Tuesday 30 June 2009

சினிமாத்துறைக்கு சலுகை ஏன்?


திரைப்படத்துறைக்கு தமிழகஅரசு அள்ளிக் கொடுக்கும் சலுகைகள், பிற துறைகளுக்கு வழங்கப் பட்ட சலுகைகளோடு ஒப்பிட்டால் மிக அதிகம் மட்டுமல்ல, அளவுக்கு மீறி விஷயமும் கூட. ஆண்டு தோறும் வழங்கப்படும் திரைப்படத்துறைக்கான விருதுகளுக்காகவும், குறைந்த செலவில் தயாரிக்கப் படும் தரமான படங்களுக்கு மானியம் என்ற பெயரிலும் படத்துறைக்கு பல கோடிகள் செலவு செய்யப்படுகிறது. கலை என்ற அடிப்படையிலேயே திரைப்படத்துறைக்கு இப்படியான சலுகைகள் வழங்கப்பட்டாலும், உண்மையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் வியாபாரமே அது.


எனில், லாபத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு வியாபரத்துக்கு மக்களின் வரிப்பணத்தை வாரி யிறைப்பது நியாயமா? மக்களின் வாழ்வோடு நேரடி தொடர்பு கொண்ட ஒரு மளிகைக் கடைக்கோ, மருந்துக்கடைக்கோ அரசாங்கத்தால் மானியமோ, விருதுகளோ கொடுக்கப்படாதபோது திரைப்படத் துறைக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேகக் கவனிப்பும், ஊக்குவிப்பும்? என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியாது.


திரைப்படங்கள் மூலம் அரசுக்குக் கிடைத்து வந்த கேளிக்கை வரி இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலாய் மட்டுமின்றி, திரைத்துறைக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நியாயம் கற்பிப்பதாகவும் இருந்தது. 1989 ஆம் ஆண்டு வரை திரைப் படங்களுக்கான கேளிக்கை வரி ஐம்பத்தி நான்கு சதவிகிதமாக இருந்தது. அப்போது ஆட்சிக்கு வந்த தி.மு.க.அரசு, அதை நாற்பது சதவிகிதமாகக் குறைத்தது. பின்னர் அது மேலும் குறைக்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசால் இருபது சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.


அது முதல், புதிய திரைப்படங்களுக்கு இருபது சதவிகிதம், பழைய படங்களுக்கு பத்து சதவிகிதம் என்ற விகிதத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த வரிகளின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் எண்பது கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இப்படி கிடைத்த வருவாயில் பெரும்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராமங்களின் வளர்ச்சித்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.


2006 ஆம் ஆண்டில், தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப் படங்களுக்கு முழுமையான வரிவிலக்கு என்று அறிவித்தது தமிழக அரசு. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எதிராக, தமிழைப் புறக்கணித்துவிட்டு, பிற மொழித்தலைப்புகளில் வெளியாகி வந்த தமிழ்ப்படங்களின் எண்ணிக்கையை முற்றிலுமாக இல்லாமல் செய்ததோடு, தமிழ்ப் படங்களின் பெயர்களை தமிழில் இருக்க வேண்டும் என்பதைத் தவிர்க்க முடியாததாக்கியது இந்த அறிவிப்பு!


அரசுக்கும், அதன் வழியாய் கிராமப்புற மக்களுக்கும் கிடைத்து வந்த வருவாயை இந்த வரிவிலக்கின் மூலம் இழந்துவிட்டாலும், தமிழ்மொழியைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதால் அதை தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதே நேரம், இந்த வரிவிலக்கு முழுமையான பலன் தந்திருக்கிறதா என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.


திரைப்படங்களுக்குக் வழங்கப்பட்ட வரிவிலக்கினால் ஏற்பட்ட விளைவு எப்படி இருக்கிறது?


‘அறுவைசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்’ என்று சொல்லப்படுவதைப் போலவே, வரிவிலக்கின் விளைவும் இருக்கிறது என்பதே உண்மை.


நியூ, 12பி, பாய்ஸ், கோவை பிரதர்ஸ், டான் சேரா, டான்ஸர், ஏபிசிடி, பவர் ஆஃப் உமன், மும்பை எக்ஸ்பிரஸ், மஜா, ஜி என்றெல்லாம் சகட்டுமேனிக்கு பிற மொழிகளில் பெயர் சூட்டப்பட்ட நிலை மாறி, பாரிஜாதம், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று அழகு தமிழ்ப்பெயர்களைத் தாங்கித் தமிழ்ப்படங்கள் வெளிவரத் தொடங்கின.


அது மட்டுமல்ல, ‘ப்ளாஷ்பேக்’ என்று பெயரிடப்பட்ட படம் ‘அந்த நாள் ஞாபகம்’ என்றும், ‘ஸ்வீட்’ என்று தலைப்பு வைக்கப்பட்ட படம் ‘நினைத்தாலே’ என்றும், ‘பாய்ஸ் அண்ட கேர்ள்ஸ்’ என்று தொடங் கப்பட்ட படம் ‘மாணவ மாணவிகள்’ என்றும், இன்னும் பிற மொழி பெயர் வைக்கப்பட்ட வேறு பல படங்களும் தமிழ்ப்பெயர் மாற்றி வெளியிடப்பட்டன.


இப்படியாக, தமிழகஅரசின் வரிவிலக்குச் சலுகை, தமிழ்த்திரைப்படங்களின் தலைப்புகளில் மட்டுமே ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கதை அம்சம், காட்சி அமைப்புகள், உள்ளடக்கம் போன்ற விஷயங்களிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எப்போதும் போலவே, தமிழ்ப்பண்பாட்டுக்கு எதிரான கதைகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் காட்சிகள், ஆபாசமான வசனங்கள் என்று தமிழ்த்திரைப்படங்களின் கீழ்த்தரமான போக்கு தொடர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழில் பெயர் வைக்கப்பட்ட பிறகும் கூட, சமூக அமைதிக்கு வேட்டு வைக்கும் அரிவாள், துப்பாக்கிக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் வன்முறைக்காட்சிகள் தமிழ்த்திரைப்படங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு உதாரணம் சொல்லத் தொடங்கினால், வெகு சில படங்கள் தவிர, வெளி வந்த அத்தனை படங்களையுமே குறிப்பிட வேண்டியிருக்கும் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை.


ஆக, தூய்மையான உடை உடுத்திய ஒருவன் மனதில் அழுக்கைக் கொண்டிருப்பதைப் போலவே இன்றைய தமிழ்ப்படங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்டப் படங்களுக்கு வரிவிலக்குச் சலுகை அளிப்பது, அதன் மோசமான உள்ளடக்கத்தை அரசாங்கமே ஆதரித்து, அரவணைப்பது போன்ற தோற்றத்தையும், எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழ்ப்பெயர் சூட்டினால் வரிவிலக்கு என்பதை சற்றே மாற்றி, பிற மொழிகளில் தலைப்பு வைத்தால் கூடுதல் வரி என்று மாற்றம் செய்யலாம். அல்லது எல்லா வயதினரும் பார்க்கத் தகுதி வாய்ந்ததாக தணிக்கைக் குழுவினரால் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்ட, தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு மட்டும் வரிவிலக்கு என்று சட்டத்தை மாற்றி அமைக்கலாம்.


இப்படி செய்வதன் மூலம் மட்டுமே, பிற மொழித்தலைப்பு வைப்பதை மட்டுமின்றி, மோசமான திரைப்படங்களின் வருகையையும் வழக்கொழிய வைக்க முடியும். தமிழ்ப்பெயர் சூட்டினால் வரிவிலக்கு என்ற அடிப்படையில் மட்டும் தற்போதையை சலுகை தொடருமானால், ‘மாமனாரின் இன்பவெறி’, ‘மருமகளின் காமக்களியாட்டம்’, ‘மச்சினியின் முதல் இரவு’ போன்ற பகல் காட்சிப் படங்கள் கூட இந்த சட்டத்தின் கீழ் வரிவிலக்குச்சலுகையை மிகச் சுலபமாகப் பெற்றுவிட முடியும். சட்டம் இயற்றியவர்களால் கூட இதைத் தடுக்க முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால் தற்போது வெளியாகும் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் மேலே சுட்டிக்காட்டப்பட்டப் பகல் காட்சிப் பாலியல் படங்களின் தரத்தில்தான் இருக்கின்றன.


தமிழ்த்திரைப்படங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கினால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும், இப்படியொரு சலுகையை அரசு அறிவித்தது என்றால், அந்தச் சலுகை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, அது நாட்டுக்கும், மக்களுக்கும் பயன் தர வேண்டும் என்பதுதானே? அரசின் அடிப்படை நோக்கத்தைக் கூட நிறைவேற்றாத திரைப்படத் துறைக்கு வழங்கப்பட்ட சலுகையை மறுபரிசீலனை செய்வதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இது பற்றி அரசு யோசிக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட!






No comments:

Post a Comment