Sunday 28 June 2009

சீரழிவின் சின்னம்

தெருக்கூத்து, நாடகம் போன்ற கலை வடிவங்களை வழக்கொழிய வைத்துவிட்டு விஸ்வரூபம் எடுத்தது தான் திரைப்படம்! மக்களின் மனக்களிப்புக்கு மாற்று ஊடகம் ஏதுமற்ற சூழலில், கடந்த ஐம்பதாண்டு களுக்கு மேலாக, அவர்களின் ஒரே பொழுதுபோக்கு வாய்ப்பாக இருந்து கொண்டிருந்த திரைப்படங்களை அண்மை ஆண்டுகளில் ஆட்டம் காண வைத்து விட்டது தொலைக்காட்சி ஊடகம். இதன் வளர்ச்சியும், வீச்சும், சமீப காலங்களில் உச்சத்தை எட்டியிருப்பதோடு, திரைப்படங்களின் பார்வையாளர் களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
திரைப்படங்கள் தரும் சந்தோஷத்தை அனுபவிக்க, பணம் கொடுத்து, திரையரங்குக்கு சென்றால் ஒழிய மக்ளுக்கு வேறு மார்க்கமில்லை என்ற நிலைமாறி, இன்றைக்கு வீட்டுக்குள்ளேயே எல்லா வகையான பொழுதுபோக்குகளும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சி களுக்குப் பஞ்சமே இல்லை! ஏறக்குறைய எல்லாத் தொலைக்காட்சிகளிலும், எந்நேரமும், திரைப் படக்காட்சிகள் ஏதாவது ஒரு பெயரில் ஒளி பரப்பப்படுகின்றன. எல்லாவற்றையும்விட, மெகா சீரியல்கள் என்று சொல்லப்படும் தொலைக்காட்சித் தொடர்கள் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அவர்களின் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சமுமாகிவிட்டன.
தொலைக்காட்சியினால் ஏற்பட்ட இதுபோன்ற மாற்றங்களால் திரைத்தொழில் டல்லடிக்கத் தொடங்கிவிட்டதாக நினைத்து, மக்களை மறுபடி திரையரங்குக்குத் திருப்ப பகீரதப் பிரயத்தனங்களை செய்து வருகிறார்கள் திரைப்படத்துறையினர். தொலைக்காட்சி களால் தொட முடியாத வன்முறை, ஆபாசம் போன்ற அம்சங்களை திரைப்படங்களில் அதிக அளவில் திணித்ததும் அவற்றில் ஒன்று...! இன்னொரு பக்கம்...போஸ்டர்கள், விளம்பரங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்ப்பது!
சில வருடங்களுக்கு முன்பு வரை போஸ்டர்களில் கொஞ்ச நஞ்சம் நாகரிகத்தன்மை தென்பட்டது. இப்போது முழுமையாகவே ஆபாச, மற்றும் வன்முறை மயமாகிவிட்டன. பலான படங்களின் போஸ்டர் எது? சாதாரணப் படங்களின் போஸ்டர் எது? என்று இனம் காண முடியாத அளவுக்கு எல்லாப்படங்களின் விளம்பரங்களுமே அருவருக்கத்தக்கமுறையில் அச்சிடப்படுகின்றன. போஸ்டர்களின் மூலம் மட்டுமே சமூகத்தின் மீது தொடுக்கப்பட்டு வந்த இப்படிப்பட்ட ஆபாசப்போர், பிரம்மாண்ட வடிவத்தில் டிஜிட்டல் பேனர்களாக அடுத்தக் கட்டத்தையும் தொட்டிருக்கிறது.
சில வருங்களுக்கு முன் சென்னை நகரத்தில் வைக்கப்பட்ட 7ஜி ரெயின்போ காலனி’ என்ற படத்தின் டிஜிட்டல் விளம்பர பேனரில் ஆங்கிலப்படங்களை மிஞ்சுமளவுக்கு ஆபாசப்புரட்சியே நடந்தது. கழிவறையில் கதாநாயகி உட்கார்ந்திருக்க, அவளருகில் கதாநாயகன் பல் துலக்கிக் கொண்டிருப்பது போல் வைக்கப்பட்ட அந்த விளம்பர பேனரை ஊடகங்கள் சர்ச்சைக்குள்ளாக்க, பின்னர் அந்த விளம்பரம் அகற்றப்பட்டது. அதே போல், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெண்கள் பள்ளியின் அருகில் வைக்கப்பட்ட ‘கனாக்கண்டேன்’ என்ற படத் தின் விளம்பர பேனரும் கண்டனத்துக்குள்ளானது. அப்படத்தின் கதாநாயகி, கதாநாயகனின் முகவாய்கட்டையை காமத்துடன் கடித்துக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது அது. மாதர் சங்கங்கள் பொங்கிக் கிளர்ந்து போர்க்குரல் எழுப்பியதும் சில தினங்களில் அந்த விளம்பர பேனரும் அகற்றப்பட்டது.
இந்த சம்பவங்கள் நடந்த சில மாதங்களிலேயே, 7ஜி ரெயின்போ காலனி’, கனாக்கண்டேன்’ விளம்பரங்களை எல்லாம் ஒன்று மில்லாமல் செய்யும் அளவுக்கு படு அநாகரிகமான, ஆபாசமான போஸ்டர் ஒன்று சென்னை உட்பட பல நகரங்களில் ஒட்டப் பட்டது. அது சிம்பு நடித்த‘வல்லவன்’ என்ற படத்தின் போஸ்டர்! ஆபாசத்தின் உச்சம் என்ற வார்த்தைக்கு அப்படியே பொருந்தக் கூடிய போஸ்டர் அது! தமிழ் கூறும் நல்லுலகம் இதற்கு முன் இப்படியொரு ஆபாசத்தைக் கண்டதில்லை. அதைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். குறிப்பிட்ட அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட இடங்களை முகச்சுழிப்போடு, அவசர அவசரமாகக் கடந்து போனார்கள் பெண்கள்! அந்தப் படத்தின் கதாநாயகியின் உதட்டை, தன் வாயால் கதாநாயகன் கவ்விக் கொண்டிருக்கும் டைட் க்ளோஸப் படம்தான் அந்த போஸ்டர்.
கலாச்சார சீரழிவுக்கு தமிழ்த்திரைப்படங்களே முக்கிய காரணமாக இருப்பதாக ஏற்கனவே கல்லடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை மேலும் உண்மையாக்குவது போல், உறுதிப்படுத்துவது போல் இப்படிப்பட்ட ஆபாச விளம்பரங்கள்! இவை எல்லாம் உதாரணங்களே! சற்றே உற்றுக் கவனித்தால் பெரும்பாலான தமிழ்த்திரைப்படங்களின் போஸ்டர்களும், விளம்பர போர்டுகளும் இந்த லட்சணங்களிலேயே வடிவமைக்கப்படுகின்றன என்பதைக் காண முடியும்.
ஒரு பக்கம்.. ஆபாசம், இன்னொரு பக்கம் வன்முறை! முன்னணிக் கதாநாயக நடிகர்கள் நடித்த படங்களின் போஸ்டர்களையும், விளம்பரங்களையும் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். அரிவாள், துப்பாக்கி இல்லாத போஸ்டர்கள், விளம்பரங்களே இல்லை என்பதுதான் அது!
திரைப்படங்களில் இருக்கும் ஆபாசமும், வன்முறையும் அதை பார்ப்பவர்களை மட்டுமே பாதிப்பதாக இருக்கின்றன. ஆனால் போஸ்டர்களிலும், பிற விளம்பரங்களிலும் புகுத்தப்படும் இந்த விஷ(ய)ம், குழந்தைகளையும், திரைப்படங்களையே பார்க்காதவர்களின் மனதிலும் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் என்பதை எவரும் மறுக்க முடியாது.
சினிமாக்காரர்கள் சமூகப் பொறுப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள். பணம் சம்பாதிப்பதற்காக நாம் செய்யும் காரியம் சமூத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதுமில்லை. தமிழ் சினிமாக்கள் தரம் கெட்டுப் போனதற்கு திரையுலகினரின் இந்த மனோபாவம்தான் முதன்மையான காரணம். சினிமாக்களின் மூலம் கலாச்சார சீரழிவுக்குக் காரணமாக இருந்தவர்கள் இப்போது விளம்பர தளத்தை தங்களின் அடுத்த ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறார்கள்.
இதை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால், முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழக சுவர்களில் இன்னும் பல படுக்கையறை சமாச்சாரங்கள் போஸ்டர்களாக, பேனர்களாக பளிச்சிடும் அபாயத்தையும், ஆபத்தையும் இனி எக் காலத்திலும் எதிர்க்க திராணியற்றவர்களாகிவிடுவோம்.என்ன செய்யப் போகிறோம் நாம்?

No comments:

Post a Comment