Sunday 12 July 2009

தணிக்கைக்குழுவின் லட்சணம் இதுதான்

தமிழ்சினிமாக்களில் வன்முறையும் ஆபாசமும் அதிகரித்திருப்பதாக கடந்த சில வருடங்களாகவே பொதுமக்கள், மகளிர் அமைப்புகள், அரசியல்வாதிகள் என பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த எதிர்ப்பில் ஓரளவு அல்ல, நிறையவே நியாயம் இருப்பதை நாம் உணரமுடியும். இந்தப் போக்குக்கு தணிக்கைக்குழு முக்கியமானதொரு காரணம். திரைப்படங்களை நேர்மையாய் கண் காணிக்க வேண்டிய தணிக்கைக்குழு தன் கடமை யிலிருந்து தவறிவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது.


இன்னொரு பக்கம் தணிக்கைக்குழு படைப்பாளி களின் குரல்வளையை நெரிப்பதாக திரையுலகில் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகிறார் கள். பொதுமக்கள் மற்றும் திரையுலகின் எண்ண ஓட்டங்களை பிரதி பலிக்கும் கேள்விகளுடன் ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டி காண்பதற்காக சில வருடங்களுக்கு முன் சென்னை மண்டல தணிக்கை அதிகாரியாக ராஜூ இருந்தபோது அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் முன் நான் வைத்த கேள்விகளையும், அவற்றுக்கு ராஜூ அளித்த பதில்களையும் இங்கே தந்ததற்குக் காரணமிருக்கிறது.


தணிக்கைக்குழு என்கிற அரசு அமைப்பு கொள்கைத் தெளிவோ, தீர்க்கமான பார்வையோ இல்லாமல் எத்தனை மேம்போக்காகவும், அலட்சியமாகவும் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான்.


இதில் தணிக்கை அதிகாரியான ராஜூவின் கருத்துகள் அவரது சொந்தக்கருத்துகள் இல்லை என்பதையும், அவை தணிக்குக்குழுவுக்கு அரசு வகுத்த விதிகள், சட்டத்தின் அடிப்படையிலேயே அவர் பேசியிருக்கிறார் என்பதையும் யோசிக்கும்போது, தமிழ்த்திரைப்படங்களின் மலிவான போக்குக்கு தணிக்கைக்குழு எவ்வகையில் எல்லாம் காரணமாக இருக்கிறது என்ற உண்மையை உணரமுடியும்.


உங்கள் பார்வையில் இப்போது தமிழ்த்திரைப்படங்கள் எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க?


மக்கள் எதிர்பார்க்கிற மாதிரியான படங்கள் இப்போது வருவதில்லை என்பதுதான் என்னோட அபிப்ராயம். மக்களோட எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளாமல் படம் எடுக்கிறார்கள். என்னதான் திருட்டு விசிடி அது இது என்றாலும் நல்ல படங்கள் ஓடத்தான் செய்கின்றன. ஆபாசத்துக்காகவோ வன்முறைக்காகவோ எந்தப் படமும் ஓடியதில்லை. அதையும் தாண்டி படத்தில் ஏதாவது புதுமை இருந்தால்தான் படம் ஓடுகிறது. இதைத் தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.


இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசம், வன்முறை என்று இன்றைய தமிழ்த்திரைப்படங்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கின்றன. இந்த மோசமான போக்குக்கு ஒரு வகையில் தணிக்கை குழுவும் காரணம் என்று சொல்லலாமா?


இதற்கு எங்களை குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. கடந்த சில ஆண்டுகளாக வந்த படங்களில் கவர்ச்சியும் வன்முறையும் அதிகமாகத்தான் இருக்கின்றன. பதினைந்து வருஷத்துக்கு முன்னால் எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய யூ சர்ட்டிஃபிகேட் படங்கள் எண்பது சதவிகிதம் வெளி வந்தன. யூஏ சர்ட்டிஃபிகேட் படங்கள் இருபது சதவிகிதம்தான் வெளி வந்தன. கடந்த மூன்று வருடங்களாக யூஏ படங்கள் அறுபது சதவிகிதமாக உயர்ந்திருக்கின்றன. யூ சர்ட்டிஃபிகேட் படங்கள் நாற்பது சதவிகிதமாகக் குறைந்துவிட்டன. அதாவது யூ படங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. யூஏ, ஏ படங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. போகப்போக யூ படங்களின் எண்ணிக்கை இன்னும் குறையும்.
இதற்கு தயாரிப்பாளர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள் தெரியுமா? பெண்கள் இப்போதெல்லாம் தியேட்டருக்கே வருவதில்லை, சீரியலில் உட்கார்ந்துவிட்டார்கள். படம் பார்க்க வருவது யூத் ஆடியன்ஸ்தான். அவர்களை திருப்திப்படுத்த இப்படித்தான் படங்களை எடுக்க வேண்டியதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதனால்தான் இன்றைய படங்களைப் பார்க்கும்போது கவர்ச்சி அதிகமாகவோ வன்முறை அதிகமாகவோ தெரிகிறது. அது உண்மையும்கூட.


குறிப்பிட்ட காட்சி அல்லது வசனம் ஆட்சேபகரமாக இருக்கிறது அல்லது இல்லை என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள்? அது பற்றி உங்கள் தணிக்கைக்குழுவினரிடையே மாறுபட்ட கருத்து ஏற்பட்டால் எப்படி முடிவெடுக்கிறீர்கள்?


ஒரு படத்தை ஐந்து பேர் பார்க்கிறோம். நானும் நான்கு உறுப்பினர்களும். அப்படி பார்க்கும் போது மக்களை பாதிக்கிற விஷயங்கள் இருந்தால் எங்களுக்குள் விவாதிப்போம். மெஜாரிட்டி கருத்தின் அடிப்படையில் அனுமதிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கிறோம். அது நியாயமோ இல்லையோ, மெஜாரிட்டிதான் எங்களுக்கு முக்கியம்.


தணிக்கைக்குழு உறுப்பினர்களில் பலருக்கு திரைப்படங்கள் பற்றிய அறிவே இல்லை. அவர்களை எந்த தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அப்படிச் சொல்வது தவறான கருத்து. அது பிரமை. அதில் உண்மையில்லை. ஒரு படம் மக்களை பாதிக்குமா இல்லையா என்பதைக் கணிக்கும் திறமைதான் சென்ஸாரில் மெம்பராக ஒரே தகுதி. வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் மெம்பர்களுக்கு சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை. தெரியாமல் இருப்பதுதான் நல்லது. சிலரை நாங்களே சஜஸ்ட் செய்வோம். சிலரை எங்கள் உயர் அலுவலகத்திலிருந்து நியமிப்பார்கள்.


ஒரு திரைப்படத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கலை என்றா? பொழுதுபோக்கு என்றா?


சினிமாவை நாங்கள் ஆர்ட் என்றோ, எண்டெர்டெயிண்மென்ட் என்றோ, தொழில் என்றோ பார்ப்பதில்லை. நாங்கள் பார்ப்பது இந்தப் படம் மக்களை பாதிக்குமா இல்லையா என்ற ஒரே கண்ணோட்டத்தில்தான். இந்தப்படத்துக்கு புரட்யூஸர் எவ்வளவு பணத்தைப் போட்டு எடுத்தார் என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு அக்கறையே இல்லை. அக்கறைப்படவும் கூடாது. அது எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். ஒரு காட்சியைக் கட் பண்ணச் சொல்கிறோம். அந்த காட்சிக்காக புரட்யூஸர் எவ்வளவு செலவு பண்ணி இருப்பார்? அதைக் கட் பண்ணச் சொல்வதால் அவருக்கு எவ்வளவு நஷ்டம் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவே மாட்டோம். நினைத்துப் பார்க்கவும் கூடாது.


சமீப காலமாக தமிழ்திரைப்படங்கள் அரசியல்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. சரியாகச் சொல்வதென்றால் நீங்கள் செய்ய வேண்டிய அல்லது செய்யத் தவறிய பணியை அரசியல்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இதில் உங்களுக்கு சந்தோஷமா.. வருத்தமா?

சென்ஸாரைப் போல் அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு கட் கொடுப்பதில்லையே? அதனால் அவர்கள் எங்கள் வேலையை செய்வதாகச் சொல்ல முடியாது. அதே நேரம் ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட எதிர்ப்புகள் இருப்பதும் நல்லதுதான். ஆரோக்கியமான விஷயமும்கூட. சென்ஸார் போர்டு மட்டுமே மனசு வைத்து நல்லப் படங்களைக் கொண்டு வந்துவிட முடியாது. மக்களும், அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் அடிக்கடி குரல் கொடுத்தால்தான் நல்லப் படங்களைக் கொண்டு வர முடியும். அதனால் அரசியல்கட்சிகள் சினிமாவை எதிர்ப்பதை ஜனநாயக அடிப்படையில் தப்பு என்று சொல்ல முடியாது.


ஒரு அரசியல் கட்சியின் எதிர்ப்பால் கமலின் சண்டியர் என்ற படத்தின் தலைப்பு விருமாண்டி என்று மாற்றப்பட்டது. ஒரு வேளை அப்படி ஒரு எதிர்ப்பு வராமல் இருந்தால் சண்டியர் என்ற தலைப்பை நீங்கள் அனுமதித்து இருப்பீர்களா?


படம் வெளியாவதற்கு முன் சர்ச்சைகள் வருவது எங்களைப் பொருத்த வரை நல்லதுதான். எங்களுக்கு மக்களின் எண்ணம் என்ன? என்ற ஃபீட்பேக் கிடைக்கிறது. நாங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.


முத்தமிடலாமா என்று ஒரு திரைப்படத்துக்கு தலைப்பு வைத்தபோது அதை அனுமதிக்க மறுத்தீர்கள். அதனால் முத்தம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். முத்தமிடலாமா என்ற தலைப்பினால் சமூகத்தில் அப்படி என்ன தீங்கு ஏற்பட்டுவிடப் போகிறது என்று நினைத்து ஆட்சேபித்தீர்கள்?

முத்தமிடலாமா என்ற தலைப்பு தப்புதான். ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து முத்தமிடலாமா என்று கேட்டால் அது ஈவ்டீசிங்கா இல்லையா? அதனால் அதை மாற்றச் சொன்னோம்.


நீங்கள் தணிக்கை அதிகாரியாக வந்த பிறகுதான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தணிக்கைக்குழு சர்ச்சைக்குள்ளானது. காற்றுக்கென்ன வேலி, மனதைத் திருடிவிட்டாய், பாய்ஸ், ஈரநிலம், இளசு புதுசு ரவுசு, நியூ என பல படங்கள் சிக்கலுக்குள்ளாகின. இதற்கு என்ன காரணம்?

எனக்கு மனசாட்சி இருக்கிறது. எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் நேர்மையானமுறையில் நான் இயங்குகிறேன். அவ்வளவுதான். என் வேலையில் நான் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ள மாட்டேன். இதுவரைக்கும் எந்த அரசியல் வாதிக்கிட்டேயும் போய் நான் நின்னதில்லை. யார்கிட்டேயும் பணம் வாங்கினதுமில்லை. எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்கிறேன். அது சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டுவிடுகிறது.


ஒரு சின்ன தயாரிப்பாளரின் படத்தில் ஒரு பெண் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிக்கு கட்ஸ் கொடுத்திருக்கிறீர்கள். அதே காட்சிகள் எத்தனையோ படங்களிலும், குறிப்பாக நியூ படத்திலும் (ஐஸ்வர்யா தம்மடிப்பது), எம்.குமரன் படத்திலும் (அசின் பீடி பிடிப்பது) இடம் பெற்றிருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும் போது தணிக்கைக்குழு பாரபட்சமான கொள்கையை, அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்றுதானே அர்த்தம்?

என்ன பண்றது? விடக்கூடாதுதான். ரொம்ப ரிக்வெஸ்ட் பண்றாங்க. கட் பண்ணுவதால் சில சமயம் டயலாக் அடிபடும். அதனால் அனுமதிக்க வேண்டியதாகிவிடுகிறது. பாம்பேயிலும், கேரளாவிலும் இதை எல்லாம் அனுமதிக்கிறாங்க. நாங்க ஓரளவுக்குத்தான் கட்டுப்பாடா இருக்க முடியும். ரொம்ப இறுக்கிப்பிடிக்க முடியாது.
மற்றபடி, சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. எங்களுக்கு எல்லாரும் ஒண்ணுதான். இன்னும் சொல்லப் போனால் சின்னப் படங்களைவிட பெரிய படங் களைத்தான் நாங்கள் கவனமாகப் பார்ப்போம். சின்னப்படங்களை மக்கள் அவ்வளவாகப் பார்ப்பதில்லை. அதனால் அதில் எதையாவது விட்டிருந்தால் கூட அது வெளியே தெரியாது. பெரிய படத்தை எல்லாரும் பார்க்கிறார்கள். அதனால் கவனமாகத்தான் இருக்கிறோம்.
இன்னொரு விஷயம்.. பெரிய புரட்யூஸர்களின் படங்களுக்கும் நாங்கள் கட்ஸ் கொடுப்பதால்தானே அது கான்ட்ரவர்ஸியாக வெளியே வருகிறது? சின்ன புரட்யூஸர்கள் யாரும் சர்ச்சையைக் கிளப்புவது இல்லையே?
இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். பெரிய புரட்யூஸர்களுக்கு சென்ஸாரில் எப்படி நடந்த கொள்ள வேண்டும் என்பதில் அனுபவம் இருக்கும். அதனால் எப்படிப் பேசினால் கட்ஸை அனுமதிப்பார்கள் என்ற திறமை அவர்களுக்கு உண்டு. சின்ன புரட்யூஸர்களுக்கு அனுபவம் இல்லாததினால் நீங்கள் சொன்ன மாதிரியான சம்பவங்கள் நேர்ந்துவிடுகின்றன.


வன்முறை படத்தின் தீர்வாக இருக்கக் கூடாது என்பது முக்கியமான தணிக்கை விதிகளில் ஒன்று. பிதாமகன் உட்பட முக்கால்வாசிப் படங்கள் வன்முறைக்கு ஆதரவான முடிவையே கொண்டிருக்கின்றன. தணிக்கைக்குழுவின் கொள்கைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே?

ராமாயண மகாபாரதக் காலத்திலிருந்து வில்லனும் ஹீரோவும் சண்டைப் போட்டுக்கிட்டுத்தானே இருக்காங்க?

அப்புறம் ஏன் இதை ஒரு விதியாக வைக்க வேண்டும்?


அதாவது ஒருவன் குற்றம் செய்துவிட்டு தண்டனை அனுபவிக்காமல் ஜாலியாக போகக்கூடாது. அதைத்தான் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் கைடுலைனிலேயே இரண்டுவிதமான ரூல்ஸ் இருக்கின்றன. ஒன்று அப்ஜெக்ட்டிவ் சட்டதிட்டங்கள். இன்னொன்று இன்ட்வீஜ்வல் கைடுலைன்ஸ். இது ஜஸ்ட் வழிகாட்டிதானே தவிர எங்களுக்கான சட்டம் இல்லை. இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால்.. இந்த கைடு லைன்ஸ் முன்னே பின்னே இருக்கலாம் தப்பில்லை.


வில்லன் ஒருவனை கொலை செய்தால் வன்முறை. அதையே ஹீரோ செய்தால் சாகஸம் என்பதான சித்தரிப்பு இருக்கிறது தமிழ்த்திரைப்படங்களில். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


உலகமே அதானே? ஹீரோ பண்ணினால் காதல். அதையே வில்லன் பண்ணினால் ரேப்.


ஒரு ரசிகன் இப்படியான கண்ணோட்டத்தில் திரைப்படத்தைப் பார்க்கலாம். தணிக்கைக்குழு அதிகாரியான நீங்களும் இப்படி பார்க் கலாமா?

ஹீரோவை ஹீரோவாகப் பார்க்காமல் எப்படி பார்ப்பது?


விஞ்ஞானத்திற்கு எதிரான விஷயங்களை அனுமதிக்கக் கூடாது என்பது கூட உங்கள் விதிகளில் ஒன்றுதான். வில்லனுடன் சண்டை போடும் ஹீரோ கையில் வேல் வைத்திருக்கும் போது வீரனாகிறான். வேல் இல்லாத போது கோழையாகிவிடுகிறான். (ஜெயம்) இது போல் எத்தனையோ மூட நம்பிக்கைத் திரைப்படங்கள் வருகின்றன. இதை எல்லாம் எந்த அடிப்படையில் அனுமதிக்கிறீர்கள்?


நம்ம நாடு மத சார்பற்ற நாடு. எல்லா மதத்தின் நம்பிக்கை களையும் மதிக்க வேண்டியது எங்கள் கடமை. அதை மூட நம்பிக்கை என்று நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்.


அப்படி என்றால்..விஞ்ஞானத்திற்கு எதிரான விஷயங்களை அனுமதிக்கக் கூடாது என்ற விதிக்கான அர்த்தம்தான் என்ன?


கொசு கடிச்சதால், அல்லது மூட்டைப்பூச்சி கடிச்சதால் எய்ட்ஸ் வருதுன்னு சொன்னாங்கன்னா அதை அனுமதிக்க மாட்டோம்.


சில திரைப்படங்களில் வசனங்களை மட்டும் நீக்குகிறீர்கள். அப்படி நீக்குவதாலேயே அவை மக்களால் அதிகமாகக் கவனிக்கப் படுகின்றன. அதனால் வசனத்தை நீக்கிய உங்கள் நோக்கத்துக்கு பலனில்லாமல் போய்விடுகிறது. ஏனிப்படி?


ஆட்சேபகரமான வசனத்தை நீக்கச் சொல்லுகிறோம். அப்படி நீக்கச் சொல்வதினாலேயே சில சமயம் வல்காரிட்டி அதிகமாகத் தெரிய வாய்ப்புண்டுதான். எங்களுக்குத் தவறு என்று தெரிந்த வார்த்தையை நீக்கிவிட்ட பிறகு மக்கள் நீக்கப்பட்ட வசனத்தை புரிந்து கொண்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?


சில வருடங்களுக்கு முன் வெளியான எம்.குமரன் என்ற திரைப்படத்தில் பாஸ்டர்ட் என்ற வசனத்தை நீக்கியிருக்கிறீர்கள். இதே வார்த்தை எத்தனையோ படங்களில் இடம் பெற்றிருக்கிறதே?


ஆமாம். அதை நான் மறுக்கவில்லை. ஜூலிகணபதி படத்தில் கூட பாஸ்டர்ட் என்ற வார்த்தையை அனுமதித்திருக்கிறோம். அதற்காக எல்லாப்படங்களிலும் அதை அனுமதிக்க வேண்டும் என்பது இல்லை. ஒரு படத்தில் அனுமதித்த காட்சியையோ, வசனத்தையோ இன்னொரு படத்திலும் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. அது ஒரு கலைப்பொருள். இது ஒரு கலைப்பொருள். இரண்டையும் கம்பேர் பண்ணக்கூடாது. சினிமாக்காரர்களுக்கும் எங்கள் பிரச்சனை வருவதே இப்படிப்பட்ட ஆர்க்யூமெண்ட்டுகளினால்தான். அந்தப்படத்தில் விட்டீங் களே..இந்தப் படத்தில் ஏன் விடலைன்னு கேக்கிறாங்க. அப்படிக் கேக்கவே கூடாது. அப்படிக் கேக்கிறதால புரட்யூஸர்களுக்குத்தான் நஷ்டம்.


தயாரிப்பாளர்கள் தங்களின் தரப்பை சொல்வதினால் அவங்களுக்கு நஷ்டம் வரும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?


உதாரணத்துக்கு பாரதிராஜாவோட ஈரநிலம் படத்தை எடுத்துக்கு வோம். அதில் நிர்வாணக்காட்சியை வைத்திருந்தார். கலைஞராக அவர் அந்தக் காட்சியை இப்படிக் காட்டுவது சரி என்று ஃபீல் பண்ணி எடுத்திருக்கலாம். அவருடைய ஃபீலிங் நியாயமாக்கூட இருந்திருக்கலாம். ஆனா எங்க ஃபீலிங் என்னன்னா.. அதைவிட்டால் பல பேர் அதே மாதிரி காட்சிகளை எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க படத்துக்கு கட்ஸ் கொடுத்தால் ஈரநிலம் படத்தில மட்டும் விட்டீங்களேன்னு கேப்பாங்க. இப்படிக் கேக்கிறதாலதான் எல்லாத்தையும் கண்மூடித்தனமா கட் பண்ண வேண்டியிருக்கு. எம்.குமரன் படத்தில கூட பாஸ்டர்ட் என்ற வார்த்தையைவிட்டிருக்கலாம்தான். அவன் பாக்ஸர் இல்லைடா.. பாஸ்டர்ட் என்ற வசனம் கூட பொருத்தமாகத்தான் இருந்தது. அதையும் மீறி ஏன் கட்ஸ் கொடுத்தோம் என்றால் பின்னால் வருகிறவர்கள் இதைக் காட்டி ஆர்க்யூமெண்ட் பண்ணுவார்களே என்பதால்தான். அதனாலதான் சென்ஸாருக்கு வரும் ஒவ்வொரு புரட்யூஸர்கள்கிட்டேயும், டைரக்டர்கள் கிட்டேயும் சொல்றேன். மற்ற படங்களோட கம்பேர் பண்ணி பேசாதீங்கன்னு.


எப்படிப்பட்ட காட்சிகள், வசனங்கள் படத்தில் இடம்பெறக்கூடாது என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் நீங்கள் இதுவரை கட்ஸ் கொடுத்த ஷாட்ஸ், டயலாக்கை தொகுத்து டெமோ ஃபிலிம் மாதிரி விஷூவல் கைடுலைன்ஸ் தயாரித்து திரையுலகினருக்கு வழங்கினால் என்ன? அதன் மூலம் அனாவசிய சர்ச்சைகளை தவிர்க்கலாமே?


அப்படி ஒரு விஷயம் பண்ணணும். யார் பண்றது? அவங்களுக்குத் தானே இது பிரச்சனை? அப்ப அவங்கதான் இதைப் பண்ணணும். கேயார் பிலிம் சேம்பர் தலைவரா இருந்தப்ப இது பத்திப் பேசினோம். அப்போது இது போன்ற ஆக்கபூர்வமான பல விஷயங்கள் பத்தி தயாரிப்பாளர்களுக்கு கடிதம் கூட எழுதினோம். தயாரிப்பாளர்களிடமிருந்தோ இயக்குநர் களிடமிருந்தோ பதிலே இல்லை. அவங்களுக்கு பிரச்சனை இருக்கும் போது அவங்கதானே எங்களைக் கூப்பிடணும்? கூப்பிடவே இல்லை. அவங்களுக்கு இதில் உண்மையான அக்கறை இல்லைன்னுதான் சொல்லணும். திருட்டு விசிடி ஒரு பிரச்சனையா இருக்கிறது என்றதும் அணி திரண்டு ஊர்வலமாப் போறாங்களே? அதே மாதிரி இந்த பிரச்சனைக்கும் அவங்க வரணும்.


கதாநாயகியின் தொப்புளைச்சுற்றி பம்பரம் விடுவது, ஆம்லெட் போடுவது, கரப்பான்பூச்சியை விடுவது போன்ற காட்சிகளை அனுமதித்து இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் என்ன நியாயம் சொல்ல முடியும் உங்களால்?


அடல்ட்ஸ் ஒன்லி பார்க்கக் கூடிய ஏ படத்தில் அந்த மாதிரியான காட்சிகள் இருக்கத்தானே செய்யும்? அதனால்தானே ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறோம்.? சமீபகாலமாக ஏ படங்கள் அதிகமாக வருகின்றன. அதனால் இப்படிப்பட்ட காட்சிகளும் அதிகமாக இருப்பதுபோல் தெரிகின்றன.


நல்ல திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் ஆபாசமாகவோ வன்முறையாகவோ இருந்தால் அதை அனுமதிப்பீர்களா?


அனுமதிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பாக்கிறப்ப நல்லக் கருத்துள்ள படமாக இருக்கும்போது இடையில் ஒன்றிரண்டு விஷயங்கள் முன்னே பின்னே இருந்தாலும் அனுமதிக்கிறோம். உதாரணமாக..ராமகிருஷ்ணா படம். மொத்தமாக பார்த்தால் அது நல்ல படம். அதில் வச்சிருக்கேன் வச்சிருக்கேன் என்று டயலாக் எல்லாம் இருக்கு. இருந்தாலும் அதை விட்டிருக்கோம். அதேசமயம் நல்ல படங்கள் வருவதுதான் இப்ப அபூர்வமாக இருக்கிறதே?


காக்க காக்க என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரம்யா கிருஷ்ணன் படு ஆபாசமாக காட்டப்பட்டிருந்தார். அவரது அந்தரங்க உறுப்பை மையப்படுத்தியே பல ஷாட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை எப்படி அனுமதித்தீர்கள்?


அப்படியா இருக்கு? நாங்கள் பார்த்த போது எங்களுக்கு அது தப்பாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயமாக அனுமதித்திருக்க மாட்டோம்.


இப்போதைய படங்களில், குறிப்பாக காமெடி காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருக்கின்றன. இதை எல்லாம் தணிக்கைக்குழுவினர் கட்டுப்படுத்துவதுபோல் தெரியவில்லையே?


சென்ஸார் யாருக்காகப் பண்றோம்? மாரலான மக்களுக்காகத் தான். அவங்க படத்தை எப்படிப் பாக்கிறாங்கன்னுதான் நாங்க பார்க்க முடியுமே தவிர வக்ரபுத்தி உள்ளவர்களை மனதில் வைத்து சென்ஸார் பண்ண முடியுமா? எல்லாத்¬யும் வக்ரபுத்தியோடு பார்த்தால் எல்லாமே டபுள் மீனிங்காகத்தான் தெரியும். உதாரணமா.. பேரழகன் படத்தில் ஒன்பது டபுள்மீனிங் டயலாக் இருக்குன்னு ஒருத்தன் வந்து சொல்றான். இதுக்கு என்ன பதில் சொல்றது சொல்லுங்க?


பிற மொழிப்படங்களை டப் செய்பவர்களில் சிலர் தமிழ் காமெடி நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்து படத்தில் சேர்த்துவிட்டு நேரடி தமிழ்ப்படம் போல் வெளியிடுகிறார்கள். இந்த மோசடிக்கு தணிக்கைக்குழுவும் உடந்தையாக இருக்கிறதே?


டப்பிங் பட விஷயத்தில் இருக்கும் சென்ஸாரின் விதிதான் இதற்குக் காரணம். ஒரிஜினல் படத்தில் உள்ள காட்சிகள் ஃப்ரேம் ட்டூ ஃப்ரேம் அப்படியே இருந்தால்தான் அது டப்பிங் படம்! அதில் புதிதாக எடுத்த காட்சிகளை ஒரு அடி நீளத்துக்கு சேர்த்திருந்தாலும் அதை நேரடிப்படமாக கணக்கில் கொள்ள வேண்டும் என்று சென்ஸார் விதி சொல்கிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஹெட்குவார்ட் டர்ஸுக்கு பரிந்துரை செய்து அதன்படி புதிய ஆர்டர் வந்திருக்கிறது. இனி டப்பிங் படங்களில் புதிய காட்சிகளை சேர்த்திருந்தாலும் அது டப்பிங் படம்தான்!


ஒரு தலைப்பில் படத்தை சென்ஸார் செய்து வெளியிட்டுவிட்டு அல்லது வெளியிடாமல் இருக்கும் நிலையில் வேறு தலைப்பில் படத்தை ரிலீஸ் செய்யலாமா?


ரிலீஸுக்குப் பிறகு படத்தின் டைட்டிலை மாற்றவே முடியாது. ஆனால் ரிலீஸுக்கு முன்னால் மாற்றிக் கொள்ளலாம். அப்படி ரிலீஸ் செய்யவும் எங்கள் அனுமதியை வாங்க வேண்டும். அதற்கு அனுமதி கொடுக்கும் போது பழைய டைட்டிலையும் குறிப்பிட்டுத் தான் அனுமதி கொடுப்போம். அதை படத்தின் டைட்டிலிலும், போஸ்டர்களிலும் குறிப்பிட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தப்பு. அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியம்.உதாரணத்துக்கு ஜமீலா படம் நதிக்கரையினிலே என்ற பெயரில் வெளியானது. டைட்டிலில் இரண்டு பெயரும் இருக்கும். ஏன் இப்படி செய்யச் சொல்கிறோம் என்றால் அந்தப் பெயரில் இருந்த படம்தான் இந்தப்படம் என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.


தணிக்கைச் செய்யும் முன்பே டிரெய்லர்களை டி.வி.யில் ஒளிபரப்புகிறார்கள். அப்படி ஒளிபரப்பப்படும் காட்சியை நீங்கள் தணிக்கையின் போது கட் பண்ணுவதாக வைத்துக் கொள்வோம். அந்த டிரெய்லர்கள்...


நாங்கள் ஏ என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தப் படங்களின் காட்சிகளைக் கூட டி.வி.யில் போடக்கூடாது. அதுதான் சட்டம். அதனால நாங்க என்ன பண்ணிருக்கோம்னா..குறைந்தபட்சம் டிரெய்லர்களை நாங்கள் சர்ட்டிஃபிகேட் கொடுத்த பிறகு டி.வி.க்குக் கொடுங்கன்னு அட்வைஸ் பண்ணிருக்கோம். அதையும் மீறி சென்ஸார் செய்வதற்கு முன் டிரெய்லர்களை டி.வி.க்குக் கொடுத்தால் அந்தப் படங்களை நாங்கள் பார்க்க மாட்டோம். சர்ட்டிஃபிகேட் தர மாட்டோம் என்று சொல்லியிருக்கோம்.


தணிக்கையின் போது நீங்கள் கட்ஸ் கொடுத்த காட்சிகளின் நெகட்டிவ்களை உங்களிடம் ஒப்படைத்த பிறகுதான் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது அதே காட்சிகள் பல படங்களில் இடம் பெறுகின்றனவே? இதைத்தடுக்க என்ன வழி?


சில படங்களில் அப்படி தவறு செய்யப்பட்டதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். தியேட்டர்கள் மீது நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம்.இதற்கு தியேட்டர்காரர்கள் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்?


நீங்கள் சொல்வது சரிதான். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், லேப்காரர்கள் கூட இதற்குக் காரணமாக இருக்க முடியும். கட் பண்ணப்பட்ட காட்சிகளை படத்தில் இணைப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று..எங்கே கட்ஸ் கொடுக்கப்பட்டது என்று தெரியாத அளவுக்கு இருப்பது. அப்படி இருந்தால் தவறு தயாரிப்பாளர், லேப்காரர்கள் மீது என்று அர்த்தம். இதற்கு தியேட்டர்காரர்கள் காரணமாக இருக்க முடியாது. இன்னொன்று.. கட்ஸ் கொடுக்கப்பட்ட இடம் தெரிவது போல் காட்சிகளை இணைப்பது. இதற்கு தியேட்டர்காரர்கள்தான் பொறுப்பு.


டி.வி.க்கும் சென்ஸார் தேவை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது அண்மைக்காலமாக. இது சாத்தியம்தானா?


டி.வி.க்கு சென்ஸார் தேவைதான். ஆனால் அதை எப்படி செய்வது என்பதில் இன்னும் தெளிவான திட்டம் இல்லை. எங்களை மாதிரி ஒரு குழு உட்கார்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை சென்ஸார் பண்ணுவது சாத்தியமில்லை. அதே நேரம் அதற்கு கண்டிப்பாக ஏதாவது வழிமுறைகளைக் கண்டுபிடித்துத்தான் ஆக வேண்டும். மற்றபடி கேபிள் டி.வி.க்கான சட்டத்தின்படி வேண்டுமானால் அதை முறைப்படுத்தலாம். கேபிள் டி.வி. சட்டம் என்பது ஏறக்குறைய சினிமாவுக்கான சென்ஸார் விதிகள் போலவே இருக்கின்றன.

No comments:

Post a Comment