கள்தான்.!


ஒரு படைப்பாளனுக்கு தன் படைப்பின் மீது கர்வம் இருப்பதில் தவறில்லை. அது அளவுக்கு மீறி அவனது தலையைக் கனக்க வைத்துவிடக் கூடாது. சேரன் விஷயத்தில் அவரது கர்வம், தலைக்கனமாகி, அதையும் மீறி அவரை அகம்பாவம் கொண்டவராகவும் மாற்றிவிட்டிருக்கிறது என்பதே நான் அவரை கிரகித்து அறிந்த உண்மை. தன்னை மிகப்பெரிய கலைஞனாக எண்ணி சுயகற்பனையில் திளைக்கும் சேரனால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அது ஒரு மன வியாதியாகவே எனக்கு தோன்றுகிறது. (யாரேனும் நல்ல டாக்டரை சிபாரிசு செய்வீர்களாக!)


தவமாய் தவமிருந்து படம் வெளியான போது அந்தப்படத்தை பாராட்டாத பத்திரிகைகளில்லை. ஒரு இணையதளத்தில் மட்டும் அப்படம் கடுமையாக விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டிருந்தது. அந்த விமர்சனத்தை மறுபிரசுரம் செய்த பத்திரிகையை மிக கேவலமான வார்த்தைகளால் சாடினார் சேரன். உலகில் படைக்கப்படுகிற எல்லா படைப்புகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவைதான். திரைப் படங்களைப் பொருத்தவரை உலக அரங்கில் இன்று வரை இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றி வருவது சத்யஜித்ரேதான். அவரது படைப்புகளை மிஞ்சிய படைப்புகள் இன்றுவரை எவராலும் படைக்கப்படவில்லை. அப்பேற்பட்ட சத்யஜித்ரே கூட, ‘இந்தியாவின் வறுமையை வெளிநாடுகளில் விற்கிறார்’ என்ற விமர்சனத்தை சந்தித்தார். சத்யஜித்ரேயை மிஞ்சியவரா இந்த சேரன்?


நேர்மையான எந்தவொரு படைப்பாளனும் தன் வாழ்க்கைக்கு முரணான படைப்பை படைக்கவே மாட்டான். அது போல், தன் படைப்புக்கு விரோதமான செயலை செய்யவும் மாட்டான். முற்போக்கு இயக்குநர் என்ற முகமூடியை அணிந்திருக்கும் செலுலாய்டு வியாபாரியான இந்த சேரனின் படைப்புகளுக்கும், செயலுக்கும்தான் எத்தனை முரண்பாடு?


மேடைகளிலும், பேட்டிகளிலும் தன்னை சமூக அக்கறை கொண்டவராகக் காட்டிக் கொள்ளும் சேரனின் உள்மனம் எத்தனை அழுக்கானது என்பதற்கு சாட்சி ‘மாயக்கண்ணாடி’ படம் ஒன்று போதும். மேலூரிலிருந்து புறப்பட்டு வந்ததை மறந்துவிட்டு மேல்தட்டு வாழ்க்கை வாழும் சேரன் அந்தப் படத்தில் சமூகத்துக்கு சொன்ன செய்தி என்ன? அப்பன் செய்யும் தொழிலையே புள்ளையும் செய்யணும் என்ற ராஜாஜியின் குலத்தொழில் கொள்கையைத் தானே? இப்படி சமூகத்து எதிரான கருத்தை சொல்லலாமா என்று கேட்டால் குய்யோமுறையோ என்று கூப்பாடு போட்டார். மாயக்கண்ணாடி படத்தை ரசிக்கும் அளவுக்கு தமிழ் மக்களுக்கு அறிவில்லை என்று அகம்பாவத்துடன் பேசினார் - அந்த தமிழ் மக்கள் கொடுத்த பணத்தில்தான் கொழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற குறைந்தபட்ச நன்றி கூட இல்லாமல்.


போலி புரட்சியாளர் சேரனின் பொய்த்தனத்துக்கு கடந்த காலத்திலும் சில உதாரணங்கள் இருக்கின்றன. தேசியகீதம் படம்தான் அது. ‘நூறு ரூவா சம்பாதிச்சா அதில் அரிசி விலை எவ்வளவு? சர்க்கரை எவ்வளவு? பருப்பு என்ன விலைன்னு தெரிஞ்சிருக்கிறவர்தான் முதல்வரா வரணும்.’ என்று வசனம் வைத்திருந்த சேரன், அப்படம் வெளியான சில நாட்களில் பிரபல பத்திரிகைக்கு (குமுதம்) பேட்டி கொடுத்தார். அதில் ஒரு கேள்வி..


‘’அரசியலை மையமாக வைத்து படம் எடுத்திருக்கிறீர்கள். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?’’


சேரன்: கட்டாயம் வர வேண்டும். அவர் வந்தால் நன்றாக இருக்கும். வருவார். என் தேசிய கீதம் படத்தில கூட பாட்டுல ஒரு வரி வரும்..மக்கள் நம் மக்கள் என் உணர்வுள்ள தலைவன் வேண்டும்’ என்று. அதில் காந்தி, நேரு, காமராஜ் மூணு பேரையும் மார்ஃபிங்ல காமிச்சிருக்கேன். அப்ப நான் நினைச்சேன். காமராஜருக்கு அப்புறம் ரஜினிகாந்தை காமிச்சா என்னன்னு. ஏன்னா மக்கள் நம் மக்கள்ங்கிற உணர்வு ரஜினிகிட்டத்தான் இருக்கு. அந்த மாதிரி ஒரு தலைவன் நமக்கு வேண்டும். அவர் வந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.’ என்று பதில் சொன்ன சேரன், வசூலில் தேசியகீதம் படம் நொண்டியடிக்க ஆரம்பித்ததும் ரஜினியை படம் பார்க்க வைத்து அவரிடம் ஒரு பாராட்டுக் கடிதம் வாங்கினார். ‘நான் சிந்தித்ததை சேரனும் சிந்தித்திருக்கிறார். என் படமாக நினைத்து அவர் படத்தைப் பாருங்கள்’ என்ற ரீதியில் ரஜினி ஒரு கடிதம் கொடுக்க, அது தேசியகீதம் படத்தின் விளம்பரங்களில் இடம்பெற்றது.


அந்த விசுவாச மேலீட்டில், ‘’ரஜினியோட கடிதத்தால் படத்துக்கு இன்னும் ப்ளஸ்பாயிண்ட். பத்து பர்ஸென்ட் வெற்றிக்கு ரஜினிதான் காரணம்னு சொன்னால் கூட எனக்கு சந்தோஷம்தான். ரஜினி ஸாரிடம் தொடர்ந்து பாராட்டு பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.’’ என்றும் புளகாங்கிதப்பட் டிருந்தார். புரிகிறதா சேரனின் உண்மை முகம்? நிஜ வாழ்க்கையில் தன்னை மட்டுமல்ல தமிழகத்தையும் அரிசி விலை தெரியாத ரஜினியிடம் அடகு வைக்க ஆசைப்பட்டவர்தான் இந்த சேரன்.


‘’காமராஜர் போன்ற முதல்வர் நேர்மையான அரசியல்வாதி இன்றைக்கு யாருமே இல்லை. இன்றை அரசியல் வாதிகள் ஏழைகளை ஏமாற்றுகிறார்கள். சுயநலவாதிகள்தான் இப்போது அரசியலில் இருக்கிறார்கள்’’- இதுவும் ஒரு பத்திரிகை பேட்டியில் சேரன் வடித்த நீலக்கண்ணீர்தான். இப்படி நாட்டுக்காக கவலைப்பட்ட சேரன், சில நாட்களிலேயே அப்போது உயிரோடிருந்த மூப்பனாரை அழைத்து தன் தேசியகீதம் படத்தை பார்க்க வைத்தார். சம்பிரதாயமாக அவர் சொன்ன பாராட்டு வார்த்தைகளை பத்திரிகை செய்தியாக்கி தனக்குத்தானே பரிவட்டம் கட்டிக் கொண்டார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் வைகோ கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு அவரை பாராட்டித்தள்ளினார்.


எல்லாவற்றையும் விட, தேசியகீதம் படத்தின் இறுதிக்காட்சியில் இட ஒதுக்கீடு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பியவர்தான் இந்த சேரன்.


இப்படியாக தன் படைப்புக்கும் வாழ்க்கைக்கும் விசுவாச மில்லாமல் போலித்தனமாகப் பேசிக் கொண்டு திரியும் சேரனுக்கு பத்திரிகையாளர்களைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?


சேரனுக்கு கடைசியாய் ஒரு வார்த்தை...
நாவை அடக்கு!

Friday 10 July 2009

‘ஐ யம் தமிழ்படைப்பாளி’


உண்மையைப் போன்ற தோற்றத்தைத் தருகிற பிரம்மாண்டமான பொய்தான் சினிமா. அப்படியொரு பொய்யைப் புனைந்து பணம் சம்பாதிப்பதையே பிழைப்பாக வைத்திருப்பதாலோ என்னவோ மக்களை ஏமாற்றுவதே சினிமாக்காரர்களின் சிந்தனைகளில் முதன்மையானதாக இருக்கிறது. இன்னும் வெளிப்படையாகப் பேசுவதென்றால், மக்களை ஏமாற்றுவதில் சினிமாக்காரர்கள் அரசியல்வாதி களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை.

ஒரு திரைப்படம் தயாரிக்கத் தொடங்குவதிலிருந்து, அப்படம் திரைக்கு வந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் பொய்களையேச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒரு கோடியில் தயாரிக்கப்படும் படத்தை ஐந்து கோடியில் தயாரிப்பதாக சொல்வதாகட்டும், ஒரு லட்சத்தில் போடப்பட்ட அரங்கத்தை (செட்) ஐம்பது லட்சத்தில் போட்டதாகச் சொல்வதாகட்டும், திரைக்கு வந்து தோல்வியடைந்த படத்தை ‘வெற்றிநடை போடுகிறது’ என்ற ரீதியில் விளம்பரங்களை செய்து மக்களை நம்பவைப்பதிலாகட்டும், எல்லாவகையிலும் பொய்யைச் சொல்லியே மக்களின் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திரையுலகினர் செய்யும் மிகப்பெரிய ஏமாற்றுவேலை, பிற மொழிப்படங்களை மொழிமாற்றி, அதை நேரடி தமிழ்ப்படம் என்று மக்களை நம்பவைப்பது! மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழிகளில் வெற்றியடைந்த படங்களின் தமிழ் மொழிமாற்று உரிமையை வாங்குவதும், அப்படங்களை தமிழில் மொழிமாற்றி வெளியிடுவதும் புதிதல்ல. டப்பிங் படங்கள் என்று சொல்லப் படுகிற, இப்படிப்பட்ட மொழிமாற்றுப் படங்களைத்தான் பொய்யாய் விளம்பரங்களைச் செய்து, தாங்களே தயாரித்த நேரடித்தமிழ்ப்படம் போன்ற செயற்கையான தோற்றத்தை ஊடகங்களின் துணையுடன் உண்டாக்கி வெளியிடுகிறார்கள்.

இந்த வழியில் பல ஆண்டுகளாக மக்களை மட்டும் ஏமாற்றிக் கொண்டிருந்த இவர்கள், கடந்த சில ஆண்டுகளாக தணிக்கைக் குழுவையும், அரசையும் கூட ஏமாற்ற ஆரம்பித்துவிட்டனர். பிறமொழிப்படத்தின் தமிழாக்க உரிமையை வாங்கி, அது பிறமொழிப்படத்தின் டப்பிங் என்று தெரியாமலிருக்க, இங்குள்ள நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து சில காட்சிகளை எடுத்து, படத்தில் சேர்த்துவிடுகின்றனர். அதன் மூலம் இது நேரடித் தமிழ்ப்படம் என்று தணிக்கைக்குழுவினரை நம்ப வைத்து, சான்றிதழ் பெற்றுவிடுவதோடு, தமிழக அரசு வழங்கும் மானியம், வரிவிலக்கு போன்ற சலுகைகளையும் பெற்றுவருகின்றனர்.

திரைத்துறையினர் செய்து வரும் இந்த மோசடி, பாமர மக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. போஸ்டர்களில், நாளிதழ் விளம்பரங்களில் தெரியும் தமிழ்முகங்களைப் பார்த்து, இது தமிழ்ப்படம்தான் என்று நம்பி திரையரங்குக்கு வருகின்றனர். தமிழ்மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கும் இந்தப்போக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருப்பது மட்டுமல்ல, தங்களின் தவறை மறைக்க மற்றுமொரு பொய்யையும் கூற ஆரம்பித்திருக் கின்றனர். படத்தில் அன்னிய முகங்கள் அதிகமாக இருக்கிறதே என்று யாரும் கேள்விகேட்டுவிடக்கூடாது என்று முன்னெச்சரிகை யில், இது இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என்றும் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட இழிவான காரியத்தை மணிரத்னம் போன்ற மக்களின் நன்மதிப்பு பெற்ற இயக்குநர்களே செய்கிறார்கள். இவர் இயக்கிய உயிரே, குரு போன்ற படங்கள் எல்லாம் இப்படி மொழிமாற்றி வெளியிடப்பட்ட படங்கள்தான். பணம் சம்பாதிப்பதற்காக தமிழ்மக்களை மோசடி செய்யும் இப்படிப்பட்ட கேவலமான வியாபாரிகளில் ஒருவராக பாரதிராஜாவும் மாறிப்போனதைத்தான் எளிதில் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பதினாறு வயதினிலே படம் தொடங்கி பாரதிராஜா தமிழ்த்திரையுலகில் பதித்த தடங்களையும், அடைந்த பெருமைகளையும் நாம் மறக்கவில்லை. அவற்றை எல்லாம் அவரே மறந்துபோனதுதான் துரதிர்ஷ்டம்!

இயக்குநர் இமயம் என்று அவரை தலையில் வைத்துக் கொண்டாடிய தமிழ்மக்களுக்கு துரோகம் இழைக்கும்விதமாக ‘சினிமா’ என்ற பெயரில் அவர் இயக்கிய ஹிந்திப்படத்திற்கு ‘பொம்மலாட்டம்’ என்று பெயர் சூட்டி, அதை நேரடித்தமிழ்ப்படம் போன்று விளம்பரங்கள் செய்து வெளியிட்டது பித்தலாட்டமின்றி வேறில்லை. பிறமொழிப்படங்களுக்கு தமிழ்வர்ணம் பூசி, தமிழனின் பணத்தை சுரண்டும் இப்படிப்பட்ட இழிசெயலை எத்தனையோ பேர் செய்து கொண்டிருக்க, பாரதிராஜாவை மட்டும் நாம் சுட்டிக்காட்டவும், கண்டிக்கவும் காரணமிருக்கிறது.

மொழிமாற்றுப் படத்தை தமிழ்ப்படம் என்று சொல்லி பணம் சம்பாதிக்கும் எவரும், இதில் மணிரத்னமும் அடக்கம், தன்னை தமிழினத்துக்காக பாடுபடுகிறவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. சராசரியான சினிமா வியாபாரிகளாகவே இயங்கிக்கொண்டிருக் கிறார்கள்.பாரதிராஜா இப்படிப்பட்ட இயல்பு கொண்டவரில்லை. காவிரி பிரச்சனை, ஓகேனேக்கல் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை என தமிழினம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறவர். குறிப்பாக இலங்கைப் பிரச்சனையில் அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியாவின் இறையாண்மையையே பாதிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூக்குரல் எழுப்புமளவுக்கு வீர்யமுடன் வெளிப்பட்டன.

இப்படியாக சமூக, அரசியல் பிரச்சனைகளிலும் தன் குரலை உரக்க ஒலிக்க செய்கிற பாரதிராஜா, சில வருடங்களுக்கு முன் ஃபெப்ஸி தொழிலாளர் கூட்டமைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது, தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் நலனுக்காக படைப்பாளிகள் சங்கம் உருவாகவும் முக்கிய காரணமாக இருந்தார். அது மட்டுமல்ல, தன்னை தமிழினப்போராளியாகவும் அவ்வப்போது அடையாளப்படுத்திக் கொள்ளும் பாரதிராஜா, எந்த தமிழினத்துக்காக போராடுகிறாரோ அதே தமிழ்மக்களுக்குத்தான் பொம்மலாட்டம் பட விஷயத்தில் துரோகமும் இழைத்திருக்கிறார்.

தமிழ்ப்பட இயக்குநர்கள் பிற மொழிப்படங்களை இயக்குவது உலகமகா விஷயமல்ல! பாரதிராஜாவின் காலத்திலேயே பாலசந்தர், பாலுமகேந்திரா, பாக்யராஜ் என எத்தனையோ இயக்குநர்கள் இதற்கு முன் பிற மொழிப்படங்களை இயக்கியிருக்கின்றனர். அவர்கள் யாருமே அப்படங்களை மொழிமாற்றி தமிழ்ப்படம் என்று மோசடி செய்ததில்லை. கே.பாலசந்தர் ‘மரோசரித்ரா’ தெலுங்குப்படத்தை இயக்கியபோதும், அதே படத்தை ‘ஏக் துஜே கேலியே’ என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கியபோதும் அந்தந்த மொழிப்படமாகவே தமிழ் மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்தனர். பாலு மகேந்திராவோ தான் இயக்கிய ‘யாத்ரா’ போன்ற மலையாளப் படங்களை தமிழில் மறுஉருவாக்கம்(ரீமேக்)தான் செய்தாரே தவிர, பாராதிராஜாவைப்போல் ஏமாற்றுவேலையைச் செய்யவில்லை.

இத்தனைக்கு பாலசந்தரும், பாலுமகேந்திராவும் தங்களை தமிழினத்துக்காக பாடுபடுகிறவர்களாக காட்டிக்கொள்பவர் களில்லை. அதே நேரம் தான் சார்ந்த தொழிலுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். தமிழ் மக்களுக்கு நேர்மையாக இல்லை, தன் தொழிலுக்காகவாவது பாரதிராஜா நேர்மையாக இருந்திருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. பிற மொழிப்படத்தை தமிழ்ப்படமாக நிறம் மாற்றியதன் மூலம் பாரதிராஜாவின் சாயம் வெளுத்த உண்மையைப் பற்றி இங்கே பேசுகிறபோது, அவரின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதைப்பற்றியும் பேசுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அந்த முகம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அமெரிக்காவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்தவரைப்போல் எந்நேரமும் ஜீன்ஸ், டீ சர்ட்டில் வளைய வரும் பாராதிராஜாவுக்கு ஆங்கில மொழி மீது இருக்கும் பிடிப்பும், பிரமிப்பும் அலாதியானது மட்டுமல்ல, அக்கிரமமானது. அல்லிநகரம் என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்த பாராதிராஜா ஆங்கிலம் பேசுவதில் தவறில்லை. கலையுலகைச் சேர்ந்த அவர் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த கலைஞர்களுடன் நட்புப்பாராட்டவும், தன் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளவும் ஆங்கிலம் அவசியம்தான். அதற்காக ஒரு வாக்கியத்தைக் கூட முழுமையாய் தமிழில் பேசமுடியாத அளவுக்கு தமிழை ஆங்கிலத்தில் முக்கியெடுத்து தங்கிலீஷ் பேசிக் கொண்டிருப்பதைத்தான் சகிக்கவே முடியவில்லை.

தமிழுக்கான போராட்டங்களின்போது கவனமாக தமிழ் பேசும் பாரதிராஜா மற்ற எல்லா நேரங்களிலும் இப்படித்தான் ஆங்கில அரிவாளால் தமிழைப் படுகொலை செய்து வருகிறார். அதன் உச்சமாக நடந்த ஒரு சம்பவத்தை இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும். ‘பொம்மலாட்டம்’ படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து தங்கிலீஷிலேயே உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருந்த பாரதிராஜா, தன்னையறியாமலே ‘ஐ யம் தமிழ்படைப்பாளி’ என்று ‘ஆங்கிலம்’ பேசியதைக் கண்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் கேலிச்சிரிப்பு கூட எழுந்தது. தமிழ்ப்பத்திரிகையாளர்கள் நிறைந்த ஒரு சபையில், இப்படியொரு ‘இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில்’ பேச வேண்டிய அவசியம் என்ன? இதை எல்லாம் பார்க்கும்போது, பாரதிராஜாவின் தமிழ்ப்பற்றும் பாசமும் வெளிவேஷம் என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியிருக்கிறது.

திரையுலகில் பாராதிராஜாவைவிட நன்றாக ஆங்கிலம் தெரிந்த, ஆங்கிலத்திலேயே மணிக்கணக்கில் பேசுமளவுக்கு ஆங்கில அறிவு கொண்ட எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படி உளறிக் கொண்டிருப்பதில்லை. காரணம் பாரதிராஜாவுக்கு இருப்பதுபோல் அவர்கள் யாருக்கும் ஆங்கிலத்தின் மீது பிரமிப்பும் இல்லை, காதலும் இல்லை. English is a language நாட் Knowledge என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே தவிர அது அறிவு இல்லை’.

இந்தப்புரிதல் பாரதிராஜாவுக்கும் வர வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். இதற்கு மேலும் தொடர்ந்து அவர் இப்படியே பேசிக் கொண்டிருப்பாரேயானால், குறைந்தபட்சம் தமிழினத்தின் மீது அக்கறை கொண்டவராக தன்னைக் காட்டிக் கொள்வதையாவது அவர் கைவிட வேண்டும். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் விஜயகாந்தை வளர்ப்புத்தமிழன் என்று வசை பாடிய பிறப்புத்தமிழன் பாரதிராஜாவுக்கு ஆங்கிலத்தின் மீதிருக்கும் மோகத்தினால் எதிர்காலத்தில் அவருக்கு தமிழ்மொழியே மறந்துபோய்விடக்கூடிய ஆபத்திருப்பதினாலேயே இதை எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மேடைதோறும் ‘என் இனிய தமிழ்மக்களே’ என்று முழங்கும் பாரதிராஜவுக்கு இது புரிந்தால் மகிழ்ச்சி.

சினிமாக்காரர்களின் வீதி நாடகங்கள்


பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டது என்று சொல்வார்கள். இதன் அர்த்தம் நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான். ஒரு செயலைச் செய்கிறபோது, எதிர்பார்த்த விஷயம் நடக்காமல், அதற்கு மாறாக, எதிர்மறையான விளைவு ஏற்டுவதைக்குறிக்கும் இதை சினிமாவில் உள்ளவர்கள் ‘ஆன்ட்டி க்ளைமாக்ஸ்’ என்பார்கள்.

இலங்கையில் அப்பாவித்தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு குண்டுவீச்சு நடத்துவதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் தமிழ்த்திரைப்படத்துறை யினர் நடத்திய கண்டனப் பேரணியின் முடிவும் இப்படித்தான் ஆன்ட்டி க்ளைமாக்ஸில் முடிந்தது. யாரை திருப்திபடுத்துவதற்காக இப்படியொரு பேரணியை நடத்தினார்களோ, அவர்களாலேயே இயக்குநர் அமீரும், சீமானும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

சிங்கள அரசுக்கு எதிராக சீறிக்கிளம்பிய தமிழ்ப்படஇயக்குநர்கள், தங்களில் இருவரை தமிழகஅரசு சிறையில் தள்ளியதற்குக் குறைந்தப்பட்ச எதிர்ப்புணர்வைக் கூட காட்டாமல், கோழைகளாக அஞ்சி நடுங்கி அமைதிகாத்தார்கள்.இலங்கைப் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட தமிழ்த் திரைப்படத்துறையினரின் எழுச்சிமிக்க போராட்டத்தை நான் என்னவோ எள்ளிநகையாடுவது போலவும், கொச்சைப்படுத்துவது போலவும் சிலருக்குத் தோன்றக் கூடும். உணர்ச்சிவசப்படாமல், இப்பிரச்சனையை உற்றுநோக்கி னால், அதற்குப்பின்னால் உள்ள அரசியலும், திரைப்படத்துறையினர் நடத்திய நாடகமும் புரியும்.

முதலில் திரைப்படத்துறையினரின் சிந்தனைகளும், செயல்களும் எப்படி இருக்கின்றன என்று மேற்பார்வையிடுவோம். இவர்களில் எத்தனை பேர் தமிழ்ச்சமூகத்துக்கு பயனுள்ள படைப்புகளை தந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தமிழ்மக்களின் வாழ்வியலை, அவர்களின் பிரச்சனைகளை தங்களின் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள்? எத்தனை இயக்குநர்களின் படங்களில் தண்ணீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, நெசவாளர்களின் பிரச்சனை போன்ற தமிழ்நாட்டின் ஜீவாதார விஷயங்கள் இடம்பெற்றிருக் கின்றன?

மற்றவர்களைவிடுங்கள், தமிழர்களுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பாரதி ராஜா, ஆர்.கே.செல்வமணி போன்ற இயக்குநர்களின் படங் களிலாவது இப்படிப்பட்ட மக்கள்பிரச்சனைகள் கதையாக, கருவாக, செய்தியாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனவா?‘பதினாறு வயதினிலே’ தொடங்கி பாரதிராஜாவின் எல்லாப் படங்களிலும் காதல்தானே தமிழர்களின் தலையாயப்பிரச்சனையாகச் சொல்லப்பட்டது? சப்பாணியின் காதல் (பதினாறு வயதினிலே), பெருசுவின் காதல் (முதல் மரியாதை), பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காதவனின் காதல் (கடலோரக்கவிதைகள்), பார்வையற்றவனின் காதல் (காதல் ஓவியம்) என பாராதிராஜா தன் படங்களின் மூலம் கடந்த முப்பது ஆண்டுகளாக செய்தது காதல் ஆய்வுதானே தவிர, சமூகப்பிரச்சனைகள் குறித்த அலசலோ, அக்கறையின் வெளிப்பாடோ அல்லவே!

பாரதிராஜாவையாவது வேதம்புதிது, புதுமைப்பெண் போல் ஒரு சில நல்ல படங்களை எடுத்திருக்கிறார் என்று சுட்டிக்காட்ட முடியும். ஆர்.கே.செல்வமணியின் படங்களில் இப்படி ஒரு படத்தைக் கூட குறிப்பிட முடியாது. ஏனெனில், அவரது முதல்படமான ‘புலன்விசாரணை’ தொடங்கி செல்வமணி இயக்கிய எல்லாப்படங்களும் வன்முறை, அடிதடி, ஆபாசம் போன்ற அம்சங்களைக் கொண்டிருந்த வியாபாரசினிமாக்கள்தான்.இப்படியாக தங்களின் படங்களின் மூலம், தமிழ் மக்களுக்கு உபயோகமாக, உருப்படியாக எதையுமே செய்யாத இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்காக வீதிக்கு வருவது கேலிக்கூத்து அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

எந்தவொரு மாற்றமும், சீர்திருத்தமும், புரட்சியும் முதலில் தன் வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பார்கள். அதுவே உண்மையானதாக இருக்கும். தன்னை சுத்திகரித்துக் கொள்ளாமல் சமூத்தை சுத்தம் செய்யக் கிளம்புவது ஊருக்கு உபதேசம் சொல்வதைப் போன்ற ஒன்றுதான். திரைப்படத்துறையினர் மக்கள் பிரச்சனைக்காகக் குரல் கொடுப்பதையும் இப்படித்தான் வகைப் படுத்த முடியும். ஏனெனில் தன் வீட்டை, அதாவது தமிழ் திரைப்படங்களை அழுக்காக வைத்திருப்பது மட்டுமல்ல, அந்த அழுக்குகளின் மூலம் நம் சமூகத்தையும் அசுத்தமாக்கிக் கொண்டிருக்கும் இவர்கள் அதே மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதை எப்படி நம்ப முடியும்?

கேமரா, லைட்ஸ், ஆக்ஷன், ஸ்டார்ட், கட் இல்லாமல் நடத்தப்படுகிற நாடகமாகவே இவர் களின் செயல்களை எண்ண வேண்டியிருக்கிறது.சமூகத்துக்குப் புறம்பான திரைப்படங்களை எடுப்பதினாலேயே, மக்களின் பிரச்சனைகளைப் பற்றி இவர்கள் பேசக்கூடாதா? அப்பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தக்கூடாதா? என்று சிலருக்குத் தோன்றலாம். கள்ளச்சாராயம் காய்ச்சி அப்பாவி மக்களின் வாழ்வை நாசமாக்கும் ஒரு கள்ளச்சாராய வியாபாரியோ அல்லது விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கும் ஒரு விலைமாதுவோ மக்களுக்காகப் போராடுவதாகச் சொல்வது எப்படி ஏற்புடையது இல்லையோ, அதுபோல்தான் திரைப்படத்துறையினரின் போராட்டங்களும்.

அது மட்டுமல்ல, இதுவரை திரைப்படத்துறையினர் நடத்திய எந்தப்போராட்டமாவது தொடர் போராட்டமாக நடந்திருக்கிறதா? அல்லது மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆதரவாக மக்களையும் களத்தில் இறங்க வைத்திருக்கிறதா? ஒரு போதும் இப்படியெல்லாம் நடைபெற்றதில்லை. காரணம்.. திரைப்படத்துறையினரின் இப்படிப்பட்ட ‘ஒருநாள் நாடகத்தை’ மக்கள் தெளிவாகவேப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இவர்களின் உண்ணாவிரத்தையும், கண்டனப்பேரணியையும் ஒரு கலைநிகழ்ச்சியாகவே மக்கள் எண்ணுகிறார்கள்.

மக்களை விடுங்கள், திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் கூட கலை நிகழ்ச்சி நடத்தும் மனோபாவத்தில்தான் மக்கள் பிரச்சனைகளையும் அணுகுகிறார்கள். இல்லை என்றால் காவிரி பிரச்சனைக்காக நெய்வேலிக்கு சென்று போராட்டம் நடத்துவது, இலங்கை பிரச்சனைக்காக ராமேஸ்வரம் சென்று போராட்டம் நடத்துவது என்று பிரச்சனையை திசைவிருப்பும்விதமாக நடந்து கொள்வார்களா? இதெல்லாம் மக்களுக்கு எங்கே தெரியப்போகிறது என்ற எண்ணத்தில்தான் இப்படிப்பட்ட நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கருப்புப்பணமும், கள்ளக்காதலும் திரைப்படத்துறையினரின் வாழ்க்கையில் இரண்டறக்கலந்த விஷயம். அதனால் அரசாங் கத்துக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலையில் இருக்கும் இவர்கள், எந்த அரசியல்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை திருப்திப் படுத்த நினைக்கிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போதும், கலைஞர் மு.கருணாநிதி இருந்தபோதும் திரையுலகம் சார்பில் அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டதெற்கெல்லாம் இதுவே காரணம் என்பது நமக்கு புரியாமலில்லை.

தவிர, திரைப்படத்துறைக்கு அரசாங்கத்திடம் சலுகைகளைக் கேட்டு அடிக்கடி முதல்வரை சந்தித்து தலையை சொறிந்து கொண்டு நிற்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். கரும்புக்கு கூடுதல் விலை கேட்கும், நெல்லுக்கு கூடுதல் விலை கேட்கும் விவசாயிகளின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டாலும், திரைப் படத்துறையினரின் கோரிக்கைகள் எப்போதுமே மறுக்கப்பட்ட தில்லை.

கேளிக்கை வரி குறைப்பு, பிறகு அடியோடு ரத்து, பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கட்டணக்குறைப்பு, மானியம் அதிகரிப்பு என ஏறக்குறைய திரைப்படத்துறையினரின் எல்லா கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.அதற்கான பிரதிஉபகாரமாகவே காவிரி பிரச்சனை, ஒகேனேக்கல் பிரச்சனை, இலங்கைப்பிரச்சனை என்று திரைப்படத்துறையினர் உண்ணாவிரதம், பேரணி என்று வீதிக்கு வருகிறார்கள் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

ஆக இவர்கள் போராடுவது மக்களுக்காக அல்ல, ஆட்சியிலிருப்பவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக நடத்தப்படும் நாடகமே அது! அப்படி நடத்தப்பட்ட நாடகங்களில் ஒன்றுதான் ராமேஸ் வரத்தில் நடைபெற்ற இலங்கைப்பிரச்சனைக்கான போராட்டமும். தாங்கள் எடுக்கும் திரைப்படங்களின் மூலம் மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கும் இவர்கள், ஆட்சியிலிருப்பவர்களை திருப்திப்படுத்த நடத்தும் இப்படிப்பட்ட போராட்ட நாடகங்களின் மூலமும் அதே காரியத்தை செய்கிறார்கள். இந்த நாடகங்களை மக்கள் சரியாய் புரிந்து கொள்ள வேண்டும்.

Thursday 2 July 2009

தமிழ்த்தலைப்பு பலன் தந்ததா?


கதை, கவிதை, கட்டுரைகள் போன்ற படைப்புகள், இலக்கியங்களுக்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்குமே அதன் தலைப்புதான் முதல் ஈர்ப்பு. வசீகரகமான தலைப்புக்கு வாசிப்பவனை தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் உண்டு. இது திரைப்படங்களுக்கும் பொருந்தும். பழைய தமிழ்த்திரைப்படங்களின் தலைப்புகள் இப்படித்தான் அழகுடனும், ஆற்றலுடனும் இருந்தன. தலைப்பிலேயே கதை சொன்ன படங்களும் உண்டு, தலைப்பே கவிதையாக அமைந்த படங்களும் உண்டு.

தமிழ்ச்சொற்களைக் கொண்டு தலைப்புகள் வைக்கப்பட்டதால் அத்திரைப் படங்களுக்கு அழகியலையும், காலத்தைக் கடந்தும் நினைவில் நிற்கிற தன்மையையும் கொடுத்தன. இந்தநிலை ஒரு கட்டத்தில், சரியாகச் சொன்னால் கடந்த கால் நூற்றாண்டுகளாக மாறி, பிற மொழிச் சொற்களும், அநாகரிகமான வார்த்தைகளும் தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகளில் இடம்பிடிக்கத் தொடங்கின.தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிற மொழிச் சொற்களையும், தரங்கெட்ட வார்த்தைகளையும் தேடித்தேடி தமிழ்த்திரைப்படங்களுக்குத் தலைப்பு களாக வைத்ததன் மூலம் சமூகச்சீரழிவுக்கு தலைமை தாங்கிய இந்தப் போக்கு நாளடைவில் மிக வேகமாகப் பரவி, படத்தலைப்புகளில் தமிழின் அடையாளமே தொலைந்து போனது. அதன் உச்சம்தான், படுக்கையறையில் ஆணும் பெண்ணும் புணரும் காட்சிகளைக் கொண்ட நீலப்படத்தைக் குறிக்கும் ‘பி.எஃப்.’ என்ற ஆபாசவார்த்தையையே ஒரு படத்துக்குத் தலைப்பாக வைத்தது. கேடுகெட்ட, கேவலமான இந்த செயலைக்கண்ட பிறகுதான் தமிழக அரசு விழித்துக்கொண்டது.

திரைப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் அதற்கு முன் நடந்த அத்தனை அத்துமீறல்களையும் வேடிக்கைப் பார்த்த தமிழக அரசு, சினிமாக்காரர்களின் வக்கிரம் எல்லை மீறிச் செல்வதை தடுக்கும் முயற்சியாக 2006 ஆம் ஆண்டில் ‘தமிழில் பெயர் சூட்டப்படும் தமிழ்ப்படங்களுக்கு வரிவிலக்கு’ என்றொரு அவசரச் சட்டத்தை அறிவித்தது.ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், சிதைவுக்கும் தகவல் தொடர்புச் சாதனங்களும், ஊடகங்களுமே முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் குறிப்பாக திரைப்படம் என்கிற ஊடகத்தின் வீச்சும், அது விரிந்து பரவுகிற வேகமும் அசாத்தியமானது, அசுரத்தனமானது. எந்த இலக்கும் இல்லாமல், எல்லையும் இல்லாமல் மிக விரைவாக வியாபிக்கும் சக்தியைப் பெற்றுவிட்ட திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும், அனைத்து வயதினரிடமும் தன் ஆதிக்கத்தை அழுத்தமாகப் பதிக்கிறது. அப்பேற்பட்ட வலிமையும், வல்லமையும் கொண்ட ஊடகமான திரைப்படங்களின் தலைப்புகள் தரக்குறை வாகவும், தமிழில் இல்லாமல் மாற்று மொழிகளிலும் சூட்டப் படுவது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஊறுவிளைக்கும் விஷயம் அன்றி வேறில்லை.

திரைப்படத்துறையினரால் இதுவரை செய்யப்பட்டு வந்த மொழிப்படுகொலையை தடுத்தேத் தீர வேண்டிய தேவையின் பொருட்டே இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இந்த சட்டத்துக்கு உடனடிப்பலனும் கிடைக்கவே செய்தது. ஆங்கில மற்றும் பிற மொழிகளில் தலைப்பு வைக்கப்பட்டு தயாரிப்புநிலையில் இருந்த பல படங்களின் தலைப்புகள் அவசர அவசரமாக தமிழ்மயமாக்கப்பட்டன. ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் தயாராகி, அதே பெயரில் தணிக்கைச்சான்றிதழும் பெற்றுவிட்டநிலையில் ‘சம்திங் சம்திங்’ என்ற ஆங்கில வார்த்தைகளை நீக்கிவிட்டு, ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. இப்படத்தைப் போலவே ‘எம்டன் மகன்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட படம் ‘எம்மகன்’ என்ற பெயரில் வெளியானது. ‘ஜில்லுனு ஒரு காதல்’ என்ற பெயரில் தயாரான படம் ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற பெயரிலும், ‘நெஞ்சில் ஜில் ஜில்’ என்ற படம் ‘நெஞ்சில்’ என்ற பெயரிலும், ‘மிஸ்டர். ரங்கா’ என்ற படம் ‘திரு.ரங்கா’வாகவும், ‘தமிழ் எம்.ஏ.,’ என்ற படம் ‘கற்றது தமிழ்’ என்ற பெயரிலும் வெளியாகின.

படத்தலைப்புகளில் இப்படி பாதி பிற மொழிச்சொற்களைக் கொண்டிருந்த படங்கள் மட்டுமல்ல, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பெயர் வைக்கப்பட்டிருந்த படங்களும் கூட, தமிழ்ப்பெயர்களுக்கு மாறின. ‘பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருந்த படம் ‘மாணவ மாணவிகள்’ என்றும், ‘ஸ்வீட்’ என்ற படம் ‘நினைத்தாலே’ என்றும், ‘ப்ளாஷ்பேக்’ என்ற படம் ‘அந்த நாள் ஞாபகம்’ என்றும், ‘பை 2’ என்ற படம் ‘இருவர் மட்டும்’ என்றும், ‘க்ளியோபாட்ரா’ என்ற படம் ‘தொ(ல்)லைபேசி’ என்றும், ‘ஆட்டோ’ என்ற படம் ‘ஓரம்போ’வாகவும் பெயர்மாற்றம் செய்யப்பட்டன. ‘லீ’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படத்துக்கு ‘லீ’ என்பது ஆங்கில வார்த்தை, அது தமிழ்ப் பெயரில்லை’ என்ற சர்ச்சை எழுந்ததும் ‘லீ என்கிற லீலாதரன்’ என்று கூடுதலாக தமிழ் வார்த்தைகளை ஒட்ட வைத்து அப்படத்தை வெளியிட்டனர். ‘ரெண்டு’ என்ற பெயரில் தயாராகி, தணிக்கை செய்யப்பட்டு, வெளியிடத் தயாராக இருந்த ஒரு படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் ‘இரண்டு’ என்று அவசர அவசரமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘ரெண்டு’ என்பதும் தமிழ் வார்த்தைதான், அது பேச்சுத் தமிழ் என்பதைக் கூட அறியாமல் ‘இரண்டு’ என்று மாற்றுமளவுக்கு படப்பெயர்களை தமிழ்ப்படுத்துவதில் இப்படியான கேலிக்கூத்துக்கள் எல்லாம் நடந்தேறின.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திரைப்படங்களின் தலைப்பு விஷயத்தில் தமிழக அரசு இப்படியொரு அவசரச்சட்டத்தைப் பிறப்பிக்க முக்கியக் காரணமாக இருந்த ‘பி.எஃப்.’ படத்தின் பெயரும் ‘அ, ஆ’ என்று மாற்றப்பட்டது. ‘பி.எஃப்.’ என்பதற்கு ‘பெஸ்ட் ஃபிரண்டு’ என்று வியாக்கியானம் சொன்ன அப்படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ‘அ,ஆ’ வுக்கும் அருஞ்சொற்பொருள் விளக்கினார். ‘அ,ஆ’ என்றால் ‘அன்பே ஆருயிரே’ என்று அர்த்தமாம்! ‘அ, ஆ’ என்று பெயர் சூட்டியதற்கு அவர் இப்படியொரு அர்த்தத்தைச் சொன்னாலும், அதன் பின்னணியும், உண்மையான காரணமும் அதுவல்ல என்பது எஸ்.ஜே.சூர்யாவுக்கு நெருக்கமானவர்களுக்கும், திரையுலகில் இயங்கும் என்னைப் போன்ற வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். வஞ்சப்புகழ்ச்சி என்பார்களே..அப்படியொரு விஷயமே அது. ‘தமிழில்தானே பெயர் வைக்க வேண்டும்? அ,ஆன்னு பேர் வைக்கட்டுமா?’ என்ற ஒருவகை நக்கல், நையாண்டி, எரிச்சல், கோபத்தின் வெளிப்பாடுதான்.

எஸ்.ஜே.சூர்யா மட்டுமல்ல, வேறு சிலருக்கும் இப்படிப்பட்ட மனநிலை இருப்பதையும் அவர்கள் சூட்டிய தலைப்புகளிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட, தன் பெயரிலேயே கேரளசாதியின் அடையாளத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு, நுனிநாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் ‘கௌதம் வாசுதேவ் மேனன்’ என்ற இயக்குநர் தன் படத்துக்கு ‘வாரணம் ஆயிரம்’ என்று தூய தமிழில் பெயர் வைத்தது இந்த அடிப்படையில்தான் என்பதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ‘வாரணம் ஆயிரம்’ படம் தொடங்கப்பட்டபோது, ‘வாரணம் என்றால் என்ன அர்த்தம்?’ என்று இயக்குநரிடம் கேட்காதவர்களே இல்லை. ‘வாரணம் என்றால் யானைகள்’ என்று வாய்வலிக்க அவர் அர்த்தம் சொல்ல வேண்டியதாயிற்று. புழக்கத்தில் இல்லாத வார்த்தையை தேடிக் கண்டுபிடித்து பெயர் வைப்பதற்கு பதில், ‘யானைகள் ஆயிரம்’ என்று புரியும் தமிழில் தலைப்பு வைத்திருக்கலாமே? இங்குதான் மேனனின் கோபமும், குசும்பும் மறைந்திருக்கின்றன.

மற்றொரு படத்துக்கு ‘அயன்’ என்று தலைப்பு வைத்தார்கள். ‘அயன் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டபோது அப்படத்தின் இயக்குநர், கதாநாயகன், பாடலாசிரியர் என ஆளுக்கு ஒரு அர்த்தத்தைச் சொன்னார்கள். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற அரசின் சட்டத்தையே கேலி செய்வதுபோல், பேச்சு வழக்கில் இல்லாத தமிழ் வார்த்தைகளை அகராதிகளில் தேடிக்கண்டுபிடித்து தங்களின் படத்துக்கு சூட்டியது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் துணிச்சலாக பிற மொழிச் சொற்களை தங்களின் படங்களுக்கு சூட்டிவிட்டு, அப்பெயர் தமிழ்ச்சொல்தான் என்று சாதித்து வரிவிலக்கைப் பெற்ற சம்பவங்களும் நடைபெற்றன.

தாம் தூம் என்ற வடமொழி வார்த்தைகளை தலைப்பாக வைத்துவிட்டு, அது ஒலியைக்குறிக்கும் தமிழ்ச்சொல் என்ற வாதாடி வரிவிலக்கு சலுகையைப் பெற்றனர். அதே காலக்கட்டத்தில் ‘தூம்’ என்ற பெயரில் ஹிந்திப்படங்கள் வெளியாகின என்பது அரசுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் வரிவிலக்கு அளிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர்களுக்கும் தெரியாமல்போனதுதான் ஆச்சர்யம். இச்சம்பவம் ஆச்சர்யம் என்றால், ‘சிவாஜி’, ‘பில்லா’ என்ற வடமொழிச்சொல்லைத் தாங்கி வந்த படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டது வேதனை. சிவாஜி யார்? என்று கேட்டால் மராட்டிய மன்னன் என்று சின்னக் குழந்தைகூட சொல்லும். பில்லா வடநாட்டைச் சேர்ந்த கொலைகாரன் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இவ்விரு படங்களுக்கும் என்ன அடிப்படையில் வரிவிலக்கு கொடுக்கப்பட்டது? இரண்டுமே பெயர்ச்சொல் என்று வாதாடி சலுகையைப் பெற்றார்கள்.

சிவாஜியும், பில்லாவும் பெயர்ச்சொல் என்றால் ‘எம்டன்’ என்பதும் பெயர்ச்சொல்தானே? பிறகு ஏன் ‘எம்டன் மகன்’ என்ற படத்தின் பெயரை ‘எம்மகன்’ என்று மாற்றும்படி வலியுறுத்த வேண்டும்? அதையும் பெயர்ச்சொல் என்று அனுமதித்திருக்கலாமே? எது தமிழ்ச்சொல், எது பிறமொழிச்சொல் என்பதை கண்காணிக்கவும், அதன்படி வரிவிலக்கு அளிப்பதற்கான ஆணையையும் வழங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் யார்? அரசாங்கத்தில் ஊதியம் பெறுகிற அதிகாரிகளாகவே இருப்பார்கள். நிச்சயமாக தமிழ்மொழியை கற்று அறிந்தவர்களாக அவர்கள் இருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் க்ரியா தமிழ் அகராதியைக் கூட அவர்கள் புரட்டியிருக்க மாட்டர்கள். அதனால்தான் தாம்தூம் என்ற தலைப்பை தமிழ் என்று அவர்களை எளிதில் நம்ப வைக்க முடிந்திருக்கிறது. சுதேசி, குருஷேத்திரம் போன்ற தலைப்புகளை எல்லாம் தமிழாக அங்கீகரித்து வரிச்சலுகையையும் அளித்திருக் கிறார்கள்.

இப்படிப்பட்ட குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனில், தமிழ்த்திரைப்படங்களுக்கு வைக்கப்படும் தலைப்புகள் தமிழ்ச்சொற்கள்தானா என்பதை உறுதிப்படுத்த தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரைப்படியே வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது ஒரு பக்கமிருக்க, இன்னொரு விஷயத்தையும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.தமிழ்மொழியின் சிதைவைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டம் அவசியமான நடவடிக்கைதான். இல்லை என்றால் ‘ரோபோ’ என்ற படத்தின் பெயர் ‘எந்திரன்’ என்று மாறியிருக்காது. என்றாலும், சற்று ஆழ்ந்து நோக்குகையில் உணர்ச்சிவசபட்டநிலையில் அறிவிக்கப்பட்ட அவசர முடிவு என்றும் தோன்றுகிறது.

திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்கள் இல்லை, பணம் சம்பாதிப் பதற்காக எதையும் செய்யக்கூடிய வியாபாரிகள்தான். இன்றைக்கு தமிழில் பெயர் வைப்பதை வைத்து இவர்களுக்கு தமிழுணர்வு வந்துவிட்டதாகவும் அர்த்தமில்லை. தமிழ்ப்பெயர் வைக்கவில்லை என்றால் வரிவிலக்குக் கிடைக்காதே என்ற அச்சத்திலேயே வாரணம் ஆயிரம் என்றும், அயன் என்றும் பெயர் வைக்க அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டினால் வரிவிலக்கு என்று அறிவித்ததற்கு பதில், தலைப்புகளில் பிற மொழி கலப்பிருந்தால் வழக்கமான வரியைவிட அதிகமாக வரிவிதிக்கப் படும் என்று அறிவித்திருந்தாலும், இதே பலன் கிடைத்திருக்கவே செய்யும்.

கர்னாடகாவில் பிற மொழிப்படங்களை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்தால் கூடுதல் வரி என்ற சட்டமிருக்கிறது - பல ஆண்டுகளாகவே. அதன் காரணமாக மற்ற மொழிப்படங்களை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படுவதும் கணிசமாக மட்டுப் பட்டிருக்கிறது. அதே அணுகுமுறையை, தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் தலைப்பு சூட்டும் விஷயத்திலும் தமிழக அரசு பின் பற்றலாம்.ஏனெனில், திரைப்படங்கள் வாயிலாக அரசுக்கு இதற்கு முன்பு வரை கிடைத்துக் கொண்டிருந்த கேளிக்கைவரி ஆண்டுக்கு சுமார் எண்பதுகோடி!

சற்று நிதானமாக யோசித்திருந்தால், இந்த எண்பது கோடி வருவாயை இழக்காமலே திரைப்பட வியாபாரிகளிடமிருந்து தமிழக அரசினால் தமிழைக்காப்பாற்றி இருக்க முடியும்.