Tuesday 30 June 2009

ஆதிக்கு அடி, வெயிலுக்கு வெற்றி


திரைப்படத்துறையை கனவுத் தொழிற்சாலை என்று குறிப்பிடுவதற்கு, அது பார்வையாளனின் மனதில் கனவுகளை உற்பத்தி செய்யும் துறையாக இருக்கிறது என்பது நேரடி அர்த்தமாக இருந்தாலும், திரைத்துறையை இன்னொரு வகையிலும் ‘தொழிற்சாலை’ என்று சொல்வது பொருத்தமாகவே தோன்றுகிறது. திரைப்படங்களை, அவை மக்களால் விரும்பப்படுகிறதோ இல்லையோ, அது குறித்து சிறிதும் கவனம் கொள்ளாமல் தொடர்ந்து அவற்றை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது - திரையுலகம்.


2006 ஆம் ஆண்டும் தொண்ணூற்றி ஆறு திரைப் படங்களை உற்பத்தி செய்திருக்கிறது கோடம்பாக்கத் தில் இயங்கி வரும் தமிழ்த்திரைப்படத்துறை. அவற்றில் எத்தனை திரைப்படங்கள் மக்களுக்கு பயன்தரத்தக்கப் படைப்புகளாக இருந்தன? எத்தனை திரைப்படங்கள் சமூகத்துக்கு விரோதமான கருத்துகளை எடுத்துச் சென்றன? என்பன பற்றி திரைப்பட வியாபாரிகள் கவலைப்படுவதில்லை. அது அவர்களின் பிரச்சனையும் இல்லை. திரைப்பட வியாபாரிகளின் ஒரே கவலை, எதிர்பார்ப்பு அவை ஈட்டித்தரும் லாபம் மட்டுமே!


அதன்பொருட்டே காலம்காலமாக செலுலாய்டு குப்பைகளை மக்களின் மண்டைக்குள் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் திரைப்பட வியாபாரிகள். மண்ணில் கொட்டப்பட்டு மக்கிப் போகாமல் சுற்றுப்புறச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைப் போலவே, இந்த செலுலாய்டு குப்பைகளும் மக்களின் மனவெளியை அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை பகுத்தாய்ந்து பார்க்கும் போது, மேற்சொன்ன இந்தப்போக்கு மாறாதிருப்பதையும், முந்தைய ஆண்டுகளைப்போலவே நீடித்து, நிலைபெற்று வருவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.


இப்படியொரு குற்றச்சாட்டுக்குக் காரணமில்லாமல் இல்லை. 2006 ஆம் ஆண்டில் வெளியான மசாலாப்படங்களே இதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.


கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, அஜீத் நடிப்பில் வெளியான வரலாறு, திருப்பதி, பரமசிவன், விஜய் நடித்த ஆதி, அர்ஜூன் நடித்து, இயக்கிய மதராஸி, அர்ஜூன் நடிகராக மட்டும் முகம் காட்டிய வாத்தியார், தருண்கோபி இயக்க, விஷால் நடித்த திமிரு, விஜயகாந்த் நடிப்பில் வெளியான சுதேசி, தர்மபுரி, பேரரசு, சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்த தலைமகன், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சிம்பு நடித்த சரவணா, சிம்பு நடித்து, இயக்கிய வல்லவன், தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம், பிரசாந்த் நடித்த ஜாம்பவான், ரவிகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, அவரது அண்ணன் ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான கேடி, மாதவன் நடித்த இரண்டு என கவலை தரக்கூடிய அளவுக்கு மசாலாப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.


அதே சமயம் ஆறுதல் தரக்கூடிய விஷயமும் நடந்திருப்பது சற்றே மகிழ்ச்சியைத் தருகிறது. மசாலாப்படங்களுக்குக் கிடைத்த மரண அடிதான் அது. வேட்டையாடு விளையாடு, வரலாறு, திமிரு, வல்லவன், திருவிளையாடல் ஆரம்பம், இரண்டு, பேரரசு போன்ற வெகு சில படங்கள் தவிர ஏனைய படங்கள் எதுவும் கல்லாப்பெட்டியை நிரப்பவில்லை. அதிலும் குறிப்பாக விஜய் நடித்த ஆதி படம் மரண அடி வாங்கியது. இப்படத்தின் தோல்வியினால், அடுத்து என்ன வகையான கதையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்திலேயே சுமார் ஆறு மாதங்கள் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தார் விஜய். அரதப்பழசான கதையை எடுத்தாலும் தன் முகத்துக்காக அப்படத்தை மக்கள் சிகரத்தில் ஏற்றி வைப்பார்கள் என்ற ஹீரோக்களின் முட்டாள்தனத்துக்கு மக்கள் எழுதிய முடிவுரையாக இல்லாவிட்டாலும், ஒரு எச்சரிகையாக அமைந்த மறுக்க முடியாது.


ஆடல், பாடல், அடிதடி, சண்டை என மசாலாப்பட வகையில் அடங்கக்கூடிய படங்களாக இருந்தாலும் சில படங்கள் சமூகத்துக்கு அவசியமான செய்தியையும் தாங்கி, தனித்த அம்சங்களையும் கொண்டிருந்தன. தம்பி, சிவப்பதிகாரம், ஈ, கொக்கி, தகப்பன்சாமி போன்ற படங்களே அவை. சீமான இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி படம் வன்முறைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தது. கரு.பழனியப்பன் இயக்கத்தில் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தின் கதை, மக்களுக்கு விரோதமாக இயங்கும் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாணவர்கள் ஆயுதமேந்தும் சூழலைச் சொன்னதோடு, சிவப்புச்சிந்தனையையும் விதைத்தது. ஜனநாதன் இயக்கி ஜீவா நடித்த ஈ படம் 2006ஆம் ஆண்டின் குறிப்பிடத்தக்க படைப்பாக கவனம் ஈர்த்தது. இன்றைய சூழலில் உலகத்தையே அச்சுறுத்தும் பயோவார் பற்றிய விழ்ப்புணர்ச்சியை ஊட்டுவதாக இப்படத்தின் கதை அம்சம் இருந்தது. வில்லன் நடிகராக இருந்த கரண் கதாநாயகனாகி நடித்த கொக்கி திரைப்படம் மூட நம்பிக்கையினால் ஒரு இளைஞனின் வாழ்க்கை எவ்விதம் சீர்கெட்டது என்பதை சிறப்புடன் சித்தரித்தது. மழை பொய்த்துப்போனதால் வறட்சியில் சிக்கி, உயிர் போராட்டத்தில் கொத்தடிமைகளான ஒரு கிராமத்து மக்களின் பிரச்சனையைச் சொன்ன தகப்பன்சாமி படத்தையும் இந்தப் பிரிவில் சேர்ப்பதில் தவறில்லை. இந்தப் படங்களின் கருத்தில் சமூக நோக்கம் இருந்தாலும், உருவாக்கத்தில் தென்பட்ட மசாலா அம்சங்கள், கருத்தை பின்னுக்குத்தள்ளி விட்டதையும் நினைவு கொண்டுதான் ஆக வேண்டும்.


தொண்ணூற்றி ஆறு படங்களில் மசாலாப்படங்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா? மிக குறைவான எண்ணிக்கையில் தானே மசாலாப்படங்கள் வெளிவந்திருக்கின்றன? என்று எண்ணி விட வேண்டாம். இவ்வகை மசாலாப்படங்கள் இன்னும் கூட இருக்கின்றன. அவை அனைத்தும் மேற்கண்ட பட்டியலிலிருந்து சற்று மாறுபட்டவை. அதாவது ரௌடிகளையும், தாதாக்களையும் கதாநாயகனாக சித்தரித்த படங்கள்! அந்தவகையில் அடுத்து வரும் பட்டியலில் இடம்பெறும் அத்தனை படங்களுமே சமூகத்துக்கு ஆபத்தான படங்கள்.


இந்தப் பிரிவில் அடங்கக்கூடிய பரத் - ஆர்யா நடிக்க, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான பட்டியல், தனுஷ் நடிக்க, அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை என இரண்டு படங்களும் ‘சில்ட்ரன்ஸ் ஆப் காட்’ என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள். பார்த்திபன் நடித்து, இயக்கிய பச்சக்குதிர, சுந்தர்.சி. கதாநாயகன் அவதாரம் எடுத்த தலைநகரம், நடன இயக்குநர் ஹரிகுமார் கதாநாயகனாக நடித்த தூத்துகுடி, ரஞ்சித் நடித்த டான்சேரா, விக்னேஷ் நடித்த ஆச்சார்யா, சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த வட்டாரம், சஞ்சய்ராம் இயக்கிய ஆடு புலி ஆட்டம், பாலா நடித்த கலிங்கா போன்ற படங்களின் கதாநாயகன் பாத்திரம் ரௌடிகளாகவும், தாதாக்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதனால் இவை அனைத்துமே வன்முறைக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் மோசமான படங்கள் என்று நிச்சயமாக குற்றம்சாட்டலாம்.


இவற்றில் புதுப்பேட்டை படம் மிக மோசமான காட்சி அமைப்புகளைக் கொண்டிருந்தது. அதாவது மிக சாதுவான ஒருவன் இப்படத்தைப் பார்த்தால், அடுத்த கணமே கொலை, கொள்ளைகளை அஞ்சாமல் செய்யக் கூடிய தொழில்முறை ரௌடியாக அவனால் சுலபமாக மாறிவிட முடியும். அந்தளவுக்கு ஒரு கொலையை எப்படி செய்ய வேண்டும், கத்தியை எப்படி பிடிக்க வேண்டும், அரிவாளால் எப்படி வெட்ட வேண்டும் என்பதை எல்லாம் மிக நுணுக்கமாகக் கற்றுக் கொடுத்தது. இந்தப்படத்தை மக்கள் வெற்றிபெற வைக்கவில்லை என்பது மிகப்பெரிய ஆறுதலாக மட்டுமல்ல, இப்படிப்பட்ட வன்முறைப் படம் எடுப்பவர்களுக்கு ரசிகர்கள் விடுத்த எச்சரிகையாகவும் அமைந்தது.


ரௌடிகளை, தாதாக்களை கதாநாயகனாக சித்தரித்த இவ்வகைப் படங்களைப் போலவே இன்னொரு வகைப்படங்களும் இந்த ஆண்டில் கணிசமான எண்ணிக்கையில் வெளி வந்தன. ஆபாசம் மற்றும் வக்கிரமான கதை மற்றும் காட்சிகளைக் கொண்ட படங்களே அவை.


இகோர் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஆர்யா நடித்த கலாபக்காதலன், சாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்த உயிர், சுசிகணேசன் இயக்க, ஜீவன் நடித்த திருட்டுப் பயலே போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. தன் அக்காள் கணவனின் மீது காதல் கொண்டு, முறை தவறிய தன் காதல் நிறைவேறாததினால் உயிரையே மாய்த்துக்கொள்ளும் மச்சினியின் கதையாக கலாபக்காதலன் படமும், தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே, கணவனின் தம்பி மீது காமம் கொண்டு, அதனால் தன் கணவன் தற்கொலை செய்து கொள்ளவும் காரணமாக இருப்பதோடு, மைத்துனனை அடைவதற்காக எதையும் செய்யத்துணியும் அண்ணியின் கதையாக உயிர் படமும் இருந்தன. கணவனின் நண்பனுடன் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணின் அந்தரங்கத்தை வீடியோ கேமராவில் படம் பிடித்து, அதை வைத்து அப்பெண்ணை பிளாக்மெயில் செய்யும் ஒருவனின் கதைதான் திருட்டுப்பயலே படம்.


எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் பார்த்த கணமே அவளைப் புணருவதற்குத் துடிக்கும் இளைஞனின் கதையாக எடுக்கப் பட்டிருந்தது எஸ்.ஜே. சூர்யா நடித்த கள்வனின் காதலி படம். பார்த்திபன் நடித்த பச்ச குதிர படமோ வார்த்தைகளால் சுட்டிக்காட்ட முடியாத வக்கிரத்தின் உச்சம். தன் மகனை வைத்து துள்ளுவதோ இளமை என்ற பாலியல் படத்தை இயக்கி, அதன் மூலம் கோடிகளை அள்ளிய கஸ்தூரிராஜா, அதே பேராசையில் தனுஷைப் போலவே தோற்ற ஒற்றுமை கொண்ட ஒரு சிறுவனை வைத்து இது காதல் வரும் பருவம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியதும் இந்த ஆண்டுதான். நல்லவேளை! கஸ்தூரிராஜாவின் இந்த பாலியல் படத்தை இளைஞர்களே நிராகரித்துவிட்டனர். இந்தப்படங்கள் தவிர, உணர்ச்சிகள், தீண்டத்தீண்ட, லயா, துள்ளுற வயசு, பிரதி ஞாயிறு காலை 9 மணி முதல் 10.30 வரை- என மேலும் சில பாலியல் கதை அம்சத்துடன் கூடிய படங்கள் வெளி வந்தன. இவை அனைத்தும் தோல்வியடைந்ததன் மூலம் எதிர்காலத்தில் ஷகீலாவுக்கு தமிழகத்தில் கோவில் கட்டும் அபாயம் தவிர்க்கப்பட்டது.


ஆபாசத்துக்கும், காதலுக்கும் தமிழ்த்திரைப்படங்களைப் பொருத்தவரை நூழிலை வித்தியாசம்தான். இந்த வித்தியாசப்புள்ளியைத் தொட்டும் தொடாமலும் காதல்கதை என்ற பெயரில் காலம்காலமாக திரைப்படங்கள் வெளி வந்து கொண்டுதானிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டும் இப்படிப்பட்டப் படங்கள் வெளிவராமலா இருக்கும்? காதலை அடிப்படையாகக் கொண்டும், அதே நேரம் மற்ற அம்சங்களை தவிர்த்துவிடாமலும் கலவையானக் காட்சிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட பல படங்கள் வெளியாகின.


சூர்யா, ஜோதிகா நடிக்க, சூர்யாவின் சொந்தப்படமாக வெளிவந்த சில்லுனு ஒரு காதல், ஸ்ரீகாந்த் நடித்த கிழக்குக் கடற்கரை சாலை, சசி இயக்கத்தில் ஜீவா நடித்த டிஷ்யூம், சரண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த இதயத்திருடன், ராஜா இயக்கத்தில் அவரது தம்பி ஜெயம்ரவி நடித்த (சம்திங் சம்திங்) உனக்கும் எனக்கும், விக்ரமன் இயக்கத்தில் பரத் நடித்த சென்னைக்காதல், மிஷ்கின் என்ற புது இயக்குநர் இயக்க நரேன் நடித்த சித்திரம் பேசுதடி, சேரனின் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் பரத் நடித்த அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, நரேன் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை, ரமேஷ் நடித்த நீ வேணுன்டா செல்லம் போன்ற படங்களை காதல் படங்களாக வகைப்படுத்தலாம். இவை தவிர, தொடாமலே, ஒரு காதல் செய்வீர், என் காதலே, காதலே என் காதலே, காதலும் கற்றுமற, மறந்தேன் மெய்மறந்தேன், இளவட்டம், மனசுக்குள்ளே, திருடி, நெஞ்சில் போன்ற படங்களும் இந்த ஆண்டில் வெளியான காதல் படங்களே!


மிக ஆச்சர்யமான விஷயம்.. இவற்றில் சித்திரம்பேசுதடி, (சம்திங் சம்திங்) உனக்கும் எனக்கும் என இரண்டு படங்கள் மட்டுமே வெற்றியடைந்தன! அதிலும் வெளியாகி முதல் மூன்று வாரங்கள் பார்வையாளர்களால் பாராமுகம் காட்டப்பட்ட சித்திரம்பேசுதடி படத்தை பிரபல விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவி என்பவர் வாங்கி, மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து வெற்றிப்படமாக் கினார். பல வருடங்களுக்கு முன் ஒருதலைராகம் படம் வெளியான போது பல தியேட்டர்களிலிருந்து படம் சரியில்லை என்று தூக்கப்பட்டு, அதன் பிறகு நடந்த அதிசயத்தினால் அப்படம் வெள்ளிவிழா வெற்றியடைந்து தமிழ்த்திரையுலக வரலாற்றிலும் இடம் பிடித்தது. அது போன்றதொரு நிகழ்வே சித்திரம் பேசுதடி படத்திற்கும் ஏற்பட்டது.


இந்தப்படம் தவிர, மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சில்லுனு ஒரு காதல், சிறு இடைவெளிக்குப் பிறகு விக்ரமன் இயக்கிய சென்னைக்காதல் உட்பட வேறு எந்த காதல் படமும் வெற்றியடையவில்லை. வேறு இயக்குநரை வைத்து சேரன் தயாரித்த படம் என்ற வகையில் எதிர்பார்க்கப்பட்ட அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படமும் கூட தோல்வியிலிருந்து தப்பவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப்போராடும் தன் காதலியைக் காப்பாற்றுவதற்காக தன் இதயத்தையே அவளுக்கு தானம் செய்து தன் உயிரை தியாகம் செய்யும் காதலனைப் பற்றிய கதையாக வெளி வந்த நெஞ்சிருக்கும்வரை படத்தையும் ரசிகர்கள் ஆதரிக்கவில்லை. சசி இயக்கத்தில் ஜீவா நடித்த டிஷ்யூம் படம் சினிமாவில் டூப் போடும் சண்டைக் கலைஞனுக்கும், சிற்பம் வடிக்கும் ஒரு பெண்ணுக்குமான காதலைச் சொன்னது. பிற காதல் படங்களிலிருந்து மாறுபட்டிருந்த இந்தப்படத்தையும் ரசிகர்கள் விரும்பவில்லை.


காதல் படங்களைப் போலவே காமெடிப்படங்களையும் இந்த ஆண்டு ரசிகர்கள் உச்சிமுகரவில்லை என்பது உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயம்தான். சத்யராஜ் - சிபி இணைந்து நடித்த கோவை பிரதர்ஸ், ரமேஷ் நடித்த ஜெர்ரி, பிரபு, கார்த்திக் நடித்த குஸ்தி என மூன்று காமெடிப்படங்களும் வெளிவந்த வேகத்தில் தியேட்டர்களிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டன.


சின்னத்திரையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மெட்டிஒலி என்ற மெகாத்தொடரை இயக்கிய திருமருகன் பரத்தை வைத்து இயக்கிய எம்(டன்) மகன் என்ற படத்தை குடும்பக்கதை அம்சம் கொண்ட படமாக சொல்லமுடியும். இந்தப்படத்திலும் காதல் போன்ற பிற அம்சங்கள் இருந்தாலும், தந்தைக்கும் மகனுக்குமான உறவுச்சிக்கலே பிரதானமாக சொல்லப்பட்டது. ஸ்டான்லி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்த மெர்க்குரிபூக்கள், மு.கருணாநிதியின் கதை வசனத்தில் பிரபு - முரளி இணைந்து நடித்த பாசக்கிளிகள், வேதம்புதிது கண்ணன் இயக்கிய அமிர்தம், ரேவதி வர்மா என்ற பெண் இயக்குநர் இயக்கத்தில் ஜோதிகா நடித்த ஜூன்ஆர் போன்ற படங்களையும் இந்த வகையில் அடக்கலாம். ஆனால் எம்(டன்) மகன் படத்துக்குக் கிடைத்த வெற்றி மற்ற படங்களுக்குக் கிடைக்கவில்லை. எனினும் கதாநாயகன் இல்லாமல் முழுக்க முழுக்க பெண்ணை முன்னிலைப்படுத்திய ஜூன்ஆர் திரைப்படம் அடிக்கோடிட்டு கவனிக்கத்தக்கப் படமே!


ஆண் பெண் நட்பை மையமாக வைத்து அற்புதன் என்ற இயக்குநர் இயக்கத்தில் மனதோடு மழைக்காலம் என்ற படமும் வெளியானது. ஷாம் நடித்த இந்தப்படம் வெற்றி எல்லையைத் தொடவில்லை!


ஒரு காலத்தில் திரைக்கதை மன்னன் என்று சிலாகிக்கப்பட்ட கே.பாக்யராஜ் தன் மகள் சரண்யாவை கதாநாயகியாக்கி பாரிஜாதம் என்ற படத்தை இயக்கினார். அவரது சிஷ்யரான பாண்டியராஜனும் குருநாதர் வழியிலேயே கைவந்தகலை என்ற படத்தில் தன் மகன் ப்ரிதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இரண்டு படங்களையும் மட்டுமல்ல, இரண்டு வாரிசுகளையும் ரசிகர்கள் ஏற்கவில்லை. எனினும் பாரிஜாதம் படத்தில் புதுமையான திரைக்கதையை கையாண்டு நான் இன்னமும் திரைக்கதையில் மன்னன்தான் என்பதை நிரூபித்திருந்தார் கே.பாக்யராஜ்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலசந்தரின் இயக்கத்தில் பொய் என்ற படம் வெளியானது. அவரது நூறாவது படமான இப்படத்தை அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகாஷ்ராஜ் தயாரித்திருந்தார். குருவுக்கு சிஷ்யர் கொடுத்த காஸ்ட்லியான காணிக்கையானது பொய் படம். ஆம்.. மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதன் மூலம் பிரகாஷ்ராஜுக்கு சுமார் மூன்று கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.


கே.பாலசந்தரைப் போலவே மகேந்திரனும் பல வருட இடைவெளிக்குப் பிறகு முகம் காட்டினார் - சாசனம் என்ற படத்தின் மூலம். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்த இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், நாட்டார்களின் வாழ்க்கையை நேர்த்தியாய் பதிவு செய்த படம் என்ற நற்பெயரை பெறத்தவறவில்லை. மகேந்திரனைப் போலவே கடந்தகாலங்களில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அடையாளத்தைப் பெற்றிருக்கும் ஜெயபாரதி சத்யராஜை வைத்து குருஷேத்திரம் என்ற படத்தை இயக்கினார். தயாரிப்பாளரின் குடும்பத்தில் குருஷேத்திரம் ஏற்பட்டிருக்குமளவுக்கு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.


மசாலாப்படங்கள், வன்முறைப்படங்கள், வக்கிரமான படங்கள், காதல் படங்கள், குடும்பப்படங்கள், காமெடிப்படங்கள் மட்டுமல்ல, மோகன்லால், ஜீவா நடிப்பில், மேஜர் ரவி இயக்கிய அரண் என்ற தேசப்பற்று படமும், யார் கண்ணன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிக்க, ஆவியுலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யுகா என்ற திகில் படமும், சத்யராஜ் நடிக்க,குருதனபால் இயக்கிய சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அரசியல் படமும், நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய இம்சைஅரசன் 23ம் புலிகேசி என்ற சரித்திரப்படமும் இந்த ஆண்டில் வெளிவந்தன.


இவற்றில் இம்சைஅரசன் 23ம் புலிகேசி படத்துக்கு எவருமே எதிர்பார்த்திராத மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, அதாவது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துக்குப் பிறகு தமிழில் வெளியான சரித்திரப்படம் என்பதும், நகைச்சுவை நடிகரான வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக நடித்த படம் என்பதும், சரித்திரப் பின்னணியில் நகைச்சுவைக்கதையை சிந்தித்த சிம்புதேவனின் துணிச்சல் என எல்லாம் சேர்ந்து இம்சை அரசனை மக்கள் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்தனர்.


இவை மட்டுமின்றி, நந்தாவின் நடிப்பில் ஜெகன்ஜியின் இயக்கத்தில், திரைத்துறையில் முதல் படம் இயக்க ஒருவன் படும் கஷ்டங்களை விவரித்த கோடம்பாக்கம், இலங்கையில் படமாக்கப்பட்டு இலங்கையின் நிகழ்கால பதிவாக இருந்த மண், இரண்டு பேர் மட்டுமே நடித்த இருவர் மட்டும், பிற மொழிக் கலப்பில்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வசனங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இலக்கணம், சுனாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் டிசம்பர் 26 போன்ற சற்று மாறுபட்ட முயற்சிகளும் இவ்வாண்டில் செய்யப்பட்டன. இவை யாவும் தோல்விப்படப்பட்டியலில் சேர்ந்தது ஒரு பக்கம் பரிதாபம் என்றாலும், இன்னொரு பக்கம் திரைத்தொழிலின் சூட்சுமத்தை புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டதால்தான் தோல்வியடைந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.


சினிமா தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ளாமல், வீடியோ கேமராவை வைத்துக் கொண்டு கல்யாணக்காட்சிகளை எடுத்ததைப் போல் ஏனோதானோவென்று எடுக்கப்பட்ட படம்தான் - ராம்ஜி எஸ். பாலன் இயக்கிய நாகரிகக் கோமாளி! தொழில்நுட்பத்தில் பூஜ்யமாக இருந்தாலும் அது சொல்லும் செய்தியில் இந்த ஆண்டு வெளியான மற்ற எல்லாப்படங்களையும்விட நிகரற்ற படைப்பாக இருந்தது நாகரிகக்கோமாளி. தண்ணீர் பிரச்சனை தொடங்கி உலகமயமாக்கள் வரை இப்படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்த வைத்தன. ஒரு திரைப்படம் அது உருவாகிற பிரதேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை எவ்விதமானது என்பதற்கு இந்தப் படமே மிகத் துல்லியமான உதாரணம்! இப்படியொரு படத்தை எடுக்கத் துணிவில்லாத கோடம்பாக்க வியாபாரிகள் நிச்சயம் வெட்கித்தலைகுனிய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


வெற்றிபெற்றவனின் கதை மட்டுமே திரைப்படமாக்குவதற்குப் பொருத்தமான கதை என்ற நம்பிக்கை நிலவி வருகிறது திரையுலகில். இந்த மூடநம்பிக்கையிலிருந்து முற்றிலும் விலகி, வாழ்வில் தோற்றுப்போன ஒருவனின் கதையாக வெளியான படம் வெயில். இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில், அவரது சிஷ்யர் வசந்தபாலன் இயக்கிய இப்படத்தில் பரத் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவரது அண்ணன் வேடத்தில் நடித்திருந்த பசுபதியைச் சுற்றியே கதையோட்டம் அமைக்கப்பட்டிருந்தது தற்செயல் அல்ல. வணிக நோக்கத்துக்காக பரத்தின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது போல் தோன்றினாலும், அதையும் மீறி பசுபதி ஏற்ற பாத்திரமே மேலோங்கி நின்றது. கதையின் துவக்கமும், முடிவும் கூட அவரது பாத்திரத்தின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் வெயில் படத்தின் கதை என்பது பசுபதி ஏற்ற கதாபாத்திரத்தின் கதைதான். வெயில் படத்தில் சினிமா பேரடைஸோ படத்தின் சாயல் சில இடங்களில் தென்பட்டாலும், 2006 ஆம் ஆண்டின் மிகச்சிறப்பான படைப்பு இது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


ஆதி போன்ற மசாலாப்படங்களும், இது காதல் வரும் பருவம் போன்ற பாலியல் படங்களும், புதுப்பேட்டை போன்ற வன்முறைப்படங்களும், திருட்டுப்பயலே போன்ற வக்கிரப்படங்களும் இந்த ஆண்டில் தோல்வியடைந்தது திரைப்பட வியாபாரிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திய கசப்பான சம்பவங்கள். ஆனால் தமிழில் ஆரோக்கியமான திரைப்படங்கள் வர வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும், அப்படிப்பட்ட படங்களைப் படைக்க வேண்டும் என்று விரும்புகிற படைப்பாளிகளுக்கும் மகிழ்வையும், நம்பிக்கையையும் தரக் கூடிய நிகழ்வுகள். இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி வரும் வருடங்களில் தொடர வேண்டும் என்று விரும்புவோம்.

No comments:

Post a Comment